வெள்ளிக் கோளின் மீது உலவுவோம்!

டெனிஸ் ஓவர்பை (Dennis Overbye)

An image of Venus made with data recorded by NASA’s Mariner 10 spacecraft in 1974.

வெள்ளிக் கோளில் உயிர் வாழ்க்கை இருப்பதாகக் கேள்விப்பட ஆரம்பித்து நீண்ட நாட்களாகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வெள்ளியில் பாஸ்ஃபீன் வாயு (Phosphine gas: PH3) இருப்பதாகக் கண்டறிந்து செப்டம்பர் 14 அன்று அறிவித்த அறிவியலாளர்கள் அங்கே உயிர் வாழ்க்கை இருப்பதாகக் கூறவில்லை. மேகங்களில் உள்ள நுண்ணுயிரிகள் தவிர வேறு ஏதும் அந்த வாயுவை உற்பத்தி செய்திருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றே அவர்கள் கூறுகிறார்கள். “வெள்ளிக் கோளில் உயிர் வாழ்க்கையைக் கண்டறிந்ததாக நாங்கள் கூறவில்லை” என்று மேற்கண்ட கண்டுபிடிப்பைப் பற்றிய அறிவிப்புக்குச் சில நட்கள் முன்பு மாசசூஸிட்ஸ் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த சாரா சீகர் (Sara Seager) கூறினார்.

புவியைப் பொறுத்தவரை பாஸ்ஃபீனின் ஒரே இயற்கை ஆதாரம் நுண்ணுயிர்கள்தான்; இந்த வாயுவானது மலத்தோடு அடிக்கடி தொடர்புபடுத்தப்படுவது. ஆனால், நமக்கு மிக அருகில் இருப்பதும், மிகக் குறைந்த முறையே விண்கலங்கள் சென்று வந்திருப்பதுமாகிய வெள்ளிக் கோளின் புவிவேதியியல் பற்றி அறிவியலாளர்கள் மிகக் குறைவாகவே அறிந்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்தால் இந்தக் கண்டுபிடிப்பு அவ்வளவாக வியப்பளிக்காது.

பழைய அறிவியல் புனைகதைகளின் உலகத்தைப் பொறுத்தவரை, வெள்ளி என்பது மேக மூட்டம் கொண்டதாகவும், சதுப்பு நில மழைக்காடுகளைக் கொண்டதாகவும் சித்தரிக்கப்பட்டது; அங்கே சாதுவான சில பூர்வகுடிகள் காணப்படுவதாகவும் சில சித்தரிப்புகள் கூறின. செவ்வாயோ அழிந்துகொண்டிருக்கும், பாலைவன நாகரிகமாகக் கருதப்பட்டது. இந்தக் கதைகளெல்லாம் அந்தக் கோள்களுக்கு விண்கலங்கள் சென்று, உயிரினங்கள் வசிக்க முடியாத நிலை அங்கே நிலவுவதைக் கண்டுபிடிக்கும் வரைதான். ஆம், சிறிதும் நம்பிக்கை ஏற்படுத்தாத அளவில் கார்பன் டையாக்ஸைடைக் (Carbon Dioxide: CO2) கொண்டிருக்கும் வளிமண்டலம், மேற்பரப்பு வெப்பநிலை 800 டிகிரி ஃபாரன்ஹீட் (degrees Fahrenheit) , கந்தக அமில மேகங்கள், இவைதான் வெள்ளிக் கோளின் தன்மைகள்; உறைந்துபோன மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டது செவ்வாய்.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவராக இருந்த கார்ல் சேகன் (Carl Sagan) தனது 1960-ம் ஆண்டு ஆய்வேட்டில் வெள்ளியின் அதீத வெப்பநிலைக்கு என்ன காரணம் என்பதைப் பற்றிய துல்லியமான விளக்கத்தைத் தந்திருந்தார். அந்தக் கோளில் கார்பன் டையாக்ஸைடு (Carbon Dioxide: CO2) நிரம்பிய வளிமண்டலம் வெகு விரைவாகப் பசுங்குடில் விளைவை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்ற முடிவுக்கு அவர் வந்தார். மேற்பரப்பைப் பொறுத்தவரை வெள்ளி, உயிரற்ற பாலைவனமாகத்தான் அப்போது கருதப்பட்டது.

சேகன் இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியங்கள் நிறைய இருப்பதாகவே கருதினார். நம்மைப் போலவே அறிவு வளர்ச்சியடைந்த வேற்றுக்கிரக உயிரினங்களுக்கான தேடலைத் தொடங்கிவைத்தவர் அவர். வெள்ளியின் மேகங்களில் உயிர் வாழ்க்கைக்கு ஏதுவான நிலைமை நிலவுவதாகவும், வெப்பநிலை 40 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருப்பதாகவும் 1967-ல் சேகனும் யேல் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியலாளர் ஹாரோல்டு மோரோவிட்ஸும் (Harold Morowitz) சேர்ந்து சுட்டிக்காட்டினார்கள். அப்போது இந்தக் கருத்துகளுக்கு அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை. “இந்தக் கருத்துக்கு நிறைய எதிர்ப்புகள் எழுந்தன. சிலர் கேலிகூட செய்தனர்” என்கிறார் கோள் அறிவியலாளர் டேவிட் கிரின்ஸ்பூன் (David Grinspoon) .

Venus, visible in the night sky above Salgotarjan, Hungary, in March, is typically the brightest object in the night sky other than the moon.

சமீப ஆண்டுகளாக ‘அதீத உயிரிகள்’ எனப்படும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன. அணு உலைகள், பெருங்கடல்களின் அடியில் இருக்கும் வெந்நீர்த் துளைகள் போன்ற அதீத சூழ்நிலை நிலவும் இடங்களில் வாழும் பாக்டீரியாக்கள் இவை. கூடவே, சூரிய மண்டலத்துக்கு வெளியில் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது எல்லாம் உயிர் வாழ்க்கைக்கு உகந்த கோள்கள் பற்றிய தேடலையும் கருத்தாக்கங்களையும் தூண்டியிருக்கின்றன. செவ்வாயில் நுண்பாசிகள் இருந்தால், வெள்ளியில் ஏன் இருக்கக் கூடாது. மேலும், வெள்ளி தனது கடல்களைக் கொஞ்சம் சமீபத்தில்தான், அதாவது 70 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் இழந்திருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்கிறார் கிரின்ஸ்பூன் (Grinspoon). அந்தக் கோள் உருவாகி, அதில் உயிரினங்கள் பரிணமித்துப் பிறகு மேகங்களுக்குத் தப்பித்துச் செல்வதற்குப் போதிய அளவு அவகாசம் இருந்திருக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.

என்ன மாதிரியான உயிர் வாழ்க்கையாக இருந்திருக்கக் கூடும்? மேகங்களில் மிதக்கும் நுண்ணுயிரிகள் சைக்ளோஆக்டோசல்ஃபர் என்ற சேர்மத்தின் பூச்சைக் கொண்டிருக்கக்கூடும் என்று ஜெர்மனியின் டர்க் ஷுல்ஸ்-மக்குச்சும் (Dirk Schulze-Makuch) அவரது சகாக்களும் ஒரு கருதுகோளை முன்வைக்கின்றனர். அந்தப் பூச்சானது சூரிய ஒளி வடிகட்டி போல் செயல்பட்டு புற ஊதாக் கதிரை ஒளிச்சேர்க்கைக்காக கண்ணுக்குத் தெரியும் அலைவரிசையாக மாற்றும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீகரும் அவரது சகாக்களும் இந்தக் கருத்தாக்கத்தை விரிவுபடுத்தி இதுபோன்ற உயிரினங்களின் ஒட்டுமொத்த உத்தேச வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றிய வரைபடத்தை உருவாக்கினார்கள். இந்த நுண்ணுயிரிகள் மேகங்களில் உள்ள கந்தக அமிலத் துளிகளில் வசிக்கக் கூடியவை என்றார்கள்; துளிகளெல்லாம் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு, கலப்பதால், ஏராளமான நுண்ணுயிரிகள் ஒன்றுசேர்வதற்கும் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு பிளவுறுவதற்கும் வழி ஏற்படுகிறது. கடைசியில், அந்தத் துளிகள் மிகவும் கனமானவையாக மாறி மேகங்களிலிருந்து கீழ் நோக்கிச் செல்லும். தரையைத் தொடுவதற்கு முன்பு அந்தத் துளிகள் ஆவியாகிவிடும் என்பதால், நுண்ணுயிர்கள் உலர்ந்து, செயலற்ற நிலைக்குச் சென்றுவிடும்.

வெள்ளி மூடுபனி அடுக்கைக் கொண்டது என்று குறிப்பிடுகிறார் சீகர். “அது மிகுந்த நிலைத்தன்மை கொண்டது, அதில் என்ன துகள்கள் இருக்கின்றன என்று நமக்குத் தெரியாது, ஆனால் அந்த அடுக்கு வெகு காலமாக அந்தரத்தில் இருக்கிறது” என்கிறார் அவர். “ஆகவே, அவற்றில் சில துகள்கள் உலர்ந்துபோன உயிர் வித்துக்களைக் கொண்டிருக்கலாம்” என்கிறார் அவர். “எனினும், வெள்ளியில் உயிர் வாழ்க்கை இருப்பதாக நான் உறுதியாகக் கூறவில்லை” என்கிறார் சீகர். கந்தக அமில மேகத்தில் என்ன விதமான உயிர்கள் வாழ முடியும் என்ற கேள்வி எழுகிறது. நிச்சயம், நம்மைப் போல டிஎன்ஏ அடிப்படையிலான உயிர்கள் கிடையாது என்கிறார் சீகர்.

உயிர் வாழ்க்கையை உற்பத்தி செய்வதற்கு இயற்கை ஒரு மாற்று வழியைக் கொண்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அது 21-ம் நூற்றாண்டின் அறிவியலில் மாபெரும் நிகழ்வாக இருந்திருக்கும். ஆகவே, புதிய தரவுகளுக்கான பந்தயம் தொடங்கிவிட்டது. யூரி மில்னர் (Yuri Milner) ஏற்கெனவே அறிவியலாளர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.22 கோடி அளவில் பரிசு தருவதாக அறிவித்திருக்கிறார். வெள்ளியில் உயிர் வாழ்க்கை பற்றிய தேடலுக்குத் தனது ப்ரேக்த்ரூ அறக்கட்டளை உதவி புரியும் என்று கூறியிருக்கிறார்.

புவியில் நாம் வளமான ஒரு நிலத்தில் வாழ்ந்துவருகிறோம். ஒரு கோடை இரவில் மரங்களடர்ந்த பகுதிக்கு நடந்துசென்றால் சுவர்க்கோழிகள் உள்ளிட்ட நம் கண்ணுக்கு எளிதில் புலப்படாத உயிரினங்கள் எழுப்பும் ஒலிச் சுவர், உயிர்வாழ்க்கையின் ஒலிக்கலவை, அசாத்தியமானதாக இருக்கும்.

இது எல்லாம் எப்படி முடியும் என்று நமக்குத் தெரியும். இன்னும் 50 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் பரிணாமம் அடைந்து இன்னும் பிரகாசமாகச் சுட்டெரிக்கும்போது புவி தனது கடல்களை இழந்து வெள்ளியைப் போல பசுங்குடில் விளைவை அனுபவிக்க நேரிடும். அப்போதும் உயிர் வாழ்க்கையானது ஏதாவது ஒரு வடிவத்தில் தொடரக் கூடும். அந்த நம்பிக்கையானது அளவுக்கு அதிகமானது, ஆனால் நமக்கோ இந்த நாட்களில் சிறிதளவு நம்பிக்கையேனும் தேவை.

மூலக்கட்டுரை: On Venus, Cloudy With a Chance of Microbial Life

சுருக்கமாகத் தமிழில்: ஆசை

Tags: