20ஆவது திருத்தம் மக்களின் இறைமையைப் பாதுகாக்கும்

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சரத்துகள் தனித்தனியே திருத்தங்களுடன் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. குழுநிலையில் 50இற்கும் மேற்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு 150 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில், 156 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிராக 65பேர் மாத்திரமே வாக்களித்திருக்கிறார்கள். அத்தோடு கூச்சல், குழப்பங்களையும் எதிரணியினர் ஏற்படுத்தியுள்ளனர். அவர்களால் அதனை மாத்திரமே செய்ய முடியும் என்பது அவர்களுக்கு மாத்திரமல்ல, நாட்டு மக்களுக்கும் நன்கு புரியும்.

இந்தத் திருத்தச் சட்ட மூலத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்ததுடன், சர்வஜன வாக்கெடுப்புக்கு உரிய விடயங்களை, அவ்வாறே நிறைவேற்ற  வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி, சர்வஜன வாக்கெடுப்புடன் சம்பந்தப்படாத விடயங்களே 20 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தச் சட்டமூலம், கடந்த வியாழக்கிழமை (22.10.2020) முதல் சட்டமாகிறது. அன்றிலிருந்து மக்களின் இறைமைக்கு வலு சேர்க்கப்படுகின்றது என்றே சொல்ல வேண்டும். மக்களால் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவுசெய்துவிட்டு, அவரை செயற்பட விடாது தடுப்பதென்றால், மக்களின் இறைமையினால், என்ன பயன்? தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் ஆரம்ப காலத்தில், அது சிறுபான்மை மக்களுக்கான அரண் என்று வர்ணிக்கப்பட்டது. காலப்போக்கில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்கள், தாங்களாகவே நிறைவேற்றதிகாரத்தைக் குறைப்பதாகவும் நீக்குவதாகவும் மக்களுக்கு வாக்கு கொடுத்தார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரங்களைக் குறைப்பதற்கு இணக்கம் தெரிவித்துப் படாதபாடுபட்டபோதுதான், நிறைவேற்றதிகாரத்தின் தேவை மீண்டும் உணரப்பட்டது. நிறைவேற்றதிகாரத்தைக் குறைக்கும் 19ஆவது திருத்தச் சட்டத்தை வகுப்பதற்குப் பாடுபட்ட தரப்பினரே, அந்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள். நாடு ஓர் ஸ்திரமற்ற நிலைக்குச் சென்றுவிடும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் பகிரப்பட்டாலும் யார் தீர்மானம் எடுத்து நிறைவேற்றுவது என்பதில் இடியப்பச் சிக்கல். அந்தச் சிக்கலால் நாடு எதிர்கொண்ட ஆபத்து சொல்லிலடங்காது. இப்போது அந்த அனைத்து நெருக்கடிக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதென்றே சொல்ல வேண்டும்.

இந்தத் திருத்தச் சட்டமானது நாட்டு மக்களில் ஒரு தரப்பினருக்கோ அல்லது சமூகத்தினருக்கோ சம்பந்தப்பட்டதன்று. இஃது ஒட்டுமொத்த மக்கள் சார்பான சட்ட திருத்தமாகும். அதனால்தான், பெரும்பான்மை சிறுபான்மை வேறுபாடின்றிச் சகலரும் ஒருமனதாக மூன்றிலிரண்டுக்கும் கூடுதலான ஆதரவைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிலும் சகோதர முஸ்லிம்களின் காய்கறி நறுக்கும் கத்திகளைக் கூடப் பயங்கரவாத ஆயுதங்களாகச் சித்தரிக்கும் சூழலை எற்படுத்திய 19 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தின் அடிப்படையிலும் 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கும் கூற்று கவனிக்கத்தக்கது.

20ஆவது திருத்தச் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த நாட்டில் ஜனாதிபதியின் கரங்களில் நிறைவேற்று அதிகாரம் இருந்த காலப்பகுதியை விட ஏனைய காலப் பகுதியிலேயே அதிகளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. குறிப்பாக 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகார குழப்பங்கள் காரணமாக ஈஸ்டர் தாக்குதலுக்கான சூழல் ஏற்பட்டதுடன் அதன் காரணமாக சகோதர முஸ்லிம்களின் வாழ்வியலும் பொருளாதாரமும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது.

மேலும், எமது அர்ப்பணத்துடன் கூடிய நியாயமான போராட்டத்தின்மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபை முறைமைக்கு வழிகோலும் 13 ஆவது திருத்தச் சட்டமானது, அன்று ஆட்சியிலிருந்த பிரதமர் உள்ளடங்கலான பிரபல தலைவர்களதும், எதிர்க்கட்சியினதும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அதற்கெதிரான தென்பகுதியின் ஆயுதமேந்திய வன்முறைகளுக்கு மத்தியிலும் நிறைவேற்றிக் கொள்வதற்கு ஜனாதிபியின் கரங்களில் அதிகாரங்கள் இருந்தமையினாலேயே சாத்தியமாக்கப்பட்டது.

அதேபோன்று நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கான வெட்டுப் புள்ளியானது 12 சத விகிதத்திலிருந்து 5 விகிதம் வரையில் குறைக்கப்பட்டதும் சிறுபான்மை கட்சிகளினது பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்குமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியின் காரணமாகவே என்பதே உண்மையாகும்.  

தமிழர் வரலாற்றில் மாபெரும் போராட்டங்களில் ஒன்றாக சித்தரிக்கப்படுகின்ற ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தினாலும் அகற்றப்படாது போயிருந்த வாகனங்களில் காணப்பட்ட ஸ்ரீ எழுத்து ஒரே இரவில் அகற்றப்பட்டதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆனால், நிறைவேற்று அதிகாரத்தினை வலுவிழக்கச் செய்த 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாகத் தமிழ் மக்களின் அபிலாஷைகள் எவற்றையும் நிறைவேற்ற முடியவில்லை, என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, இந்த 20ஆவது திருத்தச் சட்டம் நாட்டு மக்களின் இறைமையைப் பாதுகாக்கும் என்பதில் சந்தேகமில்லை!

தினகரன் ஆசிரியர் தலையங்கம்
2020.10.25

Tags: