மலேசியாவில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தில் ஏழுபேர் கைது!

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேரை மலேசிய காவற்துறை இன்று கைது செய்தது. இவர்களில் இருவர் அர்சியல்வாதிகள் என அறியப்படுகிறது.

விடுதலலைப் புலிகளை வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் மீளுருவாக்க முனைகிறார்கள் என்ற சந்தேகத்தில் மலேசிய அரசு 2014 இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருந்தது.

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காகவும், அவ் வியக்கத்தின் பரப்புரைகள் தொடர்பானதும், இயக்கத்தை ஆதரிக்கும், ஆட்சேர்க்கும், வளர்ச்சியை ஊக்குவிக்கும், பணம் திரட்டும் நோக்கங்களுக்கான பொருட்களை வைத்திருந்ததற்காகவும் மலேசிய பாதுகாப்பதிகாரிகள் இவர்களைக் கைது செய்தார்கள் என பயங்கரவாதத்துக்கெதிரான நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் அதிகாரியான அயூப் கான் மைடின் பிச்சே ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்த ஏழு பேரில் இருவர் மலேசிய குடியுரிமையுள்ள அரசியல்வாதிகள் எனவும், சென்ற வருட ‘மாவீரர் தின’ கொண்டாட்டங்களின் போது கூட்டங்களில் பேசியும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகத் துண்டுப்பிரசுரங்களைப் பிரசுரித்தும் தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்குப் பரிவாக நடந்தற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள் என அயூப் கான் தெரிவித்தார்.

மலேசியாவில் மட்டுமல்லாது, சிறிலங்காவிற்கு வெளியிலிருந்து விடுதலைப் புலிகளை மீளுருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் இந் நடவடிக்கைகள் பரவி மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துவிடக் கூடாது என்பதற்காக இக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டோமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மலேசிய ஆளுங் கூட்டணியின் அங்கத்துவக் கட்சியான ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி (Democratic Action Party) யைச் சேர்ந்த இரு சட்டசபை உறுப்பினர்களான ஜி.சாமிநாதன் மற்றும் பி.குணசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட அரசியல்வாதிகள் என அக் அக்கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

அதே வேளை, கோலா லம்பூரிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்துக்குக் குண்டு வீசத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் 38 வயதுடைய காப்புறுதி முகவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் நிரபராதிகள் எனக் கட்சி நம்புவதாகவும், இந்த இருவரும் கட்சியின் கொள்கைகளான மிதவாதம், அகிம்சை, பிரச்சினைகளைச் சமாதானத்தோடு அணுகுதல் போன்றவற்றை மீறிச் செயற்பட்டிருக்கவில்லை எனவும் ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி (DAP) யின் செயலாளர் நாயகமான லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

இரு சட்டசபை உறுப்பினர்களுக்கும் சட்ட உதவிகளை வழங்கக் கட்சி முன்வந்துள்ளது எனவும், கட்சியின் உப தலைவரான எம். குல சேகரன் அவர்கள் கட்சியின் சார்பிலும், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பாடலை வைத்துக்கொள்வார் என்றும் தெரிய வருகிறது.

2016 இல் ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகள் அண்மையிலுள்ள இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்த்தாவில் மேற்கொண்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து மலேசியா அதிக விழிப்புணர்வுடன் இருந்துவருகிறது.

கடந்த சில வருடங்களில் தீவிரவாதத் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் பலர் கைதுசெய்யப்பட்டுள்லதாகவும் இவர்களில் 25 பேர் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அயூப் தெரிவித்தார்.

-மறுமொழி இணையத்தளம், 2019/10/10

Tags: