பாடும் நிலா பாலு காலமானார்

Breaking News : Play Back Singer Sp Balasubramaiam Passed Away

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு உடல்நிலை தேறி வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), சிகிச்சை பலன் இன்றி இன்று (செப்டம்பர் 25) இந்திய நேரப்படி நண்பகல் 1.04 மணிக்கு காலமானார். இந்த தகவலை அவரது மகன் சரண் உறுதிப்படுத்தினார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ‘சிகரம்’ தொட்டவர் ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம் எனும் எஸ்.பி.பி. சினிமாவில் ‘பாலு’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்த ஆக., 5 முதல், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன், லண்டன் டாக்டர்கள் குழுவின் ஆலோசனையுடன் அவருக்கு சிகிச்சை நடந்து வந்தது. தொடர்ந்து அவரது உடல் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்தது.

கொரோனா நெகட்டிவ் என வந்தபோதும், நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டன. உணவு எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முன்தினம்(செப்டம்பர் 23) இரவு முதல் அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமானது. ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்தது.

பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள் என சிகரம் தொட்டவர் எஸ்.பி.பி.,. ராகங்கள் பதினாறு, அதில் எஸ்.பி.பி., எனும் மூன்றெழுத்து குரல் இல்லாமல் இருக்காது. அந்தளவுக்கு தேன் கலந்த தனது குரலால் ரசிகர்களை மயக்கி தாலாட்டி வைத்தவர், இப்போது நிரந்தரமாக தூங்க சென்றுவிட்டார். இந்த பாடும் நிலா மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் மங்காமல் ஒலித்து கொண்டே இருக்கும்.

RIPSPB, SPBalasubramanyam, SPB, எஸ்பிபி,


எஸ்.பி.பி.யின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்பிபி பெயர் நிலைத்திருக்கும்

மருத்துவமனையில் நிருபர்களை சந்தித்த எஸ்.பி.பி., மகன் எஸ்.பி.சரண் கூறியதாவது: சரியாக 1:04 மணிக்கு உயிர்பிரிந்தது. எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, எஸ்பிபியின் பாடல்கள் இருக்கும் வரை அவரது பெயர் நிலைத்திருக்கும் எனக்கூறினார்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தார்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு தொடர்பாக எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஓகஸ்ட் 5ம் தேதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 14ம் தேதி கொரோனா காரணமாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டதால், உயிர்காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை டாக்டர்கள் குழுவினர் உன்னிப்பாக கவனித்து வந்தனர். செப்டம்பர் 4ல் அவர் கொரோனாவில் இருந்து குணமானார். இன்று காலை பின்னடைவு ஏற்படுத்தும் விதமாக,உயிர்காக்கும் உபகரணங்களுடனும், டாக்டர்களின் சிறந்த சிகிச்சையும் மீறி அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மாரடைப்பும் ஏற்பட்டது. மிகுந்த சோகத்துடன் அவர், செப்டம்பர் 25 பிற்பகல் 13: 04 மணிக்கு காலமானார். அவரது குடும்பம், நண்பர்கள், ரசிகர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி.யின் இசை பயணம்

SP Balasubrahmanyam Treatment Video In Hospital Goes Viral

எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1946ல் ஜுன் 4ல் -எஸ்.பி.சாம்பமூர்த்தி என்பவருக்கு மகனாக தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். காளஹஸ்தியில் எஸ்எஸ்எல்சியும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் பியுசியும் முடித்து, ஜேஎன்டியு காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கில் பி.இ படிப்பதற்காக சேர்ந்தார். உடல் நிலை பாதிப்பால் படிப்பை தொடர முடியாமல் போக சென்னைக்கு வந்து ஏஎம்ஐஇ பிரிவில் சேர்ந்து படித்தார்.

இசை பயணம்

1968 ஆம் ஆண்டு நடந்த அனைத்து கல்லூரி போட்டியில் இவர் பாடிய பாடலைக் கேட்ட மறைந்த ஓவியர் பரணி, இவரை இயக்குநர் ஸ்ரீதரிடம் அறிமுகம் செய்து வைக்க, அவர் மூலம் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனை சந்தித்து, அவரிடம் சில பாடல்களை பாடி காட்டியிருக்கிறார் எஸ்.பி.பி. தமிழ் தெரியுமா என்று எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்பிபி.,யைப் பார்த்து கேட்க தனக்கு பேசத் தெரியும் படிக்க தெரியாது என்று கூறியிருக்கிறார்.

“ராமு” திரைப்படத்தின் ‘நிலவே என்னிடம்’ பாடலைக் கூட அவர் தெலுங்கில் எழுதி வைத்துத் தான் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பாடி காண்பித்திருக்கிறார். உனக்கு நான் பாட வாய்ப்பு தருகிறேன், தமிழை நன்றாக கற்றுக் கொள் என்ற எம்எஸ்வியின் அறிவுரைப்படி, தமிழை நன்றாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். எம் எஸ் விஸ்வநாதன் தான் கூறிய படியே இவருக்கு “ஹோட்டல் ரம்பா” என்ற படத்தில் பின்னணிப் பாடகி எல்ஆர்ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பை வழங்கினார். ஆனால் அந்தப் படம் ஏனோ வெளியாகவில்லை.

முதல் வாய்ப்பு

அதன் பின் எம்எஸ்விஸ்வநாதன் இசையமைப்பில் வெளிவந்த “சாந்தி நிலையம்” திரைப்படத்தில் பி.சுசிலாவுடன் இணைந்து ”இயற்கை என்னும் இளைய கன்னி…” என்ற பாடலை பாடி தமிழ் திரையுலகின் பின்னணி பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.

பின்னர் எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றிப்படமான “அடிமைப் பெண்” திரைப்படத்தில் எம்ஜிஆருக்காக பின்னணி பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. எம்ஜிஆர்., சிவாஜி என்ற இரு ஜாம்பவான்களுக்கு அவரவர் குரலின் தன்மைக் கேற்ப பாடும் வல்லமை பெற்ற டி.எம்.சௌந்தர்ராஜன் என்ற ஜாம்பவான் கோலோச்சியிருந்த அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்காக முதன் முதலில் பின்னணி பாடும் வாய்ப்பு பெற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பயம் இருந்ததென்றால் அது மிகையல்ல.

இவர் பாடிய முதல் தமிழ் பாடல் “சாந்தி நிலையம்” படத்தில் என்றாலும் முதலில் வெளிவந்தது ‘அடிமைப் பெண்’ படப் பாடல்தான். ஆனால் இந்தப் பாடலின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பாடும் வாய்ப்பு பல படங்களில் பல கதாநாயக நடிகர்களுக்கு பாடும் வாய்ப்பு கிடைத்ததோடு மட்டுமல்ல அதன்பின் வந்த எம்ஜிஆர், சிவாஜி படங்களிலும் அவர்களுக்காக இவருடைய குரலில் ஏராளமான பாடல்கள் வந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது.

பாடும் நிலா எஸ்.பி.பி காலமானார்..!

இசை ராஜ்ஜியம்

எப்படி எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் ஒரு டிஎம்.சௌந்தர்ராஜனோ. அதுபோல் அடுத்த தலைமுறை கதாநாயக நடிகர்களான ரஜினி, கமல்ஹாசனுக்கு இவருடைய குரலே மிகப் பொருத்தமானதாக மாறியது.

1976 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகைக்குப் பின் இவருடைய திரையிசைப் பயணம் ரெக்கை கட்டி பறந்தது என்றே சொல்ல வேண்டும். இளையராஜா என்ற இசை ஜாம்பவானின் கைவண்ணத்தில் ஆயிரக்கணக்கான வெற்றிப் பாடல்களை பாடி ஒரு கால் நூற்றாண்டு காலம் தமிழ் திரையிசை ரசிகர்களை தன் குரலால் வசீகரித்திருந்தார்.

இளையராஜாவின் இசையில் இவர் பாடிய முதல் பாடல் “பாலூட்டி வளர்த்த கிளி” என்ற படத்தில் எஸ்.ஜானகியோடு இணைந்து பாடிய ‘நான் பேச வந்தேன்’ என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆரில் தொடங்கி இன்றைய இளம் கதாநாயக நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என்று அனைவருக்கும் பாடி இருக்கிறார் என்றால் இவரது குரலுக்கு முதுமை என்பதே இல்லை என்றே அர்த்தம்.

பன்முக கலைஞர்

பன்முகத் தன்மை வாய்ந்த இந்தப் பாடகர் பாடல்கள் மட்டுமின்றி நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என அனைத்திலும் முத்திரை பதித்த ஒரு சாதனையாளர். “சிகரம், கேளடி கண்மணி, குணா, தலைவாசல், திருடா திருடா, காதலன், ரட்சகன், பிரியமானவளே” போன்ற திரைப்படங்கள் இவருடைய நடிப்பிற்கு சான்றாகவும், ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த “துடிக்கும் கரங்கள்” மற்றும் இவரே கதாநாயகனாக நடித்து வெளிவந்த “சிகரம்” என்ற இந்த இரு திரைப்படங்களையும் இவருடைய இசையமைப்பிற்கு சான்றாகவும் கூறலாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பெருமை மிக்கவர் எஸ்.பி.பி. இவர் மறைந்தாலும் இவரின் குரல் என்றென்றும் ஒலித்து கொண்டே இருக்கும்.

வீடியோ: கொரோனாவின் கோரப்பசிக்கு இரையானது இன்னிசை

Tags: