புதிய தலைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்

க்கள் அடிமையுணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இன்று அடி மட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரையிலும் இன முரண்பாட்டு ரீதியாக உடல், உள பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். முதலில் இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தம் மனதைப் பரிபூரமான முறையில் பரிசுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர வேண்டும். இதன் மூலம் தான் நாடும் வீடும். கல்வி, பொருளாதாரம் சகல சமூகமும் தானாகவே பலம் அடையும். சுதந்திர தின விழாக்களை மாத்திரம் நடத்தி விட்டு இருக்காமல் நாங்கள் பெற்ற சுதந்திர வரலாறு பற்றி எதிர்கால தலைமுறையினர்கள் மத்தியில் பேசப்பட வேண்டும். அது பற்றி எடுத்து நடக்கச் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் நாங்கள் பெற்ற படிப்பினைகள் தியாகங்கள் எல்லாம் அறிந்து வழிநடத்தக் கூடிய புதிய தலைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை வை. எம். எம். ஏ. (Young Muslim Men’s Association – Y.M.M.A) பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம்.ரிஷ்மி தினகரனுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டின் 73 ஆவது சுதந்திரன தினத்தை கொண்டாடும் தினத்தில் நீங்கள் கூற விரும்புவது,

இந்த இனிய நாளை இத் தாய் நாட்டின் பிதாமகன் என்ற வகையில் மிகப் பெறுமதிமிக்க நாளாகவே மதிக்கின்றேன்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையிலும் இந்த நாட்டின் பொருளாதாரம் பாதுகாப்பு, மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் முக்கிய பங்களிப்பை நல்கி வந்துள்ளார்கள். அதிலும் விசேடமாக இந்நாட்டிற்கு வர்த்தக ரீதியாக வருகை தந்த அரேபியர்களும் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார்கள். இந்த அராபியர்கள் தான் இரத்தினக் கல் வியாபாரத்தை உலகம் முழுக்க கொண்டு சென்றவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலனித்துவ ஆட்சியாளர்களுக்குப் பின்னர் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் காணப்படும் சிறுபான்மையின மக்களின் மனோ நிலை தொடர்பில் உங்களது அபிப்பிராயம் என்ன?

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் அனைத்து மக்களும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் சகவாழ்வுடனும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த குறிப்பாக சிறுபான்மையின சமூகத்தினர்கள் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள், உயிர்த் தியாகங்கள் செய்தவர்கள் என்பதை மறந்து செயற்படும் நிலை காணப்படுவதை அதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்த நாட்டில் வாழும் சகல மக்களுடைய சமூகத் தலைமைகளும் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் என்பதை பொறுப்புக் கூறுதலை தெளிவாக எடுத்துக் கூற தவறி விட்டனர்.

குறிப்பாக தனியொரு இனத்தை அல்லது சமூகத்தைத் திருப்திப்படுத்தும் கொள்கைகளிலும் பார்க்க எல்லா இனங்களுக்கும் சமூகங்களுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் கொள்கைகள் அமுலாக்கப்படுவதன் மூலமே இன நல்லுறவைக் கட்டி எழுப்ப முடியும். தொடர்ந்து மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் இதைப் பற்றிக் கவனத்தில் கொள்ளப்படாத நிலைப்பாடே காணப்படுகிறது. இல்லையேல் உண்மையான சுதந்திர தினத்தின் அடையாளத்தைக் கண்டு கொள்ள முடியாது. எந்தவொரு ஆட்சியாளராக இருந்தாலும் சிறுபான்மையின மக்களுடைய மனதை திருப்திப்படுத்தக் கூடிய வகையில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என நான் கருதுகின்றேன்.

மேலே குறிப்பிட்ட கருத்தை ஏன் கூறினீர்கள்,…

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக மூவின மக்களும் பல்வேறுபட்ட தியாகங்களைச் செய்துள்ளனர். இந்நாட்டு மக்கள் பிறப்பின் அடிப்படையில் ஓர் இனமாகவும் மதமாகவும் ஒற்றுமையாக வாழ்ந்திருக்கிறார்கள்.

இலங்கையர் என்ற வகையில் முஸ்லிம்களுக்கும் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. கடந்த 73 வருடங்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் தலைமைகள் தத்தம் அரசியல் இலாபத்திற்காகவும் தம் பதவிகளையும் ஆட்சியினையும் தக்க வைத்துக் கொள்வதற்காக இப்படியான அரசியல் காய் நகர்த்தல்களை செய்கின்றன. இன ரீதியிலான போக்குகள் நிலை பெற்றுள்ளன.

இந்நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையே பரஸ்பர சந்தேகங்களும், பிணக்குகளும், அமைதியின்மையையும் இன ரீதியிலான கலவரங்களையும் தோற்றுவிக்கின்றன. எனவே இதில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.துரதிஷ்டவசமாக மக்கள் மனோநிலை பாதிக்கப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையிலேயே நாங்கள் 73 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம். இது கவலை தரும் செய்தியாகும்.

அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸ்

உங்களது வை. எம். எம். ஏ பற்றிக் கூற முடியுமா?

இந்த வை. எம். எம். ஏ. பேரவை 1917 ஆம் ஆண்டில் இருந்து குறிப்பாக சுதந்திரத்திற்கு முன்னர் இருந்து இந்நாட்டில் மக்களுக்கு பொதுப்பணி செய்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸ் 1947 ஆம் ஆண்டில் தம் மனைவியுடன் லண்டன் சென்றார். அங்கு இருந்து வரும்வழியில் எகிப்தில் கெய்ரோவில் உள்ள வை.எம்.எம்.ஏ அமைப்புக்கும் விஜயம் செய்தார். அதைப் பற்றி மிக ஆழமாக அறிந்து கொண்டார். அதன் பின்னர் 1950 ஆம் ஆண்டில் ஏப்ரல் 30 ஆம் திகதி 17 வை.எம்.எம்.எம்.ஏ கிளை அமைப்புக்களை ஒன்றிணைத்து வை.எம்.எம்.ஏ பேரவையாக உருவாக்கினார். கொழும்பு சாஹிராக் கல்லூரியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் தலைவராகவும் லாபீர் ஏ.காசிம் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

வை.எம்.எம்.ஏ பேரவையின் அமைப்பில் இருந்து நீங்கள் முக்கியமாகக் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன?

இந்தச் சந்தர்ப்பத்தில் கலாநிதி அஸீஸ் கூறிய கூற்று ஒன்று ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. எந்த சமூகம் முன் சென்ற தலைவர்களை மதிக்க வில்லையோ அந்த சமூகத்தில் இருந்து தலைவர்கள் உருவாக மாட்டார்கள் என்று அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸின் மிகப் பிரதான கூற்றாகும்.

அதன் உண்மைப் பெறுமானம் நமக்கு இன்று வெளிப்படையாக புலப்படுகிறது. எங்கள் சமூகத்தில் அரசியல் தலைமைகளையும் சிவில் தலைமைகளையும் உருவாக்க யாரும் முன் வருவதில்லை. அரசியல் தலைவர்கள் கூட தங்களுடைய அடிவருடிகளை மட்டும் உருவாக்கிச் செல்லுகின்றார்களே தவிர எதிர்கால தலைவர்களை உருவாக்குவதில்லை. அன்று சிவில் சமூகம் தான் அரசியல் தலைவர்களை உருவாக்கின.

எதிர்காலத்தில் சிவில் தலைமைகள் ஒன்றுபட்டு புதிய அரசியல் தலைமைகளையும் சிவில் தலைவர்களையும் உருவாக்குவதற்காக முயற்சிகள் செய்ய வேண்டும்.

இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் புதிய தலைமைத்துவ தட்டுப்பாடு அதிகளவு நிலவுகின்றது.

எனவே இந்த புதிய தலைமைத்துவங்களை உருவாக்குவதற்கு எல்லாம் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து எங்களுக்கிடையே காணப்படும் கருத்து முரண்பாடுகளில் இருந்து விடுபட்டு எதிர்கால தலைவர்களை உருவாக்குவதற்காக நாங்கள் முன் வர வேண்டும்.

1960 களில் கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸ் கொண்டிருந்த சிந்தனையின் இலட்சத்தை உயிர்ப்பித்து சமூகத்தை மீளப் புனரமைப்புச் செய்ய வேண்டும்.

2021 ஆண்டில் இது எங்களுடைய பொறுப்பு ஆகும் எனப் பிரகடனம் செய்து திடசங்கற்பத்துடன் செயற்பட வேண்டும். பேரவையாக இருக்கட்டும் கிளை அமைப்புக்களாக இருக்கட்டும் நாம் மேற்கொள்ளும் பணிகள் இன்றைய சூழலில் வினைத் திறன்மிக்கவையா அல்லது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வல்லமைமிக்கவையா என இதய சுத்தியோடு கலந்துரையாட வேண்டி இருக்கிறது.

பொருளாதார ரீதியில் அடுத்த சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகள் தொழில் நுட்ப ரீதியில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னேற்றகரமான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இவை பற்றி நாங்கள் எப்படி சிந்தித்து நடக்க வேண்டும்.

கொரோனா தொற்றுக் காலத்தில் நாங்கள் எவ்வாறு வாழ வேண்டும். நாங்கள் புதிய சாதாரண வாழ்க்கை முறையில் எவ்வாறு வாழுதல் வேண்டும். சமூக பொருளாதார சுகாதார ரீதியில் நாங்கள் எவ்வாறு வாழ வேண்டும். இந்தச் சவால்களை எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்றினால் கடுமையாகப் பாதிப்படைந்து தோல்வியை எதிர்நோக்கிய ஒரு சில நாடுகள் தடுப்பூசியைக் கண்டு பிடித்து அதன் ஊடாக வெற்றி பெற முயற்சி செய்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று எமக்கு வராமல் தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி நாங்கள் முன்னோக்கிச் சென்று இந்த உலகத்தை வெல்ல வேண்டும்.

இதை வெற்றி கொள்ள எமது முஸ்லிம் சமூகத்தினுடைய எல்லா செயற்பாடுகளும் பங்களிப்பும் அமைய வேண்டும் என்பதே என்னுடைய அவா. இவற்றையே நான் வை. எம். எம். ஏ. பேரவையின் தலைவரின் கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸின் சிந்தனையின் மூலமாக கற்றுக் கொண்டேன்.

இன்றைய முஸ்லிம்களுடைய எதிர்கால கல்வி நிலை தொடர்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள். ?

1940 களில் கல்வியை நாடாமல் புரியாமல் விட்டமையால் முஸ்லிம் சமூகத்தினருடைய நிலை இன்னும் பின்னோக்கி காணப்படுகின்றது. இதனால் முஸ்லிம்களது வாழ்வியல் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கல்வியின் ஊடாக எமது பின்னடைவுகளை வெற்றி கொள்வதற்கு நாங்கள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டி இருக்கிறது.

இந்நிலையில் இருந்து தம் சமூகத்தை மீட்டெடுக்க அல்லது குறைந்த பட்சம் தம் சமூகத்தின் வீழ்ச்சியை எடுத்துக் கூறுவதற்கேனும் தோன்றப் போகின்ற மற்றுமொரு அறிஞர் அஸீஸ் யார்? மற்றுமொரு கொடை வள்ளல் நளீம் ஹாஜியார் யார் மற்றுமொரு அரசியல் பரோபகாரி ராசிக் பரீத் யார்? மற்றுமொரு அஞ்ஞா நெஞ்சம் கொண்ட எந்த சத்திக்கும் அடிபணியாத மசூத் ஆலீம் போன்றவர்கள் யார்? நாம் இந்த கேள்விக்கான விடையைத் தேட வேண்டியிருக்கிறது.

ஏனென்றால் நாம் வாழும் இந்த யுகத்தில் நாம் அனைவரும் எல்லாம் தெரிந்தவர்கள் என்ற மடமையில் சிக்கிக் கொண்டிருக்கின்றோம். தனக்கு ஒரு பட்டம் இருந்து விட்டால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதைக்குள்ளே பெரிமிதப்படும் சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறியிருப்பது முஸ்லிம் சமூகத்தை குழிதோண்டி புதைப்பதற்கு சமனாகும்.

இன்று சமூக வலைத்தளங்களில் எழுதும் எழுத்துக்கள் வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த சமூக வலைத்தளங்கள் கையாளும் முறை தெரியாமல்தான் நாங்கள் எங்களது தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றோம்.

முஸ்லிம்களுடைய அடுத்த சமூகத்தை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்ற விடயத்தில் நமக்கு யார் சொல்லித் தருவார்கள் என நாங்கள் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றோம்.

எனவே நாம் அனைவரும் அகில இலங்கை வை. எம். எம். ஏ உடன் இணைந்து புதிய பாதையில் அர்ப்பணிப்போடு தூய்மையான எண்ணத்தோடு தாழ்வு மனப்பாங்குகளையும் கசப்புணர்களையும் மறந்து சுயநலங்களையும் துறந்து செயற்பட்டால் பெரும் மாற்றத்தை அடைய முடியும்.

இந்நாட்டில் நமக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைகள் சவால்கள் எல்லாம் வெயிலைக் கண்ட பனிபோல் மறைந்து விடும். எனவே நாம் என்ன செய்ய வேண்டும்.

எமது பேரவை பிரதான கொள்கை வகுக்கும் பீடமாகவும் கிளைகள் கொள்கை செயற்படுத்தும் களங்களாகவும் மாற்றப்பட வேண்டும். பேரவை அடுத்த அமைப்புக்களோடு சேர்ந்து செயலாற்றக் கூடிய ஒரு பலமான அமைப்பாகவும் மாற வேண்டும்.

பேரவையும் கிளைகளும் சம்பிரதாய கல்விச் சிந்தனையில் இருந்து விலகி இன்றைய கால கட்டத்தில் சமூகத்தின் போக்கில் அவதானத்துடன் உறுதியான கல்விக் கொள்கைகளை வகுக்க வேண்டும்.

படித்த, படியாத இளைஞர்களை வலுவூட்டுவதற்கு இஸ்லாத்தில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு அமைய இந்த நாட்டின் நல்ல பிரஜைகள் என்ற பெயருடைய கோட்பாட்டில் எல்லா சமூகத்தோடும் இணங்கி ஒற்றுமையோடு செயற்பட க் கூடிய ஒரு எதிர்கால சமூகத்தை உருவாக்க வேண்டும்.

இப்படியான ஒரு முற்போக்கு செயற் திட்டங்களைச் சம்பந்தப்பட்ட குறைகளை தூய்மையுடன் சிந்திக்கக் கூடிய தகைமையுடைவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று செயற்படுவதற்கு நாம் உறுதி பூண வேண்டும். இந்த நூற்றாண்டில் காலடி வைக்கும் வை. எம். எம். ஏ. நாமம் கொண்ட அனைவரும் இன்றைய தினம் இறைவன் அங்கீகரிக்கக் கூடிய கைங்கரியமாக அமைய வேண்டும் எனக் கருதுகின்றேன்.

உங்கள் பேரவையில் மொழி சார்ந்த பாகுபாடுகள் காணப்படுவதாக அறிந்தேன். அவை உண்மையா?

எமது சமூகத்தில் எல்லா வகையிலான வளங்களும் துறைசார்ந்தவர்களும் இருக்கின்றார்கள். ஒரு சர்வ கலாசாலை போன்றது எங்களுடைய பேரவை. எமது சமூகத்தில் மொழி முரண்பாடுகள் காரணமாக துறை சார்ந்த தலைவர்களை எதிர்காலத்தில் வெளியே கொண்டு வருவதற்கு முடியாமை இருந்தன. இது தேசிய மட்டத்திலும் உள்ளுர் மட்டத்திலும் தாக்கம் செலுத்தியமை முக்கிய அம்சமாகும்.

நாளுக்கு நாள் பல இயக்கங்கள் அதிகரித்துச் செல்கின்றது. சில அமைப்புக்கள் ஆரம்பித்த வேகத்திலே மறைந்து விடும்.கொழும்பை மையமாக் கொண்டு பல்வேறு அமைப்புக்களை துறை சார்ந்தவர்கள் செல்வந்தர்கள் ஒன்றிணைந்து தமது சமூகத்திற்கு ஏதோ செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடும் கவலையோடும் ஆரம்பிப்பார்கள்.

ஆனால் ஒரு சில செயற் திட்டங்களைத் தவிர அனைத்து அநேகமான செயற் திட்டங்களும் தோல்வியில் முடிந்து மக்கள் மத்தியில் போய்ச் சேராமல் எங்கேயோ ஓர் இடத்தில் நின்று விடுகிறது. அந்த வகையிலே ஒரு குறிப்பிட்ட சாரார் மாத்திரம் தான் இந்த செயற்பாட்டின் மூலம் மனிதாபிமான உதவிகளைச் செய்யக் கூடியதாக இருக்கிறது.

இதற்கான காரணம் என்னவென்றால் நமது நாட்டின் தேசிய மொழி சிங்களம் நமது தாய் மொழி தமிழ் . சர்வதேச மொழி ஆங்கிலம்.

ஆனால் தமிழ் மொழியில் பேசி தங்களுடைய செயற்பாடுகளை வெளிக்காட்டக் கூடியவர்கள் அதிகளவு வாலிபர்கள், யுவதிகள் இருக்கின்றார்கள். குறிப்பாக கொழும்பை மையமாக வைத்து ஆரம்பிக்கக் கூடிய எல்லா அமைப்புக்களும் ஆங்கில மொழியில் தான் எல்லா விடயங்களையும் செய்கின்றார்கள். ஆனால் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள வாலிபர்கள் மொழி ரீதியிலான பின்னடைவுகள் காரணமாக அவ்வமைப்புடன் இணைந்து கொள்வதில்லை.

ஆங்கில மொழியில் செயற் திட்டங்களை மேற்கொள்பவர்கள் முதல் தரம் வாய்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். இது பாமர மக்கள் மத்தியில் அடி மட்ட மக்கள் மத்தியில் இவர்களுடைய சேவை போய் சேராமல் இடை நடுவே நின்று விடுகின்றது.

எனவே எல்லா வகையிலான செயற்பாடுகளும் மும்மொழிகளிலும் நடைபெற வேண்டும். முடியாவிட்டால் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் நாங்கள் செயலாற்ற வேண்டும். அந்த வகையிலேயே அகில இலங்கை வை. எம். எம். பேரவையானது நான் செயலாளராக இருந்த கால கட்டத்திற்குப் பின்னர் அனைத்து செயற் திட்டங்களும் அறிக்கைகளும் அனைத்து ஆவணங்களும் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளிக்கொணரப்படுகின்றது.

இதற்கு முன்னர் கடந்த 65 வருடங்களாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம் மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து வந்தமையினால் கிராம மட்டங்களில் இருந்து எங்களது அமைப்புடன் வாலிபர்களை உள்வாகிக் கொள்ள முடியாமைப் போயிற்று. தற்போது எந்த மொழியிலாக இருந்தாலும் அவர்கள் செயற்படுவதற்கும் வளங்களைப் பயன்படுத்துவதற்கும் வை. எம். எம். ஏ. தயாராகி விட்டன. தத்தமது அறிவுத் திறன் ஆற்றல் ஆளுமைகள் இருக்கின்ற வேளையில் சம்பந்தமில்லாமல் அடுத்தவர்களுடைய பணியில் கையடிப்பது ஒரு சில விடயங்களுக்கு பின்னடைவாக அமையாலம். தச்சன் தச்சனுடைய வேலையைத் தான் செய்ய வேண்டும். எழுத்தாளர் எழுத்தாளர் பணியை செய்ய வேண்டும். எல்லோரும் எல்லா விடயத்திலும் கையடிக்கப் போய்தான் குறித்த துறைகளுக்கு மதிப்பு இல்லாமல் அல்லது அந்த துறை சார்ந்தவர்களுக்கு மதிப்பின்றி நாங்கள் பின்னடைவுக்கு ஆளாகிவிடுகின்றோம். எனவே தமிழ் மொழிக்கும் எமது தாய் மொழிக்கும் எமது தேசிய மொழிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பொழுது அவ்வாறானதொரு முரண்பாடு எமது அமைப்பில் இல்லை.

-தினகரன்
2021.02.04

Tags: