உயிரின அழிவு: பேசப்படாத இனப்படுகொலை
–பிரசாத்

கடந்த 40 ஆண்டுகளில் உலக உயிரினங்களில் 60 சதவீதம் அழிந்துவிட்டன என உலக இயற்கை நிதியம் (WWF) கடந்த ஆண்டு வெளியிட்ட ‘லிவிங் பிளானெட் ரிப்போர்ட் 2018’ அறிக்கை தெரிவிக்கிறது. 1970-2014-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 4,000-க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, நீர்-நில வாழ்வி வகைகள் பூவுலகிலிருந்து நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டன.
இதைத் தொடர்ந்து பத்து லட்சம் உயிரின வகைகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அற்றுப்போகும் என ஐ.நா.வின் அறிக்கை இந்த ஆண்டு எச்சரித்திருக்கிறது. ஓர் உயிரினமோ அல்லது உயிரினக் கூட்டமோ உலகில் இருந்து அற்றுப்போவதும் ‘இன அழிவு’தான். பொதுவாகக் குறிப்பிட்ட ஓர் இனத்தின் கடைசி உயிரினம் அழிந்த பிறகே அந்த இனம் அற்றுப்போனதாக அறிவிக்கப்படும்; அதேநேரம் ஓர் இனத்தின் கடைசி உயிரினம் இறப்பதற்குமுன், மிகக் குறைந்த எண்ணிக்கைக்குச் சுருங்கிவிடும்போது அவற்றால் இனப்பெருக்கம் செய்து தம் இனத்தைக் காப்பாற்றுவது சாத்தியமில்லை.
காடழிப்பு, கள்ள வேட்டை, பருவநிலை மாற்றம், மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அருகி வரும் உயிரினங்கள், மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும்போதும் அற்றுப்போனவையாகவே கருதப்படுகின்றன.
புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு உலகில் இருந்து அற்றுப்போன, தற்போது அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் சில உயிரினங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இவை அற்றுப்போனதற்கு நிச்சயமாக இயற்கை காரணமில்லை, மனிதர்களான நாமே காரணம்:

வாலில் மொசைக் போன்ற வடிவத்தைப் பெற்ற பிராம்பிள் கே என்ற எலி இனம், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அழிந்த முதல் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பெருந் தடுப்புப் பவளத்திட்டு அருகே பிராம்பிள் கே தீவில் வசித்துவந்த கொறிப்பன இனத்தைச் சேர்ந்தது இந்த எலி. கடல்மட்ட உயர்வால் தீவின் பரப்பளவு 9.8 ஏக்கரில் இருந்து 6.2 ஏக்கராகக் குறைந்ததன் காரணமாக இந்த எலி இனம் அற்றுப்போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதீத காடழிப்பு நடந்துகொண்டிருக்கும் தைவான் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெப்பமண்டல மழைக்காடுகளில் அதிகம் வசித்துவந்தச் சிறுத்தைகள் இவை. வாழிடச் சிதைப்பாலும், மயிர்ப்போர்வைக்காக வேட்டையாடப்பட்டதாலும் இவை அருகி வந்தன. விரைவில் இந்த சிறுத்தைகள் முற்றிலுமாக அற்றுப்போய்விடும் என்று ஐ.யூ..சி.என். அச்சம் தெரிவித்திருக்கிறது.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் கேமரூன் நாட்டில் 2000-2008 ஆண்டுகளில் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு கண்டறிய முடியாமல், மிகவும் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது கறுப்பு காண்டாமிருகம். 2011-ல் அற்றுப்போன உயிரினமாக அறிவிக்கப்பட்டது. வேட்டையாடுதலும், அதைத் தடுப்பதற்கு முறையான அரசியல் நடவடிக்கைகளும் இல்லாமல் போனதே இந்தப் பாலூட்டி அற்றுப்போனதற்கான முதன்மைக் காரணம்.

கிறிஸ்துமஸ் தீவு சிறு வௌவால் என்று அறியப்படும் இந்த வௌவால்கள் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுகளில் மட்டுமே வசித்துவந்தவை. 2009 ஆகஸ்ட் மாதம் கடைசியாக காணக்கிடைத்த இவை, தற்போது முற்றிலுமாக அற்றுப்போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆசியாவின் மிக நீளமான நதியான யாங்சி நதியில் 2002-ல் கடைசியாகக் காணக்கிடைத்த இந்த நன்னீர் பாலூட்டி, மிக அருகிய இனமாக 2008-ல் அறிவிக்கப்பட்டது. தீவிர மீன்பிடிப்பு, கடல் மாசடைதல் உள்ளிட்ட காரணங்களால் தற்போது இவை அற்றுப்போயிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டரிகாவின் காப்புக் காடுகளில் மட்டுமே வசித்துவந்ததாக நம்பப்படும் தங்கத் தேரை, 1996-ல் விரைவாக அருகிவரும் இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. கடைசியாக 1998-ல் எட்டு ஆண், இரண்டு பெண் தேரைகள் காணக்கிடைத்தன. 2004-ல் இந்த இனம் அற்றுப்போய்விட்டதாக அறிவிக்கப்பட்டது.

குவாதலூப் ஸ்டார்ம் பெட்ரெல் எனப்படும் இந்தச் சிறிய கடல் பறவை 2000-ல் முற்றிலும் அற்றுப்போனது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தாழ்வான பகுதிகளில் வாழ்பவை இந்தப் புனுகுப்பூனைகள். பணப் பயிர்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதும், நாய்கள் மூலம் வேட்டையாடப்படுவதாலும் பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாயின. 250-க்கும் குறைவான புனுகுப்பூனைகளே இந்த இனத்தில் இருப்பதாக 1999-ல் கணக்கிடப்பட்டது; தற்போது அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது.
-தமிழ் இந்து
செப்டம்பர்21, 2019
WWF இன் முழு அறிக்கையும் படிக்க: https://c402277.ssl.cf1.rackcdn.com/publications/1187/files/original/LPR2018_Full_Report_Spreads.pdf