சத்யஜித் ரே சொல்லித்தான் குழந்தைகள் புத்தகங்களை மொழிபெயர்க்கலானேன்!- வீ.பா.கணேசன் பேட்டி

த.ராஜன்

vee-paa-ganesan-interview

டதுசாரி இயக்கத்தின் மீது இணக்கம் கொண்ட வீ.பா.கணேசன், எழுபதுகளின் இறுதியில் இடதுசாரி புத்தகங்கள், ஆவணங்கள், கட்டுரைகள் எனக் காத்திரமான படைப்புகளை மொழிபெயர்த்தவர். இன்னொருபுறம், சத்யஜித் ரே எழுதிய குழந்தைகளுக்கான கதைகளையும் அதே அக்கறையோடு மொழிபெயர்த்தார். வங்கத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய அரிதான மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர். வடகிழக்கு சார்ந்த இவருடைய கள அறிவு அபாரமானது. இடதுசாரி சித்தாந்தம், இலக்கியம், சினிமா எனப் பல்வேறு விதங்களில் வங்கத்துக்கும் தமிழ்க் கலாச்சாரத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட்ட வீ.பா.கணேசனோடு உரையாடியதிலிருந்து…

வங்கம்-தமிழ் இரண்டுக்கும் இடையேயான இலக்கியப் பரிமாற்றம் குறித்துச் சொல்லுங்கள்…

எனது வங்க மொழியறிவு என்பது முதலில் பேச, பின்பு எழுதக் கற்றுக்கொண்டு படிப்படியாக நாளிதழ்கள், புத்தகங்கள் படிப்பதில் சென்று முடிந்தது. இவை அனைத்தையும் சென்னையில் இருந்தபடியே என்னால் செய்ய முடிந்தது. என்றாலும், வங்க மொழியிலேயே கசடற எழுதுவதற்கான துணிவு எனக்கு இன்னும் எழவில்லை. பணி ஓய்வுக்குப் பிறகு இதற்கான முயற்சிகளில் இறங்கத் திட்டமிட்டிருந்தேன். எனக்கு ஆசானாக இருக்க முன்வந்த ‘கொல்கத்தா’ கிருஷ்ணமூர்த்தி 2014 செப்டம்பரில் திடீரென மறைந்துபோன நிலையில் எனக்கு அத்தகைய வாய்ப்பு மீண்டும் கிட்டவில்லை.

தமிழ்-வங்க உறவு என்று சொன்னால் நாட்டின் விடுதலைக்குப் பிறகு 1950-களின் தொடக்கத்தில் சாகித்ய அகாடமியின் மூலம் இந்திய மொழிகளுக்கு இடையே பரிமாற்றங்கள் தொடங்கின. அதற்கு சற்று முன்பே தமிழில் ‘கலைமகள்’, ‘மஞ்சரி’ போன்றவை இதில் முன் கை எடுத்திருந்தன. வங்கத்திலிருந்து எண்ணற்ற இலக்கிய நூல்களை தநா குமாரசாமி-தநா சேனாபதி சகோதரர்கள் தொடங்கி சமீபத்தில் மறைந்த புவனா நடராஜன் வரை பலரும் 1950-களிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்து வந்துள்ளனர்.

சரத்சந்திரர், பங்கிம் சந்திரர், ரவீந்திரநாத் தாகூர், காஜி நஸ்ருல் இஸ்லாம், மாணிக் பந்தோபாத்யாயா, அதீன் பந்தோபாத்யாயா, மகாஸ்வேதா தேவி என வங்க இலக்கிய நட்சத்திரங்கள் பலரும் இவர்கள் மூலமாகத் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தனர். இவர்களில் தனித்துவம் மிக்கவராக நான் கருதுவது சு.கிருஷ்ணமூர்த்தியைத்தான். சிறந்த பல வங்க எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்த்த அதேநேரத்தில் தமிழிலிருந்து திருக்குறள் முதல் நவீன சிறுகதைகள், நாவல்கள் வரை ஏராளமான தமிழ் எழுத்துகளை வங்க வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய ஒரே தமிழ் எழுத்தாளர் அவர்தான். கல்கத்தாவிலேயே சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து இரு மொழிகளுக்கும் பாலமாக இருந்த அவரது நினைவாக சாந்திநிகேதனில் தமிழ்த் துறையில் ஒரு நூலகம் அமைக்க முயற்சி நடைபெற்றுவருகிறது. இந்தப் பதில் மரியாதைப் பண்பாட்டை இன்றைக்கு மேற்கொள்ளும்படியான தமிழ் எழுத்தாளர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தீவிரமான அரசியல் நூல்களை மொழிபெயர்த்துக்கொண்டிருந்த சூழலில் திடீரென சத்யஜித் ரே எழுதிய குழந்தைகளுக்கான கதைகளை மொழிபெயர்க்க நேர்ந்தது எப்படி?

1978-ல் எனது மொழிபெயர்ப்புப் பணி தொடங்கியது. 1980-ல் வங்கத் திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் எழுதிய ‘சினிமா ஒரு பார்வை’ நூலை எனது நண்பர்கள் மோ.சிவகுமார் (இப்போது எல்.வி.பிரசாத் அகாடமியில் இயக்குநர் துறைத் தலைவர்), அருள்நந்தி சிவராஜ் ஆகியோருடன் இணைந்து மொழிபெயர்த்தேன். புத்தகம் வெளிவந்த பிறகு சினிமா வேலையாக சென்னை வந்திருந்த சத்யஜித் ரேயைச் சந்தித்தபோது இந்த விஷயத்தைக் கூறினேன். அப்போது “எனது ‘அவர் ஃபிலிம்ஸ் தேர் ஃபிலிம்ஸ்’ நூலையும் தமிழில் கொண்டுவரலாமே?” என்றார். அதன் பிறகு, 1983-ல் வங்க அரசுப் பணியில் சேர்ந்த பிறகு கல்கத்தா செல்லும்போது அப்போது அங்கு உருவாகிவந்த ‘நந்தன்’ திரைப்பட வளாகம் செல்வேன். அங்கு வேலைகளை மேற்பார்வையிட வரும்போதும் அதன் பின்னரும் சத்யஜித் ரேவைச் சந்திக்கும்போதெல்லாம் தனது நூலைத் தமிழில் கொண்டுவருவது பற்றி கேட்டுக்கொண்டிருப்பார். அவர் மறையும்வரை நான் அதைச் செய்யவே இல்லை.

அந்த நேரத்தில் வங்க மொழி, பண்பாடு, அரசியல் போன்றவற்றின் மாணவனாக, மொழிபெயர்ப்பில் ஆர்வம் இல்லாதவனாக மாறியிருந்தேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு 1937-ல் வெளிவந்த எட்கர் ஸ்நோ எழுதிய ‘சீனவானில் சிவப்பு நட்சத்திரம்’ நூல், 2003-ல் ‘அலைகள்’ சிவம் மூலம் தமிழில் வெளிவந்தது. பின்னர் நான் மொழிபெயர்த்த சுகுமால் சென் எழுதிய ‘இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு’ நூலையும் அவர்தான் வெளியிட்டார்.

அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் குன்னாங்குன்னாங்குர் என்ற அமைப்பு கிராமங்களில் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைத் திரையிட்டு, விவாதிக்கச்செய்து, மக்களின் திரைப்பட ரசனையை மேம்படுத்தப் பாடுபட்டுவந்தது. இந்த அமைப்பின் நிறுவனர் செல்வம் குழந்தைகளுக்கான ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக சத்யஜித் ரே, ‘சந்தேஷ்’ இதழில் குழந்தைகளுக்காகத் தொடர்ந்து எழுதி பின்பு திரைப்படமாகவும் ஆன ஃபெலுடா கதைத் தொகுப்பில் குறிப்பிட்ட ஒரு கதையைத் தமிழில் கொண்டுவர விரும்பினார். இந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் திரைப்பட, ஆவணப்பட இயக்குநர்களான பி.லெனின், அம்ஷன் குமார் போன்றோர் பங்கேற்றுவந்தனர். எனது வங்கத் தொடர்பைக் கொண்டு சந்தீப் ரேயின் அனுமதி பெற முயலுமாறு எனது நண்பர் அம்ஷன் குமார் அவருக்கு ஆலோசனை கூற, செல்வமும் என்னை அணுகினார். அப்படித்தான் தொடங்கியது. முதலில், குழந்தைகளுக்கான கதைகளை மொழிபெயர்க்கும் எண்ணம் இல்லை. ஆனால், கதைகளைப் படிக்கும்போதுதான் கலைக்குப் பக்கத்தில் குழந்தைகள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவ்வளவு பெரிய மேதை ஏன் குழந்தைகளுக்காகக் கதைகள் எழுதினார் என்பதும் புரிந்தது. இன்றைக்கும் எவ்வளவோ அரசியல் சார்ந்து தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கான புத்தகங்களுக்காகவும் அதே தீவிரத்தோடு இயங்க வேண்டும் என்று தோன்றுகிறது.

‘பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்’ என்ற ஃபெலுடா கதையை மட்டும் தமிழில் மொழிபெயர்க்க சந்தீப் ரேயிடம் சிறப்பு அனுமதி வாங்கி மொழிபெயர்த்தும் முடித்தேன். ஆனால், 2004 சுனாமித் தாக்குதலில் செல்வம் அனைத்தையும் இழந்து நின்றிருந்தார். அவரால் நூல் வெளியிட முடியாத நிலை. பின்பு, வேறு பதிப்பாளர்களை அணுக முயன்றபோது நடுவில் ஒரு கதையை மட்டும் தமிழில் வெளியிடுவதற்குப் பதிலாக ஃபெலுடா கதைகள் முழுத் தொகுப்புக்கும் அனுமதி பெற்றால் வெளியிடுவதாக ‘கிழக்குப் பதிப்பகம்’ பத்ரி சேஷாத்ரி முன்வந்தார். அதன்படியே, ஃபெலுடாவின் 35 கதைகளுக்கும் அனுமதி பெற்று நான் தமிழில் மொழிபெயர்த்துக்கொடுத்த 19 நூல்களில் 9 மட்டுமே வெளிவந்தன. பின்பு, பேச்சுமூச்சே இல்லை. தமிழ்ப் பதிப்புலகில் புதியதொரு போக்கை அறிமுகப்படுத்திய அந்தப் பதிப்பகத்துக்கே இந்த நிலை. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘புக்ஸ் ஃபார் சில்ட்ரன்’ (பாரதி புத்தகாலயத்தின் ஒரு பிரிவு) 2013-ல் 20 நூல்களை ஒருசேர வெளியிட்டனர். இன்றுவரை தமிழுலகம் கண்ணுற்றதாகவே தெரியவில்லை.

வங்கத்தில் வந்ததைப் போலவே ஃபெலுடா கதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிடலாமா என்று யோசித்துவருகிறேன். பின்பு, ‘சத்யஜித் ரே வாழ்வும் வழியும்’ என்ற தலைப்பில், அவருக்கு நான் செய்யும் பிராயச்சித்தமாக எழுதிய, வாழ்க்கை வரலாற்று நூல் 2017-ல் ‘விகடன்’ பிரசுரமாக வெளியானது. அதுவும்கூட எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே நிலை. சினிமா பற்றிய அவரது கட்டுரைகளின் தொகுப்பான ‘டீப் ஃபோகஸ்’ என்ற நூலும்கூட என்னால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகாமல் உள்ளது. பதிப்பகங்கள் மீதான நம்பிக்கை இழப்பும் இதற்கு ஒரு காரணம்.

உவேசாவையும் அவரைப் போல வங்க மொழியில் பண்டைய இலக்கியங்களைத் தொகுத்த அப்துல் கரீம் சாகித்ய விஷாரத்துடன் ஒப்பிட்டு நீங்கள் ஆய்வுசெய்தீர்கள் அல்லவா? அது என்னவாயிற்று?

கி.பி. முதல் ஆயிரமாண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் புழங்கிவந்த பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலிருந்து கிளைத்த ஒரு வட்டார மொழிதான் வங்க மொழி. பின்னர் கி.பி. 10-12-ம் நூற்றாண்டில்தான் அது தனியொரு மொழியாக உருப்பெறுகிறது. கி.பி.12 முதல் 16-ம் நூற்றாண்டு வரை அதில் வங்க மொழியில் எழுதப்பட்ட (இந்து (குறிப்பாக, வைணவம்) – முஸ்லிம்) பக்தி இலக்கியங்கள் அடங்கிய 2,000-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டெடுத்து அவற்றை 600-க்கும் மேற்பட்ட சிற்றிதழ்களின் மூலம் ஆவணப்படுத்திய பெருமைக்கு உரியவர் அப்துல் கரீம் சாகித்ய விஷாரத். இவர் கிட்டத்தட்ட உ.வே.சா.வின் சம காலத்தவரும்கூட.

இன்றைய வங்கதேசத்தின் சிட்டகாங் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்த அவரது பணி தனித்துவமானது. வங்கம், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பாரசீகம், உருது ஆகிய மொழிகளை அறிந்தவர்.

தமிழகத்தின் உ.வே.சா.வை ஒப்பிடும்போது கீழ் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர் அன்றைய பட்டப்படிப்புக்கு முந்தைய நிலையான எஃப்.ஏ. வரை படித்தவர். பின்னர், பள்ளி ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, பள்ளிக்கல்வி ஆய்வாளராக என நடுநிலைப் பதவிகளை மட்டுமே வகித்தவர். பெரும்பாலும் பிராமணர்களிடம் மட்டுமே இருந்த ஓலைச்சுவடிகளை இரந்து பெற்று அவற்றை நகலெடுத்து அந்த இலக்கியங்களுக்குப் புத்துயிரூட்டியவர்.

நான் படித்த நூலில் இருந்த இரண்டே வரி தகவலை வைத்துக்கொண்டு பல ஆண்டுகள் நூல்பிடித்துப் போய், அன்றைய திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் உதவியுடன் டாக்கா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியருடன் தொடர்புகொண்டு, இறுதியில் டாக்கா நகரில் உள்ள வங்க அகாடமியை எட்டினேன். அப்துல் கரீம் மீது இருந்த எனது ஆர்வம் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது உதவியுடன் சாகித்ய விஷாரத் பற்றிய பல விஷயங்களை என்னால் சேகரிக்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து டாக்கா வங்க அகாடமியின் வைரவிழா நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்வு அப்துல் கரீம் நினைவு அரங்கில்தான் நடைபெற்றது. ‘தமிழ்-வங்க இலக்கிய வரலாற்று முன்னோடிகள்: உ.வே.சாமிநாதையர் – அப்துல் கரீம் சாகித்ய விஷாரத்: ஓர் ஒப்பாய்வு’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை முன்வைத்தேன். அதன் மூலம் உ.வே.சா.வின் தமிழ்ப் பணியை வங்கதேச மக்களிடம் முன்வைத்தேன்.

பின்னர், சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் அப்துல் கரீம் தனிப்பட்ட முறையில் சேகரித்து வைத்திருந்த நூல்கள் அடங்கிய அரியவகை ஆவண நூலகத்தைப் பார்வையிட்டு அவரது சொந்த கிராமத்துக்குச் சென்று அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கண்டுவிட்டு அவரது உறவினர்களைச் சந்தித்துப் பேசிவந்தேன். அப்துல் கரீம் சாகித்ய விஷாரத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தனியாக எழுதிவருகிறேன். உ.வே.சா. – சாகித்ய விஷாரத் குறித்த ஒப்பீட்டு ஆய்வுக்கு இங்கு போதிய ஊக்கம் கிடைக்காத நிலையில், சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவரைத் தற்போது ஊக்குவித்துவருகிறேன். 2012-ல் தொடங்கிய எனது கனவு அவர் மூலமாக நிறைவேறும் என்று நம்புகிறேன்.

வங்கத்தில் சினிமாவுக்கும் இலக்கியத்துக்குமான தொடர்பு மிகவும் இணக்கமானது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தியாவில் சினிமா முதலில் மௌனமாகவும் பின்பு பேசவும் தொடங்கியபோது புராண, இதிகாசக் கதைகளே அதை ஆக்கிரமித்திருந்தன. சரத் சந்திரரின் தேவதாஸ் என்ற சமூகக் கதைதான் இந்தப் போக்கை முற்றிலுமாக மாற்றி அமைத்தது எனலாம். வங்க இலக்கியவாதிகளின் முடிவேயில்லாத எழுத்துப் பசிக்குத் தீனிபோட நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், பூஜா சிறப்பு மலர்கள் எனப் பல்வேறு களங்கள் இருந்தன. அன்றைய வங்கத் திரைப்பட இயக்குநர்களும் அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

மௌனப்படக் காலத்திலிருந்தே கல்கத்தாவுக்குச் சென்று தமிழ், தெலுங்கு படமெடுத்து வந்தவர்களுக்க்கு வங்க சமூகக் கதைகள் மிகவும் வசதியாக இருந்தன. 1950-60-களில் தமிழகத்தில் திரைப்பட ஸ்டூடியோக்கள் நிலைபெற ஆரம்பித்த பிறகுதான் இந்தப் போக்கு நின்றது. எனினும், வங்க எழுத்துகளை தமிழ்-தெலுங்கு மொழிகளில் திரைப்படம் எடுக்க வேண்டும் எனத் தனது கடைசி நாட்கள் வரை முயன்றுவந்தவர் அஷ்டாவதானி ஆன அம்மா பானுமதி ராமகிருஷ்ணாவைத்தான் சொல்வேன். 1990-களில் அவரது வேண்டுகோளுக்காகவே பல வங்க எழுத்தாளர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

தன்னளவில் படைப்பாளிகளாக இருந்த சத்யஜித் ரே, ரித்விக் கட்டாக் போன்றோர் மற்றவர்களின் எழுத்துகளையும் எடுத்துக்கொண்டு சினிமா தொடக்கூடிய வரம்புகளைத் தொடர்ந்து விரிவாக்கிக்கொண்டே இருந்தனர். அதன் வீச்சைத்தான் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நம்மால் காண முடிந்தது.

வடகிழக்கு, வங்கம் சார்ந்த கள அறிவு கொண்டவர் நீங்கள். திரிபுரா எப்படி வங்காளிகளின் ஆதிக்கத்துக்கு எதிராக இருக்கிறது? இப்போது பாஜகவின் அரசியலும் அங்கேதான் இருக்கிறது. அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?

கிழக்கிந்திய கம்பெனி வங்கத்திலிருந்துதான் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியது. அதிகாரத்தின் அருகில் இருந்த உயர்வகுப்பு வங்காளிகள்தான் அப்போது பெரிதும் ஆங்கில அறிவு பெற்றவர்களாக இருந்தனர். அன்றைய அசாம் (இன்று அது அசாம், அருணாச்சல பிரதேசம், மேகலாயா, நாகாலாந்து, மிசோரம் என ஐந்து மாநிலங்களாகப் பிரிந்துள்ளது) கம்பெனியின் பிடியில் வந்தபோது வங்காளிகளே ஆட்சி நிர்வாகத்தின் சக்கரங்களாகப் பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டனர். கிட்டத்தட்ட 200 ஆண்டுகால வரலாற்றில் வடகிழக்குப் பகுதியின் முன்னேற்றத்தில் வங்காளிகளின் பங்கு கணிசமானது. எனினும், தங்களின் படிப்படியான முன்னேற்றத்துக்கு வங்காளிகள் தடைக்கல்லாக இருக்கிறார்கள் என்ற உணர்வும் அப்பகுதி பூர்வகுடி மக்களிடையே வலுப்பட்டுவந்ததன் விளைவே இன்றைய கலவரங்கள். காங்கிரஸ் இதை எப்படி தனக்கான அரசியலாகப் பயன்படுத்திவந்ததோ அதையேதான் பாஜகவும் இப்போது செய்துவருகிறது. எனினும், அந்தப் பூர்வகுடி இன மக்களின் உண்மையான தேவைகள், உள் முரண்பாடுகள், அவர்களின் முன்னேற்றம் பற்றி அவர்கள் சிந்திக்கவோ செயல்படவோ விடாத வகையில்தான் வடகிழக்குப் பகுதியின் அரசியல் தொடர்ந்து இருந்துவருகிறது. அசாம் உடன்படிக்கையின்படி 1971 மார்ச் மாதத்துக்குப் பிறகு இங்கு வந்து குடியேறிய எந்தவொரு அந்நியருக்கும் இன, மத வேறுபாடின்றி இங்கு இடமில்லை என்ற கோஷத்துடன் அவர்கள் இன்று கிளர்ந்து எழுந்துள்ளனர். அசாமில் தொடங்கிய இந்த முழக்கம் இப்போது வடகிழக்கின் கடைக்கோடியான திரிபுரா வரை எதிரொலிக்கிறது. மக்களைப் பிரித்து லாபம் பார்த்த பாஜக இன்று வடகிழக்குப் பகுதி முழுவதிலும் ஒன்றுதிரண்ட மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

வடகிழக்கு தொடர்பாக புத்தகம் எழுதுகிறீர்கள் அல்லவா?

‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் நண்பர் அரவிந்தன் கொடுத்த ஊக்கத்தில் வடகிழக்குப் பகுதியின் ஒவ்வொரு மாநிலத்தையும் அறிமுகப்படுத்தும் வகையில் பத்து கட்டுரைகள் எழுதியிருந்தேன். ஒரு மாநில இனத்தவரின் வரலாறு, பண்பாடு, உணவு, உடை, இசை, மற்ற இனத்தவரோடு அவர்களுக்குள்ள நட்பு, பகை போன்ற பல விஷயங்களையும் முழுமையாக 500 வார்த்தைகளுக்குள் தந்துவிட முடியாது. எனவே, வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய அறிமுகமாக தனியாகவே ஒரு நூல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் வெளிவரும் என நம்புகிறேன்.

தமிழ்நாட்டு இடதுசாரித் தலைவர்களுடன் பழகியிருக்கிறீர்கள். வங்கத் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இருவரிடமும் நீங்கள் அவதானித்த ஒற்றுமை, வேற்றுமைகள் என்னென்ன?

கம்யூனிச இயக்கம் இந்த இரண்டு பகுதிகளிலுமே கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் முகிழ்க்கத் தொடங்கியது. எனினும், வங்கத்தில் நாற்பதுகளிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற இயக்கங்கள் இடதுசாரி கருத்துகளை அந்த மண்ணில் ஆழமாக வேரூன்றின. அதே நாற்பதுகளில் தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவ – சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் தீவிரமாக நடத்தியபோதும் ஐம்பதுகளில் எழுச்சிபெற்ற திராவிட இயக்கத்தின் வீச்சை மீறி அவர்களால் தமிழ் மண்ணில் வேர்கொள்ள இயலவில்லை என்றே கருதுகிறேன். தலைவர்களைப் பொறுத்தவரையில், இரண்டு மாநிலங்களிலுமே சூழ்நிலைக்கேற்ப திறமையாகச் செயல்பட்டவர்களாகவே இருந்தனர். எனினும், குடும்பம் குடும்பமாக இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் வங்கம், கேரளா, ஆந்திரா, திரிபுரா ஆகிய மாநிலங்களில்தான் கணிசமாக இருந்தனர். இங்கே வி.பி.சிந்தன், உ.ரா.வரதராசன் போன்ற பன்முகத் தன்மை கொண்ட தலைவர்களின் அடியொற்றியே எமது தலைமுறை இயக்கத்துக்கு வந்தது. வங்கத்தில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பிரமோத் தாஸ்குப்தா, ஜோதிபாசு, பினய் சவுதுரி, சாந்தி கட்டாக், சித்தப்ரத மஜும்தார் போன்றவர்களின் ஆளுமையும் தன்னலமற்ற செயல்பாடுகளுமே அங்கு இயக்கத்தை வலுவாக வளர்த்தெடுத்தன எனலாம். அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்பட்ட தலைவராக இங்கு வி.பி.சிந்தன் இருந்தார் எனில் அங்கு சுபாஷ் சக்ரவர்த்தி இருந்தார். அங்கு காங்கிரஸுக்கு எதிரான ஒரே இயக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது எனில் இங்கே திராவிட இயக்கம் அந்த இடத்தை எட்டிப்பிடித்திருந்தது. கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சி இங்கு ஏதோவொரு வகையில் தடைபட்டுப்போனது.

இந்து தமிழ்
2020.01.14

மொழிபெயர்ப்பு என்பது மொழி, இலக்கியம், பண்பாடு கடந்த செயல்பாடு!- வெ.ஸ்ரீராம் பேட்டி

த.ராஜன்

ve-sriram-interview

நூற்றாண்டு கடந்த மொழிபெயர்ப்பு வரலாற்றில் வெ.ஸ்ரீராமின் இடம் தனித்துவமானது. தமிழ் வாசகர்களிடம் பரவலாகத் தாக்கத்தை ஏற்படுத்திய பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ நாவலின் மொழிபெயர்ப்பாளராகத் தமிழுக்கு அறிமுகமானவர். இவரது ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் மிகுந்த முக்கியத்துவமும் தனித்துவமும் கொண்டவை. இவர் மொழிபெயர்த்த ழாக் ப்ரெவெரின் ‘சொற்கள்’ கவிதைத் தொகுப்பு, தமிழ்க் கவிதைகளின் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரெஞ்சு இலக்கியம், சினிமா, கலாச்சாரத்தை தமிழ் மக்களிடம் சீரிய வகையில் அறிமுகப்படுத்தியதற்காக பிரான்ஸ் அரசாங்கம் இவருக்கு இரண்டு முறை செவாலியே விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

பிரெஞ்சு கற்றுக்கொள்ள எப்படி நேர்ந்தது? நிறைய மொழிகளை ஒருவர் கற்றுக்கொள்வதில் உள்ள அனுகூலங்கள் என்னென்ன?

காம்யு, பால்ஸாக், விக்டர் ஹ்யூகோ என்று எண்ணற்ற பிரெஞ்சு இலக்கியங்களை ஆங்கிலத்தில் படித்திருந்தேன். இந்த அற்புதமான இலக்கியங்களெல்லாம் மூல மொழியில் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்த்துவிட நினைத்ததுதான் பிரெஞ்சு கற்றுக்கொள்ளக் காரணம். எந்தவொரு மொழியாக இருந்தாலும் அதை நீங்கள் எதற்காகக் கற்றுக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் அதன் அனுகூலம் இருக்கிறது. இன்று பிரெஞ்சு அல்லது வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் – ஆங்கிலம் உட்பட – இலக்கியத்துக்காகக் கற்றுக்கொள்ள விரும்புவதில்லை. வேலைக்குச் செல்வதை நோக்கமாகக் கொண்டு பயன்மதிப்புக்காக ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதென்பது என்னை வருந்தச்செய்யும் விஷயம்.

காம்யுவின் ‘அந்நியன்’ நாவல் மூலமாக மொழிபெயர்ப்புக்குள் நுழைகிறீர்கள். ‘க்ரியா’வின் முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பும் அதுதான். முதல் புத்தகமாக காம்யுவைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

மவுன்ட் ரோடு எல்எல்ஏ கட்டிடத்தில் 1970-களில் நிறைய இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். ‘நடை’ எழுத்தாளர்கள் நிறையப் பேர் அங்கு வருவார்கள். அங்கேதான் ‘க்ரியா’ ராமகிருஷ்ணனும் அறிமுகமாகிறார். எனது பிரெஞ்சு இலக்கிய, சினிமா அறிவை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது, ஆங்கிலக் கட்டுரைகள் மூலமாக அவர்கள் காம்யுவை அறிந்துவைத்திருந்ததற்கும், நான் நேரடியாக பிரெஞ்சிலிருந்து தெரிந்துவைத்திருந்த காம்யுவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அப்போது வந்துகொண்டிருந்த ‘பிரக்ஞை’ சிறுபத்திரிகையில் இதைப் பற்றி எழுதச் சொல்லிக் கேட்டார்கள். காம்யுவின் உலகத்தைப் பேச வேண்டுமென்றால், அவரது படைப்பிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டியது அவசியம் இல்லையா? ஆங்கில மேற்கோள்களைக் காட்ட முடியாது; ஆங்கிலத்தில் திரிந்துபோயிருக்கிறது என்பதுதானே எனது வாதம். ஆக, எனது வாசிப்பைச் சொல்வதற்கு முன்னால் காம்யு என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அப்போதுதான் காம்யுவின் படைப்பைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

காம்யு, சார்த்ர், ப்ரெவெர் என நீங்கள் மொழிபெயர்த்த பலரும் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் தாக்கம் செலுத்தியிருக்கிறார்கள். நீங்கள் மொழிபெயர்ப்பதற்கு முன்பாக இங்கே பிரெஞ்சு இலக்கிய வாசிப்பு என்னவாக இருந்தது?

‘அந்நியன்’ நாவல் மொழிபெயர்ப்பாகி அதன் பதிப்புக் குறிப்புக்காகத் தகவல்களைத் திரட்டத் தொடங்கினோம். என்னென்ன மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாகியிருக்கின்றன என்று நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா (என்பிடி) ஒரு விவரப் பட்டியல் வெளியிட்டிருந்தது. பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு வந்த புத்தகங்கள் என ஒரு 52 தலைப்புகள் இருந்தன. ஆனால், பெருவாரியான மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்திலிருந்து வந்தவை. பாண்டிச்சேரியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்த ஒன்றிரண்டு படைப்புகள் பிரெஞ்சிலிருந்து நேரடியாக வந்திருக்கலாம். பெரும்பாலான படைப்புகள் முழுமையானதாக அல்லாமல் சுருக்கப்பட்ட பதிப்பாக இருந்தது. அவை வெறும் கதைக்காக மொழிபெயர்க்கப்பட்டவை.

உங்கள் மின்னஞ்சல் முகவரியில் காம்யு இருக்கிறார். எந்தக் கூட்டங்களில் பேசினாலும் காம்யுவின் பெயரை நீங்கள் உச்சரிக்காமல் இருந்ததில்லை. காம்யு மீது உங்களுக்கு மிகப் பெரும் அபிமானம் வருவதற்கு என்ன காரணம்?

காம்யுவின் சிந்தனை முறைகளும், அதிலிருந்து அவர் கண்டறிந்த விஷயங்களை இலக்கியமாக்கிய விதமும்தான் முக்கியமான காரணம். காம்யுவின் முதல்கட்ட வளர்ச்சியில் கிரேக்கச் சிந்தனையின் தாக்கம் இருந்தது. பிற்காலத்தில், கீதையின் தத்துவச் சிந்தனைகளும் காம்யுவை ஆக்கிரமித்திருக்கின்றன. காம்யுவின் படைப்புகள் அத்தனையிலும் கடமையைப் பற்றிப் பேசும் பகுதிகளிலெல்லாம் பகவத் கீதையின் எதிரொலி கேட்டுக்கொண்டே இருக்கும். இரண்டாம் உலகப் போர், ஐரோப்பியச் சூழ்நிலையின் பின்னணியில் நாம் ‘அந்நியன்’ நாவலைப் புரிந்துகொள்ள முற்பட்டால், அதற்கு வேறு பரிணாமம் கிடைக்கும். வெறுப்பின் உச்சத்தில் இருக்கக்கூடிய சமூகம் அது. அச்சமூகத்துக்குப் போலியான நம்பிக்கையைக் கொடுக்காமல், அதேசமயத்தில், அச்சமூகத்தை நாசக்கார வேலையிலும் இறங்கவிடாமல், பொறுமையாக இருந்து ஆக்கபூர்வமான வேலையைச் செய்ய வேண்டும் என்றும், அச்சமூகத்துக்கு என்ன மாதிரியான பார்வையைக் கொடுக்க வேண்டும் என்றும் பிரெஞ்சு சமூகத்துக்கு காம்யு எடுத்துவைத்த முதல் அடிதான் ‘அந்நியன்’ நாவல். அபத்தத்தை எதிர்கொள்ளும் புதுவிதமான பார்வையை முதன்முறையாக பிரெஞ்சு சமூகத்துக்கு இந்நாவலின் வழியே அறிமுகப்படுத்துகிறார் காம்யு.

உங்கள் மொழிபெயர்ப்புகளின் பொது அம்சமாக இந்த ‘அபத்தம்’ இருக்கிறது. ‘அபத்தத்தால் இயங்கும் உலகம்’தான் உங்களது இலக்கிய மொழிபெயர்ப்புகள் எனலாமா?

உண்மைதான். நான் மொழிபெயர்த்த புத்தகம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அபத்தப் பரிமாணம் வெளிப்பட்டிருக்கிறது. ‘குட்டி இளவரசன்’ நாவலில் வரும் அபத்தம் வெகுளித்தனமான ஒரு சிறுவனின் பார்வையிலானது. குற்றமறியாத அந்தச் சிறுவனின் கண்களுக்கு அபத்தங்களெல்லாம் தென்பட்டுவிடுகின்றன. சார்த்ரின் ‘மீள முடியுமா?’ நாடகத்தில் வரும் அபத்தம் சித்தாந்தரீதியிலானது. ‘எதிலும் ஏகபோக உரிமை இருந்தால் மாற்றுக்கருத்துகளுக்கு இடம் இருக்காது; சுதந்திரம் இருந்தால் மாற்றுக்கருத்துகளுக்கு இடம் இருக்கும் என்கிறார்கள். ஆனால், அதில் ஒரு முரண்பாடு இருக்கிறது’ என்கிறது பியர் பூர்தியுவின் ‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ புத்தகம். ழாக் ப்ரெவெரின் ‘சொற்கள்’ தொகுப்பில் வரும் பல்வேறு கவிதைகளிலும், ழூல் ரோமேனின் ‘க்னோக்’ நாடகத்திலும் வெவ்வேறு விதமான அபத்தங்கள் வெளிப்படுகின்றன.

உங்கள் நாற்பது ஆண்டுகால மொழிபெயர்ப்புப் பயணத்தில் 12 புத்தகங்கள் மட்டுமே மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உங்களது தேர்வு முறை குறித்துச் சொல்லுங்கள்…

மொழிபெயர்ப்பானது மொழி, இலக்கியம், பண்பாடு தாண்டிய செயல்பாடாகத் தோன்றியது. அந்த நோக்கத்தில்தான் மொழிபெயர்ப்புக்கான படைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறேன். எனக்குப் பிடித்த, எல்லோருக்கும் பொதுவாக இருக்கக்கூடிய, தமிழ்ச் சமூகத்தில் இருப்பவர்களும் அதிக விலகலைக் கொண்டிராத புத்தகங்களாக இருக்க வேண்டும். காம்யுவின் ‘அந்நியன்’ நாவலில் வரக்கூடிய தனிநபர் அபத்தமும், சார்த்ரின் ‘மீள முடியுமா?’வில் வரக்கூடிய ‘நரகம் என்பது மற்றமைதான்’ என்பதும் எல்லா சமூகத்துக்கும் பொருந்தக்கூடியவை. இது எல்லாவற்றையும் தூக்கியடிப்பது மாதிரியான புத்தகம் ‘குட்டி இளவரசன்’. எத்தனை ஜென்மமானாலும் நிலைத்து நிற்கக்கூடிய புத்தகம் அது.

‘குட்டி இளவரசன்’ நாவலை நாற்பது முறைக்கும் மேல் வாசித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள்…

ஆமாம். ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப் புது விஷயங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும் ஊற்று அது. ‘குட்டி இளவரசன்’ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் பெரிய கொள்கை வருகிறது. அதை ஒரு வயதான மனிதர் குழந்தை யின் பார்வையில், குழந்தையின் மொழியில் சொல்கிறார். அதுதான் அந்தப் புத்தகத்தின் அழகு. 16 வயதிலிருந்து 75 வயது வரை படிக்க உகந்ததுபோன்ற வேறு புத்தகத்தை நான் பார்த்ததே கிடையாது. அதுபோல, ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிது புதிதான விஷயங்கள் புலப்படுகின்றன. ‘குட்டி இளவரசன்’ நாவல் ஓர் அதிசயம்.

பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்ப்பதன் அனுகூலங்கள் என்னென்ன?

நீ, நீங்கள் என்ற வித்தியாசம் ஆங்கிலத்தில் இல்லை. தமிழிலும் பிரெஞ்சிலும் இருக்கிறது. ‘அந்நியன்’ நாவலில் முதலில் நீங்கள் என்று வருவது பிற்பாடு நீ என்று ஆவதாக இருக்கும். ஒருவேளை, இதை நாம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருந்தால் இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது சாத்தியமே இல்லை. ‘அந்நியன்’ நாவலின் முதல் பத்தியில் ‘இதற்கு ஒன்றும் அர்த்தமில்லை’ என்பது ஆங்கில வடிவில் ‘விச் லீவ்ஸ் தி மேட்டர் டவுட்ஃபுல்’ என்று மொழிபெயர்ப்பாகியிருந்தது. வாழ்க்கையின் அர்த்தமின்மை என்ற கருத்தாக்கத்தை முதல் பத்தியிலேயே சுட்டிக்காட்டிய காம்யுவின் தனித்தன்மை இந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் அடிபட்டுப்போய்விடுகிறது. போலவே, ‘அந்நியன்’ நாவலில் ‘அம்மா’, ‘தாயார்’ என்ற இரண்டு சொற்களையும் சூழலைப் பொறுத்து மெர்சோ பயன்படுத்துகிறான். 1946-ல் வெளியான ஸ்டூவர்ட் கில்பெர்ட்டின் முதல் மொழிபெயர்ப்பில் கவனம் பெறாத இந்த அம்சத்தை மேத்யூ ஹார்ட் 1989-ல் வெளியிட்ட தனது மொழிபெயர்ப்பில் திருத்தியிருக்கிறார். தமிழ் மொழிபெயர்ப்பு 1980-ல் முதலில் வெளிவந்தது. நாம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருந்தால் இந்த நுட்பங்களையெல்லாம் தவறவிட்டிருப்போம்.

பிரெஞ்சு சமூக, கலாச்சாரச் சொல்லாடல்களை இன்னொரு கலாச்சாரத்துக்கு மொழிபெயர்க்கையில் நேரும் சிக்கல்களை எப்படிக் கையாள்கிறீர்கள்?

மொழிபெயர்ப்பானது சொற்களை மட்டுமே சார்ந்திருப்பதில்லை என்பதால், பிரெஞ்சு கருத்தாக்கத்துக்கும், பண்பாட்டு அம்சத்துக்கும் தமிழில் சரியான சொல் இல்லை எனும்போது, அங்கிருந்து அந்தச் சொல்லைக் கடன்வாங்கிக்கொள்ளலாம். இதுபோன்ற சமயங்களில் பதிப்பாளர் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மிகவும் உதவிகரமாக இருக்கிறார். நிறைய உரையாடி, குறைவான சுதந்திரத்தோடு ஒரு முடிவுக்கு வருவோம். ஒருவேளை ஏதேனும் வார்த்தைப் பயன்பாட்டால் பொருள் திரிவதாகத் தோன்றினால், அடிக்குறிப்புகள் கொடுத்துவிடுவோம். எனது எல்லா படைப்புகளுக்குமே எடிட்டர் ராமகிருஷ்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். அவருக்கு பிரெஞ்சு தெரியாது. ஆனால், அதை அவர் ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுப்பார்ப்பார். சந்தேகம் வரும் இடங்களைக் குறித்து வைத்துக் கேள்விகள் கேட்பார். ஒரு வாக்கியம் சரியாக வர வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் வரைகூட உரையாடியிருக்கிறோம். முறையாகக் கலந்தாலோசிப்பதன் மூலம் மொழிபெயர்ப்பின் தன்மை வளம்பெறுகிறது.

உங்களது மொழிபெயர்ப்பு பாணி என்ன? ஒரு படைப்புக்காக உங்களை எப்படித் தயார்படுத்திக்கொள்வீர்கள்?

ஒரு வாக்கியத்தைப் புரிந்துகொள்வதோ, கதையைப் புரிந்துகொள்வதோ மட்டும் இலக்கியம் அல்ல. சொல்லாடல், உள்வாங்கிக்கொள்ளும் மொழியின் அமைப்பு, தொனி இவற்றிலெல்லாம் என் முதன்மையான அக்கறை இருக்கும். வாக்கியங்களை உடைத்தாலும் அதன் தன்மை மாறாது என்றால் மட்டும் உடைத்துக்கொள்வேன். இல்லையென்றால், அதை அப்படியே மொழிபெயர்ப்பதுதான் சரி. மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் புத்தகம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளை, ஆய்வுகளை வாசித்துக்கொள்வேன். பிரான்ஸில் உள்ள பல்வேறு தரப்பினர்களுடனும் – சாதாரண வங்கி ஊழியரில் தொடங்கி பேராசிரியர்கள் வரைக்கும் – உரையாட முற்படுவேன். அப்படிப் பேசும்போது படைப்புகளை இன்னும் நுட்பமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. வார்த்தைப் பயன்பாட்டைப் பொறுத்தவரை தற்காலத் தமிழைப் பயன்படுத்துகிறேன்.

அதனால்தான், நீங்கள் மொழிபெயர்த்தவற்றில் ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’, ‘மெர்சோ: மறுவிசாரணை’ தவிர, பிற எல்லா படைப்புகளும் உங்களுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவையாக இருக்கின்றன எனலாமா? நீங்கள் க்ளாசிக்ஸ் பக்கமும் போகவில்லை, சமகாலப் படைப்புகள் மீதும் உங்கள் அக்கறை இருக்கவில்லை…

ஒருவகையில் அப்படியும் சொல்லலாம். பெரும்பாலான பிரெஞ்சு கிளாசிக் படைப்புகளில் அவர்களது பண்பாட்டுப் பின்புலம் வெகு ஆழமாக இருக்கிறது. அன்றைய அவர்களது அன்றாடமும் பழக்கவழக்கங்களும் பிரெஞ்சு சமூகத்துக்கே இப்போது அந்நியமாகிவிட்டன. அதனால்தான், கிளாசிக் படைப்புகளை மொழிபெயர்க்கவில்லை. ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ நாவலை மொழிபெயர்க்கும்போது பியரெத் ஃப்லுசியோ சமகாலத்தவர் என்பதால், அவரிடம் சில சந்தேகங்கள் கேட்க முடிந்தது. அவர் சில இடங்களில் தமிழுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளும்படி சொன்னார். அவர் அனுமதி கொடுத்தும் அதை நான் செய்ய விரும்பவில்லை. நான் வெறும் கூரியர்தான். அங்கிருப்பதைக் கொண்டுவந்து இங்கு சேர்ப்பவன். மூலப் பிரதியில் கைவைப்பதற்கு மொழிபெயர்ப்பாளனுக்கு எந்த உரிமையும் இல்லை.

தற்காலத் தமிழைப் பயன்படுத்துவதாகச் சொன்னீர்கள். ‘அமர்ந்தார்’ என்றுகூட நீங்கள் எழுதுவதில்லை. ‘உட்கார்ந்தார்’ என்றே பயன்படுத்துகிறீர்கள். எல்லா சொற்களும் நேரடியாக இருக்கின்றன…

எது மொழிக்கு இயல்பாக இருக்கிறது, எது இயல்பாக இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இலக்கியம் என்றில்லை; சினிமா, ஊடகம் என எல்லா இடங்களிலும் பொருத்தமில்லாமல் பயன்படுத்துகிறோம். ‘இளம் வாலிபர் சுட்டுக் கொலை’ என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். ‘இளம் வாலிபர் சுடப்பட்டுக் கொலை’ என்பதுதான் சரி. ‘இளம் பெண் தூக்கிலிட்டு சாவு’ என்று எழுதுவார்கள். ‘இளம் பெண் தூக்கிட்டு சாவு’ என்று இன்னும் ஒருபடி மேலே போவார்கள். இரண்டுமே தவறு இல்லையா? இன்னொரு பிடிக்காத விஷயம் என்னவென்றால், தேவையில்லாமல் பெரிய பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது. ‘ஒரு நாள் விடுப்பு எடுப்பதை மறந்துவிட்டு, அந்தக் காரியம் செய்தேன்’ என்று எழுதுவதற்குப் பதிலாக ‘ஒரு நாள் விடுப்பு எடுப்பதை தியாகம் செய்துவிட்டு, அந்தக் காரியம் செய்தேன்’ என்று எழுதுவார்கள். பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் சுருங்கிப்போய்விடும். பிறகு, உண்மையிலேயே பெரிய காரியங்களுக்காக அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அது சாதாரணமாகத் தோன்றிவிடும்.

சார்த்ரின் ‘மீள முடியுமா?’ நாடகத்துக்கு இரண்டு ஆங்கில மொழியாக்கங்கள் வந்திருக்கின்றன. ஒரு தலைப்பு ‘இன் கேமரா’, இன்னொன்று ‘நோ எக்ஸிட்’. நீங்கள் தமிழில் மொழிபெயர்க்கும்போது இந்த இரண்டு தலைப்புகளிலிருந்து மாறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்?

‘வீ க்லோ’ (Huis Clos) என்பது பிரெஞ்சு தலைப்பு. ‘இன் கேமரா’ என்று அர்த்தம். இந்தத் தலைப்பையும், ‘நோ எக்ஸிட்’ என்பதையும் நாம் தமிழில் பயன்படுத்த முடியாது. இறந்ததற்குப் பிறகாவது புத்தி வரும் என்று சொல்வார்கள்; ஆனால், சார்த்ர் சொல்கிறார், ‘செத்தாலும் புத்தி வராது. யாருமே இந்த நிலைமையை விட்டு மீள முடியாது’ என்று. அதனால், ‘மீள முடியுமா?’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

அறிவுஜீவிகளுக்கிடையேயான 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் போர் என்று சார்த்ர், காம்யுவுக்கு இடையேயான விவாதம் பேசப்பட்டது. நீங்கள் இதில் யார் பக்கம் நிற்பீர்கள்??

கம்யூனிஸத்திலிருந்து காம்யு வெளியேறியதுதான் அவர்கள் இருவருக்குமான முரண்பாட்டின் தொடக்கம். ஸ்டாலினின் ஒடுக்குமுறையை காம்யு விமர்சிக்கிறார். ‘ஒரு சமூகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால், புரட்சிகரமான செயல்பாடுகளால்தான் சாத்தியம். அந்தச் சமயங்களில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். அதற்காக நாம் இதை விட்டுக்கொடுக்க முடியாது. ஸ்டாலின் இல்லையென்றால் பழையபடிதானே சமூகம் செல்லும்’ என்பது சார்த்ரின் வாதம். காம்யுவைவிட சார்த்ர் ஆழமான தத்துவவாதியாக இருந்தாலும், அவரது அரசியல்ரீதியான கருத்துகள் பலவும் பிற்காலத்தில் அடிபட்டுப்போய்விட்டன. காரணம் என்னவென்றால் சித்தாந்தரீதியில், தத்துவக் கோட்பாட்டுரீதியில் சார்த்ர் வாழ்க்கையைப் பார்த்தார். காம்யுவோ மனிதாபிமானத்தோடு சேர்த்துப் பார்க்கிறார். அதனால்தான், காம்யுவின் படைப்புகள் இலக்கியமாகிவிடுகின்றன; சார்த்ரின் படைப்புகள் கோட்பாடுகளாகின்றன. நான் காம்யுவின் பக்கம்தான்.

காம்யுவின் ‘அந்நியன்’ குறித்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன என்றாலும், இன்னொரு நாவலாக அதை அணுகியிருந்தது காமெல் தாவுத்தின் ‘மெர்சோ: மறுவிசாரணை’. காம்யுவை மொழிபெயர்த்த நீங்கள் இந்த நாவலையும் மொழிபெயர்த்தது சுவாரஸ்யமானது. காம்யு இருந்திருந்தால் இந்நாவலை எப்படி எதிர்கொண்டிருந்திருப்பார்?

அப்படி யோசித்துப் பார்த்ததில்லை. ஆனால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிச்சயம் சந்தோஷப் பட்டிருப்பார். காமெல் தாவுத் தான் காம்யுவைவிட காம்யுவை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பவர் என்று நினைக்கிறேன். மிகுந்த ஆர்வத்தோடு ‘மெர்சோ: மறுவிசாரணை’ நாவலை மொழிபெயர்த்தேன். ஒவ்வொரு பக்கத்திலும் காம்யுவினுடைய எழுத்தின் பிரதிபலிப்போ எதிரொலியோ மேற்கோளோ இருந்துகொண்டே இருக்கும். காமெல் தாவுத் பிறப்பால் ஒரு அரேபியர், அவரது தாய்மொழி அல்ஜீரியர், அவர் பிரெஞ்சு கற்றுக்கொண்டு, காம்யுவை உள்வாங்கிக்கொண்டு, பிரெஞ்சில் நாவல் எழுதுகிறார். அவரது பிரெஞ்சு அவ்வளவு அழகாக இருக்கிறது. அது பெரிய அற்புதமாக எனக்குப் படுகிறது.

இலக்கிய வாசிப்பு என்பது ஒரு சமூகத்தின் சிந்தனை முறையையே மாற்றியமைக்கக்கூடியது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக, பிரான்ஸுக்குப் பல முறை பயணித்திருப்பவராக அங்கே எப்படியான சிந்தனை முறை இருப்பதாக அவதானிக்கிறீர்கள்?

மனிதகுல மேம்பாட்டுக்காக நீங்கள் அரசியலின் உதவியையும், மதத்தின் உதவியையும், எவ்வித சித்தாந்த உதவியையும் நாடலாம். ஆனால், கும்பல் சேர்ந்துகொண்டு கோஷமிட்டு மனிதகுலத்துக்கு எதிராகச் செல்லக் கூடாது என்பது அவர்களது சிந்தனை முறையின் மையமான நிலைப்பாடாக எனக்குத் தோன்றுகிறது. அவர்களது சிந்தனை முறையில், எல்லா விஷயங்களையும் ஒரு குறிப்பிட்ட பெட்டிக்குள் போட்டுவைக்கும் வழக்கம் அவர்களுக்கு உண்டு. இது எந்த ‘இஸம்’ என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். எந்த ஒரு விஷயத்துக்கும் இதுதான் தீர்வு என்று திட்டவட்டமான முடிவுகளை அவர்கள் முன்வைப்பதில்லை. பிரெஞ்சு சிந்தனை முறையில் மட்டுமல்ல; ஐரோப்பிய சிந்தனை முறையில் இருக்கும் ஒரு முக்கியமான அம்சம் இது. அவர்களது வாசிப்பு விரிவாகவும் ஆழமாகவும் இருக்கிறது. பிரெஞ்சு சமூகம் உரையாடல்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டதாக இருக்கிறது. சரித்திரரீதியாகப் பார்த்தோமென்றால், அங்கே தத்துவங்கள் எல்லாமே உரையாடல் மூலம்தான் சாத்தியமாகியிருக்கின்றன. நமது சமூகத்தில் ஆரோக்கியமான உரையாடல்களே இல்லை. இங்கே மேடைப் பேச்சும் வம்புப் பேச்சும்தான் இருக்கிறது.

எழுத்தாளர்களுக்கு ஒரு சமூகம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்கு பிரெஞ்சு சமூகத்தை உதாரணமாகச் சொல்வார்கள். அது குறித்து?

உண்மைதான். எழுத்தாளர்கள் மீதும் புத்தகங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்ட சமூகம் அது. நடிகர்களை மோகிக்கும் பழக்கம் அங்கே இல்லை. பிரெஞ்சு கலாச்சாரத்தில் கவிதை வாசிப்பதையே ஒரு தொழில்முறை வேலையாக வைத்திருக்கிறார்கள். சில கொள்ளையடிக்கும் பணக்காரர்களைத் தவிர, அங்கே வசதியாக இருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கு வசதி குறைவாக இருக்கும் பிரெஞ்சுக்காரர்களைப் பார்த்தால் ஒருவித குற்றவுணர்வு இருக்கிறது. தன்னிடம் இருக்கும் வசதியைக் காட்டிக்கொள்வதை வக்கிரமானதாகப் பார்க்கிறார்கள். எவ்வளவு உயரிய பண்பு அது. இவையெல்லாம் 20-ம் நூற்றாண்டின் பிரான்ஸ். இப்போது நிறைய மாறிக்கொண்டுவருகிறது. எல்லா நாடுகளையும் போலவே பிரான்ஸும் அதன் தனித்தன்மையை இழந்துவருகிறது.

பிரெஞ்சு தத்துவங்களுக்கும் நமது தத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடுகளாக எதைப் பார்க்கிறீர்கள்?

மேலை நாட்டுத் தத்துவத்தின் அடிப்படை மனிதன். நம்முடையது பிரபஞ்சம். அங்கே கிறிஸ்துவத் தத்துவம், அறிவுஜீவித் தத்துவம் என்று தனித்தனியாக இருக்கிறது. நம்மிடையே கடவுளும் தத்துவமும் ஒன்றுகலந்துவிட்டது. ஆதிசங்கரரிடம் மதத்தைத் தாண்டிய ஒரு தத்துவம் இருக்கிறது. ஆனால், அவரை இந்து மதத்தோடு மட்டும் தொடர்புபடுத்திப் பார்ப்பதால், அதன் முழு வீச்சும் தெரிவதில்லை. சித்தர்களையும் திருமூலரையும்கூட ஒரு குறிப்பிட்ட மதம், சைவம், வைணவம் என்று அதற்குள் அடக்க முடியாது. மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள உறவு குறித்து அவர்கள் பேசுகிறார்கள். பிரெஞ்சு தத்துவத்தை அங்கே அரசியலுக்குள் கொண்டுவரும் போக்கும் உண்டு. ‘தத்துவச் சிந்தனை இலக்கியத்தில் இழையோட வேண்டும்’ என்றார் காம்யு. அது மனிதகுலத்தை மேம்படுத்த வேண்டும், அடிமைப்படுத்தக் கூடாது என்பது அவரது கருத்து.

1980-90களில் தமிழ்ச் சூழலில் பிரெஞ்சு அலை வீசியது. அதற்கு முன்பாக ரஷ்ய அலை, 90-களுக்குப் பிறகாக லத்தீன் அமெரிக்க அலை என்று சூழல் மாறுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எனக்கு இந்த ‘அலை’ என்று நம் சூழலில் சொல்வதன் மீது உடன்பாடு இல்லை. அயல் இலக்கியத்தின் சில பண்புகளை உள்வாங்கிக்கொண்டு, அதைத் தமிழில் பிரதி எடுப்பதையோ அல்லது அதில் ஊக்கம் பெற்று ஒரு படைப்பை உருவாக்குவதையோ என்னால் ‘அலை’ என்று சொல்ல முடியாது. நமது மொழியில், இலக்கியத்தில் தீவிரமாகப் பிரதிபலித்ததாக நான் நினைக்கவில்லை. அப்படியொரு அலை வீசும் அளவுக்கு இங்கே தீவிரமான வாசிப்பு நிகழவில்லை.

இந்து தமிழ்
2019.08.25

Tags: