நாஸிக் குற்றவாளியை நாடாளுமன்றத்தில் பாராட்டுவதா?

ரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஸிப்படைப்பிரிவில் பணியாற்றி போர்க்குற்றங்கள் செய்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கனடா வாழ் நபரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து கௌரவித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அதை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) அவைத்தலைவர் அந்தோனி ரோட்டா (Anthony Rota) ஆகியோர் மன்னிப்புக் கோரியுள்ளனர். ஆயினும் சர்ச்சை எழுந்த பின்பே அந்த நபரின் பின்புலம் தெரியும் என்று பொறுப்பற்ற பதிலை அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (22.09.2023) கனடாவுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வருகை புரிந்தபோது கனடாவின் நாடாளுமன்றத்தில்  (House of Commons) நடைபெற்ற கூட்டத்தில் யாரோஸ் லாவ் ஹன்கா (Yaroslav Hunka) என்ற 98 வயதான நாஸி படை பிரிவில் பணியாற்றிய நபரை நாடாளுமன்ற அவைத்தலைவர் அந்தோனி ரோட்டா, சோவியத் நாட்டிற்கு எதிராக போரிட்ட ‘ஒரு உக்ரைன் நாயகன், ஒரு கனடா நாயகன்’ என்று பாராட்டியதோடு, அவருடைய அனைத்துப் பணிகளுக்கும் நாடு கடமைப்பட்டுள்ளது என்று  புகழ்ந்தார். இதனை தொடர்ந்து அந்நாட்டு எம்பிக்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி அவரை கௌரவித்தனர்.  

பதவி விலக வலியுறுத்தல்  

இந்த நிகழ்ச்சிக்கு பின் ஐரோப்பிய நாடுகளும், யூத குழுக்களும் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு அவை தலைவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தின. கனடாவில் உள்ள போலந்து தூதர் இந்த நிகழ்விற்கு உடனடியாக கடும் கண்டனத்தை தெரிவித்தார்.  இதனால் தொடர்ந்து விழி பிதுங்கிய கனடா பிரதமர் ட்ரூடோ செய்தியாளர்களிடம்  பேசும் போது நாடாளுமன்றத்தில் நடந்த செயல் மிகவும் வருத்தமளிக்கிறது. இது நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மிகவும் தர்ம சங்கடமானது என்றார். இரண்டாம் உலகப் போரில் சில ஆயிரம் உக்ரைனியர்கள் மட்டுமே ஹிட்லரின் நாஸிப்படையில் இருந்தனர். ஆனால் இலட்சக்கணக்கான உக்ரைனியர்கள் ஹிட்லரிடம் இருந்து உலகை காப்பதற்காக   சோவியத்தின் செஞ்சேனையில் இணைந்து போரிட்டனர் என்பது வரலாற்றுப்  பதிவு.

மழுப்பல் பதில் 

இந்நிலையில் ஹன்காவைக் கௌரவப்படுத்தியது தவறு, இதற்கு நான் முழுப்பொறுப்பேற்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள், உக்ரைன் பிரதிநிதிகள் என யாரும் இந்த பின்புலத்தை அறிந்திருக்கவில்லை. சர்ச்சை எழுந்த பிறகே நான் பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன் என்று மழுப்பலாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ரோட்டா தெரிவித்துள்ளார். மேலும், “கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்களிடம் நான் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டு, மன்னிப்பைக் கோர விரும்புகிறேன். எனது செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

கனடா யூதக் குழுவான ‘இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம்’ அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு  பாராட்டியது. மற்றும் இது போன்ற  சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க முறையாக பின்புலம் அறிந்து கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது அவசியம் என கூறியது.  ஹன்காவுக்கும் கனடா பிரதமருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் சந்திப்பு  நடந்துள்ளது என எழுந்த குற்றச்சாட்டையும் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் நடத்தும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட நபரின் பின்புலம் தெரியாமல் அழைக்கப்பட்டார் என நாட்டின் அவைத்தலைவர், பிரதமர் ஆகியோர் கூறும் பதில் நகைப்பிற்குரியது. 

யார் இந்த யாரோஸ்லாவ் ஹன்கா?

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த  ஹன்கா இரண்டாம் உலகப்போரில் இரக்கமற்ற முறையில் போர்க் குற்றம் செய்த  நாஸிப்படைப் பிரிவில் ஒன்றான  14 ஆவது வாஃபென் கிரெனேடியர் (Waffen Grenadier) பிரிவில் பணியாற்றியவர். இந்த படைப்பிரிவு போலந்து மற்றும் உக்ரைனின் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்தது. 365 இனக்குழு மக்கள் மீது தாக்குதல் நடத்தி பலரை கொலை செய்துள்ளது. பிட்காமின் என்ற கிராமத்தில் உள்ள  மடத்தில் பாதுகாப்பிற்காக தங்கி இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 2000 க்கும் மேற்பட்டவர்களை இந்த படைப்பிரிவு கொன்றுள்ளது. இவர்களது போர்க் குற்றங்கள் அளவிட முடியாத அளவிற்கு கொடூரமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags: