வட மாகாணத்தில் ‘புரவி சூறாவளி’ இன் தாக்கம்

மன்னார் – 1,108 குடும்பங்கள் பாதிப்பு; படகுகளும் சேதம்

மன்னார்  மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1,108 குடும்பங்களைச் சேர்ந்த 3,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 950 குடும்பங்களைச் சேர்ந்த 3,045 பேர் 15 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் உறவினர்கள் மற்றும் தமது வீடுகளில் தங்கியுள்ளனர். 

நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலகர்கள் வழங்கி வருகின்றனர். 

கடும் காற்று மற்றும் மழை காரணமாக, தலைமன்னார் – ஊர்மனை, பியர், பேசாலை, விடத்தல்தீவு, சாந்திபுரம் மற்றும் சௌத்பார் ஆகிய கிராமங்களில் உள்ள மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

புரவி புயல் தாக்கத்தால் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகுகள் உட்பட கடற்தொழில் உபகரணங்கள் சேதமாகியுள்ளன.

தலை மன்னார், பியர் கடற்கரையோரப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் சில காணாமல் போயுள்ளதுடன், பேசாலை பகுதியில் 100க்கும் அதிகமான படகுள் கரையில் ஒதுக்கப்பட்டு, உடைந்துள்ளன. மீனவர்களின் வாடியும் சேதமாகி, வலைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

கிளிநொச்சி – பகுதியளவில் 93 வீடுகள் சேதம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வீடொன்று முழுமையாகவும், 93 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் நேற்றைய புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

அத்துடன், இரண்டு நலன்புரி இடங்களில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 67 குடும்பங்கள சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 144 குடும்பங்கள சேர்ந்த 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 78 குடும்பங்கள சேர்ந்த 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 வீடு முழுமையகவும், 68 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 03 குடும்பங்கள சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

வவுனியா – இயல்பு வாழ்க்கை பாதிப்பு; வைத்தியசாலைக்குள் நீர்

புரவி புயல் தாக்கம் காரணமாக, வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு பெய்ய பலத்த மழையால் நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன், வைத்தியசாலையின் மதிலும் உடைந்து விழுந்துள்ளது. 

செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் அங்கு வசிக்கும் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சின்னத்தம்பனை மற்றும் மடுக்குளம் கிராமங்களில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் 04 குடும்பங்களை சேர்ந்த  15 பேர் இடம்பெயர்ந்து சின்னத்தம்பனை தேவாலயமொன்றில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் 68 குடும்பங்களை சேர்ந்த 211 பேர் தமது உறவினர் வீடுகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்னர்.

யாழ்ப்பாணம் – ஒருவர் பலி; மூவர் மாயம்

கடும் காற்றுடன் கூடிய மழையால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 569 குடும்பங்களை சேர்ந்த 1,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்தார். 

அத்துடன், கொடிகாமம் பிரதேசத்தில் வெள்ள நீரில் மூழ்கி 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

வேலணை பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மூவர் காணாமல் போயுள்ளனர் எனவும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்தார். 

தொடர் மழை, காற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 15 வீடுகள் முழு அளவிலும் 141 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன எனவும் சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார். 

இடம்பெயர்பவர்களைத் தங்கவைப்பதற்காக நான்கு இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன அவர் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளநீர் உட்புகுந்துள்ளதால் மட்டுவில், கைதடி, நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 

நேற்று இரவு வீசிய கடுங்காற்றுக் காரணமாக, தென்மராட்சி மீசாலை வடக்கு பகுதியில், 300 ஆண்டு பழமையான பாலை மரம் அடியோடு கோவில் ஒன்றின் மீது வீழ்ந்துள்ளது. அத்துடன், மின்சாரக் கம்பிகள் மீது மரங்கள் வீழ்ந்தமையால் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது.

தமிழ்மிரர்
2020.12.03