டாஸ்மாக் கடை முன்பு கோவை மருத்துவர் ரமேஷின் மனைவி விபத்தில் மரணம்…. சோகத்திலும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி தனி ஒருவனாய் போராட்டம் !
இயற்கை மீதான அளவு கடந்த காதலன் மருத்துவர் ரமேஷ்… ஒவ்வொரு நாளும் சமூகத்திற்கான தனது பங்களிப்பை ஆழமாக செயலாற்றி வருபவர். இயற்கையை யார் அழிக்க நினைத்தாலும் அங்கு ஓடிச் சென்று காப்பதிலும், எதிர்த்து நிற்பதிலும் வல்லவர். இதனால் பொது மக்கள் இவர் மீது அளவு கடந்த மதிப்பு வைத்துள்ளனர்.
ஆனால் இவருக்கு நேற்று ஏற்பட்ட சோகம் வேறு யாருக்கும் வரக் கூடாது என் நினைக்கின்றனர் அப்பகுதி மக்கள். ரமேஷின் மனைவி ஷோபனா. இவர்களுடைய மகள் சாந்திதேவி ஆனைக்கட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
நேற்று மாலை பள்ளி முடிந்து மகளை அழைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் ஷோபனா வந்து கொண்டு இருந்தார். அப்போது ஆனைகட்டியை சேர்ந்த பாலாஜி என்பவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளை எதிர்திசையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
குடிபோதையில் அதிவேகமாக வந்து ஷோபனாவின் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஷோபனா இறந்தார். படுகாயம் அடைந்த சாந்திதேவியை அப்பகுதி மக்கள் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆனால் மருத்துவரோ மகளை சமூகம் பார்த்துக்கொள்ளட்டும் என விட்டு விட்டு மனைவியியின் உடலோடும் அப்பகுதி மக்களோடு டாஸ்மாக் கடையை அகற்ற சாலையில் இரவு வரை போராட்டம் நடத்தினார்.
டாஸ்மாக் (TASMAC) கடை மூடப்படும் என்ற உறுதியளிக்கப்பட் பின்பே மனைவியின் உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல அனுமதித்தார். அதிகாலை 3 30 மணிக்குத் தான் தன் மகளை மருத்துவமனையில் கதறலோடு பார்க்கச் சென்றார்.
எந்த ஒரு போராட்டமென்றாலும் கணவனோடு கை கோர்த்த அவரது மனைவி… இன்று அவரது உடலையே சமூகத்திற்கான ஆயுதமாக மாற்றினார்…சமூகத்தின் மீதான அளவு கடந்த ஷோபனாவின் அன்பை அப்பகுதி மக்கள் கண்ணீருடன் இழந்து நிற்கின்றனர்.
(டாஸ்மாக் (TASMAC) எனப்படும் தமிழ் நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது)