அரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை – ஒரு கண்ணோட்டம்
–ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு)
உலகின் எண்ணெய் வளம்கொழிக்கும் சவூதி அரேபியாவில் சென்ற சனிக்கிழமை செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி அதிகாலை சவூதி அரசுக்கு சொந்தமான அப்கைக் குராய்ஸ் பிரதேசங்களில் அமைந்துள்ள இரண்டு எண்ணெய் நிலைகள் மீது குறி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பூகோள ரீதியாக பாரிய அரசியல், இராணுவ, பொருளாதார அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அரம்கோ எனும் எண்ணெய் கம்பனி இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளிலும் மிகவும் அறியப்பட்ட கம்பனி. மத்திய கிழக்கில் 70 களில் ஆரம்பித்த எண்ணெய் வருமான செழிப்பினால் சவூதி உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் வெளிநாட்டவர்களை பலதரத்திலும், மட்டத்திலும் வேலைக்கமர்த்தின. அரம்கோ எனும் கம்பனியில் தொழில் பெறுவது பாதுகாப்பானதாகவும், ஊதியம் தொடர்பான நன்மைகளுக்கும் கருதப்பட்டது. ஆங்கிலத்தில் ARAMCO என்ற பெயர் அரேபியா, அமெரிக்க ஆகிய சொற்களை இணைத்து பெயரிடப்பட்டதன் மூலம் பெருமை பெற்றது. அரம்கோ எண்ணெய் நிலைகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது என அமெரிக்கா, சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ள வேளை, இத்தாக்குதல் ட்ரோன் தொழில்நுட்பத்துடன் ஆளில்லா விமானங்களால் நிகழ்த்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு யேமன் கூத்தி கிளர்ச்சியமைப்பு உரிமை கோரியுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி இத்தாக்குதலால் சரி அரைவாசியாக குறைந்துள்ளது. சவூதி அரேபியா உலக எண்ணெய் உற்பத்திமூலம் பத்து வீத மசகு எண்ணெயை உற்பத்தி செய்கிறது. சவூதி அரேபியாவில் நாள் ஒன்றுக்கு 11 மில்லியன் பீப்பாய்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இத்தாக்குதலால் ஏற்பட்ட உற்பத்தி வீழ்ச்சியால் நாள் ஒன்றுக்கான உற்பத்தி 5.7 மில்லியன் பீப்பாய்களாக குறைந்துள்ளது. கூத்தி கிளிர்ச்சி அமைப்பு இத்தாக்குதலுக்கு உரிமைகோரியது மட்டுமல்ல, எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்களை சவூதி எதிர்பார்க்கலாம் என்றும் சவூதி அரேபியாவின் மரியாதைக்குரிய மனிதர்களின் உதவியுடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் கூறியுள்ளது. 2006 இல் அல் கொய்தா இதே எண்ணெய் நிலையத்தை குறிவைத்து தாக்கியது. ஆனால் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்ட சவூதி படைகள் தாக்குதலை முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூத்தி கிளைர்ச்சியாளர்களின் தாக்குதலின் பின்னர் சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மான், அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் உரையாடும்போது சவூதி அரசு பதில் தாக்குதல்கள் நடத்த தயார் நிலையில் ஆற்றலுடனும் இருப்பதாக கூறினார். சவூதியின் பாதுகாப்பு குறித்து ஒத்துழைப்புடன் செயலாற்ற அமெரிக்கா தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்பொம்பியோ இத்தாக்குதலுக்கு ஈரானை குற்றஞ்சாட்டியுள்ளார். இத்தாக்குதல் யேமனிலிருந்து நிகழ்த்தப்பட்டதாக தெரியவில்லை எனக்கூறியுள்ளார். அமெரிக்க கூட்டணி நாடுகளுடன் இணைந்து எண்ணெய் விநியோகம் தடைபெறாமல் சீராக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஈரான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது எனவும் விளங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது. அரம்கோ எண்ணெய் நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாகவும் அக்குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக செய்மதி படங்கள் மற்றும் உளவுத் தகவல்களையும் அமெரிக்கா கூறியுள்ளது. தாக்குதல் வந்த திசை, அளவு ஆகியவற்றை நோக்கும்போது தீவிரவாத இயக்கமான கூத்தி அமைப்புக்கு இத்தகைய ஆற்றல் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது எனவும், அமெரிக்கா கூறுகிறது.
எதிலும் முந்திக் கொண்டு டுவிட்டர் பதிவுகளை மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடக்கி வாசித்துள்ளார். ஈரானை நேரடியாக குற்றஞ்சாட்டுவதைத் தவிர்த்துள்ளார். இத்தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் குற்றவாளிகளைத் தெளிவாக அடையாளம் கண்ட பின் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இத்தாக்குதல் பல தளங்களில் ஆராயப்பட வேண்டும். யேமனில் நிகழும் உள்நாட்டுப்போர் அதில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு உள்நாட்டு சக்திகள், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப்போர் பிராந்தியத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலும் சவூதி அரேபியா, ஈரான் நாடுகளின் முரண்பாடு, அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா விதித்த ஒரு தலைப்பட்சமான பொருளாதாரத்தடை ஆறு நாடுகள் கைச்சாத்திட்ட ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக அமெரிக்கா நிராகரித்தமை சவூதி அரேபியாவின் தலைமையில் ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரெயின், எகிப்து ஆகிய நாடுகள் கட்டார் நாட்டுடன் ராஜதந்திர உறவுகளை ஆனி 2017 இல் துண்டித்து தரை, வான், கடல் முற்றுகைகளை மேற்கொண்டமை, பாலஸ்தீன விவகாரத்தில் முரண்படும் சவூதி, ஈரான், கட்டார், ஆகிய நாடுகளின் நிலைப்பாடு ஆகிய காரணிகள் நீண்ட கண்ணோட்டத்தில் இத்தாக்குதலில் தொடர்புப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பின்னர் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் உலகின் மீது ஆதிக்கம் செலுத்திய பனிப்போர் முடிவடைந்த பின்னும், உலகின் சர்ச்சைகளும், போர்களும், அகதிகள் தொகை பெருகுவதும், நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவதும், பெறுமதியான உட்கட்டமைப்பு வசதிகள் சிதைவதும் தொடர்கதையாகவே உள்ளது. அதுமட்டுமல்ல, உலகச்சந்தையில் பீப்பாய் ஒன்றின் விலை 60 டொலர்களாக உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரத்தின் மீது மோசமான விளைவுகளை இத்தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது.
யேமன் நிலவரத்தை பார்ப்பது அவசியமானது
கூத்தி கிளிர்ச்சியாளர்கள் யேமன் நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றியதன் காரணமாக யேமன் ஜனாதிபதி மன்சூர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். 2015 மார்ச்சிலிருந்து உள்நாட்டுப்போர் நடைபெறுகிறது. சியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூத்தி அமைப்புக்கு ஈரான் வெளிப்படையாக உதவி வருகின்றது. யேமன் அரசுக்கு சவூதி தலைமையிலான கூட்டணி ஆதரவாக செயற்படுவதுடன், சவூதி அரேபியா நேரடியாக கூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துகிறது. அமெரிக்கா, சவூதி கூட்டணிக்கு பக்கபலமாகவுள்ளது. 2015 இல் ஆரம்பமான உள்நாட்டுப்போரில் 7000 க்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும், சனத் தொகையில் 80 வீதமான 24 மில்லியன் பொதுமக்கள் மனிதாபிமான உதவிகளுக்காக கோரிக்கை விடுக்கிறார்கள் எனவும் 10 மில்லியன் மக்கள் வெறுமனே உயிரைக் கையில் பிடித்து வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும், சில தகவல்கள் தெரிவிக்கின்றன. யேமன் உள்நாட்டுப்போரில் ஈரானும், சவூதி அரேபியாவும் தீவிரமாக ஈடுபடுவது ரகசியமானதல்ல. கூத்தி கிளர்ச்சி இயக்கம் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவதென்பது நிச்சயமாக ஈரானின் உதவி, ஒத்துழைப்பினால் என்பதும் ரகசியமானதல்ல. சர்வதேச தளங்களில் வல்லமையுள்ள நாடுகள் ஏனைய சிறிய பலவீனமான அயல் நாடுகளில் அரசியல், ராணுவ சுயநலன்களுக்காக ராணுவ ரீதியாக தலையிடுவதும் அண்மைக்கால சர்வதேச அரசியல் நிகழ்வுகளை அவதானிப்பவர்களுக்கு இயலாததொன்றல்ல. அவ்வாறே ஈரானும் மறுத்து, துணிந்தாலும் ஈரானின் ஆதரவுடனே இத்தாக்குதல் நடத்தப்பட்டதென்பதை அனுமானிப்பதில் சங்கடங்கள் ஏதும் கிடையாது. எனினும் அமெரிக்காவின் ஒரு தலைப்பட்சமான, தான்தோன்றித்தனமான பொருளாதாரத் தடைகள், ஈரானை வெறுமனே கைகட்டிப்பார்த்துக் கொண்டிருக்க தூண்டமாட்டாது. ஈரானின் பிரதம ராணுவத் தளபதியின் பதிலடி மிகவும் காத்திரமான செய்தியை அமெரிக்காவிற்கும், சவூதிக்கும் கொடுத்துள்ளது என்பதுமட்டும் நிச்சயமானது. முழு அளவிலான யுத்தத்திற்கு ஈரான் தயாராக இருப்பதாக அவர் மார்தட்டியுள்ளார். ”எமது எச்சரிக்கை மறைமுகமானதல்ல. ஈரானிடமுள்ள ஏவுகணைகள் ஈரான் எல்லையிலிருந்து 2000 கி. மீற்றர் தூரத்திற்குள் நிலை கொண்டுள்ள அமெரிக்க தளங்களையும் யுத்தக் கப்பல்களையும் தாக்கும் ஆற்றலுள்ளவை” என்றும் உரத்துக் கூறியுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தால் பிராந்தியத்தில் எப்போதும் யுத்தம் வெடிக்கலாம் என்ற நிலைக்குள் அகப்பட்டுள்ளது என்கின்றார். அரம்கோ எண்ணெய் வயல் தாக்குதல்களுக்கு அமெரிக்கா ராணுவ ரீதியாக பதிலளிக்குமாயின் கட்டாரிலுள்ள அல் உதையித் ராணுவத்தளம் ஐக்கிய அரபு ராச்சியத்திலமைந்துள்ள டவ்றா விமானப்படைத்தளம் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகும் எனவும் எச்சரித்தார். சில வாரங்களுக்கு முன்னர் ஈரானிய வான் பரப்பினுள் அமெரிக்காவின் ஆளில்லாத ட்ரோன் விமானம் ஈரானிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதையும் தளபதி நினைவுகூர்ந்தார். அமெரிக்க அரசாங்கத்திற்குள்ளும் ஈரானிய அரசாங்கத்திற்குள்ளும் யுத்தத்தை விரும்புபவர்கள் இருக்கிறார்கள் என்பதை பெயர் குறிப்பிடாத உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிடாத உயரதிகாரி மேலும் ஈரானிய அமெரிக்க மோதல் பேர்சியன் குடாவட்டகைக்குள் அமைந்துள்ள முழு நாடுகளையும் உள்ளடக்கி பெரும் சேதத்தை உண்டாக்கும் எனவும் தெரிவித்தார். எனினும் வட கொரிய விவகாரத்தில் ட்ரம்ப் நேரத்துக்கு நேரம் வெவ்வேறு விதமாக பேசினாலும் சில சமயத்தில் யுத்த பேரிகையை முழங்கினாலும் வட கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவுடன் வர்த்தகப்போரை உருவாக்கினார். ஆனால் நிஜமான நீண்டகாலத்தில் தீமை பயக்கும் போர்களை ஏற்படுத்துவதில் தயங்கியவராக காணப்படுகிறார். அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு உதவி அமைச்சர் நிலவரம் பற்றி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில் அமெரிக்கா, யேமனில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றார்.
ஜனாதிபதி ட்ரம்ப் உரத்துப்பேசுவார் வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசுவார். ஆனால் யுத்தங்களை ஆரம்பிக்க தயங்குவார். கூறியவற்றை நிறைவேற்றமாட்டார் எனவும் அவர் கூறினார். அமெரிக்காவில் 2020 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஜனநாயகக் கட்சி செனட்டர் சாண்டால் ஈரானுடன் மோதுதலை தவிர்க்க வேண்டும் என்றார். ஜனாதிபதி யுத்தத்தை பிரகடனப்படுத்த முடியாது. அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் மட்டுமே யுத்தப் பிரகடனம் செய்யும் அதிகாரமுடைய நிறுவனமாகும் எனக் கூறினார். சர்வாதிகார சவூதி அரசாங்கத்தின் கொடுமைகளுக்கு அமெரிக்கா துணை போகக்கூடாது என்றும் மத்திய கிழக்கில் இன்னுமொரு யுத்தத்தை ஆரம்பிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். ஈரான், அமெரிக்கா தகராறு மத்திய கிழக்கில் இன்னுமொரு யுத்தத்தை தோற்றுவிக்குமா என்பது உலகம் பூராவும் பல ஊடகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அரம்கோ எண்ணெய் வயல்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலும் ஓர் இரவில் அரைவாசியாக வீழ்ச்சியடைந்த சவூதி எண்ணெய் உற்பத்தி பல தேசிய அரசாங்கங்களை மாற்று ஏற்பாடுகள் பற்றி திட்டங்களை வகுக்கத் தூண்டியுள்ளது. சடுதியாக பீப்பாய் ஒன்றின் விலை 60 டொலராக உயர்ந்ததால் உலகப் பொருளாதாரத்திற்கும் ஏற்படக்கூடிய பாதகமான தாக்குதல்கள் குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பொருளாதார சமூக தாக்கங்களை உருவாக்கும் முன்னர் ஈராக் – குவைத்தின் மீது படையெடுத்தபோதும், ஈராக் உள்நாட்டு யுத்தத்தின்போதும் உலக எண்ணெய் உற்பத்தி குறைந்து விலைகள் அதிகரித்தன. அமெரிக்க தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வைத் தணிப்பதற்கு களஞ்சியத்திலிருந்து ஒரு தொகை எண்ணெய் பீப்பாய்களை சந்தைக்கு வெளியிட்டுள்ளதால் எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது. சவூதி அரேபியாவின் விநியோகம் அரைவாசியாக குறைந்ததால் ரஷ்யா போன்ற நாடுகள் கூடுதலான எண்ணெய் வருமானத்தை ஈட்டும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனைய ஒபெக் நாடுகளும் வருமானத்தை ஈட்டுவதற்கு தடையொன்றும் இல்லை. ஆனால் அமெரிக்கா, சவூதி அரேபிய நாடுகள் எண்ணெய் மூலம் அதிக வருமானம் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு செல்லக்கூடாது என்பதை பொருளாதார ஆயுதமாக பயன்படுத்தியது. எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பை ஏற்படுத்துவதை அமெரிக்கா, சவூதி அரேபியா தவிர்த்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சனிக்கிழமை தாக்குதல் சமன்பாட்டை மாற்றிவிட்டது. அமெரிக்கா அதிபர் 2020 ஆம் ஆண்டில் இரண்டாவது தடவையாக அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டி போடவுள்ள சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒவ்வொரு காலடியையும் நிதானமாகவே எடுத்து வைக்க வேண்டியவராக இருக்கிறார். ஈராக், வியட்நாம் போன்ற பெரும் செலவுள்ள யுத்தத்தைப்போன்று இன்னொரு யுத்த முனையைத் திறந்து அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரங்களை தாழ்த்தி வாக்குகளை இழப்பதை விரும்பமாட்டார். உள்நாட்டில் செல்வாக்கை அதிகரிக்க வேண்டுமானால் அமெரிக்க மக்களின் பொருளாதார செழிப்புக்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்க வேண்டும். ஈரான் நெருக்கடி, சீனாவுடன் வர்த்தகப்போர், வடகொரியாவுடன் அணு வலுவேற்றம் தொடர்பான சிக்கல், மத்திய கிழக்கில் சிரியா, யேமன் உள்நாட்டுப் போர்கள், ஆப்கானிஸ்தானில் தலிபான் கிளிர்ச்சியாளர்களுடனான மோதல் போன்ற சர்வதேச விவகாரங்களை கால நிலை மாநாட்டிலிருந்து விலக்கியமை உள்நாட்டில் ட்ரம்புக்கு எதிரான அபிப்பிராயங்களை உருவாக்கியுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் அமெரிக்கா ஈரானுடன் ராணுவ மோதலை உருவாக்கமாட்டாது என்பதை துணிந்து கூறலாம்.
சவூதி அரேபியாவில் எண்ணெய் வயல்கள் தாக்கி அழிக்கப்பட்டமை இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும். எவ்வளவுதான் சொந்தக்காலில் நிற்போம், மாற்றுத் திட்டங்களை கைவசம் வைத்திருக்கிறோமென தலைவர்கள் கூறினாலும், சர்வதேச அரசியல் பொருளாதார அதிர்வுகள் உள்நாட்டில் எதிர்த்தாக்கங்களை நிச்சயமாக உருவாக்கும். தொடர்ச்சியாக இலங்கையில் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை கால அடிப்படையில் நோக்கினால் இவ்விடயம் புலனாகும். அண்மைக் காலங்களில் இலங்கை ரூபா தொடர்ந்து பெறுமதி வீழ்ச்சி அடைவதும், பொருட்களின் விலைவாசி அதிகரிப்பதும் கண்கூடு. உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு நிச்சயமாக இலங்கையின் இறக்குமதிச் செலவு அதிகரித்து வர்த்தக மீதியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அழிந்துபோன எண்ணெய் வயல்கள் விரைவாக செப்பனிடப்பட்டு உற்பத்தி விரைவில் மீள ஆரம்பிக்கப்படும் என்பது உற்சாகமான நிலைப்பாடக இருந்தாலும் நடைமுறையில் தாமதம் ஏற்படவே செய்யும். இலங்கை மட்டுமல்ல உலகம் முழுவதும் எண்ணெய் விலை உயர்வு அழுத்தத்தை கொடுக்கும் என்பது யதார்த்தமானது.
-வீரகேசரி
செப்டம்பர் 21, 2019