தேசிய கீதமும் தமிழர்களும்
–கே.மாணிக்கவாசகர்
இலங்கையில் 2020ஆம் ஆண்டு தேசிய தினம் (பெப்ருவரி 04) கொண்டாடப்படும் போது தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடப்படும் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை அந்த ஊடகத்துக்கு யார் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.
அப்படியான ஒரு முடிவை ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது அமைச்சரவையோ எடுத்ததாகவும் தெரியவில்லை. அப்படியான ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என முன்னாள் தேசிய மொழிகள் அமைச்சரும், தற்போதைய இராஜாங்க அமைச்சர்களில் ஒருவருமான வாசுதேவ நாணயக்கார மறுத்திருக்கிறார். கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் மறுத்துள்ளார்.
அப்படியிருக்க, எங்கே சப்புவதற்கு ஏதாவது கிடைக்குமா எனக் காத்திருந்த சுமந்திரன், மனோ கணேசன் போன்ற சிலர் இந்தப் பிரச்சினையை அரசு எதிர்ப்பு அரசியல் செய்வதற்கான ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறார்கள்.
அவர்களது ‘பிரயத்தனம்’ ஒருபுறமிருக்க, உண்மையில் அரசாங்க உயர்மட்டத்தில் உள்ள யாருக்கேனும் அப்படி ஒரு எண்ணம் இருக்குமாக இருந்தால் அது மிகவும் தவறான முடிவாகவே இருக்கும்.
ஏனெனில், இலங்கை, இந்தியா அல்லது சீனா போன்று நூற்றுக்கணக்கான மொழிகள் பேசும் ஒரு நாடு அல்ல. கனடாவில் ஆங்கிலமும் பிரெஞ்சும் என இரு மொழிகள் மட்டும் இருப்பது போல. இலங்கையில் சிங்களம், தமிழ் என்ற இரு மொழிகள் மட்டுமே உள்ளன. எனவே, இரு மொழிகளிலும் தேசிய கீதத்தை இசைப்பது சுலபமானது மட்டுமின்றி, இனங்களுக்கிடையே ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் அது உதவும். அதுவுமல்லாமல், சரியோ பிழையோ கடந்த ஆட்சிக்காலத்தில் இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாட முடிவு எடுக்கப்பட்டிருந்தது. எனவே, அந்த முடிவை மாற்றி வரலாற்றுச் சக்கரத்தை பின்நோக்கி இழுப்பது தவறானது.
மொழிப் பிரச்சினையால் இலங்கையின் இன ஒற்றுமைக்கு ஏற்பட்ட அழிவு கொஞ்சநஞ்சமல்ல. ஐக்கிய தேசியக் கட்சியே சிங்களம் மட்டும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற பூதத்தை 1956 பொதுத் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற தனது களனி மாநாட்டில் கிளப்பிவிட்டது. அம் மாநாட்டில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும் என்ற தீர்மானத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவே கொண்டு வந்தார். மாநாடு அதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
ஐ.தே.கவின் இந்த இனவாத நாடகத்துக்கு முதலில் பலியானவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவே. அவர் ஐ.தே.கவை ஓரம் கட்டுவதற்காக அதை 1956 தேர்தலில் ஒரு கோசமாக முன்வைத்ததுடன், ஆட்சிக்கு வந்தபின் சட்டமாகவும் நிறைவேற்றினார். பின்னர் அவர் தனது தவறை ஏற்று தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் 1957இல் “பண்டா – செல்வா” ஒப்பந்தம் செய்தபோது வடக்கு கிழக்கில் தமிழ்மொழி பிரயோகத்துக்கு முன்னுரிமை வழங்கிய போதிலும், ‘சிங்களம் மட்டும்’ கருத்தியலின் தந்தை அவரே என வரலாறு பதிவு செய்துவிட்டது.
இந்த சட்ட மூலமே தமிழரசுக் கட்சி தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாக கால் பதிப்பதற்கு வழிகோலியது. எனவே, மொழி என்பது மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு விடயம். அந்த விடயத்தில் தற்போதைய அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம்.
இது ஒருபுறமிருக்க, தமிழ் பேசும் மக்கள், குறிப்பாகத் தமிழர்கள் இந்த விடயத்தில் தமது முரண்பாடான நிலையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பக்கத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் எனக்கோரும் நாம், மறுபக்கத்தில் நாம் அதற்கு விசுவாசமாக இருக்கிறோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
1948 பெப்ருவரி 04ஆம் திகதி பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தமிழ் தலைமைகள் அன்றிலிருந்து ஏற்க மறுத்து வருவதே வரலாறாக இருக்கிறது. பெப்ருவரி 4ஆம் திகதியை தமிழர்களின் துக்க நாளாகவே தமிழ் கட்சிகள் அனுட்டித்து வருகின்றன. அன்றைய தினத்தில் நடைபெறும் அரச வைபவங்களை பகிஸ்கரிப்பது, கறுப்பு கொடிகளைப் பறக்க விடுவது தொடர்கதையாக இருக்கிறது. 1972இல் பிரித்தானிய முடியரசுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் வகையில் குடியரசு அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட்ட போதும் தமிழ் தலைமைகள் அவ்வாறே நடந்து கொண்டன.
பிரித்தானியர் இலங்கையில் வாழும் தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்தாளுவதற்காக செய்த சூழ்ச்சித் திட்டங்களை விளங்கிக் கொண்டு அவர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்காத தமிழ்த் தலைமைகள், பதிலுக்கு சிங்கள மக்களுக்கு எதிராக இனவாதம் பேசிக்கொண்டு, மறுபக்கத்தில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கத்தைய ஏகாதிபத்திய நாடுகள் இலங்கைக்குள் நுழைந்து தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கோருவது ஆட்டுக்குட்டிக்கு ஓநாயிடம் பாதுகாப்பு கோருவது போன்ற செயல்.
எனவே, ஒரு பக்கத்தில் நமது நாடு சுதந்திரம் பெற்ற தினத்தை கொண்டாட மறுத்துக்கொண்டு, மறுபுறத்தில் தேசிய கீதத்தை தமிழிலும் பாடு என்று கேட்பது முரண்பாடாக இல்லையா? இந்த விடயத்தில் மட்டுமல்ல, வேறு பல விடயங்களிலும் தமிழர்களாகிய நாம் போலித்தனமாகவே செயற்படுகின்றோம்.
உதாரணமாக, மாகாண சபைகளுக்கு கூடுதலான அதிகாரங்களை ஒருபுறம் கேட்டுக்கொண்டு, மறுபுறம் மாகாண பாடசாலைகளில் படிப்பிக்க விருப்பமில்லாது தேசியப் பாடசாலைகளுக்கு மாற்றம் கேட்கின்றோம். அதேபோல, யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் படித்துப் பட்டம் பெற்ற பின், வடக்கு கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரிய விருப்பமின்றி தென்னிலங்கையிலுள்ள கொழும்பு, கண்டி, குருநாகல் போன்ற வைத்தியசாலைகளில் டாக்டர்களாகப் பணிபுரிய விரும்புகின்றோம். இப்படிப் பல உதாரணங்கள் உண்டு.
எனவே, தமிழில் தேசிய கீதம் பாடும் விடயத்திலும் முதலில் நாம் கேட்கும் உரிமையை அந்தரங்க சுத்தியுடன் கேட்கிறோமா என்பதை பிரிசீலனை செய்து பார்க்க வேண்டும். அதை விடுத்து அரசாங்கத்தை என்ன வழி கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவோமாக இருந்தால், அதை விட தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடினாலும் பரவாயில்லை என நினைக்கத் தோன்றுகிறது.