தற்கொலைகள் ஓய்வதில்லை

பாரதி ஆனந்த்

Image result for payal tadvi
Payal Tadvi

ங்களுக்கு முத்துக்கிருஷ்ணன் (J. Muthukrishnan) , ரோஹித் வெமுலாவை (Rohith Vemula) நினைவிருக்கிறதா? எனக்கு கடந்த இரண்டு நாட்கள் பாயல் தாட்வி (Payal Tadvi) அவர்கள் இருவரையும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

முதலில் முத்துக்கிருஷ்ணனை அவர் எழுத்துகள் வாயிலாக அறிந்து கொள்வோம். தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் திடீரென மர்மமான முறையில் இறந்துபோனார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என போலீஸ் கூறியது.

‘சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படுகிறது’ முத்துக்கிருஷ்ணனின் கடைசி ஃபேஸ்புக் பதிவு இது.

அசைக்க முடியாத அளவுக்கு ஆழமாக இந்த சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் சாதியத்தையும் அதனால் ஒரு தலித் அடைய வேண்டிய அவமானங்கள் எத்தகையது என்பதையும் விவரிக்கும் விதத்தில் முத்துக்கிருஷ்ணனின் பதிவுகள் இருந்தன.

“எனது கணக்கு ஆசிரியருக்கு என் மேல் அவ்வளவு வெறுப்பு. எப்போதுமே நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பார். நான் முடிதிருத்திக்கொண்டிருந்த விதத்தைக் கிண்டல் செய்வார். அதனாலேயே எனக்கு கணிதம் மீது வெறுப்பு வந்தது. எனது நாட்டம் மாறியது. கணிதம் வரலாறானது. அந்த ஆசிரியரின் கேலியும் கிண்டலும்தான் என்னை முதல் தலைமுறை பட்டதாரியாக்கியது.

ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தயைகூர்ந்து வாய்ப்பு கொடுங்கள். இல்லையென்றால் அவர்கள் கணிதம் என்றால் விரோதி என்ற புரிதலுக்குத் தள்ளப்படுவார்கள். கல்வி என்றால் அழுத்தம் என எண்ணுவார்கள். பல்கலைக்கழகம் என்றால் பாகுபாடு என அறிவார்கள்” இப்படி எழுதிவைத்திருந்தார் முத்து.

இன்று உயிருடன் இருந்திருந்தால் ஒரு முனைவராக இருந்திருப்பார். ஆனால், இந்த சமூகம் அதில் புரையோடியிருக்கும் சாதி அவரை விட்டதா? தற்கொலையில் தள்ளியது.

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக படிப்பு துறையில் பிஹெச்.டி படித்து வந்தார்.

மாணவர் சங்கங்களுக்கு இடையேயான மோதல் காரணமாக பல்கலைக்கழக விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட வெமுலா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடைசி கடிதத்தின் தமிழ் வடிவம்:

காலை வணக்கம்,

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். 

ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே.

அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப் பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு நம்மிடம் கடத்தப்பட்டவை, நமது அன்பு கட்டமைக்கப்பட்டவை, நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நாம் என்ற சுயமான ரூபமே ஒரு செயற்கை வடிவமாகிவிட்டது. எள்ளளவும் காயமடையாமல் அன்பைப் பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிட்டது.

J. Muthukrishnan

ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. சில நேரங்களில் வாக்கு, சில நேரங்களில் எண் பலம், சில நேரங்களில் சில பொருட்கள்கூட அவனது அடையாளத்தைத் தீர்மானிக்கின்றன. ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை.

சில நட்சத்திரத் துகள்களால் ஒரு பிரம்மாண்டம் சமைக்கப்பட்டதுபோல், மனிதனின் மாண்பு சில அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. கல்வி, அரசியல், சாலைகள், வாழ்வு, சாவு என எல்லாவற்றிலும் இத்தகைய நிர்ணயங்கள் வியாபித்துக் கிடக்கின்றன.

இதுமாதிரியான கடிதத்தை நான் எழுதுவது இதுவே முதன்முறை. ஒரு கடைசிக் கடிதத்தின் முதல் முயற்சி என்று சொல்லலாம். இது ஒருவேளை அர்த்தமற்றதாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

இந்த உலகம் மீதான எனது புரிதல் தவறாக இருக்கலாம். அன்பு, வலி, வாழ்க்கை, மரணம் இவற்றின் மீதான என் புரிதல்கூட தவறானதாக இருக்கலாம். எனக்கு எந்த அவசரமும் இல்லை; ஆனால் நான் எப்போதுமே அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். வாழ்க்கையைத் தொடங்குவதற்கு வழி தெரியா தேடலுக்கான அவசரம்.

சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாகக் கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவத் தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக்கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. (நானே எனது வார்த்தைகளை அடித்துவிடுகிறேன்).

இத்தருணத்தில் நான் வேதனைப்படவில்லை, துன்பப்படவில்லை. என்னுள் ஒரு வெற்றிடத்தை நான் உணர்கிறேன். அது பரிதாபத்துக்குரியது. பரிதாபத்தின் உந்துதலால் நான் இதைச் செய்கிறேன்.

இதற்காக நான் கோழை என்று முத்திரை குத்தப்படலாம். சுயநலவாதி என்று சாட்டப்படலாம். ஏன், முட்டாள் என்று நிந்திக்கப்படலாம். என்னை எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை. மறுபிறவி கதைகள், பேய்கள், பரிசுத்த ஆவிகள் இவற்றின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.

எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் நம்பிக்கையெல்லாம் தொடுவானத்தில் உள்ள நட்சத்திரங்களை அடைய முடியும், வேறு உலகங்களை அறிய முடியும் என்பது மட்டுமே.

இறுதியாக இதை உதிர்க்கிறேன்… ஜெய் பீம்.

இவர்கள் இருவரையும் மும்பை பிஎல்ஒய்.நாயர் மருத்துவக் கல்லூரி மாணவி பாயல் தாட்வி நினைவுபடுத்தக் காரணம் தற்கொலை. மூவரும் அறிவாளிகள். மூவருமே உலகம் அறிந்தவர்கள். ஆனாலும் மூவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் தெரியுமா? சாதிய வன்மம். முத்துக்கிருஷ்ணன் குறிப்பிட்ட வெறுப்பு, வெமுலா சொன்ன  எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு என்ற வேதனை வாக்கியம் அப்புறம் பாயலைத் துரத்திய சாதிய ஒடுக்குமுறை.

26 வயதான மருத்துவர் பாயல் தாட்வி, மும்பை நாயர் மருத்துவக் கல்லூரியில் எம்.டி. மகப்பேறு மருத்துவம் படித்துக்கொண்டிருந்த மாணவி. தாட்வி பில் என்ற பழங்குடியின சாதியைச் சேர்ந்தவர். அவருடைய குடும்பத்தில் மருத்துவம் படித்த முதல் பெண்.  எம்.டி. படிப்பு வரை சென்றவர். ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் அவருடைய சமூகத்துக்கான அடையாளமாக இருந்திருப்பார். ஆனால் அப்படி ஆகவிட்டார்களா?

சாதியைப் படிப்பவர்களால் நேரும் ஆபத்து..

பள்ளி செல்லும் வயதிலேயே தன் சாதியை அடையாளப்படுத்த பல்வேறு நிறங்களில் கயிறு கட்டத்தான் படிக்கிறார்களே தவிர மனிதர்களைப் படிக்கவில்லை. தன் சக மனிதனை மதிக்கும் மாண்பைப் படிக்கவில்லை. கல்வி கற்றுவிட்டால் சாதி ஒழிந்துவிடுமா என்று கேட்டால் ஒழியவே ஒழியாது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கான உதா’ரண’ங்கள் தான் முத்துக்கிருஷ்ணன், வெமுலா, பாயல். உயர்கல்வியும், உயர்கல்விக்கூடங்களும் தங்களுக்கானதே அங்கே இட ஒதுக்கீடு என்று நுழைபவர்கள் தங்கள் உரிமையைப் பறிக்க வந்தவர்கள் என நினைப்பவர்கள் சாதிவெறியர்கள். இப்படியானவர்கள் இருக்கும் வரையிலும் நிச்சயமாக சாவுகள் ஓயாது.

ஐஐடி காரக்பூரில் ஒரு தலித் பேராசிரியருக்கு நிகழ்ந்ததை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அந்தப் பேராசிரியர் இட ஒதுக்கீட்டில் வந்ததாலேயே அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் தழுவல் என உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த 4 பேராசிரியர்கள் குற்றம் சாட்டினர். இதனை எதிர்த்து அந்தப் பேராசிரியர் நீதிமன்றத்தை நாடி தனது உரிமையை நிலைநாட்டினார். நீதிமன்றம் அவருடைய ஆய்வு புதியது என நிரூபித்தது. ஆனாலும், அந்தப் பேராசிரியர்கள் சிண்டிகேட் மூலம் தலித் பேராசிரியரை தகுதி நீக்கம் செய்ய முயன்று கொண்டே இருந்தனர். ஓர் ஆசிரியருக்கே இந்த நிலைமை என்றால் படிக்கச் செல்லும் மாணவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை சொல்லவே இந்த உதாரணத்தை முன்வைத்தேன்.

இட ஒதுக்கீடு மூலம் செல்லும் மாணவர்களை கட் ஆஃப் என்ன என்று கேட்டு முதலில் அடையாளம் கண்டு கொள்ளும் ஆசிரியர்கள் அவர்களை ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம் சக மாணவர்கள். ஏதோ தனது இடத்தைத் திருடி உள்ளே நுழைந்ததுபோல் ஒருவித எதிர்ப்பைக் காட்டுவார்கள். இட ஒதுக்கீடு என்பது ஒரு கல்லூரிக்குள் நுழைவதற்கு, கல்லூரிக் கட்டணத்தில் சலுகை பெறுவதற்கு.. ஆனால் இட ஒதுக்கீட்டை வைத்து ஒரு மருத்துவ மாணவரோ இல்லை பிற உயர்கல்வி பயிலும் தலித் மாணவரோ பாஸ் மார்க்கும் பட்டமும் வாங்க முடியாது. அதற்கு உழைத்தே தீர வேண்டும். தன்னைப் போலவே திறமை கொண்ட மாணவன், தன்னைப் போலவே படித்து தேர்ச்சி பெறும் மாணவன் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவனாக இருப்பதால் மட்டுமே வகுப்பறை தொடங்கி கல்லூரி விடுதி வரை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குவதை வெறுப்பு, வன்மம் என்ற வார்த்தைகளைத் தவிர வேறு எதைச் சொல்லி நியாயப்படுத்த முடியும்.

படித்த சாதிவெறியர்களால்தான் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், பாயல் சாவு ஓயவில்லை.

Image result for Rohith Vemula
Rohith Vemula

13 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தோரட் கமிட்டி பரிந்துரைகள்:

டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் சாதிய வன்மம் ஒடுக்குமுறை இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், எஸ்.கே.தோரட் தலைமையில் ஓர் ஆய்வுக் குழுவை நியமித்தார். அந்தக் குழு பல்கலைக்கழக நிலவரங்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும், பரிந்துரைகளை வழங்குமாறும் பணிக்கப்பட்டது.  தோரட் கமிட்டி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சாதிய வன்மம் தலைவிரித்தாடுவதாகக் கூறியது. கல்லூரியில் மாணவர் பிரதிநிதியாக ஒரு தலித் எப்போதுமே நியமிக்கப்படுவதில்லை, தலித் மாணவர்களின் இன்டர்னல் மதிப்பெண்களில் பேராசிரியர்கள் சரமாரியாக கை வைக்கின்றனர், மருத்துவமனை மாணவர் விடுதியில் ராகிங், சாதிய ரீதியிலான கிண்டல்கள் மிகை மிஞ்சியுள்ளன, உணவகங்களில்கூட பேதம் காட்டப்படுகிறது, தலித் மாணவர்கள் தங்களுக்கு நேரும் இன்னல்களைத் தெரிவிக்க குறைதீர் மையம் ஏதுமில்லை. தலித் பேராசிரியர்களுக்கான லயசன் அதிகாரிகள் இல்லை. பெரும்பாலும் உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் தலித் மாணவர்கள் தங்கள் பாட சந்தேகங்கள் முதல் தனிப்பட்ட துயரங்கள் வரை எதையுமே எங்குமே கொட்டித் தீர்க்க வழியில்லாமல் அழுத்தத்துக்கு ஆளாகின்றனர் என்ற கோர முகத்தை விவரித்திருந்தது.

அத்துடன் நிற்கவில்லை சில பரிந்துரைகளையும் கூறியிருந்தது. எய்ம்ஸ் வளாகத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எஸ்சி., எஸ்.டி., ஓபிசி மாணவர்களின் குறைகளைக் கேட்க ஈகுவல் ஆப்பர்சுனிட்டி ஆபிஸ் “Equal Opportunity Office” என்றோர் அலுவலகத்தை அமைக்க வேண்டும். கலை நிகழ்ச்சிகளில் பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவர்களை ஒதுக்குவதை நிர்வாகம் கண்காணித்து அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க முன்வர வேண்டும். மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து குழுக்களிலுமே எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டுமே சமூக நல்லிணக்கம் உருவாகும் என பரிந்துரைத்தது.

ஆசிரியர்களே மாணவர்களை சாதிய ரீதியாக ஒடுக்கத்தை தடுக்க வேண்டும். ஆசிரியர்கள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப் பட வேண்டும். சுகாதார அமைச்சகம் எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனக் கூறியது.

தோரட் பரிந்துரைகள் எய்ம்ஸுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் இன்றைய நிலையில் எல்லா உயர் கல்வி மையங்களுக்கும் பொருத்தமானதுதான். ஆனால், எய்ம்ஸில் கூட இது 13 ஆண்டுகளாகியும் அமலுக்கு வரவில்லை என்பதுதான் சாதி வெறியர்களின் வெற்றி. சாவுகள் ஓயாததன் தோல்வி.

குஜராத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்புக்குச் சென்ற மருத்துவர் மாரிராஜ் அங்கு தொடர்ச்சியாக சாதியரீதியாக இழிவுபடுத்தப்பட்டதன் விளைவாக தற்கொலைக்கு முயன்றார். உடனிருந்த நண்பர்கள் சிலர் உடனடியாகப் பார்த்ததால் அவர் மரணத்திலிருந்து மீண்டார்.

சிலர் மீண்டுவிடுகின்றன. பலர் மீளாத இடத்துக்கே சென்றுவிடுகின்றனர்.

பள்ளிகளில், கல்லூரிகளிலேயே கற்பித்தல் ஆரம்பியுங்கள்.. வசந்தி தேவி

உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் ஆதிக்கம் குறித்து கல்வியாளரும் மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான வசந்தி தேவியை ‘இந்து தமிழ் திசை’ இணையதளம் சார்பில் அணுகினோம்.

அவர் கூறியதாவது:

இங்கு சாதி எங்கு இல்லை என்கிறீர்கள்? கல்வியில் இல்லையா? நம் கலாச்சாரத்தில் இல்லையா? அரசியலில் இல்லையா? எதில் இல்லாமல் இருக்கிறது என்று சொல்லுங்களேன். சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிப்பது நம் ஜனநாயகக் கடமை. அந்தக் கடமையை பள்ளி, கல்லூரிகளிலேயே தொடங்க வேண்டும். மனித உரிமைக் கல்வி, சாதி ஒழிப்புக் கல்வி என்று பயிற்றுவிக்க வேண்டும். நீங்கள் போதிக்கும் கணக்கு, அறிவியலுக்கு தரும் முக்கியத்துவத்தை மனிதத்தைப் போற்றும் இந்தக் கல்விக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும்.

இப்போது கல்வி, வேலைவாய்ப்புகளில் இருக்கும் இட ஒதுக்கீடு போதவே போதாது என்பது மற்ற சாதியினரே உணர்ந்து சொல்ல வைக்க வேண்டும்.

முத்துக்கிருஷ்ணன், வெமுலா, பாயல் போன்ற இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால். அது அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல வேண்டிய விஷயமல்ல. தற்கொலை கோழைத்தனம் என்று தெரிந்தே தான் அவர்கள் அந்த முடிவை எடுக்கிறார்கள். எடுக்கத் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. வடிகால் இல்லை. இளைப்பாற தோள் இல்லை. உளவியல் ஆலோசனைகள் சொல்ல அமைப்புகள் இல்லை.

இத்தகைய உரிமை மீறல்களை, உயிர் பறிக்கும் கொடூரங்களை வெறும் செய்தியாகக் கடக்காமல் நீதி கோரி மிகப் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் உயர் கல்வி நிறுவனங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது சாத்தியமாகும்.

இவ்வாறு வசந்திதேவி கூறினார்.

ஒரு மாணவரின் உணர்வுகளுக்கு காது கொடுக்க உயர் கல்வி நிறுவனங்களில் ஆலோசனை மையங்கள் இருந்தாலும்கூட அவை உயர் சாதியினரால் உயர் சாதியினருக்காக இயங்குகின்றன. எங்கும் பிரதிநிதித்துவம் வேண்டும். ஒரு தலித் மாணவனின் உணர்வை, துன்பத்தை இன்னொரு தலித் மாணவப் பிரதிநிதியால்தான் புரிந்து கொள்ள இயலும்.

தாரட் கமிட்டி பரிந்துரைகளை இன்னும் மேம்படுத்தி நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி மையங்களில் அமல்படுத்தினால் மட்டுமே சாவுகள் ஓயும். இல்லாவிட்டால் முத்துக்கிருஷ்ணன் சொன்னது போல்.. கல்வி என்றால் அழுத்தம்; பல்கலைக்கழகம் என்றால் பாகுபாடு என்ற நிலையே தொடரும்.

-தமிழ் இந்து
மே 29, 2019

Tags: