இந்திய வனங்களில் அதிகரிக்கும் காட்டுயிர் வேட்டை! விழிக்குமா அரசு?

-க.சுபகுணம்

மிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதுமே மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருப்பதால், இந்தியக் காடுகளில் வேட்டைக் குற்றங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன.

மத்திய இந்தியாவிலிருந்து சட்டவிரோத வேட்டைக்காரர்களைக் கொண்ட ஒரு கும்பல், தமிழகக் காடுகளுக்குள் நுழைந்துள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, தமிழக வனத்துறை கூடுதல் கவனத்துடன் கண்காணித்துவருகிறது. மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கொடுத்த இன்டெலிஜென்ஸ் தகவலின்படி, இந்தத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களின் அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எச்சரிக்கை வழங்கப்படும்போதே கர்நாடகா எல்லையில் இரண்டு புலிகள் வேட்டையாடப்பட்டுவிட்டன. அதுமட்டுமின்றி, கோயம்புத்தூர் மாவட்ட வனத்துறையிடம் முயல், பன்றி, மான் ஆகியவற்றை வேட்டையாடப் பொறி வைத்தவர்கள் பிடிபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதுமே மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருப்பதால் இந்தியக் காடுகளில் காட்டுயிர் வேட்டைக் குற்றங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடத்திற்குப் பெயர்போன காசிரங்கா தேசியப் பூங்காவில், கடந்த சில காலமாக அவற்றை வேட்டையாடுவது குறைந்திருந்தது. இந்நிலையில், தற்போது அவை மீண்டும் வேட்டையாடப்படுகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகமில்லாமல் இருந்ததால், காண்டாமிருகங்கள் காடுகளின் எல்லைவரை வந்து உலவிச்செல்கின்றன. அப்படி நடமாட வருவனவற்றுக்கு, அங்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், காட்டுயிர் வேட்டைக்காரர்களின் துப்பாக்கிகளுக்கு அவை இரையாகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர், அப்படி வந்த ஒரு காண்டாமிருகம் வேட்டையாடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டு புலிகள். முதுமலை, ஆனைமலையில் இரண்டு புலிகள் மற்றும் கேரளாவின் வயநாட்டில் ஒரு புலி இறந்துள்ளன. லாக்டௌன் காலகட்டத்தில் இயற்கை தன்னை மீட்டுருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றாலும், காட்டுயிர்களுக்கு சுதந்திரமான, அமைதியான சூழல் நிலவுகிறது என்றாலும் அவற்றின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இந்த மரணங்கள்தான் ஆதாரம். அஸ்ஸாம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காடுகளுக்குள் நடக்கும் சட்டவிரோத குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு வேட்டைக் குற்றவாளிகள் இந்தியக் காடுகளுக்குள் பிடிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு காட்டுயிர் வேட்டை முயற்சிகள் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேட்டையாடப்பட்ட மாமிசங்கள் கைப்பற்றப்படுகின்றன.

அஸ்ஸாமிலுள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே சுற்றுலாத் துறையில் கிடைக்கும் வருமானம் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. பின்னர், மார்ச் மாதத்தில் லாக்டௌன் தொடங்கிய ஒரே வாரத்தில், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதற்கான 6 வேட்டை முயற்சிகள் நடைபெற்றன. அந்த முயற்சிகளின் விளைவாகக் கடந்த 13 மாதங்களாக நிகழாமலிருந்த காண்டாமிருக வேட்டை, இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்றது.

ஒரு கிலோ காண்டாமிருகக் கொம்புக்கு 60,000 டாலர் வரை கறுப்புச் சந்தையில் கிடைக்கும். ஒரு காண்டாமிருகத்தின் கொம்பை கறுப்புச் சந்தையில் விற்றால், அவர்களுக்கு சுமார் 150,000 டாலர் கிடைக்கும். அந்த காண்டாமிருகத்தை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்ட ஏ.கே 47 துப்பாக்கிக் குண்டுகளின் காலிக் குப்பிகள் கிடைத்துள்ளன. காசிரங்கா தேசியப் பூங்காவின் எல்லையிலிருந்த ஒரு நீர்நிலைக்கு அருகில், அதன் சடலம் கிடைத்துள்ளது. அதன் கொம்பு வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முந்தைய ஆண்டுகளில், இதுபோல் பல வேட்டைகள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து எந்த வேட்டையும் நடக்காமல் பாதுகாக்கப்பட்டது. அந்த வனப்பகுதியில், தற்போது நிகழ்ந்துள்ளதுதான் இந்த ஆண்டின் முதல் வேட்டைச் சம்பவம்.

கடந்த மார்ச் மாதம் முதலே, வேட்டையாடுவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன என்கின்றனர், காசிரங்கா வனத்துறை அதிகாரிகள். 850 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள காசிரங்காவில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஐந்து முறை காண்டாமிருகங்களை வேட்டையாட முயன்றவர்களை அப்பகுதி வனச்சரகர்கள் தடுத்துள்ளனர். 2018-ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி, 2,413 காண்டாமிருகங்கள் இருக்கின்றன. இப்போது தொடங்கியிருக்கும் இந்த வேட்டை, அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று காட்டுயிர் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர், நாகர்ஹோலே தேசியப் பூங்காக்களில் காட்டுப்பன்றி, மான் போன்றவற்றைப் பிடிக்க வைக்கப்படும் வேட்டைப் பொறிகளின் எண்ணிக்கை, வழக்கத்தைவிட அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மான்கள், பன்றிகள் அல்லது முயல்களை மட்டும் பிடிப்பதில்லை. புலி, சிறுத்தை போன்ற வேட்டையாடிகள் வேட்டையாட முயலும்போது, அந்தப் பொறிகளில் சிக்கி காயப்படுகின்றன. அதனால் அவற்றின் வேட்டைத் திறன் குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக உயிரிழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

காட்டுயிர்களின் பாதுகாப்பு குறைந்தால், காடுகளின் தரமும் பாதிக்கப்படும். இந்த பாதிப்பிலிருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப, காடுகளுக்கும் காட்டுயிர்களுக்கும் நீண்டகாலம் எடுக்கும். காட்டின் தரம் மட்டுமல்ல, இப்போது ஏற்பட்டுள்ள இழப்புகளிலிருந்து மீண்டுவர சூழலியல் சுற்றுலாத் துறைக்கும் நீண்ட காலம் பிடிக்கும். சூழலியல் மற்றும் காட்டுயிர் சுற்றுலாவில் கிடைக்கும் வருமானம்தான், குறிப்பிட்ட அளவுக்கு காடுகள் பாதுகாப்பில் பங்கு வகிக்கின்றன.

சுற்றுலா, காட்டுயிர்களைப் பார்க்க அழைத்துச்செல்லப்படும் ஜீப் சஃபாரி ஆகியவை தடைபட்டிருப்பதால், காட்டுக்குள் மனித சலசலப்பு குறைந்திருக்கிறது. இதனால், விலங்குகள் சுதந்திரமாக நடமாட முடிகிறது. அதேநேரம், காட்டுயிர் சுற்றுலா தொடர்ந்து நடந்துகொண்டிருந்தபோது, காட்டுக்குள் மனித நடமாட்டம் இருக்கிறது என்ற அச்சம் வேட்டைக்காரர்கள் மத்தியில் இருந்துகொண்டேயிருந்தது. அது தற்போது இல்லை. சட்டவிரோத காட்டுயிர் வேட்டை, இயற்கை வளத் திருட்டு ஆகியவை அதனால் தடையின்றி நடக்கின்றன என்று கோட்பாட்டளவில் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு, உயிரியல் ஆய்வாளர் ரகு சந்தாவத் முன்வைத்த ஆய்வறிக்கையின்படி, மத்தியப் பிரதேசத்திலுள்ள நான்கு புலிகள் காப்பகங்களில், காட்டுயிர் சுற்றுலா சுமார் 166 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்தைக் கொடுத்துள்ளதாகப் பதிவு செய்துள்ளார். அதில் 45 சதவிகிதம் விடுதிகள், கேம்ப் ஊழியர்கள், ஜீப் ஓட்டுநர்கள், புலிகள் காப்பகங்களைச் சுற்றி வாழும் கிராம மக்கள் நடத்தும் கடைகள் என்று உள்ளூர்ப் பொருளாதாரத்தின் மூலம் கிடைக்கிறது.

மார்ச் மாத இறுதியில் லாக்டௌன் தொடங்கிய பிறகு, இந்த வருமானம் மொத்தமாக தடைபடத் தொடங்கின. வனப்படு பொருள் சேகரிக்கப் பழங்குடியின மக்கள் காடுகளுக்குள் சென்று வந்தாலும்கூட, அவற்றை விற்க சந்தை இல்லாத நிலை நிலவுவதால், அவர்களுடைய நடமாட்டமும் காட்டிற்குள் குறைந்தது. மனித நடமாட்டம் இல்லாததால் காட்டிற்குள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுடைய நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

அடுத்த 8 முதல் 10 மாதங்களுக்கு சுற்றுலாத் துறைக்கு மிகவும் கடினமான காலகட்டம். அதைப் பற்றி சிந்திக்கவேண்டிய அதேநேரம், நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். காடுகளுக்குள் விலங்குகளைப் பிடிக்க, வேட்டையாட வைக்கப்பட்டிருக்கும் பொறிகளும் கொலைசெய்யப்பட்ட காட்டுயிர்களின் சடலங்களும் அதிகமாகியிருக்கும். காட்டுயிர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருந்தாலும், அதைவிட முக்கியமாக, தற்போது நம்முடைய கவனம் முழுவதும் காடுகளைச் சார்ந்து வாழும் உள்ளூர் மக்களுடைய பொருளாதாரத்தின் மீதுதான் இருக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை அவர்கள் காடுகளுக்குள் வனப்படு பொருள்களைச் சேகரிக்கச் செல்வார்கள். அதேநேரத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகமாக இருக்கும். அவர்களுக்குத் தங்கள் உள்ளூர் உற்பத்திகளை விற்பனை செய்வதும் காட்டுயிர் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழி செய்துகொண்டிருந்தன.

உதாரணத்திற்கு, சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் 28 கிராமங்கள் இருக்கின்றன. வனத்தைச் சுற்றி சுமார் 272 குக்கிராமங்கள் அமைந்துள்ளன. இவர்களில் பெரும்பான்மையானவர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் காடுகளுக்குள் சென்று வனப்படு பொருள்களைச் சேகரித்துவருபவர்கள். மேலும், ஒரு பகுதியினர் சுற்றுலாத்துறையில் பங்கு வகிக்கின்றனர். இந்த லாக்டௌன், அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. அரசாங்கம் அவ்வப்போது கொடுக்கின்ற நிவாரணங்கள்தான் அவர்கள் பிழைத்திருக்க உதவிக்கொண்டிருக்கிறது. ஆண்டின் இந்தக் காலகட்டத்தில், காட்டுக்குள் மனித நடமாட்டம் சற்று அதிகமாக இருக்கும். காடுசார் உற்பத்திகளுக்காக, வன ஓரங்களில் வாழும் மக்கள் மூங்கில், தேன், கோரைப் புல் போன்றவற்றுக்காகக் காடுகளுக்குள் செல்வது வழக்கம்.

இன்னும் பல பகுதிகளில் பழங்குடியின மக்கள் கட்டட வேலைகளுக்காக, ஒப்பந்த வேலைகளுக்காக வெளியூர்களுக்குச் சென்றிருந்தார்கள். ஊரடங்கினால், அவரவர் ஊர்களுக்கே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. உதாரணத்திற்கு, மத்தியப் பிரதேசத்திலுள்ள கன்ஹா தேசியப் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 55,000 பேர் வேறு பகுதிகளில் வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்கள், லாக்டௌன் தொடங்கிய முதல் மாத்திலேயே தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர். இப்போது அவர்களும் வேலையின்றித் தவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரும்பிக் கொண்டிருப்பதால், மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே 14 பேர் மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காடுகளைச் சார்ந்துள்ள மக்களின் பொருளாதார அழுத்தம் இப்படியாக மேன்மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சூழலியல் மற்றும் காடுகள் பாதுகாப்பிற்கு பெருமளவு நிதியை வழங்கிக்கொண்டிருந்த காடுசார் பொருளாதாரமும் சூழலியல் சுற்றுலாத் துறையும் வீழ்ச்சியைச் சந்தித்ததால், காடுகள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கிறது.

இப்போதைய சூழலில், காடுகள் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதேநேரம், காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் பங்கு வகிக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்த வேண்டும். அதற்கு, காடுகள் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பில் அந்த மக்களையும் ஈடுபட வைக்கலாம். காட்டுத்தீ அதிகம் ஏற்படும் காலம் இது என்பதால், அதைக் கட்டுப்படுத்துவதிலும் பழங்குடிகளின் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். அந்தப் பணிகளுக்கு உரிய வகையில் அவர்களுக்கான ஊதியங்களையும் நிர்ணயிக்கலாம்.

இது வெறுமனே நிவாரண உதவிகளைப் பெற்று வாழும்படி வைக்காமல், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்ததைப் போல் அமையும். அதோடு, காட்டுயிர் பாதுகாப்பும் உறுதிப்படும். இது தற்காலிகமானதாக இருந்தாலும்கூட, உள்ளூர் பொருளாதாரத்தைச் சார்ந்திருக்கும் மக்களுடைய அன்றாடத் தேவைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும். கூடுதலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உள்ளூர் மக்களுக்கு கற்றுக்கொடுக்க இதுவொரு வாய்ப்பாகவும் அமையும்.

மாதவ் காட்கில் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போல், இதை எதிர்காலத்தில் நீண்டகால செயல்பாடாக முன்னெடுக்க இந்த தற்காலிக முயற்சியைத் தொடக்கமாகக் கருதலாம். அது, நீண்டகாலமாகச் சூழலியலாளர்கள் முன்வைக்கும் ஜனநாயக ரீதியிலான காடுகள் பாதுகாப்பு முறையை இந்தியா மேற்கொள்வதற்கான ஓர் ஆரம்பமாகவும் அமையும்.

Tags: