போல் ரொப்சன் (Paul Robeson), கறுப்பின போராளியின் வாழ்க்கை சுருக்கம்

 – எஸ். நாராயணன்

ப்பிரிக்க வெள்ளை அரசின் ‘நிறைவெறிக் கொள்கையை (Apartheid), அந்த நாட்டின் கறுப்பின மக்களுடன், உலகமே எதிர்த்து போராடி வீழ்த்திய வரலாறை நாம் அறிவோம். ஆனால் அதைவிட கொடிய வடிவில் இன்றும் அமெரிக்காவில் ( பிற மேலை நாடுகளிலும் கூட) நிறவெறிக்கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருவதை சமீபத்திய ‘ஜோர்ஜ் ப்ளாய்ட் விவகாரம்’  தோலுரித்துக் காட்டியது.

அதோடு, இதோ அமெரிக்காவின் போலி  ஜனநாயகத்திற்கடியில் ஒளிந்திருக்கும் உண்மை நிறவெறிக் கொள்கையை அங்குலம் அங்குலமாக விவரிக்கும் ஒரு  ஆப்பிரிக்க-அமெரிக்க இன, தலைசிறந்த அமெரிக்க கால்பந்தாட்ட வீரன், மாபெரும்  நடிகன் , பாடகன், எல்லாவற்றிற்கும் மேலாக  மனித நேயமிக்க போராளியின்  வாழ்க்கை வரலாறு.

அவன் உள்ளிழுத்த ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் அமெரிக்க வெள்ளை நிறவெறி உணர்வு இருந்தது. அவன் வெளியிட்ட ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் அந்த  நிறவெறிக்கெதிரான, இன சமத்துவத்துக்கான உணர்வு இருப்பதை மறைத்து, நேர்மையின்றி, ‘கம்யூனிச வாசம்’ வருகிறதா ? என முகர்ந்து பார்த்து , அவனை விசாரணை என்ற பெயரில் வாழ்க்கையை முடக்கி, மனநோயாளியாக்கி கொலை செய்த வரலாறு இது.

” 1898ல் பிறந்த ரொப்சன் கிடைத்த மிக அற்ப வாய்ப்புகளைப் பயன்படுத்தி , பல தடைகளையும் மீறி,  இருமுறை  அமெரிக்க கால்பந்தாட்ட வீரனாகவும், சிறந்த சட்டக்கல்வி பட்டதாரியாகவும், உலகப்புகழ் பெற்ற நாடக, திரைப்பட நடிகனாகனாகவும், மிகச் சிறந்த பாடகனாகவும் திகழ்ந்தவன். தனது மன உறுதியை சற்றும் விட்டுத்தராத ரொப்சன்,  ஆப்ரிக்க- அமெரிக்கர்களால் எதை செய்ய முடியும்? எதை செய்ய முடியாது? என எடுத்துக் காட்டியவர்.  இந்த தன்னிகரில்லா நடிகன், பாடகன், சமூகப் போராளி தன் வாழ்க்கையை மக்கள் உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும் அர்ப்பணித்தவர்.” என்கிறார் இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய டேவிட் K. ரைட்.

1949, நியூயார்க் நகருக்கு 40 மைல் தூரத்தில், ஹட்சன் நதிக்கரையில்  இருந்த சிறிய  கோடை சுற்றுலா தலம் பீட்ஸ்கில்.  அங்கு பலதரப்பட்ட இன மக்களும் வாழ்ந்து வந்தனர்.  எனவே, அந்த உலகப்புகழ் பெற்ற  கலைஞன்  போல் ரொப்சனின் இசை நிகழ்ச்சி  நடை பெறுவதாக வந்த அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் செய்தித்தாள்கள்,.

“அரசுக்கெதிராக மக்களைத் திரட்டவே இந்நிகழ்ச்சி நடப்பதாக”  பொய் செய்தியை பரப்பின‌. உள்ளூர் அரசியல்வாதி முதல் உயர்மட்ட வணிக குழும  அதிகாரிகள் வரை இதனை நம்பி எதிர்ப்பை மேலும் வலுவாக்கினர். எப்படி ஒரு தனிமனிதன் இத்தனை எதிர்ப்பை உருவாக்கிட முடியும்?

போல் ரொப்சன் எல்லோரையும் போல சாதாரண மனிதன் அல்ல. நியூஜெர்சியில் ஏழை குடும்பத்தில் பிறந்த அவர் அனைத்து அமெரிக்க கால்பந்தாட்ட வீரராக இருமுறை (தவிர்க்க முடியாமல்) தேர்ந்தெடுக்கப்பட்டவர். தலைசிறந்த கல்லூரி மாணவர். சட்டக்கல்வி பட்டம் பெற்ற ஒரு சில ஆப்பிரிக்க- அமெரிக்க இன மாணவர்களில்  ஒருவர். இதுமட்டுமல்ல நாடக நடிகராக பல ஆண்டுகள் அனுபவம் பெற்று, ஒரு சாதாரண இசை ரசிகனின் கண்களில் கூட தனது ஆழ்ந்த குரலால் கண்ணீரை வரவழைத்த  வித்தகன். பல நூற்றுக்கணக்கான பழைய புதிய பாடல்களை மனப்பாடமாக பாடும் திறன் பெற்ற இவர்,   பாடுவதற்காகவே பல மொழிகளையும் கற்று தேர்ந்தவர். உலகம் முழுவதும்   அந்த  புகழ் பெற்ற பாடகனின்  இசை நிகழ்ச்சிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போது   பீட்ஸ்கில்  நகர் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்?

Commercial Avenue Renamed for Paul Robeson | Rutgers University

பீட்ஸ்கில் நகர மக்கள்  சோவியத் சமூகம்  பற்றி அவ்வளவாக எதுவும் அறியாதவர்கள். மற்ற எல்லா பெரும்பாலான அமெரிக்கர்கள் போலவே இவர்களும் ‘சோசலிசம், கம்யூனிசம்’ போன்ற வார்த்தைகளைக்  கேட்டாலே முகம் சுளிப்பவர்கள்.   இருந்தாலும்  இசை நிகழ்ச்சிக்காக  சுமார் 2500 பேர் கூடியிருந்த போது, அவர்கள் வன்முறை கும்பலால் கற்களால் தாக்கப்பட்டனர். உயிர் தப்பிய  போல் ரொப்சன்  நியூயார்க்கில்  நடத்திய செய்தியாளர்  கூட்டத்தில் இதனை ‘ஜெர்மனியின் ஹிட்லர் செயலுக்கு ஒப்பானது ‘ என கூறினார். அதோடு, “அடுத்த  ஒரு வாரத்தில் எனது நிகழ்ச்சி அங்கே நடைபெறும்” என  உறுதியாக அறிவித்தார்.   பலத்த  எதிர்ப்பிற்கு  இடையே எட்டாயிரம்  இராணுவத்தினர் பீட்ஸ்கில் பூங்காவை சுற்றி  நிற்க, கறுப்பின  மக்களுக்கு எதிரான கோஷங்களுடன்  நின்றிருந்த வன்முறை கும்பல், ” நீங்கள்  உள்ளே வரலாம். ஆனால்  உயிருடன்  வெளியே போக மாட்டீர்கள்” என ஊளையிட்டனர். எனினும் மேடையேறிய போல் ரொப்சன் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார்.  வழக்கம்போல் தனது இனிய குரலால் அனைவரையும் கட்டி போட்டு விட்டார்.  நிகழ்ச்சி முடிந்ததும் பயங்கர தாக்குதல் நடைபெற்றது. 150க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்தனர். போல் ரொப்சனை அவரது தோழர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றுவிட்டனர். பின்னர் கண்துடைப்புக்காக  ஒரு விசாரணையும் நடந்தது.

இந்த பீட்ஸ்பர்க் சம்பவத்தை புரிந்து கொள்ள அமெரிக்காவின் உண்மை முகத்தை சற்று  பின்னோக்கி  பார்க்க வேண்டும்.

அப்போது பெரும்பாலான பொதுப் பள்ளிகளில்,  ஆப்பிரிக்க- அமெரிக்க குழந்தைகள் அனுமதி மறுக்கப்பட்டனர். விளையாட்டு அணிகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கூட அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வில்லை. தவிர்க்கமுடியாமல் திறமையால் விளையாட்டு அணிகளில் சேர்ந்தவர்கள் ஒரு சிலர்  கூட இரண்டாண்டு களுக்கு மேல் விளையாட அனுமதிக்கப்பட வில்லை. ஆனால் தனது திறமை, மற்ற எல்லாரையும் விட திடமான உடற்கட்டு, அறிவாற்றல் ஆகியவற்றால் ராப்சன் புறந்தள்ள முடியாதவராக இருந்தார்.

போல் ரொப்சனின் ஆரம்பப்பள்ளி வாழ்க்கை  ஓரளவு இனிமையாகவே கழிந்தது. ஆனால் உயர்நிலைப் பள்ளிக்காக சாமர்வில்லி வந்ததும் , நிலைமை மிக மோசமாகிவிட்டது.  1910 களில் அமெரிக்கா முழுவதும் இனவெறி உணர்வு தலைவிரித்தாடியது. ஆப்பிரிக்க -அமெரிக்க இனத்தவர் தங்கள் கருத்தை வெளியிடவும் அஞ்சினர். அவ்வாறு வெளியிடுபவர்கள் வன்முறை கும்பலால் கொலை செய்யப்பட்டு,  மரங்களில் தொங்கவிடப்படுவது அன்றாட நடவடிக்கையாக இருந்தது.   உயர்நிலைப்பள்ளியில் போல் ரொப்சன் சிறந்த பேச்சாளராக, பாடகராக, நாடக நடிகராக அனைவரையும் கவர்ந்தார். பள்ளி கால்பந்தாட்ட அணியில் இருந்த ஒரே ஒரு ஆப்பிரிக்க- அமெரிக்க நபராக போல் இருந்தார். வழக்கம்போல்  கறுப்பர் என்ற ஒரே காரணத்திற்காக பலத்த எதிர்ப்புகளை பால் சந்திக்க நேரிட்டது. அவரது பயிற்சியாளர் ஏற்கனவே அவருடைய திறமையைப் பற்றி அறிந்திருந்ததால் மற்ற வீரர்கள் எதுவும் செய்ய இயலவில்லை. தந்தையின் போதனைப்படி பால் தன் சக வெள்ளை நிற மாணவர்களுடன் மோதல் போக்கை தவிர்த்தே வந்தார்.  1915 ல் மேல்நிலைப் படிப்பிற்கு வெள்ளையர்களை மட்டுமே அனுமதிக்கும் ப்ரின்ஸ்டன் கல்லூரியிலும் , பென்சில் வேனியாவில் லிங்கன் பல்கலைக் கழகத்திலும் சேர வாய்ப்பு வந்தது. ஆனால் அதை விட கடும் போட்டியை விரும்பிய பால்,  ரட்கர் கல்லூரியில் சேரவே விரும்பினார்.  அதன் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றதுடன், நான்கு ஆண்டு கல்வி உதவித் தொகை தகுதித் தேர்விலும் வெற்றி பெற்றார். இதுபற்றி பின்னர், “நான் தகுதியற்றவன் அல்ல என்பது எனக்குத் தெரியும்”  என்று கூறினார்.

File:PAUL ROBESON - ACTOR, ARTIST, ATHLETE - NARA - 535624.jpg - Wikimedia  Commons

உயர்நிலைப்பள்ளியைப் போலவே இங்கும் கல்லூரியின் கால்பந்தாட்ட குழுவில் சேர விரும்பினார். ஆனால் முதல்நாள் பயிற்சியின் போதே வெள்ளை இனவெறி மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு பத்து நாட்கள் படுத்த படுக்கையானார். எனினும் மனத்தளரவில்லை போல் ரொப்சன்.  அடுத்த பயிற்சியின்போது அதேபோல் தாக்க  வந்தவனை , பொறுமை இழந்து, இரண்டு கைகளால் தூக்கி,   அப்படியே அந்தரத்தில் நிற்க வைத்து  கீழே போட்டு மிதிக்க தயாரானார். ஆனால் போல் ரொப்சனின் திறமை பற்றி நன்கு அறிந்திருந்த பயிற்சியாளர் அவரைத் தடுத்து, போல் ரொப்சனை எதிர்ப்பவர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவர்  என  சக வீரர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். அதன்பின் மற்றவர்கள் போலை ஏற்றுக் கொண்டனர். எனினும் மற்ற அணிகளுடன் விளையாடும் போது கறுப்பர் என்ற காரணத்திற்காகவே தாக்கப்பட்டார். ஒரு முறை மேற்கு வர்ஜீனிய அணியை சேர்ந்தவன்,  “உன் இதயத்தை பிடுங்கி எறிவேன்” என மிரட்டல் கூட விடுத்தான். இவை எதுவும் போல் ரொப்சனை தடுத்து நிறுத்த முடிய வில்லை. நான்கு வருடங்கள் ரட்கருக்காக விளையாடிய போது, முன்பு அவமானப் படுத்திய நாளிதழ்கள் கூட வெகுவாக பாராட்டிய எழுதின. நியூயார்க் நிருபர்  “இந்த தொடரின்  மிகச்சிறந்த வீரர்” என பாராட்டி எழுதினார்.  ரட்கரில்  கால்பந்து  கூடைப்பந்து, பேஸ்பால் மற்றும் ஓட்டப்பந்தயம்  என  நான்கு  பிரிவிலும் திறமையாக விளையாடி 15 பாராட்டு சான்றிதழ்களைப்  பெற்றார்.

வகுப்பறையில் ” ராபி” என சக மாணவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ராப்சன், கடினமாக உழைத்தார் . சக மாணவர்களுக்கு கற்றுக்  கொடுத்தார். அதோடு  பகுதிநேர வேலையும் பார்த்தார். ஒரு முறை தொடர்வண்டி நிலைய பாரந்தூக்குபவராகக் கூட வேலை செய்தார். படிப்பில் சிறந்த பால்  தொடர்ந்து 90% மதிப்பெண்களைப் பெற்றார். அவரது திறமையால்  தொடர்ந்து இரு ஆண்டுகள் அனைத்து அமெரிக்க கால்பந்தாட்ட அணி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவரது பேராசிரியர்களே அவரை மாணவராக பெற்றதைப் பெருமையாகக் கருதினர். ஆனால் இந்த பெருமிதங்களை முழுமையாக  துய்க்க முடியாத  வகையில் அப்போது அவரது தந்தையாரை இழந்தார்.   ரட்கரின் தலைசிறந்த நான்கு மாணவர்களில்  ஒருவராக  ‘கேப் அன்ட் ஸ்கல்’ (Cap and Skull) அமைப்பால் போல் ரொப்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் விருது வழங்கும் விழாவில் உரையாற்ற மேடை நோக்கிச்  சென்ற போல் ரொப்சனுக்கு  அனைத்து பேராசிரியர்களும் மாணவர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பிப் பாராட்டுத் தெரிவித்தனர்.

அந்த ஏற்புரையில் , பால் தேச பக்தி, இன பாகுபாடு, மத கோட்பாடு ஆகியவற்றைப் பற்றி பேசினார். அப்போது அமெரிக்க நாட்டை வாழ்த்திவிட்டு,  அமெரிக்கர்களிடம் தங்களையும் வாழ விடுமாறு கேட்டுக் கொண்டார். ‘கறுப்பரும் வெள்ளையரும் கை கோர்த்து செல்வோம்’  என அறைகூவல் விடுத்தார். அவரது உரை முடிந்த உடன் எழுந்த கரவொலி அடங்க நீண்டநேரம் ஆனது. ஆனால் அடிமை சுகத்தில் திளைத்திருந்த ஆப்பிரிக்க- அமெரிக்க மக்கள்தான்  இதை புரிந்து கொள்ளவில்லை. அத்துடன் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற உணர்வும் அவர்களிடம் மங்கவில்லை.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த போல் ரொப்சன் ஹர்லோமில் தனது சட்டக்கல்வியை துவங்கினார்.  ஆப்பிரிக்க-அமெரிக்க இன கலைஞர்கள் நிறைய வாழ்ந்த இடமாக இருந்த ஹர்லோம் ராப்சனுக்கு பொருத்தமான பகுதியாக இருந்தது. அங்கு பிற இசைத்துறை மாணவர்களுடன் சேர்ந்து பல இசைநிகழ்ச்சிகளை நடத்தினார். மிக விரைவில் அப்பகுதியில் அனைவரும் விரும்பும் நபராகிவிட்டார்.

எனினும் மற்ற பகுதிகளைப் போலவே ஹர்லோமின் சராசரி மனிதர்கள் கறுப்பின மக்களை எவ்வாறு கீழ்த்தரமாக கருதினர் என்பதை அவர்கள் உணர்ந்தே இருந்தனர். அவருடன் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிற நண்பர்கள் கூட  பாரம்பரிய நீக்ரோக்களின் இறையியல் பாடல்கள் , பெரும்பாலும் நீக்ரோக்களின் அடிமை  வாழ்வை சித்தரிப்பதாக இருந்ததால் அதனை பாட வேண்டாம் என போல் ரொப்சனிடம் கேட்டுக் கொண்டனர்.

What Paul Robeson Said | History | Smithsonian Magazine

தன்னை கொலம்பியா பல்கலைக் கழகத்திற்கு மாற்றிக்கொண்ட போல் ரொப்சன் அங்கும் சிறந்த ஓட்டப்பந்தய வீரராகத் திகழ்ந்தார்.  1919 ம் ஆண்டு இறுதியில் உள்ளூர் கால்பந்தாட்ட குழுக்களுக்காக விளையாடினார். ஆனால் பலமுறை பணம்  செலவு  செய்து,  நீண்டதூரம்  சென்று போட்டியில்  பங்கேற்க  சென்ற போது,  அங்கு  அவரது  அணியினர்  வெள்ளையர்கள் மட்டுமே தங்கும் ஓட்டல்களில் தங்கியதால் போல் ரொப்சன்  விளையாட முடியாமல்  திரும்பி  இருக்கிறார்.  போட்டிக்கு ஆயிரம் டாலர் வரை  சம்பாதித்த போல் ரொப்சன்  அதனை  வறுமையில் இருக்கும்  தனது  பயிற்சியாளர்களுக்கும்  தந்து  உதவினார். கொலம்பியாவின் லிங்கன் கல்லூரி மாணவர்கள் அவரது கால்பந்தாட்ட திறமையை ஏற்கனவே அறிந்திருந்ததால் அவருக்கு உரிய மரியாதை அளித்து அன்புடன் பழகினர்.

இங்கு ஒருமுறை  விளையாட்டின் போது பலத்த காயமடைந்த போல் ரொப்சன் பல வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தாயிற்று. அப்போது அங்கு பணிபுரிந்த எஸ்ஸி  கூட் (Eslanda cardozo  Goode) என்பவரை விரும்பி திருமணம் செய்துக் கொண்டார்.

இரண்டாம் ஆண்டு சட்டக்கல்வியின் போது ‘டபூ'(Taboo) என்ற நாடகத்தில் நடித்தார். அப்போதே சட்டக் கல்வியை விட மேடை நிகழ்ச்சிகளே அவருக்கு பொருந்தும் என எஸ்ஸி  உணர்ந்தார். அந்நாடகத்தில் போல் ரொப்சனின் குரலை விரும்பிய மக்கள் நாடகத்தை விரும்ப வில்லை. அடுத்து ” Shuffle Along”  என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த சில மாதங்களில் 1924ல் ஏற்கனவே நடித்த டபூ நாடகத்திற்காக லண்டனுக்கு  குழுவினருடன் பயணமானார்.

சட்டக் கல்வியில் இறுதி ஆண்டில் வழக்கறிஞர் ஆவதை விட மேடை கலைஞனாக  வருவதே நல்லது என முடிவெடுத்தார். அதற்கு காரணம், கறுப்பின வழக்கறிஞரை வெள்ளையர்கள்   ஏற்க மாட்டார்கள்  என்பதும் ஒரு வெள்ளைக்கார பெண், கறுப்பர்  என்பதாலேயே அவருக்கு கீழ்  செயலாளராக பணியாற்ற மறுத்ததுமே ஆகும்.

1924 ல் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாடக கதை ஆசிரியரான யூஜின் ஓ’ நெல் (Eugine O’ Nell) அவரை முழுதும் கறுப்பின நடிகர்களே நடிக்கும் “All god’s chillun got wings” என்ற நாடகத்தில் நடிக்க அழைத்தார். இதற்குப் பின் அவர் சட்டக்கல்லூரி வாசலையே மிதிக்கவில்லை என்பதுடன் வழக்கறிஞராக  யாரிடமும் சென்று வேலை கேட்கவும் இல்லை.

1924 ல்  பல  பாடல்கள் பதிவிற்கு  பிரபல  இசை  நிறுவனங்களுடன் ஒப்பந்தம்  ஆனார்.  பின்னர் மிக பிரபலமான  “Body and Soul”  நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். அத்துடன் ஷேக்ஸ்பியரின் “Roseanne”  நாடகத்தில் இடம் பெற்றார். அதுவரை மேடை நாடகங்களில் கறுப்பின பெண்கள் அனுமதிக்கப்படாத நிலையில், வெள்ளை இனத்தவரே கறுப்பு நிற பெண்களாக வேடமணிந்து நடித்தனர். அதனால் ஆண்களும்  வெள்ளை நிறத்தவராகவே இருந்தனர். ஆனால் இந்த நாடகத்தில்  கறுப்பு இன  போல் ரொப்சன் கறுப்பராக நடித்த வெள்ளை  இன பெண்ணின்  கைகளில்  முத்தமிடும் காட்சி  இடம் பெற்றது.  இது பலத்த சர்ச்சையை கிளப்பியது.

Paul Robeson Joins White House Pickets: 1948 | Paul Robeson … | Flickr

அதே சமயம் புகழ்பெற்ற ஆப்பிரிக்க- அமெரிக்க இன  பியானோ கலைஞரான லாரன்ஸ் ப்ரௌன்  என்பவருடன்  இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை இங்கிலாந்து முழுவதும் வெற்றிகரமாக போல் ரொப்சன்  நடத்தினார். அவை பெரும்பாலும் பாரம்பரிய நீக்ரோ மக்களின்  இறையியல் பாடல்களாகவே இருந்தன. இதில் மிகவும் புகழ் பெற்ற “Swing low sweet chariot” பாடலும் ஒன்று.   போல் ரொப்சனின் குரலுக்காகவும், பாடல்களுக்காகவும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது‌  ‘விக்டர் டாக்கிங் கம்பெனி’ அவரை ஓராண்டு பாடல் பதிவுக்கு ஒப்பந்தம்  செய்தது. ‘ vanity Fair’ இதழில் போல் ரொப்சன் படம்  இடம் பெற்றது. அவருடைய உருவச் சிலையை கூட ஒரு சிற்பி வடிக்கலானார். தற்போது போல் ரொப்சனும் அவரது மனைவியும் வெள்ளையரோடு  சரிசமமாக  கைகோர்த்து விழாக்களில் பங்கேற்றனர்.  கறுப்பர்  வெள்ளையர்  அனைவரும்  அவரது  பாடல்களை முணுமுணுத்தனர்.

இத்தனை புகழும் திறமையும் இருந்தாலும் இன பாகுபாடும் கூடவே வந்தது. எடுத்துக் காட்டாக  எழுத்தாளர் மற்றும் கலைஞர்களின் மனமகிழ்மன்றத்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக போல் ரொப்சனும்,  ப்ரௌனும் அழைக்கப் பட்டிருந்தனர். வழக்கப்படி அவ்வாறு விருந்தினராக அழைக்கப்படுபவர்கள்  தானாகவே  அந்த மன்றத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்படுவர். ஆனால் இவர்கள் இருவரையும் அவ்வாறு ஏற்க மறுத்ததுடன் அன்று வந்த ஒரு வெள்ளை இன ஆராய்ச்சியாளர் ஒருவர்  உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

இங்கிலாந்தில் குறைந்த அளவே ஆப்பிரிக்க இனத்தவர் குடியேறி இருந்ததால் அங்கு அமெரிக்கா அளவிற்கு இன வெறி இருக்கவில்லை. இங்கிலாந்தில் எங்கும் அவர்கள்  சுதந்திரமாக  சென்று  வந்தனர். “நான் ஒரு மனிதனாக , அறிவாளியாக இங்கு மதிக்கப் படுகிறேன். இது என் உள்ளக் கிடக்கைகளையும், எனது மக்களுக்கு எனது இசையால் சேவை செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும்  தருகிறது.” என போல் ரொப்சன் கூறினார்.

” The Emperor Jones”  நாடகத்தின் முதல் நிகழ்ச்சிக்குப்பின் இங்கிலாந்தின் அனைத்து  நாளிதழ்களும்  போல் ரொப்சனின்  பாடல்களை  மட்டுமல்ல  நடிப்புத் திறனையும்  வெகுவாக  பாராட்டி எழுதின. புகழ் பெற்ற  ஓபரா(Opera) வில் வாய்ப்பு வந்த போதும் அங்கு கறுப்பினத்தவர்களுக்கு  உரிய மரியாதை  கிடைக்காது என்பதால் அதனை மறுத்தார்.

ஆனால் அதன்பின் லண்டனில் மிக புகழ் பெற்ற ” Show Boat” திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதில் இடம் பெற்ற, ” Ol’ Man River”  பாடல் உலகம் முழுதும் அவரது புகழைப் பரப்பியது.

Paul Robeson: A Life - Truthdig

1926ல்  போலும்,  ப்ரௌனும்  இணைந்து  அமெரிக்காவில்  முதல்  இசை நிகழ்ச்சியை  நடத்தினர். அப்போது போல் ரொப்சன்  உலகப்  புகழ் பெற்ற  ஆப்ரிக்க- அமெரிக்க  குத்துச் சண்டை வீரன் ஜாக் ஜான்சனின்  வாழ்க்கையைச்  சித்தரிக்கும்   ” Black Boy” திரைப்படத்தில்  நடித்தார்.  அவரை  அவமானப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியும் அ ப்போது  நடந்தது  “சவாய் ஓட்டலில்” விருந்தினர்  ஒருவரை அவர்  சந்திக்கச்  சென்ற  போது காவலர்  அவரை  கறுப்பர் என்பதால் உள்ளே  விட மறுத்து விட்டார். ஆனால் இதே ஓட்டலில் இதற்கு முன் பலமுறை போல் ரொப்சன் உணவருந்தி  உள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.  இதனை போல் ரொப்சன்  கடுமையாக சாடினார் . இதன்பின் அமெரிக்க  முழுவதும் தன் இசை நிகழ்ச்சியை  நடத்தினார். ஒவ்வொன்றும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருந்தது.   1930ல் “Othello” நாடகத்தில் ஒத்தல்லோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. (அதன்பின்  1943ல்  ப்ராட்வே தியேட்டர்ஸ்  இதை  திரைப்படமாக எடுத்த போது மாபெரும்  வரவேற்பை பெற்றது.)

போல் ரொப்சன் – நாடகத்தில் ஒதெல்லாவாக…

1930ல் உலகநாடுகள் இரண்டு முகாமாக பிரிந்து  நின்று போது போல் ரொப்சன் சோவியத் முகாமையே  விரும்பினார். ” நாங்கள் அரசியலால்,  அடக்கப்படும் கறுப்பின மக்களாக இருந்ததாலும், இன உணர்வால் எங்கள் தாயகமான ஆப்பிரிக்காவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இருப்பதாலும் ஆப்பிரிக்கர்கள் எது செய்தாலும்  அது  தாழ்ந்ததே  என்ற உணர்வு பரவலாக காணப்பட்டது” என்றார் போல் ரொப்சன்.

1930 ல் திரைப்படங்களில் கறுப்பினத்தவருக்கு உரிய இடம் அளிக்கப் படுவதில்லை என்பதால் திரைப்படங்களில் நடிப்பதை வெறுத்தார்.    1931ல் நடைபெற்ற ‘ Scottsboro nine’  வழக்கு போல் ரொப்சனை பெரிதும் பாதித்தது. அது அமெரிக்காவில்  ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் சமமாக நடத்தப்படமாட்டார்கள் என்பதை  வெளிப்படையாக  உணர்த்தியது‌.

1933 ல் லண்டன் திரும்பிய போல் ரொப்சன் , ஆப்பிரிக்க பன்னாட்டு காலனியாதிக்கத்திற்கு  எதிராக போராடும் இளைஞர்களை  சந்தித்தார். சோவியத் யூனியனும்  காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பதை அறிந்தார். இதன் அடிப்படையில் அமெரிக்காவின் ஆப்பிரிக்க- அமெரிக்க மக்களின் நிலையை ஒப்பிட்டு பார்த்தார். வரலாற்றில் மிகச் சிறந்த நாகரீகங்களாக கருதப்பட்ட சீன, யூத நாகரீகங்களுடன் நீக்ரோ இன வரலாற்றை இணைத்து பாடல்களையும், நாடகங்களையும் தயாரிக்க வேண்டியது தனது கடமை என முடிவு செய்தார்.  இதற்காகவே  ஒரு சில வாரங்களுக்குள்  மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பல மொழிகளைக்  கற்றார். இதன்மூலம்  அமெரிக்க கறுப்பின மக்களின் அவலநிலையை அவர்களுக்கு தன் பாடல்கள் மூலம் உணர்த்த முடியும் என நம்பினார்.  “நிற வேறுபாடு இருந்தாலும் கறுப்பினத்தவர்  வெள்ளையர்களுக்கு தாழ்ந்தவர்கள் இல்லை” என  உரக்க கூறினார். ஆப்பிரிக்க- அமெரிக்கர்கள் தங்களது பாரம்பரியத்தை மறந்து, நவீனத்தின் (jazz இசை) பின்செல்வது தவறு என கருதினார்.  போல் ரொப்சனின் இந்த கருத்துக்களை அமெரிக்க பத்திரிக்கைகள் திரித்து,  அமெரிக்க அரசுக்கு எதிரான கருத்தாக சித்தரித்து,  அமெரிக்க மக்களிடையே இனவெறி விஷத்தை பரப்பின. இனத்தைப் பற்றி  கவலைப்படத் தேவையின்றி ஆப்பிரிக்காவிலேயே போய் தங்கிவிடக் கூட போல் ரொப்சன் எண்ணினார். ஆனால் அவர் மேடையை அதிகம் விரும்பியதால் அவரது  இசைப்பயணம்  இடையிலேயே நின்றுவிடாமல் தொடர்ந்தது.

1934 ல் புகழ் பெற்ற சோவியத் யூனியனின் திரைப்படத் தயாரிப்பாளரான செர்கேய் எய்சன்ஸ்டீன்,  ஹெய்தி நாட்டு மக்கள் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தை முறியடித்த வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்து அதில் போல் ரொப்சனை நடிக்க அழைத்தார். மாஸ்கோ பயணத்தில் பெர்லினில் ஒரு இரவு தங்க நேர்ந்த போது  ஜெர்மனியில் நாஜிக்களின் கொடுமையை நேரடியாக உணர்ந்தார். சோவியத் யூனியனில் அம்மக்களுடன் அவர் சரளமாக ரஷ்ய மொழி பேசியதைக் கண்டு அவர்கள் வியப்படைந்தனர். ரஷ்யா முழுவதும் அவர் இசை நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றது. அங்கு சோவியத் அதிபர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை சந்தித்தார்.

And You Know Who I Am”: Paul Robeson in Concert - Humanities Division - UCLA

1937 ஸ்பானிய உள்நாட்டு போரின் போது அரசியல் பேச்சாளராக  போல் ரொப்சன் உருவானார்.  மேடையில் அப்போது  இசைக்கப்பட்ட  பாடல்களை ஏராளமானோர் ரசித்தனர். சோசலிஸ்டுகளும், கம்யூனிஸ்ட் களும் அவருக்கு பேராதரவு கொடுத்தனர்.  ஹிட்லரின் ஆதிக்கம் பரவுவதைத் கண்ட போல் ரொப்சன் லண்டன் வானொலியில், “ஒவ்வொரு கலைஞனும் , ஒவ்வொரு அறிவியலாளரும் நாம் எந்த பக்கம் என்பதை முடிவு செய்ய வேண்டிய நேரம் இது. போர்முனை எல்லா இடத்திலும் உள்ளது .” என்று அறைகூவல் விடுத்தார். “ஹிட்லருடன் சமாதானப்  போக்கைக்  கடைப்பிடிப்பது ஐரோப்பிய நாடுகளை அவனது ஆதிக்கத்தின் கீழ் தள்ளுவதாகவே அமையும். ” என்றார் போல் ரொப்சன்.   இங்கிலாந்திலிருந்த அவரது வணிக கூட்டாளி, “ராப்சன் தனது அரசியல் கருத்துக்களை அவருடனே வைத்துக் கொள்வதே நல்லது. இல்லை எனில் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும்” என எச்சரித்தார். ஆனால் தனது ஆதரவாளர்களுக்காக அதனை மகிழ்ச்சியோடு நிராகரித்தார் போல் ரொப்சன் அத்துடன் முன்பைவிட தீவிரமாக செயல்பட முடிவெடுத்தார்.

1937 ல் ஸ்பெயினுக்குச் செல்ல திட்டமிட்ட போது ‘ ஒரு மாபெரும் திருப்பம்’ நடந்தது. ஹிட்லர், முசோலினியின் ஆதரவுடன் ஸ்பெயின் இராணுவத் தளபதி ஃப்ரான்கோ, ஸ்பெயினில் நடந்த  மக்களாட்சிக்கு எதிராக கிளர்ச்சியை  நடத்தினார். அரசுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட்டுகளும், சோசலிஸ்ட்டுகளும்,  ஜனநாயகவாதி கூறும், குடியரசு கட்சியினரும்  எதிர் நின்றனர்.  ஆனால்  அவர்கள்  வலுவிழந்து  காணப்பட்டனர்.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து பாசிசத்திற்கு எதிரான போரில் தங்களை இணைத்துக் கொள்ள ஏராளமானோர் ஸ்பெயினுக்கு வந்தனர். 1938ல் ஸ்பெயினுக்கு மனைவியுடன்  சென்ற  போல் ரொப்சன் போரில் பாதிக்கப்பட்ட இடங்களை எல்லாம் வலம் வந்தார். இது அரசு ஆதரவு படையினருக்கு உற்சாகம் அளித்தது. அதோடு இரு தரப்பினரும் ஒரு மணிநேரம் சண்டையை நிறுத்திவிட்டு போல் ரொப்சனின் இசையை ரசித்தனர்.  கையில் ஆயுதங்களுடன்  உன்னத நோக்கத்திற்காக  போர் முனையில் நிற்கும் வீரர்கள் தனது இசையை ரசிப்பதைக் கண்ட போல் ரொப்சனிடம் இது பெரும் தாக்கத்தை  ஏற்படுத்தியது.  ஸ்பெயினில் அமெரிக்க  கம்யூனிஸ்ட் தலைவர்  எர்ல் ப்ராவ்டனை சந்தித்தார்.  உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் பாசிச ஹிட்லரின் ஆக்கிரமிப்பு  எங்கும்,  எப்போதும்  நடக்கும் என அஞ்சினர். போல் ரொப்சன் ஜெர்மனி  ஒருபுறமும் , சோவியத் யூனியன் மறுபுறமும் நிற்கும் என உணர்ந்தார். அமெரிக்கா?

ஸ்பெயினின் விடுதலைக்காக மட்டுமல்ல, ஜமைக்கா, இந்தியா முதலிய நாடுகளில் இருந்த பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் போல் ரொப்சன்  குரல் கொடுத்தார். அவரது கறுப்பு நிறமே அவருக்கு தனிச்சிறப்பான உணர்வை கொடுத்தது. சென்ற இடங்களில் எல்லாம் ஏகோபித்த பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்தியாவின் நேருவையும் சந்தித்து அவரை நண்பராக்கிக் கொண்டார்.

அதே ஆண்டு இறுதியில் ப்ரௌனுடன் இணைந்து இங்கிலாந்து முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்நிகழ்ச்சிகளில் குறிப்பாக வேல்ஸ் பகுதி நிலக்கரி சுரங்க தொழிலாளர்களின் அவல நிலையையும், ஏழை மக்களின் வறுமையைப் பற்றியுமே அவரது நிகழ்ச்சிகள் இருந்தன.

1938 ல் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய போல் ரொப்சன்,  இனி வெறும் பணத்துக்காக மட்டும் பாடப் போவதில்லை என முடிவு செய்தார். அரசியல் உள்ளடக்கமும் , அவர் விரும்பிய வகையில் இருந்தால் மட்டுமே மேடை ஏறினார். அவரது நிகழ்ச்சிக்காக ஐரோப்பிய அமெரிக்க நிறுவனங்கள் காத்துக் கிடந்தன.

North Carolina A&T, monument to Renaissance Man Paul Robeson

இங்கிலாந்து உலகப் போருக்கான தயாரிப்பில் மிகவும் அசட்டையாகவே இருந்தது. அமெரிக்காவுக்குத் திரும்பும் முன் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், “இந்த போர் ஜனநாயகத்தைப் பற்றியதல்ல. ஜெர்மன் மக்களை கொடூர அரசிடமிருந்து  காப்பாற்றுவது பற்றியதே” என்றார். போல் ரொப்சனின் இத்தகைய கருத்துக்களை,  ஹிட்லரைக் கண்டு நடுங்கிக் கொண்டிருந்த அமெரிக்க அரசும்,  பத்திரிகைகளும் திரித்துக் கூறின. அவர் கறுப்பின மக்களை பலவீனப்படுத்தவும்,  கம்யூனிசத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான போரில் வீணாக அமெரிக்காவை இழுத்து விட முயல்வதாகவும் குற்றம் சாட்டின.  அமெரிக்க தனிமைவாதிகளோ இந்தப் போரின் இருபுறமும் சேராமல் இருப்பதே நல்லது என வாதிட்டனர்.

இச்சமயத்தில் அமெரிக்கா பாசிசத்திற்கு எதிராக ஒரு தீர்மானகரமான நிலையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ப்ராவ்டரை அரசு பொய் வழக்கில் கைது செய்தது.  இதனை எதிர்த்து அவரை விடுதலை செய்ய கோரி மேடிசன் சதுக்கத்தில் நடந்த மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட போல் ரொப்சன் ” ப்ராவ்டர் பாசிச எதிர்ப்பு சக்திகளின் முன்னோடி” என அறிவித்தார்.

1941, ஜூன் 22ல் ஜெர்மனியின் நாஜிப்படைகள் சோவியத் யூனியனை ஆக்ரமித்த போது அமெரிக்கர்கள் அரசியல் நிலைபாடே தடுமாறியது. போல் ரொப்சனின் கருத்துக்கள்  உண்மையாயின. அவர் அதிபர்  F.D .ரூஸ்வெல்ட்டை சந்தித்து சோவியத்திற்கு அதிக உதவிகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அமெரிக்க  பிற்போக்குவாதிகளோ மௌனம் காத்தனர்.

அதோடு அமெரிக்க  உளவு நிறுவனத்தின் (FBI) இயக்குநர்  ஹூவர்,  போல் ரொப்சனையும் , பிற பாசிச எதிர்ப்பாளர்களையும் ‘ பிரிவினைவாதிகள். ‘என்று முத்திரை  குத்தி  கைது செய்ய காத்திருந்தார். 1942ல் அமெரிக்காவின் முத்து துறைமுகத்தை (Pearl Harbor) ஜப்பான்  குண்டுவீசி  தாக்கிய போதும் கூட , ஜப்பானையோ அதன் கூட்டாளி ஜெர்மனியையோ  தாக்க  அமெரிக்க அரசு அஞ்சியது. ஆனால்  சோவியத் படைகள் தீரத்துடன்   போராடி நாஜிப்படைகளை பெர்லினை நோக்கி  பின்வாங்க செய்த பின்னரே, வேறு வழியின்றி அமெரிக்கா சோவியத்துடன் கூட்டு சேர்ந்தது. எனினும்  ஹூவர் , போல் ரொப்சன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என குற்றம் சாட்டினார். ஆனால் போல் ரொப்சன் அதை ஏற்கவோ மறுக்கவோ இல்லை. அத்துடன்  “ஒருவருடைய அரசியல் நிலைபாட்டை எவருக்கும் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை”   என உறுதியாக தெரிவித்தார். உண்மையில் அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இல்லாத போதும் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் ஹூவர் மிக கடுமையாக கண்காணித்தார்.  போல் ரொப்சன் அஞ்சாமல் பொதுக் கூட்டங்களில் பேசினார். அவர் நடத்திய பேரணியில் ஏராளமான அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்க அதிபருடனும், பிற உயர் அதிகாரிகளுடனும்  ராப்சன்  ஓரளவு நெருங்கி  பழகி வந்ததால் அமெரிக்க உளவு நிறுவனம்( FBI) அவரை எதுவும் செய்ய  முடியாமல் தவித்தது.

பாசிசத்திற்கு எதிரான போரில் ஆப்பிரிக்க -அமெரிக்க மக்கள் , அமெரிக்க அரசிற்கு ஆதரவாக இருப்பதன் மூலம் நாஜிக்களின் கொலை கூடங்களில் சிக்கியுள்ள ஏராளமான ஆப்பிரிக்க , யூத மக்களை காப்பாற்ற முடியும் என போல் ரொப்சன் நினைத்தார். போர்காலத்தில் அமெரிக்க அரசுக்கும் கறுப்பினத்தவரின்  தேவை இருந்தது. இதனை  கடைசி வாய்ப்பாகவே அரசு கருதினாலும் போர்முனையில் ஆப்பிரிக்கர்களே முன்  நின்றனர்.

” பிட்ஸ்பர்க் கொரியர்” என்ற கறுப்பின ஆதரவு செய்தித்தாள் ஆப்பிரிக்க- அமெரிக்கர்களின் இழிநிலையை வெளிப் படையாக எழுதியது‌. போல் ரொப்சன், ‘காலனி ஆதிக்கத்திற்கு எதிரான ஆப்பிரிக்க விவகார குழு’ வுடன் இணைந்து நாடெங்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அதே சமயம் 1944ல் நடந்த அதிபர்  தேர்தலில் ரூஸ்வெல்ட்  மீண்டும் அதிபராக போல் ரொப்சன்  பிரச்சாரம்  செய்தார்.

” சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்க மக்களிடம் அவதூறு பிரச்சாரம் செய்வது, ஹிட்லரின் பாசிச பிரச்சாரத்திற்கு ஒப்பானது”  என்ற போல் ரொப்சன் ,  ரூஸ்வெல்ட்டின் இறுதி ஆட்சி காலத்தையும், அமெரிக்க ஐக்கிய நாடுகள் அமைப்பையும் , அமெரிக்கா உலகம் எங்கும்  காலனி ஆதிக்கத்தின் அல்லல்படும் மக்களைப் பற்றி  ஒரு தீர்மானமான  முடிவை  எடுக்காமலிருப்பதையும் சாடினார்.  “கறுப்பரோ, வெள்ளையரோ, சிவப்பரோ எல்லோரும் ஒன்றிணைந்து வாழும் உலகைப் படைப்போம்” என முழங்கினார் போல் ரொப்சன்.

ஆனால்  உலகப் போரில் மற்ற நாடுகளைவிட குறைவாகவே அமெரிக்கா பாதிக்கப்பட்டு  இருந்ததால்  போல் ரொப்சனின் கருத்துக்கள்  தவறாக திரித்துக் கூறப்பட்டன . ஐரோப்பாவின்  போர்களத்திலிருந்து திரும்பிய கறுப்பின வீரர்களை அமெரிக்க அரசு கடுமையாக நடத்தியது. இதனைக்  கண்டித்த போல் ரொப்சன் “தங்கள்  சொந்த நாட்டில் அடிமைகளாக நடத்தப்படுவதை  எதிர்க்காதவர்கள் ஐரோப்பாவில் சமத்துவத்திற்காக போராடியது ஏன்? ”  என கேட்டார்.  இதற்கு ஆப்பிரிக்க- அமெரிக்க இனத்தவர் பலரும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

1946 ல்  அதிபர்  ட்ரூமனுடன்  அவர் நடத்திய  பேச்சு வார்த்தையில் , ட்ரூமனிடம்  அப்போது  நாடெங்கும்  நடந்த கறுப்பினத்தவர்  சமூக விரோத கும்பல்களால் படுகொலை  செய்யப்பட்டு  நடுத்தெருவில் தொங்கவிடப்பட்ட  சம்பவங்களை தடுக்க போல் ரொப்சன்  கோரினார். ஆனால் அந்த சமூக விரோத கும்பல்களை (Lynching mob) தடை செய்யும் சட்டத்தை கொண்டுவர ட்ரூமன் மறுத்தார். ராப்சன் இது குறித்து சர்வதேச அமைப்புகளின் தலையீடு  கோரப்படும் என்று எச்சரித்ததால் ,  பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

பின்னர் போல் ரொப்சன் மீது நடத்தப்பட்ட விசாரணையின் போது போல் ரொப்சன், ” நாஜிக்களால் முதலில் கொலை செய்யப் பட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.  கறுப்பின மக்கள் இந்த நாட்டில் இன பாகுபாடு  காட்டப்பட்டு அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். இதைத்தான் வலியுறுத்துகிறேன்.  நான் கம்யூனிஸ்ட் அல்ல.” என  கூறினார்.

1948ல் நடந்த அதிபர் தேர்தலில் கருப்பின ஆதரவாளர் , முற்போக்கு கட்சியை சேர்ந்த ஹென்றி வாலஸ் க்கு ஆதரவாக  போல் ரொப்சன் நாடெங்கும் தீவிர பிரச்சாரம்  செய்தார். வாலஸின் வெற்றி நிச்சயம் என்ற நிலையில் ஆளும்  ஜனநாயக கட்சியின்  தூண்டுதலின்படி வாலஸின் ஆதரவாளர்களை கைது செய்த அமெரிக்க உளவு  நிறுவனம்  அவர்களை கம்யூனிஸ்ட்கள்  என  பொய் கூறியது‌.  இதனால்  பெரும்பான்மை மக்களின்  ஆதரவை இழந்த  வாலஸ் தோல்வி அடைந்தார்.

Son of a slave who became a superstar | Daily Mail Online

1949ல் நாடு திரும்பிய போல் ரொப்சன் சற்று நிதானமாகவே  நடந்து வந்தார். ஆனால் ராப்சனின்  மகன்  ஒரு வெள்ளை இனத்தவரை திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  ராப்சனின்  அரசியல் கருத்துக்களே  இதற்கு காரணம் என  பத்திரிகைகள் அப்பட்டமாக  புளுகின. இந்த  சூழ்நிலையில்தான் நாம்  ஏற்கனவே  கண்ட பீட்ஸ்கில்  சம்பவம்  நடந்தது.

1948ல் புகழின் உச்சியில் இருந்த போல் ரொப்சன்,  1950ல் தன் சொந்த இன மக்களே வெறுக்கும்  நிலைக்கு  ஆளானார்.  இதற்கு  உளவு நிறுவனம் மற்றும் ஆளும் கட்சியின்  திட்டமிட்ட சதியே காரணம். போல் ரொப்சன்  தலைநகர்  வாஷிங்டன் சென்று சமூக விரோத கும்பல்களை  தடை செய்யும் சட்டத்தையும், நிற வேற்றுமை அடிப்படையில் அமெரிக்க மக்களை  பிளவு படுத்தும்  கொடிய  ஜிம் க்ரோ(Jim Crow) சட்டத்தை ரத்து செய்யவும் கோரினார். இதற்கு பதிலாக போல் ரொப்சனை ‘கம்யூனிஸ்ட்  என பொய் பிரச்சாரம்  செய்தது  அரசு. அத்துடன்  அவரது  ஏற்கனவே  முடிவு  செய்யப்பட்ட  85  இசை நிகழ்ச்சிகளை , தனது அதிகாரத்தை பயன்படுத்தி  நிகழ்ச்சி  ஏற்பாட்டாளர்களையும் , அரங்க உரிமை யாளர்களையும், பொது மக்களையும் மிரட்டி  ரத்து செய்ய வைத்தது அரசு. பொருளாதார நெருக்கடியை  தீர்க்க  வேறுவழியின்றி  ஐரோப்பாவுக்கு சென்றார் போல் ரொப்சன். அங்கு  சென்றதும்  அமெரிக்க அரசின் அடக்குமுறைகளை  எதிர்த்து பொதுக்கூட்டங்களில்  உரையாற்றினார். பாரிசில்  நடந்த  உலக அமைதிக்கான முதல் காங்கிரசில் (World partisans of peace congress) கலந்து கொண்டார். இதில் பிக்காசோ,  மேரி கியூரி   உள்ளிட்ட ஏராளமான  உலகத்  தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

‘அமெரிக்க  மக்கள்  சோவியத் யூனியனை  மட்டுமல்ல எந்த நாட்டு மக்களுக்கு எதிராகவும்  போரில் ஈடுபட கூடாது ‘ என போல் ரொப்சன் கூறியதை  திரித்து,  போல் ரொப்சன் அமெரிக்காவை  பாசிச ஜெர்மனியோடு  ஒப்பிட்டு  பேசினார் என அரசு ஆதரவு அமெரிக்க  நாளிதழ்கள்  எழுதின.

1950ல் அமெரிக்காவை  எதிர்த்து வெளிநாடுகளில்  கருத்து வெளியிடுகிறார் எனக் கூறி  போல் ரொப்சனின் கடவு சீட்டை (passport)  அரசு பறித்தது. ஆப்பிரிக்க மக்களின் உரிமைக்காக  குரல். கொடுப்பதற்கு  எதிரானது  இது  என  போல் ரொப்சன் வாதிட்டார்.  உலகம் முழுவதுமிருந்த  கம்யூனிஸ்டுகளும் , அவரது ரசிகர்களும்,  ஜனநாயகவாதிகளும் அமெரிக்க அரசை கண்டித்தனர்.

ஆப்பிரிக்க- அமெரிக்க அரசியல்வாதிகளும், காங்கிரஸ் உறுப்பினர்களும், கறுப்பின மக்கள் முன்னேற்றத்திற்கான தேசியக் கூட்டமைப்பு (NAACP) உறுப்பினர்களும்,  போல் ரொப்சனுக்கு எதிராக பத்திரிகையில்  செய்தி  வெளியிட்டு அரசுக்கு தமது அடிமை விசுவாசத்தைக் காட்டிக் கொண்டனர். அதே வேளையில் தாங்களே அடிமைகளாக வாழும் போது ஐரோப்பாவில் ஜனநாயகத்திற்காக போராடி தங்கள்  நேரத்தை வீணடித்து விட்டதாக  ஐரோப்பாவிலிருந்து  திரும்பிய ஆப்ரிக்க- அமெரிக்க  இன போராளிகள்  கருதினர்.

1952 ல் சோவியத் யூனியன் போல் ரொப்சனுக்கு சர்வதேச அமைதிக்கான ஸ்டாலின் விருதை அளித்த அதே சமயத்தில், அமெரிக்க அரசு,  போல் ரொப்சன்,  தனது மக்கள் உரிமை, அமைதி, சுதந்திரம்  பற்றிய  தனது  கருத்துக்களை மாற்றிக் கொண்டால் கடவு சீட்டை திருப்பித் தருவதாக  கூறியது‌. ஆனால் கடவு சீட்டு பெறும்  உரிமையுடன்  ஒருவரது அரசியல் நிலைப்பாட்டை இணைப்பதை போல் ரொப்சன் எதிர்த்து வாதாடியதால்  கடவு சீட்டை திருப்பித்தர அரசு மறுத்து விட்டது.

Paul Robeson sings to Scottish miners (1949) - YouTube

1952 ல் கனடாவின் தொழிற்சங்கம் போல் ரொப்சனை ஒரு இசை நிகழ்ச்சிக்கு  அழைத்தது. அமெரிக்கர்கள் கனடா, மெக்சிகோவிற்கு செல்ல கடவுச்சீட்டு அவசியமில்லை என சட்டம் இருந்த போதும் போல் ரொப்சனுக்கு கனடா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால் கனடாவின்  தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் அமெரிக்க – கனடா எல்லைக்கே திரண்டு  வந்தனர். போல் ரொப்சன் அங்கிருந்தே தனது இசை நிகழ்ச்சியை நடத்தி மக்களின் பேராதரவைப் பெற்றார்.

இதற்கிடையே  எஸ்ஸி  எழுதிய  “ஆப்பிரிக்க பயணம்” என்ற நூலில் அமெரிக்க எதிர்ப்பு கருத்துக்கள் இருப்பதாக பொய் கூறி அவரை  விசாரணைக்கு அழைத்தது அரசு. அப்போது  எஸ்ஸி,  “நான் போல் ரொப்சனின் மனைவி  என்பதில்  பெருமிதம் அடைகிறேன். நான் கம்யூனிஸ்டா இல்லையா என்பது அரசியல் அமைப்பு சட்டப்படி  உங்களுக்குத்  தேவையில்லாத  விஷயம். இங்கு  அனைத்து ஆப்பிரிக்க- அமெரிக்க மக்களும் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர்.  நாங்கள்  இந்த  அரசை கவிழ்க்க வேலை  செய்யவில்லை என்பதை தெரிந்தும்,  நீங்கள் எங்கள் கருத்துக்களை திரித்துக் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் .” என திடமாக எடுத்துரைத்தார். அவர் மீதான குற்றங்களை நிரூபிக்க முடியாமல்  அரசு அவரை விடுவித்தது.

1955ல் , தொடர்ந்த  உளவுத்துறை கண்காணிப்பு, அவதூறு,  பொருளாதாரத்தை முடக்குவது  போன்றவற்றால் மன உளைச்சலுக்கு ஆளாகி   உடல்நலம் பாதிக்கப்பட்டார்  போல் ரொப்சன். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை  செய்ய வேண்டும் என கூறிய போது,  அது உளவுத் துறையின்  சதியாக இருக்குமோ என முதலில்  நினைத்த போல் ரொப்சன்  பின்னர்  ஒப்புக் கொண்டார்.  1955  இறுதியில் குணமடைந்த  போல் ரொப்சன், கனடாவின் ஒன்டாரியோவில்  சுரங்கத் தொழிலாளர் மற்றும் நூற்பாலை தொழிலாளர் களுக்காக நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற்றார். அந்நிகழ்ச்சி  வழக்கம் போல் மிகப் பெரும் ஆதரவைப் பெற்றது.

போல் ரொப்சன்  இருதுருவ பிறழ்வு ( Bi polar Disorder) எனும் மனநோயால் பாதிக்கப்பட்டு  இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்நிலையிலும்,  மருத்துவர்களின்  கருத்துக்களை  மீறி  அரசு அவரை விசாரணைக்கு அழைத்தது. விசாரணையில் சற்றும் மனம் தளராமல்  அரசு தரப்பு கேள்விகளுக்கு எதிர்கேள்விகளாகவே  பதில்  கூறினார்.  இறுதியில் , “அரசியல் அமைப்பின் 5வது திருத்த சட்டப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை”  என  தெளிவாக  உரைத்தார்.  “உங்களுக்கு வாய்ப்பிருந்தும்  ஏன்  சோவியத் யூனியனில்  தங்கவில்லை ?”  என்ற கேள்விக்கு, ” நான் எனது இன மக்களின்  விடுதலைக்காகவும், பாசிசத்தை எதிர்க்கவும், என் மக்கள் அனைவருக்கும் அனைத்துத் துறையிலும் வாய்ப்பையும்,சம உரிமையையும்  பெற்றுத்தரவும்  போராடவே நாடு திரும்பி இருக்கிறேன்” என பதிலளித்தார். “சோவியத் நாட்டிலும்  பல எதிர்ப்பாளர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்களே? ” என கேட்ட போது,  “பல ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க- அமெரிக்க இன மக்கள், அரசால்  பொய் வழக்கின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறையில்  கொடுமைகளை அனுபவித்து வருகிறார்களே,  அதற்கு உங்கள் பதில் என்ன?”  என கோபமாக  பதிலளித்தார்.

மீண்டும் 1957ல் இதே கடவு சீட்டு வழக்கு விசாரணையின் போது , ‘கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளன்’ என கையெழுத்திட்டால்  கடவு சீட்டை தருவதாக கூறியது அரசு. ஆனால் போல் ரொப்சன் மறுத்து விட்டார்.

1958 ல் வெளியான போல் ரொப்சனின் வாழ்க்கை வரலாறு புத்தகமான ‘ நான் இங்கே இருக்கிறேன்’ (Here I Stand) இந்தியா, ஜப்பான் , இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும்  பெரும் வரவேற்பை பெற்றது. அதில்

“ஆப்பிரிக்க- அமெரிக்க இனத்தவரே! அமெரிக்க பெரும்பான்மை மக்களுக்கு சமமாக நமது உரிமைகளைப் பெற இதுவே சரியான தருணம்” என கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து நாடெங்கும் உரிமை கோரும் பேரணிகளும், உள்ளிருப்பு வேலை நிறுத்தங்களும், கையெழுத்து இயக்கங்களும் தீவிரமாக நடைபெற்றன. தனது  60வது  பிறந்த நாளை தனது  இசை நண்பர்  லாரி ப்ரௌனுடன்  இணைந்து மிக பிரம்மாண்டமான  இசை நிகழ்ச்சியுடன்  கொண்டாடினார்.

இச்சமயத்தில்தான்  எட்டு ஆண்டுகளுக்குப் பின்  தனது கடவு சீட்டை திரும்ப பெற்றார்.  லண்டனிலும் மாஸ்கோவிலும் பல இசை நிகழ்ச்சிகளை  நடத்தினார். இதனால்  இவர்  உடல்நிலை மோசமடைந்தது. சிகிச்சைக்குப்  பின்  ஐரோப்பிய நாடுகளிலும் , ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் தன் இசையால் மக்களை மகிழ்வித்தார். தொடர்ந்த நிகழ்ச்சிகளும் , மருத்துவ  சிகிச்சைகளும் அவரது மூளை நரம்புகளை பாதித்தன.

தங்கள் கடவு சீட்டுக்களை புதுப்பித்துக் கொண்டு அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்த  போது அமெரிக்க தூதரகம் , ‘கம்யூனிஸ்ட் இல்லை’ என உறுதிமொழி அளிக்கக்  கோரியது. முதலில் மறுத்த போல் ரொப்சன் நண்பர்கள் மற்றும் உறவினர்களின்  வேண்டு கோளுக்கு  இணங்கி அதற்கு இணங்கினார். அவர் அமெரிக்கா திரும்பியதும், “விரக்தியடைந்த சொந்த நாட்டு மகன் ” என பத்திரிகைகள் ஏளனம் செய்தன.  ஆனால் போல் ரொப்சன், ”அவர்களுக்கு வர்ணம் பூச  தேவையான படம் கிடைத்தது. பூசட்டும்”  என்று  தெளிவாக பதிலளித்தார் என அவரது பேத்தி நினைவு கூறுகிறார். 1965ல் எஸ்ஸி  நீண்ட கால கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு  இறந்த போது  போல் ரொப்சன் அவரது தமக்கை  வீட்டில் உடல்நலம்  பாதிக்கப்பட்டு  சிகிச்சைப்   பெற்றுக் கொண்டிருந்தார். அவர் இல்லாமலே  அவரது  மனைவியின்  சவ  அடக்கம்  நடந்தது.

போல் ரொப்சனும் மனைவியும்

1969 ல் அவருக்கு ரட்கர் கல்லூரி, அவரது பள்ளி, NAACP  போன்ற பலரிடமிருந்து பாராட்டுகளும் விருதுகளும் வந்தன. அவரது 75வது பிறந்த நாள் நியூயார்க் , கார்னகி அரங்கில் மிக விமரிசியாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்ள இயலாத போல் ரொப்சன் தனது  கடிதத்தை அனுப்பினார். அதில் , “உலகம் முழுவதும் உள்ள  அடக்கப்படும்  மக்களின்  விடுதலைக்காகவும், உலக அமைதிக்காகவும்,   போராடும் அதேபோல் ரொப்சன்தான்  நான் என்பதை உங்களுக்கு  தெரியப்படுத்திக்  கொள்கிறேன்.  என்  இதயம் எனது மக்களுக்காக தொடர்ந்து போராடும்.” என்று எழுதியிருந்தார். 1975ல் லேசான மாரடைப்புக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட  அவர்  மேலும்  அவர்  உடல் நலம் மிகவும்  குன்றி  1976 ஜனவரி 23ம்  நாள்  மக்களுக்காகப்  போராடி இன்னுயிர் ஈந்த  மகத்தான போராளிகள்  வரிசையில்  அழியா  இடம் பெற்றார்.

Tags: