தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ‘அபிவிருத்தி அரசியல்’ எடுபடுமா?

பிரதீபன்

தேர்தல் நெருங்க நெருங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோல்விக் கிலி பிடித்து ஆட்டுகிறது. யாரைப் பார்த்தாலும் “இம்முறை கூட்டமைப்பு குப்புற விழுந்து மண் கவ்வும்” என்பதே பேச்சாக இருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களிடமும் எந்தவிதமான உற்சாகத்தையும் காண முடியவில்லை. முன்னைய காலங்களில் என்றால் கூட்டமைப்பு வேட்பாளர்கள் கூட்டங்களில் வெற்றிப் பெருமிதத்துடன் சண்டமாருதப் பிரச்சாரம் செய்து முழக்கமிடுவார்கள். அதன் மூலம் மக்களை உற்சாகப்படுத்தி தமது பக்கம் இழுப்பார்கள். இம்முறை ஒன்றையும் காணோம்.

கூட்டமைப்புத் தலைவர்களைப் பொறுத்தவரை தமக்கு இம்முறை பொதுத் தேர்தலில் வீழ்ச்சி ஏற்படப்போகின்றது என்பதை கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போதே தமது வாக்கு வங்கி வீழ்ச்சியைக் கொண்டு உணர்ந்துவிட்டார்கள். அதற்குக் காரணம் 2015இல் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசை நிபந்தனை ஏதுமின்றி ஆதரித்தது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

ஐ.தே.க. அரசை தாம் ஆதரித்ததை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதால்தான் உள்ளுராட்சி தேர்தலின் போது மக்கள் ஒரு தண்டனையாக தமக்கு ஆதரவு தர மறுத்தார்கள் என்பதை கூட்டமைப்புத் தலைமை உணர்ந்த போதிலும் ஐ.தே.க. மீதுள்ள வர்க்க பாசம் காரணமாக கடைசி வரை அதன் அரசாங்கத்தை ஆதரித்தார்கள்.

அப்படி அவர்கள் மக்கள் கருத்தை மதிக்காமல் ஐ.தே.க. அரசை ஆதரித்ததின் பின்னணியில் ஒரு காரணம் இருந்தது. அதாவது ஜனாதிபதித் தேர்தலில் 2015இல் மகிந்தவை தோற்கடித்தது போல இம்முறையும் கோத்தபாய ராஜபக்சவை தோற்கடித்து ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற வைக்க முடியும் என்ற அசையாத நம்பிக்கை கூட்டமைப்பு தலைமைக்கு இருந்தது.

2015இல் ருசி கண்ட அவர்களும் முஸ்லீம் தலைமைகளும் சிறுபான்மை இனங்களின் வாக்குகளைப் பெறும் ஒருவரே இலங்கையில் ஜனாதிபதியாக வர முடியும் என நம்பினார்கள். அதனால் கோத்தபாயவுக்கு எதிராக இல்லாத பொல்லாத பொய்களைச் சொல்லி மிக மோசமான அவதூறுப் பிரச்சாரங்கள் எல்லாம் செய்தார்கள்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே வடக்கு கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் 90 வீதமான தமிழ் – முஸ்லீம் வாக்குகள் சஜித்துக்கு கிடைத்தது. ஆனால் ஒரு விடயத்தை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள். என்னதான் சிறுபான்மை இன மக்கள் ஒருமித்து ஓரணியில் நின்றாலும் நாட்டின் சனத்தொகையில் அவர்களது தொகை 28 வீதம் என்பதும், சிங்கள மக்களே மிகுதி 72 வீதம் என்பதும்தான் உண்மை. எனவே அவர்கள் போட்ட கணக்கு தவறாகிப் போனது.

கோத்தபாய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே கூட்டமைப்பின் தலைமைக்கு ஓரளவு மக்கள் மனநிலை புரிந்து ‘ஞானோதயம்’ ஏற்பட்டது. கோத்தபாய ஜனாதிபதியாக இருக்கப் போகிறார் என்பது மட்டுமல்லாமல், அவர் சார்ந்திருக்கும் கட்சியே பொதுத் தேர்தலிலும் அமோக வெற்றி பெறும் என்பதையும், பிளவுபட்டு நிற்கும் ஐ.தே.கவுக்கு எதிர்காலம் இல்லை என்பதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு புரிந்துபோனது. குறிப்பாக ‘மதியூகி’ சுமந்திரன் போன்றோருக்கு நன்கு புரிந்துவிட்டது.

கூட்டமைக்குள் தீவிரமான ஐ.தே.க. விசுவாசிகள் சுமந்திரனும் சம்பந்தனுமே. ஆனால் அதிகாரம் என்று வரும் தோல்வியடைபவரை ஆதரித்து இருப்பதையும் இழக்கும் பாரம்பரியத்தைத் தொடர முடியாது. எனவேதான் சுமந்திரன் கூட்டமைப்புக்கு சில புதிய தந்திரோபாயங்களை வகுக்கத் தீர்மானித்தார். அவற்றுள் சில வருமாறு:

புலிகள் மீது விசுவாசம் கொள்வதைத் தவிர்ப்பதுடன், அவர்களை விமர்சனமும் செய்வது.

கடந்த காலங்கள் போன்று வெறும் தமிழ் தேசியம் மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், மக்களின் உடனடிப் பிரச்சினைகளான அபிவிருத்தி போன்ற விடயங்களுக்காகவும் செயற்படுவது.

ஓன்றுபட்ட தமிழ் பிரதேசத்துக்கான அதிகாரத்தை மட்டும் கோரி நிற்காமல் மத்திய அரச அதிகாரத்திலும் பங்கு கேட்பது.

அதற்காக தீவிர ஐ.தே.க. ஆதரவு நிலைப்பாட்டை கைவிட்டு தேவையேற்படின் ராஜபக்சாக்களுடைய அரசாங்கத்துடனும் இணைந்து செயற்படுவது.

இவைகள்தான் சுமந்திரன் வகுத்துள்ள புதிய வியூகம். அவரது இந்த புதிய திட்டத்துக்கு நிச்சயமாக சம்பந்தனின் ஆதரவும் அங்கீகாரமும் உண்டு. சுமந்திரன் தனது இந்த நோக்கம் சம்பந்தமாக சில ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியிலும் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியிலும் சில முரண்பாடான எதிரொலிகளை ஏற்படுத்தின.

குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் சுமந்திரன் தெரிவித்த கருத்துகளுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்ததுடன், சுமந்திரன் மீது கண்டனமும் பகிரங்கத்தில் தெரிவித்தார்கள். ஆனால் சம்பந்தன் சுமந்திரனுக்கு ஆதரவாக கருத்துரைத்த பின் அவர்கள் மூவரும் பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டனர். சுமந்திரன் வெற்றித் திருமகனாகப் பவனி வருகிறார்.

சுமந்திரனால் தற்பொழுது கூட்டமைப்புக்கு என முன்வைக்கப்பட்டுள்ள புதிய வியூகத்தை ‘அபிவிருத்தி அரசியல்’ என அழைப்பதே பொருத்தமாக இருக்கும். முன்னைய தமிழ் தலைமைகள் இப்படியான அரசியலை முன்னெடுத்தவர்களை “துரோகிகள்” என விழித்து, அவர்களை தீர்த்துக் கட்டுவதற்கும் வழிவகுத்த நிலையில், தற்பொழுது அதே அரசியலை முன்னெடுக்க விழையும் சம்பந்தன் – சுமந்திரன் தலைமையை மக்கள் இனி எவ்வாறு அழைக்கப்போகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இந்த புதிய வியூகத்தால் கூட்டமைப்புத் தலைமை புதிதாக என்னத்தைச் சாதிக்கப் போகின்றது? ஏனெனில் 1965இல் டட்லி சேனநாயக்க தலைமையில் அமைந்த ஐ.தே.க. ஏழு கட்சி கூட்டரசாங்கத்தில் தமிழரசு – தமிழ் காங்கிரஸ் தலைமைகள் சேர்ந்திருந்தும் ஒன்றையுமே சாதிக்கவில்லை. டட்லி அரசு மாவட்ட சபைகள் அமைக்கும் என நம்பிப் போனவர்கள் ஒன்றையும் பெறாமல் வெறும் கையுடன் திரும்பி வந்தார்கள்.

அதேபோல 1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கத்துடன் தேன்நிலவு கொண்டாடி மாவட்ட அபிவிருத்தி சபைகள் அமைக்கப் புறப்பட்டவர்கள் அதையும் நிறைவேற்றாமல் வெறும் கையுடன் வந்தனர்.

கடைசியாக 2015இல் ரணில் தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசுடன் கூடிக்குலாவி புதிய அரசியல் அமைப்பின் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகிறோம் என்று புறப்பட்டவர்கள், புதிய அரசியல் அமைப்பை விடுவோம், சிறைகளில் உள்ள தமிழ் ‘அரசியல்’ கைதிகளைக் கூட விடுவிக்க முடியாமல் வெறுமனே வந்து நின்று தேர்தலை எதிர் கொள்கின்றனர்.

மறுபக்கத்தில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனது புத்திசாதுரியமான அரசியல் தந்திரோபாயத்தின் ஊடாக தன்னம் தனியனாக ஒருவராக நின்று கூட்டமைப்பினர் 22 பேர் நாடாளுமன்றம் சென்றும் சாதிக்க முடியாத பல சாதனைகளை செய்து வருகிறார். அவரை “துரோகி” என்று தூற்றித் திரிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை, இன்று அவர் பல வருடங்களாக பின்பற்றி வரும் அரசியல் தந்திரோபாயத்தை ஏற்கும் தோல்வி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

கூட்டமைப்பு என்னதான் புதிய தந்திரோபாயங்களை வகுத்தாலும் ஓகஸ்ட் 05ஆம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் திகதி அவர்களுக்கு பாடம் புகட்டக் காத்திருக்கும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் தப்ப முடியாது. சறுக்கு மரத்தில் இருந்து சறுக்கத் தொடங்கிய அவர்கள் இடையில் தங்கி நிற்பதற்கோ அல்லது திரும்பவும் மேலே ஏறுவதற்கோ சாத்தியமே இல்லை.

Tags: