எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது!

so_tharuman
எழுத்தாளர் சோ.தர்மன்

ரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கைப் பதிவு செய்யும் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தூர்வை’, ‘கூகை’ நூல்களையடுத்து அவர் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்காக 2019-ம் ஆண்டுக்கான விருதை எழுத்தாளர் சோ.தர்மன் பெற்றுள்ளார்.

எழுத்தாளர் சோ.தர்மனின் உண்மைப்பெயர் சோ. தர்மராஜ். தூத்துக்குடியில் பிறந்த இவர் இதுவரை 13 புத்தகங்களை எழுதியுள்ளார். 1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய ‘கூகை’ எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

நாவலுக்கு சூல் என்று பெயர் வைக்கக் காரணம்?

தனது நாவலுக்கு சூல் என்று பெயர் வைக்கக் காரணம் என்ன?  என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெவிரித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது “சூ​ல்​” என்ற நாவலுக்காக இந்த் விருது வழங்கப்படவுள்ளது.  1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்தபோது தமிழகத்தில் 39,640  கண்மாய்கள் இருந்தன. அந்தக் கண்மாய்களின் இன்றைய நிலை என்ன என்பதே சூல் நாவலின் மையக்கருவாகும்.

இந்நிலையில் தனது நாவலுக்கு சூல் என்று பெயர் வைக்கக் காரணம் என்ன?  என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சோ.தர்மன் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகத்தில் முக்கியப் பிரச்னையாக இருப்பது நீர் தான். குறிப்பாக, இப்பகுதி முழுவதும் மானாவாரி நிலங்கள் ஆகும். கிணறுகள் தான் நீராதாரமாக உள்ளன. முன்பு கண்மாய்கள் அனைத்தும் அந்தந்த கிராமத்தின் வசமே இருந்தன. கிராம மக்களே மராமத்துப் பணிகளை மேற்கொண்டு சீரமைத்துக் கொள்வார்கள்.

இப்போது கண்மாயை 4  பூதங்கள் காத்துக் கிடக்கிறது. வருவாய் துறை, பொதுப்பணித் துறை, வனத்துறை, கனிம வளத் துறை என இந்த நான்கு துறைகளின் அனுமதி இல்லாமல் ஒரு கைப்பிடி மண்ணை கூட அள்ள முடியாது. எங்களது புஞ்சை மண் அது. இந்த மழையில் என்னுடைய வயல்காட்டில் இருந்து மண் வருகிறது. அதனை கண்மாய் தண்ணீர் பிரித்துக் கொடுக்கிறது. அந்த மண்ணை நான் எடுக்கக்கூடாது என்றால் என்ன நியாயம்?  அந்தக் கண்மாய்களைப் பற்றி பேசக்கூடிய நாவல் சூல்.

நான் ஒரு விவசாயி. 10  ஏக்கர் நிலத்தை தண்ணீர் இல்லாமல் தரிசாக போட்டுவிட்டு தான் இங்கு வந்து உட்கார்ந்துள்ளேன். இதுதான் இந்த நாவலை எழுத தூண்டுதலாக இருந்தது. இந்த நாவலுக்கு சூல் என்று பெயர் வைத்ததன் காரணம் என்னவென்றால், நிறைசூலி ஒரு உயிரை உற்பத்தி செய்யக்கூடியது. ஒரு கண்மாய் நீர்வாழ் பறவைகள், மீன்கள், தவளை என ஏராளமான உயிர்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். இவை அத்துணையும் சேர்த்துதான் சூல்.

இந்த நாவலில் எட்டயபுரம் எட்டப்ப மகாராஜா குறித்து எழுதியுள்ளேன். அந்தக் காலத்தில் கண்மாய்களை உருவாக்கிக் கொடுத்துவர் அவர்தான். அவரைப் போல் கண்மாய்களை உருவாக்கியதும், விவசாயிகளைப் பாதுகாத்ததும் யாரும் இல்லை.

இந்த நாவலுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் பரிசு கொடுத்தனர். அதுபோல், பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் எனக்கு கடமைகள் அதிகரித்துள்ளது.

தற்போது 1790ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய விஷயங்களை மையப்படுத்தி நாவல் ஒன்று எழுதி வருகிறேன். இன்னும் எழுத வேண்டியது ஏராளமாக உள்ளது. இந்த விருதை எனது உருளைகுடி கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

எழுத்தாளர் ஆவதற்கான விசேஷத் தகுதிகள் ஏதும் கிடையாது. எழுத, படிக்க தெரிந்தால் மட்டுமே போதும். தான் ஒரு எழுத்தாளராக, கவிஞராக வேண்டும் என்ற ஓர் இலட்சியம் இருக்க வேண்டும். சங்க காலம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை தொடர்ந்து வாசிக்க வேண்டும். தொடர்ந்து வாசிப்பு அனுபவமே ஒருவனை சிறந்த படைப்பாளியாக ஆக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

-தினமணி
2019.12.18

Tags: