ஜூலை 31 – டி.டி.கோசம்பி பிறந்த நாள்: மாற்றுச் சிந்தனைகளின் முன்னோடிக் குரல்

– அப்பணசாமி

0000DD-Kosambii

ளர்ச்சி அரசியலின் எதிர்மறை விளைவுகள் பற்றி இன்று விவாதித்துக்கொண்டிருக்கிறோம். மையப்படுத்தப்பட்ட வளர்ச்சி அல்ல, பரவலாக்கப்பட்ட வளர்ச்சியே வேண்டும் என்று கோருகிறோம். அறிவியல் புலத்தில் இதை எடுத்துச்சொல்ல யாருமே இல்லையா? இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் குரல்களுக்குக் காதுகொடுக்க யாரும் தயாராக இல்லை. அதிகாரங்களுக்கு இசைந்துபோகாமலும் சமரசங்களுக்கு ஆளாகாமலும் தங்களது கருத்துகளை முன்வைத்த அபூர்வ அறிவாளுமைகளில் ஒருவர்தான் டி.டி.கோசம்பி.

இந்தியாவில் அணுகுண்டு சோதனைக்கு மட்டுமல்லாமல் அணுமின் திட்டங்களுக்கும் தொடக்கத்திலிருந்தே எதிர்க்குரல் எழுப்பியவர் டி.டி.கோசம்பி என்று அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்தா கோசம்பி. இவரது தந்தை சுவாமி தர்மானந்தா இந்தியாவில் பாலி மொழியைப் புத்துருவாக்கம் செய்ததிலும் புத்த மதத்தை மீட்டுருவாக்கம் செய்ததிலும் முன்கை எடுத்தவர்.

சமரசமில்லா அறிவுப் பயணம்

ஹார்வர்டில் பள்ளிக் கல்வியும் இளங்கலை கணிதம் பட்டமும் பயின்றார் டி.டி.கோசம்பி. ஹார்வர்டு பல்கலைக் கலாச்சாரமே கோசம்பியை வளர்த்தெடுத்தது. அசாதாரணமான மாணவராகத் தேர்ச்சி பெற்றபோதும் ஆய்வுக் கல்வியை ஹார்வர்டில் தொடர முடியவில்லை. அச்சுறுத்திக்கொண்டிருந்த பொருளாதார மந்தமும், தலைதூக்கிய இனவாதமும் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவை விட்டு விரட்டியது.

இந்தியாவின் கல்விப்புலமும் அறிவுப்புலமும் கோசம்பியைச் சீராட்டும் நிலையில் இல்லை என்பதே உண்மை. நேர்கொண்ட பார்வை, அனைவருக்கும் சம மரியாதை, ஆராய்ச்சி மனப்பான்மை என்ற ஹார்வர்டு பல்கலைப் பண்பாடு இங்கு மிரட்சியாகப் பார்க்கப்பட்டது. அத்துடன் எளிமையான உடை, புலால் உணவு குறிப்பாக மாட்டிறைச்சி உண்பது போன்ற அவரது பழக்கங்கள் அன்றைய பல்கலைக்கழக நிர்வாகங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இச்சக்திகளால் கடைசி வரை அவர் விரட்டப்பட்டுக்கொண்டே இருந்தார்.

பனாரஸ், அலிகார் பல்கலைக்கழகங்கள், ஃபெர்குசன் கல்லூரி இறுதியில் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் என்று அவர் பணியாற்றிய நிறுவனங்களின் பட்டியல் நீளும். தொடக்கத்தில் டாடா நிறுவனத்தை ஹோமிபாபாவும், கோசம்பியும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றே நிர்வாகம் செய்தனர். ஹிரோஷிமா–நாகசாகிக்குப் பிறகு அணு ஆற்றல் பயன்பாட்டுக்கு எதிர் நிலை எடுத்தார் கோசம்பி. இதையடுத்து உருவான உலக அமைதி இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றினார். இதனால், பாபா – கோசம்பி இடையே ஏற்பட்ட நெருடல் இறுதியில் கோசம்பியின் பணி நீக்கத்தில் முடிந்தது.

Afbeeldingsresultaat voor டி.டி.கோசம்பி

வரலாற்றிலும் முத்திரை

கோசம்பி அடிப்படையில் கணிதவியல் அறிவியலாளராக இருந்தாலும் இந்திய வரலாற்றை எழுதுவதில் புதிய பார்வைகளை அறிமுகப்படுத்தியதற்காகவே அதிகமும் பாராட்டப்படுகிறார். ‘இந்தியாவின் உண்மையான வரலாறு இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் மட்டுமல்ல; ஒவ்வொரு குக்கிராமத்திலும், பழங்குடிகள் வாழும் மலைப் பகுதிகளிலும் இந்தியாவின் வரலாறு நுட்பமான முறையில் எழுதப்பட்டுள்ளது. அது எழுத்தாக அல்லாமல் தொல்லியல் எச்சங்களாக உள்ளது’ என்றார். இவற்றை வெளிக்கொணர நவீன அறிவியல் முறைகளைக் கையாண்டார்.  ராம் சரண் சர்மா, ரொமிலா தாப்பர், டி.என்.ஜா. என்று மார்க்ஸியக் கண்ணோட்டத்தில் பண்டைய இந்திய வரலாறு குறித்து எழுதிய வரலாற்றறிஞர்களுக்கு அவர் ஒரு முன்னோடியும்கூட.

வரலாற்று அறிஞராகவே கோசம்பி பெரிதும் அறியப்பட்டாலும் பிற அறிவுத் துறைகளிலும் ஈடுபட்டவர் அவர். புள்ளியியல், நாணயவியல், மரபியல், அணு ஆற்றல் இயற்பியல் உள்ளிட்ட பல துறைகளில் தமது வாழ்நாளில் 80-க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், ஜப்பான் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டுள்ளார். விடுதலை அடைந்த இந்தியா அறிவியல் தொழில்நுட்பத்தில் பின்னடைந்திருந்த நிலையில், அதற்கு ஒரு அறிவியல் கொள்கை தேவைப்பட்டது. இந்த இடைவெளியைச் சமன்செய்ய வளர்ந்த நாடுகளின் அடிப்படையில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திப் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்று ஹோமி பாபா போன்றோர் கூறினர்.

கோசம்பி அதற்கு மாறான பார்வையைக் கொண்டிருந்தார். எந்தவொரு தொழில்நுட்பமும் மேலை நாடுகளில் உருவாக்கப்படுகிறது. அது மேலை நாடுகளின் சூழலுக்கு ஏற்பவும் அந்நாடுகளின் முதலாளிய வளர்ச்சிக்கு ஏற்பவும் தகவமைக்கப்படுகிறது. அதனால், அத்தகைய தொழில்நுட்பங்கள் உடனடியாக வளரும் நாடுகளுக்குப் பரவுவதை விரும்புவதில்லை. எனவே, ஒரு புதிய தொழில்நுட்பம் இந்தியா வந்துசேர குறைந்தது 15 ஆண்டுகள் ஆகின்றன. இது தொடர்ந்தால் இந்தியா எப்போதும் மேலைநாடுகளைச் சார்ந்து வாழ வேண்டிய நிலையே உருவாகும் என்பது கோசம்பி போன்றோரின் வாதமாகும்.

அணு ஆற்றல்களும் அணைகளும்

அணு மின்னாற்றலை எடுத்துக்கொண்டால், மேலை நாடுகளில் தட்பவெப்ப நிலை காரணமாக வெப்பம் போன்ற இயற்கை ஆற்றல்கள் குறைவு. இந்தியாவிலோ இயற்கை ஆற்றல்கள் அபரிமிதமாகக் கிடைக்கின்றன. எனவே, இந்தியா போன்ற நாடுகள் மின் ஆற்றலுக்காக அணு ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி நமது மின் தேவையை நிறைவுசெய்ய இயலும் என்றார் கோசம்பி.

மாபெரும் அணைகள், பகாசுர மின் உற்பத்தித் திட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் வேண்டும் என்றும் வலியுறுத்தியவர் கோசம்பி. ‘இந்தியாவில் கிராமப்புற நீர்ப்பாசன வசதிகளைவிட மாபெரும் நீர்த்தேக்கங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால், பெரு விவசாயிகளே அதிகம் பயன்பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல், இத்தகைய திட்டங்களுக்கே முழுக் கவனமும் அளிக்கப்படுகிறது’ என்றார். மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் கொள்கையை அப்படியே பின்பற்றாமல் இந்தியாவுக்கான தனித்தன்மை கொண்ட கொள்கைகள் வேண்டும்’ என்றார். இதற்காக அவர் முன்வைத்த பல சிந்தனைகள் காற்றில் கலந்த பேரோசையாயின.

கியூபா புரட்சியைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு மக்களுக்கான ஒரு மாபெரும் கலைக்களஞ்சியத்தை 100 தொகுதிகளில் தயாரிக்கத் திட்டமிட்டது. அதில் பண்டைய இந்திய வரலாறு குறித்த தொகுதியை எழுத கோசம்பியைக் கேட்டுக்கொண்டது. ஆனால், இத்திட்டம் நிறைவேறவில்லை. இத்திட்டத்துக்காக எழுதப்பட்ட குறிப்புகளும் கட்டுரைகளும்தான் ‘பண்டைய இந்தியாவின் பண்பாடு மற்றும் நாகரிகம்’ என்ற பெயரில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்திய வரலாறு குறித்த கோசம்பியின் முந்தைய புத்தகங்கள் ஆய்வாளர்களையும் மாணவர்களையும் கவனத்தில் கொண்டது என்றால் இது சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் எழுதப்பட்டது.

விடுதலையடைந்த இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்கேற்றவர்கள் கோசம்பி உள்ளிட்ட பலர். இவர்களில் கோசம்பி தவிர, அனைவரும் வாழும் காலத்தில் அரசால் பல வகைகளில் கெளரவிக்கப்பட்டனர். ஆனால், கோசம்பி மட்டும் தனது வாழ்வாதாரத்துக்கே போராடிக்கொண்டிருந்தார். கல்வி, அறிவியல்  தொழில்நுட்பம், வளர்ச்சி குறித்து இன்று விவாதிக்கப்பட்டுவரும் பல மாற்றுச் சிந்தனைகளை முன்னரே வலியுறுத்தியதற்காக அவருக்குக் கிடைத்த ‘பரிசு’ அது. காலம் கடந்த நிலையில், டி.டி.கோசம்பியின் கருத்துகள் இப்போது தீவிரம் பெற்றிருக்கின்றன என்பதே அவருக்குப் பெருமை.

-தமிழ் இந்து
ஜுலை 31, 2019

Tags: