உலக பூமி தினம்

WorldEarthDay

ந்த மனிதனும் திட்டம் போட்டு பூமியை உருவாக்கவில்லை. மனித குலம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை தன் மடியில் தாங்கிக்கொள்ள எழில் நிறைந்து பிறந்ததுதான் இந்த பூமி. சுற்றுச்சூழல் பல சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கிய பின்னர் உருவானது தான் இந்த நாள். இந்த பூமியில் நிலவி வரும் சுற்றுச்சூழல், காற்று மாசு, இயற்கை வளங்கள், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நமது பூமியின் சுற்றுச்சுழலைக் கொண்டாடுவதற்காகவே ஆண்டுதோறும் ஏப்ரல் 22 -ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது ‘உலக ‘பூமி தினம்.’

புவி பாதுகாப்பையும், அதன் வளங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் “கேலார்ட் நெல்சன்” என்பவரின் முயற்சியால் 1970-ஆம் ஆண்டு இந்த தினமானது “எர்த் டே நெட்வொர்க்” என்னும் அமைப்பால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பானது, உலகம் முழுக்க உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒன்றுதிரட்டி பூமியின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களையும், அது சார்ந்த கருத்து பரிமாற்றங்களையும் இத்தினத்தில் மேற்கொள்கிறது. அவ்வகையில் இன்று 50-வது சர்வதேச பூமி தினமாகும். இந்து அமைப்பு இதுவரை 193 நாடுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது. முதல் பூமி தினத்தில் அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதத்தினரும், பின்னர் சுமார் 20 மில்லியனைக் கண்டது. சுற்றுச்சூழலின் அலட்சியத்தை எதிர்த்து நகரங்கள் மற்றும் தெருக்களில் இறங்கி மக்களின் அலட்சிய மனப்பான்மைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பூமி தினத்திற்கு ஆதரவாக மிகப்பெரிய ஆதரவு கிடைத்து. 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 பாரிஸிஸ் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு, வரலாறு உருவாக்கப்பட்டது.

1969-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா நகரை ஒட்டிய கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய கொடூர நிகழ்வின் தாக்கமாக 1970-ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்து சுகாதாரமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டுமென என கடலோரமாகவே ஊர்வலம் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து எண்ணெய்க் கசிவு, புகை, மாசுபட்ட ஆறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நவீன சுற்றுச்சூழலை வலியுறுத்தும் விதமாக உருவாக்கப்பட்டது இந்த பூமி தினம். இன்று, இது மிகப்பெரிய தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பூமிக்கும் அதை பாதிக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்துருவில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் இந்த அமைப்பானது, கடந்த 2019 -ஆம் ஆண்டை “பூமியின் உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்போம்” என்ற கருத்துருவில் உலக பூமி தினத்தை கொண்டாடியது. 2020 -ஆம் ஆண்டை “காலநிலை நடவடிக்கை” என்ற கருத்துருவில் உலக பூமி தினத்தை கொண்டாடுகிறது.  ஐம்பது ஆண்டுகளை கடந்தும், இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

புவி நாள்

சுமார் நாலரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பூமி பிறந்ததாக அறியப்படுகிறது. பூமி தவிர வேறேன்ன கிரகங்களில் உயிரினங்கள் வாழ முடியும் என்று எத்தனையோ ஆராய்ச்சிகளை தொடர்ந்து மனிதன் மேற்கொண்டாலும், அனைத்து உயிர்களும் தடையின்றி வாழ உகந்த ஒரே கிரகம் பூமி மட்டும் தான் என்ற பதிலே மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தும் செய்தியாக உள்ளது. 

பூமியின் கட்டமைப்பு என்பது மனிதன் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் வாழக்கூடிய வகையில் மிக சிரத்தையுடன் இயற்கை வரமாய் உருவானதாகும். எந்தெந்த உயிரினம் எங்கெங்கே வாழுதல் நலம் என்று தானாகவே பூமி ஏற்படுத்திய வரைமுறைதான் மனிதன் நாட்டிலும், விலங்குகள் காட்டிலும் வாழும்படியாக காலப்போக்கில் மாறியது. 

மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மறுபக்கம் பூமியின் வளங்கள் குறைந்து கொண்டே வருகிறது. தினம் தினம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. மனிதனின் பேராசையோ, போதும் என்ற மனமின்றி இயற்கையை அழித்து செயற்கை பொருட்களை உருவாக்கத் தொடங்கியது. அதன் ஒரு தொடக்கமாகத்தான் காடுகள் அழிக்கப்பட்டு விலங்குகளின் உறைவிடங்கள் அபகரிக்கப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் நிற்கின்றன. 

சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அன்றாடம் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவி இனங்கள் இன்று முற்றிலும் காணாமல் போனது. 2050 ஆம் ஆண்டிற்குள் ஐம்பது சதவீத உயிரினங்கள் பூமியிலிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொள்ளும் என்ற தகவல் மிகவும் வேதனையாக உள்ளது. 

உயிரினங்கள் அழிவின் விளிம்பில் நிற்க பூமி வெப்பமயமாகுவதும் ஓர் முக்கிய காரணமாகும். வேகமாக உருகி வரும் பனி பாறைகள் பல்வேறு பனிக்கரடிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது. மேலும் அதிக வெப்பமானது கடல் வாழ் உயிரினங்களை இன பெருக்கத்திலிருந்தும் தடுக்கிறது.

உலகில் ஒவ்வொரு நாளும் 700-க்கும் மேற்பட்ட சிறார்கள் உயிரிழந்து வருவதாகவும், ஒரு வயதுக்கு உட்பட்ட ஒரு கோடியே எழுபது லட்சம் குழந்தைகள், தீவிர மாசு நிறைந்த பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் உலகில் நான்கில் ஒரு சிறார் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும்,  உலகம் முழுவதும் சுமார் பத்து லட்சம் குழந்தைகள், பிறந்த அன்றே உயிரிழப்பதாக ஐ.நாவின் குழந்தை நல நிறுவனம் யூனிசெஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஒரு ஆராய்ச்சியின்போது, “தேனீக்கள் என்று அழிகிறதோ அன்று உலகமும் அழிந்துபோகும்” என்று மேற்கோள்காட்டி கூறியுள்ளார். அதிகமான பூச்சி கொல்லி உபயோகம் மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீ உள்ளிட்ட பல்வேறு பூச்சி இனங்களை கொல்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தேனீக்கள் அழிந்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். இந்நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் மனிதனும் அழியும் மிருகங்கள் பட்டியலில் நிச்சயம் சேர்ந்துவிடுவான் என ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரம் வளர்ப்போம்: உலகம் வெப்பமயமாகுதல், காற்று மாசு, காடு அழிப்பு, பசுமைக் குடில் விளைவுகள், தண்ணீர் பஞ்சம் என்று பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது. முடிந்தவரை காற்று மாசை தடுத்து, அதிக அளவில் மரங்கள் நட்டு, தண்ணீர் சேமிப்பு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்தி, இயற்கையை அதன் வழியிலேயே பாதுகாத்தால் மட்டுமே மனிதனால் தன் அடுத்த தலைமுறைக்கு தன் முன்னோரும் தானும் அனுபவித்த இயற்கை வளங்களை பரிசாய் தரமுடியும். இல்லையேல் இனிவரும் தலைமுறைகள் புலியையும், யானையையும், ஏன் மழையை கூட புகைப்படத்தில்தான் காண இயலும். எனவே, முடிந்த வரை மரங்கள் நடுவோம். மழை, மன்வளம் பெறுவோம். 

உலகில் கொண்டாடப்படும் சிறப்பு ...

பிளாஸ்டிக் தவிர்ப்போம்: பூமியின் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல… மனிதனின் பாதுகாப்புக்காகவும் அன்றாட வாழ்வில் நாம் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியம். அந்த வகையில் பிளாஸ்டிக் தான் சுற்றுச்சூழலின் மிக பெரிய எதிரி. பிளாஸ்டிக்கினால் ஏற்படும் கேடு குறித்து நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அன்றாட வாழ்வில் கலந்து விட்ட ஒன்றை பயன்படுத்தாமல் இருப்பது கடினம் தான்.

எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க முயற்சிக்கலாம். சந்தைகளில் கிடைக்கும் அழகழகான துணிப் பைகளை பயன்படுத்தலாம். மேலும் ஸ்ட்ரா, டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது பூமிக்கும் நல்லது… நமக்கும் நல்லது.

மின்சார விரயத்தை தவிர்ப்போம்:  மின்சார பயன்பாட்டை குறைப்பது தனிப்பட்ட முறையில் எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்றே. கட்செவி செய்திகளை பார்த்து 1 நிமிடம் மின்சாரத்தை பயன்படுத்தாமல் இருப்பதை விட நாள் தோறும் மின்சாரத்தை சிக்கனமாக செலவழிக்க பழகுவோம். 

பலரது உழைப்பையும், இயற்கை சக்தியை வீணாவதைத் தவிர்ப்போம்: நாம் சாப்பிடும் உணவு  நம்முடைய பாத்திரத்தை வந்து அடைவதற்கு முன் பெரிய பயணத்தை மேற்கொண்டுவிட்டுதான்  நம்மை வந்து சேருகிறது. எனவே அந்த சாப்பாட்டை வீணாக்குவதை தவிர்ப்போம். விவசாயத்துக்கும், பலரது உழைப்பு மற்றும் இயற்கை சக்தியை வீணாக்கப்படுவதை தவிர்ப்போம். 

நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்போம்: எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாகவும், உடல்நலனைப் பாதுகாக்கும் விதமாகவும் எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைந்து மிதிவண்டி, நடைபயண பயன்பாட்டை அதிகரித்தால் எரிப்பொருளால் ஏற்படும்மா சிக்கனமாகும், க்ககும்ப்பது  புகை மாசைக் கட்டுப்படுத்த முடியும், உடல்நலனை காக்க முடியும். 

காலநிலை மாற்றம் என்பது சிறிது காலமாகக் கவலைக்குரிய ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இது மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, மேலும் விஷயங்கள் மோசமடைவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை. இந்த ஆண்டு, உலகையே அச்சுறுத்தி கரோனா நோய்த்தொற்று காரணமாக கொண்டாட்டங்களின் முகம் மாறியுள்ளது.

பூமியின் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல… மனிதனின் பாதுகாப்புக்காகவும் அன்றாட வாழ்வில் நாம் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியம். நம்மைக் காக்கும் இந்த இயற்கை அன்னையை கண்ணும் கருத்துமாய் காக்க இந்த பூமி தினத்தில் இருந்து அனைவரும் தொடங்குவோம்.

-தினமணி
2020.04.22

Tags: