சிலிக்கான் வலியை ஓரங்கட்டும் சீனா
– சேது சிவன்

உலகெங்கிலும் உள்ள இளம் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக செல்ல வேண்டும் என்றிருந்த இலட்சிய இடம் அமெரிக்காவின் ‘சிலிக்கான் வலி’ (Silicon Valley) மட்டும்தான். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும், மனித வாழ்க்கையை மாற்றிப்போடும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நடக்கும் முதன்மை இடம் அதுதான் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் நிலவி வந்தது.
ஆனால், இப்போது காற்று வேறு திசையில் வீசத் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப உலகின் புதிய மையமாக சீனா உருவாகி வருகிறது. அந்நாட்டின் ஷாங்காய், ஹாங்சோ, ஷென்சென் ஆகிய நகரங்கள் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து உலகிற்கு காட்டுகிற முக்கிய நகரங்களாக சிலிக்கான் வலிக்கு மாற்றாக உருவெடுத்து வருகின்றன. இந்த வளர்ச்சி தானாக நடந்தது அல்ல சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகளின் நேரடி விளைவு இது.
தொழில்நுட்ப சுற்றுலா
சீனாவில் தற்போது தொழில்நுட்பச் சுற்றுலா அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதற்காக வரும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் 3 முதல் 5 நாட்கள் கொண்ட ஒரு பயணத்திற்கு தலா $9,000 (இந்திய மதிப்பில் சுமார் 7.5 இலட்சம் ரூபாய்) வரை கட்டணமாகச் செலுத்துகிறார்கள். சீனாவின் ஒரு மலைப் பகுதியில் உள்ள விவசாயி தன் தோட்டத்து அறுவடையை டிரோன்கள் மூலம் தூக்கிச் செல்வார், ரோபோட் மனிதர்கள், ரோபோட் நாய்கள் குழந்தைகளுடன் விளையாடும் காட்சிகள், காற்றில் பறக்கும் கார்கள், ஓட்டுநர் இல்லாத ரோபோ டாக்ஸிகள் என பல காட்சிகளை நாம் இன்ஸ்டா, முகநூல் ரீல்களில் பார்த்திருப்போம். அந்த வளர்ச்சி எப்படி சாத்தியமானது என அறிந்துகொள் வதற்குத்தான் இந்தப் பயணம்
என்னென்ன பார்க்கலாம்?
“ஷாங்காய் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட் டிக்ஸ் கண்டுபிடிப்புப் பயணம்” அல்லது “மின்சார வாகன (EV) ஆய்வு” எனப் பெயரிடப்பட்ட இந்தச் சுற்றுலாவில் மின்சார வாகன விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமான டெஸ்லாவையே முந்தி வரும் பிஒய்டி (BYD) நிறுவனத்தின் தொழிற்சாலைகள், அதிநவீன மனிதவடிவ ரோபோக்களை தயாரிக்கும் யூனிட்ரீ ரோபாட்டிக்ஸ் நிறுவனம், சாட்ஜிபிடி (ChatGPT)-க்கு சவாலாக வளர்ந்து வரும் சீனாவின் டீப்சீக் (DeepSeek) நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று பார்க்கலாம்.
இந்தச் சுற்றுலாவில் பங்கேற்கும் தொழில்முனைவோர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பார்வையிடும் முக்கிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் தனியாக அமர்ந்து கலந்துரையாடும் பிரத்தியேக வாய்ப்பும் வழங்கப்படுகிறது. நீங்கள் ஒரு சாதாரண சுற்றுலாப் பயணியாக பிஒய்டி (BYD) நிறுவனத்திற்குச் சென்றால் அவர்களது ஷோரூமை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் இந்தத் தொழில் நுட்பச் சுற்றுப்பயணம் மூலம் தொழிற்சாலையின் உற்பத்தித் தளத்திற்கே செல்ல முடியும். புத்தகங்களிலும் அறிக்கைகளிலும் படிப்பதை விட சீனாவின் உற்பத்தித் திறனை நேரில் பார்ப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்கிறார் மும்பையைச் சேர்ந்த முதலீட்டாளர் சேத்தன் ஷா.

முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களின் பெற்றோர்களையும் சீனா ஈர்த்து வருகிறது. ‘டெக் பஸ் சைனா’ (Tech Buzz China) என்ற நிறுவனம் அமெரிக்கா, இந்தியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக தனிப்பட்ட தொழில் நுட்பச் சுற்றுப்பயணங்களை நடத்தி வருகிறது. சீனாவின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை எந்த அளவிற்கு அதிநவீனமாக மாறியுள்ளது என்பதை சர்வதேச அளவில் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயணங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமிட்ட கொள்கைகள்
இந்த தொழில்நுட்பச் சுற்றுலா வெறும் வணிக நிகழ்வு மட்டுமல்ல இது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) பல ஆண்டு கால திட்டமிட்ட முதலீட்டின் வெற்றிக்கனியாகும். அதாவது இந்தத் திட்டத்தின் மூலம், சீனா தான் தற்போது அதிகமாகச் சார்ந்துள்ள வெளிநாட்டுப் பொருட்களுக்கு மாற்றாக உள்நாட்டிலேயே மாற்றுப் பொருட்களை உருவாக்கி வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான தனது சார்பைக் குறைத்து, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் தொழில்துறைகளில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு சவால் விடும் ஒரு உலகளாவிய போட்டியாளராக தன்னை நிலை நிறுத்த சீனா முயன்று வருகிறது.
இதற்காக 2049-க்குள் செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், ரோபோட்டிக்ஸ், குறைக்கடத்திகள் (semiconductors) என பத்து முக்கிய தொழில்நுட்பத் துறைகளில் சீனாவை உலகின் முன்னணி நாடாக மாற்ற 2015 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசு “மேட் இன் சைனா 2025” (Made in China 2025) திட்டத்தை அறிவித்தது. அமெரிக்காவை போலவோ பிற முதலாளித்துவ நாடுகளை போலவோ தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க உதவி செய்யாமல் நாட்டின் வளர்ச்சியை மையமாக வைத்து அரசே இதற்கு முதலீடு செய்து வருகிறது. பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில் துறை ஆகிய மூன்றையும் ஒரே திட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்தது இந்தக் கொள்கையின் சிறப்பம்சம்.
இந்த வளர்ச்சிக்காக பெரும் பணத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு (R&D) ஒதுக்குவது சீன அரசின் நிலையான கொள்கையாக உள்ளது. கல்வி நிதியிலும் இதே அணுகுமுறை பின்பற்றுகிறது. இதன் விளைவாக சீனாவில் பயிலும் இளங்கலை மாணவர்களே உலகத் தரம் வாய்ந்த அறிவியல் கட்டுரைகளை வெளியிடும் அளவிற்கு தயாராகி வருகின்றனர்.

சீனாவின் கல்வி வளர்ச்சி
2024-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 18,28,054 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பதிவு செய்து 10,44,777 காப்புரிமைகளை பெற்று அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அதிக காப்புரிமை பெற்ற நாடாக சீனா முன்னேறியுள்ளது. அமெரிக்காவோ 6,03,194 காப்புரிமை மட்டுமே பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் சீனா பெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2021 இல் 3,29,067 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருந்த சீனா 2022 இல் 8,98,949 அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு உலகின் முன்னணி நாடாக தன்னை நிலை நாட்டிக் கொண்டுள்ளது. அமெரிக்காவோ 2012 இல் 4,30,164 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டதிலிருந்து 2022 இல் 4,57,335 கட்டுரைகள் மட்டுமே வெளியிட்டு தேக்கநிலையில் உள்ளது.
அமெரிக்காவின் வீழ்ச்சிக்கான காரணங்கள்
சீனா முன்னேறுவதற்கு நேர்மாறாக அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக போர்களுக்கும் இராணுவச் செலவுகளுக்குமே அதிகமாக நிதி ஒதுக்கி வருகிறது. போதாக்குறைக்கு அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு வழங்கி வந்த நிதியையும் வெட்டியுள்ளது. அங்குள்ள தனியார் நிறுவனங்களின் குறுகிய கால இலாப நோக்கு, நீண்ட கால தொழில்நுட்ப ஆராய்ச்சியை பின்னுக்குத் தள்ளுகிறது. இது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இயல்பான உள்முரண்பாடு என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சீனாவின் அரசியல் நோக்கம்
இந்தத் தொழில்நுட்பச் சுற்றுலாவை சீனா வெறும் வணிகமாக மட்டும் பார்க்கவில்லை. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அரங் கில் தன்னை ஒரு பெரும் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட நாடு என பறைசாற்றிக் கொள்வதற்கான உத்தியாகவும் சீனா இதனைப் பயன்படுத்துகிறது.
அறிவியல் தொழில்நுட்பத்தில் சீனாவின் வளர்ச்சி உச்சத்தை தொடுவதற்கு காரணம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசின் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகளே. தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல் மக்கள் நலனையும் தேசிய வளர்ச்சியையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தக் கொள்கைகள் சீனாவை இன்று உலகின் தொழில்நுட்ப வரைபடத்தில் முதன்மை இடத்தில் நிறுத்தியுள்ளன.