பொருளாதார வளர்ச்சியில் சீனாவைக் காட்டிலும் 16 ஆண்டுகள் பின்தங்கியிருக்கும் இந்தியா!

ர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள் படி, கடந்த ஆண்டு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.53 டிரில்லியன் டொலர் ஆகும். இது இங்கிலாந்தின் 3.38 டிரில்லியன் டொலர்களை விட அதிகமாகும். இதன்படி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசும், இதனை தங்களின் சாதனையாக பேசி வருகிறது. ஆனாலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியானது, சீனாவை காட்டிலும் 16.5 ஆண்டுகள் பின்தங்கி  உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார ஆய்வு  நிறுவனமான ‘பெர்ன்ஸ்டெய்ன்’ (Bernstein) கூறியுள்ளது. இந்தியா – சீனா ஆகிய இரண்டு நாடுகளின் ஏற்றுமதி  (Export), நேரடி அந்நிய முதலீடு (FDI), கண்டுபிடிப்புக்கான காப்புரிமை (Patent for Invention), அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves), மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகிய அளவுகோல்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கையை ‘பெர்ன்ஸ்டெய்ன்’ வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம், புள்ளியியல் மற்றும் திட்ட அமுலாக்க  அமைச்சகம், உலக வங்கி மற்றும் உலக அறிவுசார் சொத்து  அமைப்பு ஆகியவற்றின் தரவுகளையே ‘பெர்ன்ஸ்டெ ய்ன்’ தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

ஏற்றுமதியில் 17 ஆண்டு பின்னடைவு

இதன்படி, ஏற்றுமதியில் சீனாவை விட 17 ஆண்டுகள் இந்தியா பின்தங்கியுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டில் 20 ஆண்டுகளும், அந்நியச் செலாவணி கையிருப்பில் 19 ஆண்டுகளும், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானத்தில் 15 ஆண்டுகளும், நுகர்வுச் செலவில், 13 ஆண்டுகளும், மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தில் 16 ஆண்டுகளும், அறிவியல், வர்த்தக காப்புரிமைகள்படி சீனாவை விட இந்தியா 21 ஆண்டுகளும் பின்தங்கியுள்ளது.

தனிநபர் வருமானத்தில் 15 ஆண்டு பின்னடைவு

‘டெக்கான் ஹெரால்ட்’ (Deccan Herald), கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் வளர்ச்சியை ஆய்வு செய்தது. அப்போது, “அனைத்து உயர் வருமானம் கொண்ட நாடுகளும் பொருளாதார வளம் மற்றும் மக்கள் தொகை வீழ்ச்சியின் காரணமாக குறைந்த ஜிடிபி (GDP) வளர்ச்சி சுற்றுப்பாதையில் நுழைகின்றன. அதேசமயம் வளரும் நாடுகள் அதிக ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்கின்றன. அந்த வகையில், வளரும் ஏழை நாடான இந்தியா, ஐந்தாவது பெரிய நாடாக மாறியது ஆச்சரியமில்லை” என்று தெரிவித்தது. அத்துடன், தனிநபர் வருமானத்தில் ‘இந்தியா’ மிகவும் பின்தங்கி இருப்பதாக குறிப்பிட்டிருந்தது. ‘பெர்ன்ஸ்டெய்ன்’ அறிக்கையிலும் அது பிரதிபலித்துள்ளது. தனிநபர் வருமானத்தில் சீனாவைக் காட்டிலும் இந்தியா 15 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. 

இந்தியாவில் வேலைகள் உருவாக்கம் இல்லை

‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ (Business Standard) ஏடும் முன்பு இதனைக் குறிப்பிட்டிருந்தது. சீனாவை விட இந்தியாவில் உழைப்பு மலிவாக கிடைக்கிறது. இதனால், வளர்ந்து வரும் இளம் பணியாளர்களை இந்தியா அதிகமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் போதுமான தரமான வேலைகள் இல்லை. மக்கள் தொகை பெருக்கம் இருந்தாலும், இந்தியா போதுமான வேலைகளை உருவாக்கவில்லை. ஆனால் சீனாவில் ஒரு தொழிலாளியின் உற்பத்தித்திறன் மிக அதிகமாக உள்ளது என்று ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ கூறியிருந்தது. 

உலகின் உற்பத்தி மையமான சீனா

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் அருண் குமார், ஜூன் மாதம்  ‘தி வயர்’ (The Wire) ஏட்டிற்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், “உற்பத்தியைப் பொறுத்தவரை, இந்தியா தனது மூலப்பொருள் தேவைகளுக்காக சீனாவையே பெரிதும் சார்ந்துள்ளது. ஆனால், உலகின் உற்பத்தி மையமாக சீனா மாறியுள்ளது. ஏனெனில், அது அதிகமான பொருட்களை உற்பத்தி செய்கிறது. அதிகமாக உற்பத்தி செய்வதால் அவற்றை மலிவாக விற்க முடிகிறது. அவற்றை மலிவான விலைக்கு விற்பதன் மூலம், தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது” என்று குறிப்பிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: