இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய பறவை இனம் ‘ஹனுமான் புலோவர்’

-மர்லின் மரிக்கார்

Hanuman Pulover

லகில் உயிர் பல்வகைமைக்கு முக்கியத்துவம் பெற்று விளங்கும் இடங்களில் இலங்கையும் ஒன்றாகும். இந்நாட்டில் பறவைகள், விலங்குகள், ஊர்வன, தவளைகள், வண்டுகள், பூச்சிகள், புழுக்கள், தாவரங்கள் என எல்லா வகையான உயிரினங்களும் காணப்படுகின்றன. அவற்றில் இலங்கைக்கே உரித்தான உயிரினங்களும் உள்ளன.

அந்த வகையில் தற்போது இலங்கையில் புதிய கரையோரப் பறவையொன்று கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பறவைக்கு ‘ஹனுமான் புலோவர்’ (Hanuman Pulover) எனப் பெரிட்டுள்ளது. இப்பறவை தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞான பீடம் 18.12.2020 அன்று நடத்திய இணையவழி மாநாட்டில் உத்தியோகபூர்வமாக தெளிவுபடுத்தப்பட்டது.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் உயிரியல் மற்றும் சுற்றுச்சுழல் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த கலாநிதி சம்பத் செனவிரட்ன (Dr. Sampath Seneviratne from the Department of Zoology and Environment Sciences at the University of Colombo) குறிப்பிடுகையில், தாம் அடங்கலாக சீன நாட்டின் யங்செத் பல்கலைக்கழகப் பேராசிரியர் யங்க் லீ, உயிரியல் (Professor Yang Liu from China) மற்றும் விஞ்ஞான பீடத்தின் பட்டதாரி மாணவர் ஜுட் ஜனித் நிரோஷன் (Jude Janitha Niroshan) ஆகியோர் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஹனுமான் புலோவரானது இப்பிராந்தியத்திற்கான பறவை என்பது உறுதியாகியுள்ளது. இப்பறவை வட அரைக் கோளத்திலிருந்து குடிபெயர்ந்து வரும் ‘கென்டிஸ் புலோவர்’ பறவையின் உப பிரிவாகவே இற்றை வரையும் கருதப்பட்டது. ஆனால் இப்பறவையின் நிறம், அதன் இறகுகள், நடத்தைக் கோலம், மரபணு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தி மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இது இப்பிராந்தியத்திற்கே உரித்தான பறவை இனம் என்பது உறுதியாகியுள்ளது.

பாக்குநீரிணை பிராந்தியத்தில் குறிப்பாக மன்னார், மன்னாரிலுள்ள தீவுகள், யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் தென்னிந்தியாவின் இராமேஸ்வரம் ஆகிய கரையோரப் பிரதேசங்களின் சதுப்பு நிலங்களில் காணப்படும் இப்பறவை ஊர்குருவி அல்லது குந்துகாலியின் அளவைக் கொண்டதாகும். அதிக வௌ்ளை மற்றும் சாம்பல் நிறங்கள் கொண்ட இப்பறவையின் ஆண், பெண் பறவைகளுக்கிடையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இது மணல் நிலத்தில் கூடமைத்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பண்பைக் கொண்டுள்ளதோடு, நிலத்தி னதும் காற்றினதும் உஷ்ண நிலைக்கு ஏற்ப முட்டையை நிலத்தில் அரைவாசிக்கு மறைத்து வைக்கக் கூடியதாகவும் உள்ளது என்று கூறினார்.

இதன் ஊடாக இலங்கையில் காணப்படும் பறவைகள் பட்டியலில் மற்றொரு பறவை இனம் சேர்ந்து கொள்கின்றது. இந்நாட்டில் ஏற்கனவே 463 வகையான பறவை இனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 33 வகையான பறவைகள் அழிந்து அருகி விடக் கூடிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருக்கின்றன. இப்பறவைகளில் பெரும்பாலானவை ஈரவலயத்தில் காணப்படும் பறவைகளாகும்.

இவ்வாறான சூழலில் ‘ஹனுமான் புலோவர்’ என்ற இப்பறவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இலங்கைக்கு பெருமை சேர்க்கப்படும் விடயமாகும்.

என்றாலும் கவலைக்குரிய ஒரு விடயத்தையும் கலாநிதி சம்பத் செனவிட்ன இந்த இணைய வழி செயலமர்வில் குறிப்பிடத் தவறவில்லை. அதாவது ‘ஹனுமான் புலோவர்’ பறவையும், அதன் முட்டைகளும், குஞ்சுகளும் கட்டாக்காலி நாய்கள், பூனைகளின் அச்சுறுத்தலுக்கு பெரிதும் முகம் கொடுத்துள்ளன. அவற்றை கட்டாக்காலி நாய்களும் பூனைகளும் வேட்டையாடி உணவாகக் கொள்கின்றன. அந்த அச்சுறுத்தலில் இருந்து இப்பறவையையும், அதன் முட்டை, குஞ்சுகளையும் பாதுகாப்பதில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தாமதியாது கவனம் செலுத்த வேண்டிய மிக அவசியமான விடயமாகும். ஏனெனில் இற்றைக்கு 500 வருடங்களுக்கு முன்னர் மொரீஷியஸ் நாட்டில் காணப்பட்ட டோடோ (Dodo) பறவை முகம் கொடுத்ததற்கு சமமான அச்சுறுத்தலையே இப்பறவையும் எதிர்கொண்டிருக்கின்றது எனலாம்.

டோடோவின் மாதிரிப்படம்

அதாவது கி.பி. 1507 களில் ஒரு தடவை டச்சுக்காரர்கள் கடல் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் தமக்கு தண்ணீர் தேவை ஏற்பட்டதும் அதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக தீவு ஒன்றைக் கண்டதும் அங்கு தண்ணீரைப் பெற்றுக் கொள்ளச் சென்றனர். அங்கு இவர்கள் இப்பறவையைப் பார்த்து அச்சமடைந்ததோடு ‘இவ்வளவு பெரிய பறவையா? எனவும் ஆச்சரியமும் அடைந்தனர். இவர்க ள்தான் இப்பறவை தொடர்பில் முதலில் உலகிற்கு அறிவித்தனர் என வரலாற்று பதிவுகள் உள்ளன.

டோடோ பறவையானது உருவத்தில் பெரிதாக இருந்த போதிலும், அதன் சிறகுகள் மிகவும் சிறியவை. புற்களைக் கொண்டு கூடமைத்து நிலத்தில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பண்பைக் கொண்டிருந்த இப்பறவை மனிதனையோ எதிரியையோ கண்டு அஞ்சி ஒடுவதுமில்லை. எதிரியிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எதிரிக்கு எதிராக போராட்டம் நடத்துவதுமில்லை. போர்க் குணம் இல்லாத இப்பறவை, எதிரிகளிடத்தில் இலகுவில் சிக்கி விடக் கூடியதாக இருந்தது. இவ்வாறான பண்புகளை இப்பறவை கொண்டிருந்ததால் அதற்கு டச்சுக்காரர்கள் ‘முட்டாள் பறவை’ என்ற கருத்தில் ‘டோடோ’ என்ற பெயரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டச்சுக்காரர்கள் மொரிஷியஸில் கால்பதிக்க முன்னர் அரபியர் ஒய்வுக்காக அவ்வப்போது வந்து சென்றுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. என்றாலும் டச்சுகாரர்கள் சொற்ப காலத்தில் மொரீஷியஸில் குடும்பம் குடும்பமாக குடியேறியுள்ளனர். அவர்கள் தம் வீட்டு வளர்ப்பு நாய்களையும் பூனைகளையும் தம்முடன் எடுத்துச் சென்றனர். இந்த நாய்களும் பூனைகளும் டோடோ பறவையின் முட்டைகளையும் குஞ்சுகளையும் வேட்டையாடி உணவாகக் கொள்ளத் தொடங்கின. அத்தோடு டச்சுக்காரர்களும் வகை தொகையின்றி இப்பறவையை வேட்டையாடி உணவாகக் கொள்ள ஆரம்பித்தனர். குறிப்பாக ஞாயிறு தினங்களில் அவர்களது விஷேட உணவாக இப்பறவை மாறியது.

இதன் விளைவாக குறைவடையத் தொடங்கிய இப்பறவை இனம், 1680 இன் பின்னர் முற்றாக அழிந்து அருகி விட்டது. மனிதனின் பார்வையில் பட்டு சுமார் 100 -_150 வருடங்களுக்குள் டோடோ பறவை இனமே முற்றாக அழிந்து விட்டது.

இவ்வாறானதொரு பறவை மொரிஷீயஸில் வாழ்ந்ததை உறுதிப்படுத்த டச்சுக்காரரான ரோலண்ட் சாவ்ரே 1624 இல் வரைந்த ஒவியமும் முக்கிய ஆதாரமாக உள்ளது. அதேநேரம் மொரிஷியஸ், பிரித்தானியாவின் குடியேற்றத்திற்கு உட்பட்டிருந்த போது பிரித்தானிய உயிரியலாளர் ரிச்சர்ட் ஒவன், அங்குமிங்கும் உதிரியாகக் கண்டெடுத்த டோடோ பறவையின் எலும்புகளைப் பொருத்தி பார்த்தார். அதன் ஊடாக டோடோ பறவை 03 – 06 அடி உயரமான, 10 – 20 கிலோ கிராம் நிறை கொண்ட பறவையாக இருந்திருக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்பறவையானது அந்நாட்டில் காணப்பட்ட கல்வாறு என்ற மரத்தின் பழங்களை விரும்பி உண்டு வாழ்ந்து வந்துள்ளது. அதனால் இப்பறவை உணவாகக் கொண்ட கல்வாறு பழத்தின் விதைகள் நன்கு செழித்து வளரக் கூடியனவாக இருந்தன. ஆனால் அப்பறவை அழிந்து அருகியதோடு அம்மரத்தையும் உலகம் இழந்து விட்டது.

ஆகவே டோடோ பறவைக்கு ஏற்பட்டது போன்ற துரதிர்ஷ்டகர நிலைமை ‘ஹனுமான் புலோவருக்கும் ஏற்படாத வகையில் கட்டாக்காலி நாய்கள், பூனைகள் உள்ளிட்டவைகளைக் கட்டுப்படுத்தி அதனைப் பாதுகாப்பதில் கவனமும் அக்கறையும் உடனடியாக செலுத்த வேண்டும். அது மிகவும் அவசியமான விடயமாகும்.

தினகரன்
2020.12.23

Tags: