காங்கிரஸை கைவிட்ட ராகுல்? குழப்பத்தில் கர்நாடக அரசியல்

Afbeeldingsresultaat voor karnataka political crisis cartoons

பாஜக எனும் பொது எதிரியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் அமைத்த பொருந்தா கூட்டணி அரசின் ‘தேன் நிலவுக்காலம்’ 14 மாதங்களோடு முடிவுக்கு வந்துள்ளது. இரு கட்சிகளும் சேர்ந்து அமைத்த கூட்டணி அரசை குமாரசாமி 2004-ம் ஆண்டில் கவிழ்த்தார். இப்போது குமாரசாமியால் ஆட்சி கவிழ்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பிடிபி-பாஜக ஆட்சி, பிஹாரில் ஆர்ஜேடி – நிதிஷ் கூட்டணி, உ.பி.யில் மாயாவதி – அகிலேஷ் கூட்டணி அமைந்தது.  இவர்கள் தேர்தல் அரசியலில் வேண்டுமானால் கூட்டணி அமைக்கலாம்.  ஆனால், ஆட்சி அதிகாரத்தை ஒருபோதும் சரிசமாகப் பங்கிட்டு நீண்ட கூட்டணி அரசை நீண்டகாலம் நடத்துவது சாத்தியப்படாது என்பதை கடந்த கால சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.

அதனால்தான் இந்த மாநிலங்களில் எல்லாம் பொருந்தாக்  கூட்டணி தங்களையும் ஏமாற்றி, மக்களையும் ஏமாற்றி அவர்கள் அளித்த தீர்ப்பையும் காலில் போட்டு மிதித்திருக்கிறது. அதிர்ஷ்டத்தால் மட்டுமே இரண்டாவது முறையாக முதல்வராக முடிசூட்டப்பட்ட குமாரசாமி, விரக்தியுடன் முதல்வர் பதவியைத் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒரு மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை, தேசமே உற்றுநோக்கியதென்றால் அது 2018-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் எனக் குறிப்பிடலாம். பிரதமர் மோடிக்கு எதிராக ஒருபுறம் அதிகரித்து வந்த எதிர்ப்பு அலை, மறுபுறம் ஆதரவான அலை போன்றவற்றால் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை ஆழம் பார்க்கும் தேர்தலாகத்தான் கர்நாடகத் தேர்தல் பார்க்கப்பட்டது.

ஆனால், கட்சிகளுக்குள் மட்டும்தான் குழப்பம் இருக்கும் என்ற நினைத்தபோது, கர்நாடக மக்களும் அதே குழப்பத்தோடு வாக்களித்தார்கள் என்பதை தேர்தல் முடிவு காட்டியது. ஆம், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலை மக்கள் உருவாக்கினார்கள்.

கர்நாடகாவில் 225 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜவுக்கு 105, காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 37 இடங்களும் கிடைத்தன.  தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் முறையிட்டது.

பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்ற நோக்கில் எதிரெதிர் துருவங்களாக இருந்து சட்டப்பேரவை தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. பாஜகவை விரவிடாமல் சாதுரியமாக காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணிக்கு ராகுல் காந்தி திட்டமிட்டார் என்று அப்போது புகழப்பட்டது.

முதல்வராக எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று கூறி பதவி ஏற்றாலும் அது முடியாததால் 2 நாளில் கண்ணீருடன் பதவி விலகினார்.  பொதுஎதிரியான பாஜகவை வீழ்த்திய நிம்மதியில், குமாரசாமிக்கு முதல்வர் பதவியைத் தாரை வார்த்து மஜத தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

37 எம்எல்ஏக்களை வைத்திருந்த குமாரசாமி முதல்வரானார்; 78 எம்எல்ஏக்கள் வைத்திருந்த காங்கிரஸ் கட்சி தனது வெற்றியை பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்துக்காகப் பலிகொடுத்தது. இந்த விஷயத்தில் மிகவும் சாணக்கியத்தனமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி , குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, சிவக்குமார் போன்றோர் செயல்பட்டார்கள் என்று அப்போது புகழப்பட்டது.

Afbeeldingsresultaat voor karnataka political crisis cartoons

ஆனால், இவர்களின் அந்த முடிவு, மக்களின் விருப்பத்துக்கு மாறாக அமைத்த பொருந்தாக் கூட்டணி, கட்சியை மிகப்பெரிய அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை அவர்கள் அப்போது உணரவில்லை. மக்களிடம் இருக்கும் நற்பெயரை வீணடித்துவிடும் என்பதை நினைக்கவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவு அதை வெளிப்படுத்தியது.

தேர்தலில் தோல்வி, கள நிலவரம், தொண்டர்களின் நாடித்துடிப்பு, அரசியல் எதிரியின் பலம் ஆகியவற்றை அறியாமல் எடுக்கப்பட்ட முடிவால் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் உருவாகத் தொடங்கியது.

தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சி இப்போதுள்ள நிலையில் மாநிலத்தில் சுயமாக ஆட்சி அமைக்கும் சர்வவல்லமை கொண்ட கட்சி அல்ல. இருந்தாலும்கூட, தெற்கு கர்நாடகத்திலும் மைசூர் மண்டலத்திலும் நல்ல வாக்கு வங்கியை அந்தக் கட்சி வைத்திருக்கிறது.

குறிப்பாக ஒக்கலிகா சமுதாய மக்கள்தான் ஜேடிஎஸ் கட்சியின் முக்கிய வாக்கு வங்கி. ஆனால் கர்நாடகத்தின் தெற்கு மாவட்டங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு எதிரி பாஜக அல்ல. காங்கிரஸ் கட்சிதான் அங்கு பிரதான எதிரி. சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ராகுல், சோனியா, சித்தராமையா போன்றோரை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்துதான் மக்களிடம் தேவகவுடாவும், குமாரசாமியும் வாக்குகளைப் பெற்றார்கள். கட்சியையும் வெற்றி பெறவைத்தார்கள்.

காங்கிரஸ் கட்சியை தேர்தல் நேரத்தில் வசைபாடி, 38 இடங்களைக் கைப்பற்றிய தேவகவுடாவும், குமாரசாமியும், ஆட்சி அதிகாரம் என்ற அதிர்ஷ்டக் காற்று காங்கிரஸ் மூலம் வந்தவுடன் மக்களின் தீர்ப்பை மறந்துவிட்டு மாறுபட்ட நிலை எடுத்தனர். கூட்டணி அமைந்தாலும்,  இரு கட்சிகளுக்கு இடையிலான அடிப்படை முரண்பாடுகள் சிறிதுகூட களையப்படவில்லை.

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் திமுகவும், அதிமுகவும் எதிரெதிராக இருந்து அரசியல் செய்துவிட்டு, தேர்தல் முடிந்தபின் கூட்டணி ஆட்சி அமைத்தால் அது எப்படி மக்களின் தீர்ப்பை மதிக்காமல் காலில்போட்டு மிதிப்பதற்குச் சமமோ அதைத்தான் காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கட்சியும் கர்நாடகாவில் செய்தது.

ஜேடிஎஸ் கட்சியாலும் குமாரசாமியாலும் பல கசப்பான அனுபவங்களை கடந்த 2004-ம் ஆண்டில் தரம்சிங் முதல்வராக இருந்த காலத்தில் காங்கிரஸ் அனுபவித்தபோதிலும், அதையெல்லாம் மறந்துவிட்டுதான் கைகோத்தார்கள். இந்தக் கூட்டணி அமைந்தபோதே இதன் வாழ்நாளும் எண்ணப்பட்டுவிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். ஆட்சி தொடர்ந்தபோது  இரு கட்சிகளுக்குள் பிரச்சினைகளும், மனக்கசப்புகளும் வளரத் தொடங்கின.

ஏனென்றால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தீவிர விசுவாசியாகவும், தேவகவுடாவின் நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருந்த சித்தராமையா, குமாரசாமியின் அரசியலால் கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்தார். முதல்வராகவும் 5 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்தார். ஆனால், அவரை ஓரம்கட்டிவிட்டு, குறைவான எம்எல்ஏக்கள் வைத்திருந்த குமாரசாமிக்கு முதல்வர் பதவி கொடுத்தது, சித்தராமையாவுக்கு மட்டுமல்ல அவரின் ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிருப்தியை அளித்தது. இந்த அதிருப்தி நாளுக்கு வளர்ந்ததே தவிர குறையவில்லை. 

அந்த நேரத்தில்தான் மக்களவைத் தேர்தலும் வந்தது. இரு கட்சிகளின் கூட்டணி மாநிலத்தில் உள்ள 27 தொகுதிகளில் கணிசமான இடங்களை வெல்லும் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டது.  ஆனால் நடந்தது அனைத்தும் தலைகீழ். மக்களின் தீர்ப்பை மதிக்காமல் அமைத்த கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் படுதோல்வியைப் பரிசாக அளித்தனர். 

Afbeeldingsresultaat voor karnataka political crisis cartoons

தேவகவுடா சொந்தத் தொகுதியல் தோற்றார். தோல்வியே கண்டிராத மல்லிகார்ஜுன கார்கே தோல்வியடைந்தார். ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டும் வென்றது.

தேசம் முழுவதும் வீசிய மோடி அலை, கர்நாடகத்தையும் விட்டுவைக்காமல் வாரிச் சுருட்டி அள்ளிச் சென்றது. ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டணி என்று வர்ணிக்கப்பட்டது வார்த்தை அளவில் நின்றது. ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தபோதே மக்களிடம் இந்தக் கூட்டணிக்கு நல்ல பெயர் இல்லை என்பது உறுதியானதால், எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தத் தொடங்கினர்.

காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணியின் இந்தத் தோல்வி, மாநிலத்தில் பாஜகவின் எழுச்சிக்கும், துணிச்சலாக அடுத்த கட்டங்களை நகர்த்தவும் வழிகாட்டியது. மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் குமாரசாமி ஆட்சியின் நாட்கள் பாஜகவால் எண்ணப்பட்டன.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஏற்கெனவே மாநிலத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஊசலாட்டத்தில் இருந்த நிலையில், ராகுல் காந்தியின் ராஜினாமா மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் நம்பிக்கை ஆணிவேரை அசைத்துப் பார்த்தது. இதனிடையே குமாரசாமியும் ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சிகளை வீரியத்துடன் செய்யவில்லை. இரு கட்சிகளுக்கு இடையிலான பிணக்குகளையும், மனக்கசப்புகளையும் களைய போதுமான முயற்சிகள் எடுக்காமல் நம்பிக்கையற்று இருந்தார்.

கேப்டன் இல்லாத கப்பல் போல், தலைவன் இல்லாத படைபோல் ராகுல் காந்தியின் திடீர் ராஜினாமா காங்கிரஸ் கட்சியைப் புரட்டிப்போட்டது. டெல்லி முதல் கடைக்கோடி கிராமம் வரை ராகுல் காந்தியின் முடிவு அந்தக் கட்சிக்குள் எதிரொலித்தது. தோல்விக்குப் பொறுப்பேற்று ராஜினாமா முடிவை தான் எடுத்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தாலும், அவரின் இந்த அவசர முடிவும், பிடிவாத குணமும் கட்சியை மிகப்பெரிய சரிவுக்குள் தள்ளியது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தை அறிந்த பாஜக, எளிதாக காய்களை நகர்த்தியது. ஏற்கெனவே உச்சகட்ட குழப்பத்தில் இருந்த ஜேடிஎஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவின் மறைமுகமான உதவியுடன் ஆட்சியைக் கவிழ்த்தார்கள்.

அரசியல் பரமபதத்தில் வெற்றி, தோல்வி, மேலிருப்பவர் கீழே சரிவதும், ஒரே சுற்றில் கீழே இருப்பவர் ஆட்சியில் அமர்வதுமான ஏராளமான ஆச்சர்ய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதை ராகுல் காந்தி அனுபவப்பாடமாக எடுக்காமல் காங்கிரஸ் கட்சியின் சீரழிவுக்குக் காரணமாகியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசியலில் எழுச்சி, வீழ்ச்சி இயல்பான ஒன்றுதான். குறிப்பாக தமிழகத்தில் கடந்த 1971-ம் ஆண்டு மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக 184 இடங்களில் வென்று அசுரபலத்துடன் ஆட்சியைப்பிடித்தது. ஆனால், அதன்பின் 13 ஆண்டுகாலம் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் கருணாநிதி இருந்தாலும், மனம் தளராமல் போராட்ட அரசியல் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தவர் கருணாநிதி.

அதிமுகவிலும் இதே நிலைதான், 1991-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா 1996-ம் ஆண்டு படுதோல்வி அடைந்தாலும் மீண்டும் 2001-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார். பல்வேறு பிரச்சினைகளையும் வழக்குகளையும் சந்தித்தபோதிலும் கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் சென்றார். இவர்களின் மனோதிடம், தளராத நம்பிக்கையால்தான் சிறந்த தலைவர்களாக மக்களின் மனதில் நிற்கிறார்கள்.

Daily Cartoons

காங்கிரஸ் கட்சியிலும் ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி சந்திக்காத பிரச்சினைகளா? 1966 முதல் 1977 வரை இந்திரா காந்தி அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில், அனைத்து கட்சிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். ஆனால், 1977-ல் ஜனதா கட்சியின் எழுச்சியில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து ஆட்சியை இழந்தார். 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சியைப் பிடித்த தளராத நம்பிக்கையை ராகுலுக்கு யாரும் சுட்டிக்காட்டவில்லை.

கடந்த 1996-ம் ஆண்டுக்குப் பின் 2004 வரை காங்கிரஸ் கட்சியால் மத்தியில் ஆட்சியில் அமரமுடியாத நிலையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது நம்பிக்கையும் விடா முயற்சியும் மட்டுமே. இவை ராகுலிடம் எங்கே போயின?

நாடாளுமன்றத்தில் 1984-ம் ஆண்டு பாஜக வெறும் 2 இடங்களுடன் தனது கணக்கைத் தொடங்கி படிப்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் தன்னை வளர்த்துக்கொண்டு, வாஜ்பாய்  தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. 13 நாள் ஆட்சி, 13 மாத ஆட்சியைக் கடந்துதான் 2 முறை தொடர்வெற்றியை பாஜக சந்தித்துள்ளது.

தொடர்ந்து  அமித் ஷா, பிரதமர் மோடி தலைமையில் 2-வது முறையாக பாஜக ஆட்சியில் அமர்ந்ததற்கு கட்சித் தலைவர்களின் விடாமுயற்சியும், தளராத நம்பிக்கையும் மட்டுமே காரணம்.  ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய போராட்ட குணம், தளராத நம்பிக்கைதான், தொண்டர்களை உத்வேகத்துடன் வைத்திருப்பது, இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறு, கொள்கைப் பிடிப்போடு இருப்பதும்தான். 

தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு கட்சியையும், தன்னை நகர்த்த வேண்டுமே தவிர  கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தவுடன் ட்விட்டரில் ட்வீட் போட்டவுடன் தனது கடமை முடிந்துவிட்டது என ராகுல் இருப்பது காங்கிரஸ் கட்சி பேராபத்தை நோக்கி நகர்கிறது என்பதாக அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. 

அரசியல் என்பது இன்று வியாபாரமாகிவிட்ட நிலையில், எம்எல்ஏக்கள் விலைபோவது இயல்பான ஒன்றுதான் என்றாலும் ஜனநாயகத்துக்கு சாபக்கேடுதான். ஆனால், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 13 பேர் விலைபோனது என்பது கொள்கை ரீதியாக, சித்தாந்த ரீதியாக இன்னும் மேல்மட்ட அளவில்கூட காங்கிரஸ் தன்னை வேர்பிடித்து வளர்க்கவில்லையோ என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

அதே பாஜகவில் 105 எம்எல்ஏக்களில் ஒருவர் கூட கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து  சாயவில்லை. கட்சியில் இருந்து விலகவில்லை. இது பாஜகவின் கட்டுப்பாட்டையும் கொள்கை, சித்தாந்த ரீதியாக தன்னையும், தொண்டர்களையும், நிர்வாகிகளையும் வலுப்படுத்திக்கொண்டதைத்தான் காட்டுகிறது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை இழந்ததற்கு தவறான முடிவு, பொருத்தாத கூட்டணி ஒரு காரணம் என்றாலும், ராகுலின் அவசர கைகழுவலும் சரிசமமான காரணம் என்பதை மறுக்க முடியாது.

-தமிழ் இந்து
ஜுலை 25, 2019

Tags: