தமிழ் மக்கள் விழிக்கும் போது….

-பிரதீபன்

Afbeeldingsresultaat voor gotabaya rajapaksa cartoon

லங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச பல அதிரடி நடவடிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வருகின்றார்.

அரசாங்கத்தின் அமைச்சரவை தொகையைக் குறைத்தமை, தேவையற்ற செலவினங்களைக் குறைத்தமை, பாதுகாப்பு அதிகாரிகளின் தொகையைக் குறைத்தமை, தனது குடும்பத்தை அரசாங்க விடயங்களில் முன்னிலைப்படுத்தாமை, தனக்கு எதிராக வாக்களித்த சிறுபான்மை சமூகங்களை அரவணைத்துச் செல்லும் போக்கு, போதைப்பொருள் வியாபாரிகளையும் பாதாள உலக கும்பல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முப்படைகளை சேவைக்கு அழைத்தமை, வெளிநாடுகளுடன் அசமத்துமமான உடன்படிக்கைகளை செய்வதில்லை என்ற அறிவிப்பு, வெளிவிவகாரக் கொள்கையில் நடுநிலைமையைக் கடைப்படிக்கப் போவதான அறிவிப்பு என இவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம்.

அவர் பதவியேற்ற ஒரு வாரத்துக்குள் மேற்கொணண்ட இந்த முக்கிய நடவடிக்கைகளால், தேர்தல் நேரத்தில் அவரை எதிர்த்து எதிரணியால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் பொய்ப்பிரச்சாரங்கள் தவிடுபொடியாகி வருகின்றன.

எதிரணியினர் கோத்தபாயவை எதிர்த்து பல வகையான பிரச்சாரங்களை முன்னெடுத்தனர்.

அதில் ஒன்று, அவர் ஆட்சிக்கு வந்தால் இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் என்பது. அதற்குக் காரணம் அவர் இராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பதாலாகும்.

இண்டாவது, அவர் ஆட்சிக்கு வந்தால் குடும்ப ஆட்சி ஏற்படும் என்பதாகும். இதற்குக் காரணம் அவரது அண்ணன் மகிந்த ராஜபக்ச முன்னர் ஜனாதிபதியாக இருந்தார் என்பதனாலாகும். ஆனால் இத்தகைய பிரச்சாரத்தைச் செய்பவர்கள், சந்திரிக குமாரதுங்க இரு தடவைகள் ஜனாதிபதி பதவி வகித்தபோது அவரது தந்தையார் பண்டாரநாயக்கவும், தாயார் சிறீமாவோவும் நாட்டின் பிரதமராக இருந்தபடியால் சந்திரிக குடும்ப வாரிசாக அரசியலுக்கு வந்துள்ளார் என ஒருபோதும் குற்றம் சாட்டவில்லை.

அல்லது, ரணில் விக்கிரமசிங்க ஆட்சித் தலைவராக இருந்தபோது அவர் தனது மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் குடும்ப வாரிசாக ஐக்கிய தேசியக் கட்சியினதும், ஆட்சியதிகாரத்தினதும் தலைமைப் பொறுப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளார் எனவும் குற்றம் சாட்டவில்லை. சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க அவர் மறுத்தபோதும் கூட அத்தகைய குற்றச்சாட்டு எழவில்லை.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட பொழுது அவர் ஜனாதிபதியாக இருந்த தந்தை பிரேமதாசவின் குடும்ப வாரிசாக களம் இறங்கியுள்ளார் எனவும் குற்றச்சாட்டு எழவில்லை. ஆனால் கோத்தபாய மீது மட்டும் குடும்ப வாரிசு குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.

இன்னொரு பக்கத்தில், தமிழ் – முஸ்லீம் கட்சிகள் கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை இனங்களுக்கு ஆபத்து என்று பிரச்சாரம் செய்தன. அதனால் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க. நிறுத்திய வேட்பாளர் சஜித்தை ஆதரித்தன. கோத்தபாய என்ன வகையில் சிறுபான்மை இனங்களுக்கு ஆபத்தானவர் என அவர்கள் ஆதாரங்கள் எவற்றையும் முன்வைக்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை புலிகளை ஒழித்துக்கட்டிய இறுதி யுத்த நேரத்தில் கோத்தபாய நாட்டின் பாதுகாப்பு செயலாளராக இருந்தபடியால் அவர் தமிழர்களுக்கு விரோதமானவர் எனக் காரணம் காட்டப்படுகின்றது.

சரி, அப்படிப் பார்த்தால் நீங்கள் தொடர்ந்து ஆதரிக்கும் ஐ.தே.கவின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தானே தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்தவர். அதன் பின்னர் நீங்கள் தற்பொழுது ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்த சஜித்தின் அப்பா ரணசிங்க பிரேமதாச தானே யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தியவர். அதன் பின்னர் நீங்கள் நட்பு கொண்டாடிய, 10 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக குமாரதுங்க தானே யுத்தத்தை தொடர்ந்து நடத்தியவர்.

இவர்கள் எல்லோரும் தாம்தான் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வெற்றியீட்டியவர்கள் என அடிக்கடி வீராப்பு பேசி வருகிறார்களே? அப்படியிருக்க சில வருடங்கள் மட்டும் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய மட்டும்தான் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் செய்தவர் என நீங்கள் பிரச்சாரம் செய்வது என்ன வகையில் நியாயம் ஆகும்?

அதுமட்டுமல்ல, 2009இல் யுத்தம் முடிந்ததும், 2010இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஐ.தே.க. சார்பில் இறுதி யுத்த நேரத்தில் இராணுவத் தளபரியாக இருந்து யுத்தகளத்தில் இலங்கை இராணுவத்தை நேரடியாக வழிநடத்திய சரத் பொன்சேக போட்டியிட்ட பொழுது அவரைத்தானே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை ஏதுமின்றி ஆதரித்தது?

சரத் பொன்சேக புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியைத் தான்தான் ஈட்டிக் கொடுத்ததாக பெருமை பேசியே தேர்தலில் போட்டியிட்டார். அப்படியானவர் எப்படி உங்கள் கண்களில் தமிழர்களின் நண்பராகக் காட்சியளித்தார்? ‘அதுமட்டுமல்லாமல், தமிழர்கள் வேண்டுமானால் இந்த நாட்டில் வாழ்ந்துவிட்டுப் போகட்டும். ஆனால் உரிமை கிரிமை என்று எதுவும் கேட்கக்கூடாது’ என கனடிய ஊடகமொன்றுக்குப் பேட்டியும் அளித்தாரே? அப்படியானவர் எப்படி உங்கள் கண்களுக்கு தமிழர் விரோதியாகத் தெரியவில்லை?

தவிரவும் உங்கள் கூட்டமைப்பை உருவாக்கிய புலிகள், உங்களால் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என அழைக்கப்பட்ட புலிகள், சிங்கள, முஸ்லீம் அரசியல் தலைவர்களையும் மக்களையும் மட்டுமின்றி, தமிழ் அரசியல் தலைவர்களையும் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களையும் கொன்று குவித்தார்களே? அப்பொழுதெல்லாம் உங்களுடைய ‘ஜனநாயகக் கண்களுக்கு’ அவர்கள் அகிம்சாவதிகளாகவா காட்சியளித்தார்கள்?

எனவே நீங்கள் எடுக்கும் ஐ.தே.கவுக்கு சார்பான பிற்போக்கான அரசியல் நிலைப்பாடுகளுக்கு எல்லாம் “தமிழ் இனத்தின் நன்மைக்காகவே அப்படிச் செய்கிறோம்” எனப் பித்தலாட்டம் செய்யாதீர்கள். மக்கள் தொடர்ந்தும் உங்கள் சொல்லுக்கு தலையாட்டும் முட்டாள்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்காதீர்கள்.

பிரான்சின் தலைவராக இருந்த நெப்போலியன், சீனா நிலப்பிரபுக்களுக்கும் அந்நிய நாடுகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தபொழுது ஒருமுறை சொன்னான்:

“சீனா உறங்குகிறது. அது உறங்கட்டும். அது விழத்துக் கொண்டால் உலகம் நடுங்கும்” என்று. அந்த நிகழ்வை இப்பொழுது நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

அதுபோல, தமிழ் மக்கள் இப்பொழுது உறங்குகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் உறங்கப் போவதில்லை. அவர்கள் நிச்சயம் விழிப்பார்கள். அப்பொழுது அவர்களது அக்கினிப் பார்வையில் நீங்கள் வெந்து நீறாய்ப் போவீர்கள்.

Tags: