மரடோனா : குட்டைக் கால்களின் செப்பிடுவித்தைகள்!

-எஸ்.வி.ராஜதுரை

நிவர் புயலும் வானத்தைப் பொத்து கொண்டு வந்த கனமழையும் சென்னைப் பெருநகர் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மக்களுக்குப் பெரும் சேதங்களையும் துன்பங்களையும் விளைவித்துள்ள இந்த நாட்களில் சென்ற புதன்கிழமையன்று (25.11.2020) இறந்துபோன ஒரு கால் பந்தாட்ட வீரருக்கு அஞ்சலிக் கட்டுரை எழுத வேண்டுமா என்ற கேள்வி மனதைக் குடைந்துகொண்டிருந்தது.

மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியைவிட அதிகத் துன்பங்களையே நீண்ட காலமாகச் சந்தித்து வரும் ஏழை நாடுகளின் நண்பராக விளங்கியவர் என்ற முறையிலாவது அர்ஜெண்டினா நாடு வழங்கிய மகத்தான கால்பந்தாட்ட வீரர் டீகோ மரடோனாவை (Diego Armando Maradona) நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இலண்டனிலுள்ள டெளனிங் தெருவில் இங்கிலாந்தில் பிரதமர் பொறுப்பில் இருப்பவர்கள் வசிக்கும் வீட்டின் இலக்கமான 10ஐப் போல, உலகக் கோப்பைப் போட்டியின்போது அர்ஜெண்டினா அணியில் 10ஆம் இலக்கமிட்ட சீருடையும் புகழ்பெற்றிருந்தது. அதற்குக் காரணம், ஆட்டக்களத்தின் நடுவிலிருந்து (மிட்ஃபீல்டர்) விளையாடி வந்த மரடோனா அதை அணிந்திருந்ததுதான்.

கால் பந்து ரசிகனாகிய எனக்கு 1982 ஆம் ஆண்டு முதல்தான் உலகக் கோப்பைப் போட்டிகளைத் தொலைக் காட்சி வழியாகப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது முதல் கொண்டே நான் அர்ஜெண்டினா, பிரேஸில் ஆகிய இரு நாட்டுக் கால் பந்தாட்டக் குழுவினர்களின் இரசிகனாக இருந்து வந்துள்ளேன். கறுப்பின தியரியின் தலைமையிலும் அல்ஜீரிய வீரர் ஸெடேனின் தலைமையிலும் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் குழு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய போது நான் “கட்சி மாறி’ அந்த அணிகளின் இரசிகனாக இருந்தேன்.

எனினும், உலகின் இலட்சக்கணக்கான கால் பந்தாட்ட இரசிகர்களைப் போலவே, குறிப்பாக அர்ஜெண்டின மக்களைப் போலவே, கால் பந்தாட்டத்தைப் பொறுத்தவரை மரடோனா ஒரு ‘தெய்வம்’ என்றே கருதி வந்தேன். 1986ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் நடந்த உலகக் கோப்பைப் பந்தயத்தில் அவர் தலைமை தாங்கிய அர்ஜெண்டினா அணி மேற்கு ஜெர்மனி அணியைத் தோற்கடித்தபோது எங்கள் வீட்டார் அனைவருக்கும் கிட்டிய மகிழ்ச்சிப் பெருக்கை இன்னும் நான் மறக்கவில்லை.

உடல் முழுவதும் கண்கள்

கால்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய வீரர்களில் அவர் மிகவும் குட்டையானவர். ஐந்தடி ஐந்தங்குல உயரம் மட்டுமே கொண்ட அவரைப் பற்றி காலஞ்சென்ற லத்தின் அமெரிக்க இடதுசாரி எழுத்தாளர் எடுவர்டோ காலியானோ எழுதினார். கால்பந்தாட்டக் களத்தில் மரடோனாவின் ஓட்டம் வேகமானது அல்ல என்றாலும் பந்து அந்தக் ‘குட்டைக் கால்கள் கொண்ட எருது’வின் காலிலேயே வைத்துத் தைக்கப்பட்டிருக்கிறது” என்றும், “ அவர் உடல் முழுவதுமே கண்கள்தான்”என்றும் வர்ணித்தார். விளையாட்டுக் களத்தில் மரடோனா பிசாசு போல செய்த செப்பிடுவித்தைகளையும் மாயாஜாலங்களையும் யாராலும் முன்கூட்டியே ஊகிக்க முடியாது என்றும், அவரது தந்திரங்களில் ஒன்று மற்றொன்றைப் போல இருக்காது என்றும் ஆட்டக் களத்தில் அவர் நிகழ்த்திய ’சர்க்கஸ் வித்தைகள்’ விளையாட்டு மைதானத்தைப் பிரகாசிக்க வைத்தன என்றும் காலியானோ கூறினார்.

அப்படிப்பட்ட மகத்தான விளையாட்டு வீரர் உணவுப் பிரியராகவும் அளவுக்கு அதிகமாக உண்பவராகவும் இருந்ததுடன் போதைப் பொருட்களுக்கும் மதுபானங்களுக்கும் அடிமைப்பட்டுமிருந்தார். அதன் காரணமாக அவர் பல ஆண்டுகளாகவே பல்வேறு நோய்களால் அவதிப்பட்டிருந்த போதிலும் இளம் விளையாட்டு வீரர்களைத் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருந்தார்.

உடல் பெருத்து, போதைப் பொருட்களுக்கு அடிமையாகிய அவர் சில ஆண்டுகளுக்கு முன் கியூபாவில் பல மாதங்கள் மருத்துவச் சிகிச்சை பெற்றுக் கொண்ட பிறகு, ஏறத்தாழ பழைய மராடோனாவைப் போலத் திரும்பி வந்தார். கியூபாவில் மருத்துவச் சிகிச்சை பெற்றுவந்த போது ஃபிடல் காஸ்ட்ரோ அவரது நெருக்கமான நண்பரானார். காஸ்ட்ரோ இறந்தபோது தன் ஆருயிர் நண்பரை இழந்துவிட்டதாக வருந்திய அவர் அந்தப் புரட்சித்தலைவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். காஸ்ட்ரோ, செ குவாரா ஆகியோரின் உருவங்களைத் தன் உடலில் பச்சை குத்திக் கொண்டவர் அவர்.

ஏழை மக்களின் நண்பர்

மின் வசதியோ,குடிநீர் வசதியோ இல்லாத ஒரு ஏழைக் குடும்பத்தில் எட்டுக் குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த அவர், ஏழை நாடுகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாலும் இராணுவத் தாக்குதல்களாலும் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளித்து வந்தார். காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வந்த தாக்குதல்களைக் கண்டனம் செய்து “ என் இதயத்தில் நானும் ஒரு பாலஸ்தீனியன்தான்” என்று 2018இல் அவர் கூறியது புகழ்பெற்ற வாசகம்.

விசுவாசமிக்க கத்தோலிக்கர் அவர். ஆனால் போப் இரண்டாம் ஜான் பாலைச் சந்தித்துவிட்டுப் பத்திரிகையாளர்களை எதிர்கொண்டபோது அவர் கூறினார் : “ நான் வாட்டிக்கனுக்கு (போப்பின் மாளிகை) சென்றிருந்தேன். அந்த மாளிகையின் உள் கூரையில் தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. ஏழைக் குழந்தைகளைப் பற்றித் தாம் கவலைப்படுவதாக போப் கூறியதைக் கேட்டேன். நண்பரே, உங்கள் (மாளிகையின் ) உட்கூரையை விற்று, எதையாவது செய்யுங்கள்”.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ்ஷைக் கடுமையாக விமர்சித்து வந்த அவர், இராக் போரின் போது, அது ‘அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்’ என்ற வாசகங்கள் பொறித்த டீ ஷர்ட்டுகளை அணிந்து வந்தார். தீமைகளின் உறைவிடமே அமெரிக்கா என்று கூறிய அவர் “அமெரிக்காவிலிருந்து வருகின்ற ஒவ்வொன்றையும் நான் வெறுக்கிறேன். என் வலுவனைத்தையும் கொண்டு அதை வெறுக்கிறேன்” என்று கூறினார். இந்த வாசகங்கள் அமெரிக்காவால் ஒடுக்குமுறைக்கும் துன்பத்துக்கும் ஆளான கோடிக்கணக்கான மக்களால் வரவேற்கப்பட்டன.

Argentinian ex soccer star Diego Armando Maradona (L) talks to Cuban President Fidel Castro

போய் வாருங்கள்

வெனிஸூலாவில் ஹ்யூகோ சாவெஸின் ஆட்சியின் போது கல்வி, மருத்துவம் முதலியனவற்றின் விநியோகம் ஏழை மக்களுக்குப் பரவலாகச் சென்றடைந்ததை மிகவும் பாராட்டினார். அவரது இறப்புக்காக அர்ஜெண்டினா தேசம் முழுவதுமே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. உலகில் எந்த விளையாட்டு வீரருக்கும் கிடைத்திராத இறுதி மரியாதையை அவருக்கு அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் செலுத்தியுள்ளார். “போய் வாருங்கள்” என்று மரடோனாவுக்கு இறுதி விடை கொடுத்து மூன்று நாட்கள் தேசிய விடுமுறையை அறிவித்துள்ளார்.

அவரது சொந்த நாட்டைச் சேர்ந்த மெஸ்ஸி, போர்ச்சுகலின் ரொனால்டோ போன்ற சிறந்த கால்பந்து ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். ஆனால் கால்பந்து மைதானத்தைப் பொறுத்தவரை மரடோனோவை விஞ்சுவதற்கான ஆட்டக்காரர் இன்னொரு யுகத்தில்தான் தோன்ற முடியும் . அவரோடு ஒப்பிடத்தக்க கால் பந்தாட்டக்காரர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த கறுப்பினத்தவரான பெலெ மட்டும்தான்.

அவரது ஆட்டத்திறமை, பலகீனங்கள் ஆகியன பற்றி நிறைய எழுதப்படும். ஆனால் ஈடிணையற்ற ஆட்டத் திறமை கொண்டிருந்ததோடு உலகிலுள்ள பராரிகளின், ஏழைகளின் நண்பராகத் திகழ்ந்தவர் என்பதாலும் அவருக்கு நமது இரட்டை அஞ்சலி.

-மின்னம்பலம்
2020.11.26

Tags: