மார்ச் 26: நீங்காத நினைவுகளுடன் எம்முடன் பயணிக்கும் நீர்வை
–எம்.கே.முருகானந்தன்
நீர்வை எங்களைவிட்டுப் பிரிந்து ஒரு வருடமாகிவிட்டதா? நம்பவே முடியவில்லை. சென்ற வருடம் கோவிட் தலைவிரித்து ஆடத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், கோவிட்டினால் அல்ல, இயற்கை மரணம் எய்தினார் நீர்வை பொன்னையன் தனது 90வது வயதில். ஈழத்து இலக்கியத்தின் ஒரு முற்போக்கு ஒளி தனது ஆறு தசாப்தங்களுக்கு மேலான எழுத்துலகச் சாதனைகளை அடுத்த அடுத்த தலைமுறையினருக்கும் கையளித்துவிட்டு அமைதியாகவும் நிரந்தரமாகவும் தனது கண்களை மூடிக் கொண்டது.
தொற்று நோய் வேகமாப் பரவும் சூழலில் அவரது மரணச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத கையறு நிலையில் நண்பர்கள் தவித்துப் போய்விட்டனர். இன்னமும் தொடரும் இக்கட்டான சூழலில்தான் அவரது முதலாவது நினைவு தினம் மார்ச் 26ம் திகதி வருகிறது. நீர்வையின் படைப்புகளுடன் எனக்கு மாணவப் பருவத்திலிருந்து பரிச்சயம் இருந்த போதும் அவரை நேரடியாக அறிந்திருக்கவில்லை. அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு நீண்ட காலம் கிடைக்கவில்லை.
1996 ல்தான் அவரை முதன் முதலில் சந்திக்கிறேன். அவரை அனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது எனது நீண்டகால நண்பரான புலோலியூர் இரத்தினவேலோன் அவர்கள்தான். 1995 ல் குடாநாடு அரச படைகளின் கைகளில் விழுந்த பின்னான நெருக்கடியான சூழலில் நான் கொழும்புக்கு இடம் பெயர்ந்து வந்து வெள்ளவத்தை மூர் வீதியில் தங்கியிருந்தேன். அந்நேரத்தில்தான் இரத்தினவேலோன் நீர்வையுடன் ஒரு நாள் எனது வீட்டிற்கு வந்து நீர்வையை அறிமுகப்படுத்தி வைத்தார்.
தான் ஒரு முத்த எழுத்தாளர் என்ற பந்தம் சற்றேனும் இன்றி, வயது வித்தியாசம் பாராட்டாமல் நெருக்கமாகவும் பண்பாகவும் பழகிய நண்பர் அவர். அன்று முதல் எனது மிக நெருக்கமான நண்பரானார். வாரத்தில் ஒரு முiறாயவது நாம் சந்திக்காமல் இருக்கமாட்டோம். சில வேளைவளில் இரண்டு மூன்று தடவைகள் கூடச் சந்திப்பது உண்டு. எங்கள் இருவரது நட்பும் குடும்ப நட்பாக விரிந்தது. தனது பல சிறுகதைகளையும், நூல்களையும் வெளியிடக் கொடுப்பதற்கு முன்னர் எனக்குக் காட்டி எனது கருத்துக்களை அறிந்து கொள்வதும் உண்டு. நான் மீண்டும் 2015ல் பருத்தித்துறை திரும்பும் வரை அவரது ஒவ்வொரு நூல் வெளியீட்டிலும் கலந்து கொண்டிருக்கிறேன். அத்தகைய ஒரு நண்பரை இழந்த துயரம் என் வாழ்நாள் முழுவதும் தொடரவே செய்யும்.
நீர்வை பொன்னையன் ஒரு பொதுவுடமைவாதி, இறுக்கமான கொள்கைப் பிடிப்பாளர், கம்யூனிசக் கட்சியின் முழுநேரப் பணியாளராக இருந்தவர், தொழிலாளர், விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல போராட்டங்களிலும், வேலைநிறுத்தங்களிலும் நேரடியாகப் பங்கு பற்றியவர். அவற்றில் பலவற்றை ஒழுங்கு செய்வதிலும் முன் நின்றிருக்கிறார். வசதி வாய்ப்புகள் தேடி வந்தபோதும் விலைபோகாதவர். மூத்த எழுத்தாளர். தனது அரசியல் தளத்திற்கு ஏற்பவே கலை இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுத்தவர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக எழுத்துத் துறையில் தொடர்ந்து ஓய்வின்றி இயங்கியவர்.
இலக்கித்துறையில் சிறுகதைதான் இவரது முக்கிய ஈடுபாடாக இருந்திருக்கிறது. இவரது முதலாவது தொகுதி மேடும் பள்ளமும் ஆகும். இது 1961 ல் வெளிவந்தது. மக்கள் பிரசுரலாயம் வெளியிட்டது. நான் மாணவனாக இருந்த காலத்திலேயே இதைப் படித்திருக்கிறேன். இது ஆரம்ப நூல் ஆனபோதும் மிகவும் முக்கியமானது. நீர்வையின் படைப்பாளுமையின் ஆழத்தைக்; காட்டும் வித்தியாசமான படைப்புகள் இதிலுள்ளன. கலையம்சம் நிறைந்த படைப்புகள். பரீட்சார்த்த படைப்புகளும் அடங்கியுள்ளன. அவரது மிகச் சிறந்த சிறுதைத் தொகுப்பு அதுதான் என நினைக்கிறேன். அன்று வாங்கிய அந்தத் தொகுப்பு இன்னமும் என் கைவசம் உள்ளது. இத் தொகுப்பின் முக்கித்துவம் கருதி இரத்தினவேலோனின் மீரா பிரசுராலயம் 2005ல் மீள் பதிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டவாவது சிறுகதைத் தொகுப்பு உதயம். இது முக்கியமாக கட்சி மற்றும் கொள்கை சார்ந்து விடயங்களை நேரடியாகப் பேசும் க்கதைகள் என்றே எனக்குப்பட்டன. இவற்றைத் தொடர்ந்தே ஏனையவை வெளியாகின. 12 சிறுகதைத் தொகுப்புகள் வரை வெளியிட்டிருக்கிறார். நீர்வையின் வங்கக் சிறுகதைகள் என்பது தான் அவரது கடைசிச் சிறுகதைத் தொகுதி.
இவர் மொழிபெயர்புத் துறையில் ஈடுபட்டவர் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இதை அவர் வாயிலாகவே அறிந்திருக்கிறேன். பல முக்கிய முற்போக்கு இந்திய எழுத்தாளர்களின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவை தொகுக்கப்படவில்லை என்பது எமது துரதிர்ஸ்டமே.
சிறுகதைகளுக்கு அப்பால் நாட்டாரியல் அவருக்கு ஈடுபாடுடைய மற்றொரு துறையாகும். இவர் எழுதித் தொகுத்த உலகத்து நாட்டார் கதைகள் மிகவும் வரவேற்புபம் பெற்ற நூலாகும்
முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் கட்டுரைத் தொடர் தினக்குரலில் வெளியாகி பின் நூலாகியது.
நீர்வையின் முக்கிய பண்பு, தனிப்பட ரீதியில் இயங்குவதைவிட குழவாக இயங்குவதே ஆகும். ஆரம்ப காலம் முதல் நீர்வை இதைக் கடைப்பிடித்து வந்துள்ளார். அடிப்படையில் அரசியல் கம்யூனிஸட்; கட்சி சார்ந்ததாகவே இவரது இயக்கம் இருந்தது. பிளவுபட்ட கட்சியில் புரட்சிகர முன்னணி அணியுடன் செயலாற்றினார். சமூக ரீதியாகவும் அவ்வாறே பல குழக்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். சாதி எதிர்ப்புப் போராட்டம் முக்கியமானது. பல தொழிலாளர் அமைப்புகளுடன் இணைந்து போராடியிருக்கிறார், 83 வன்முறையைத் தொடர்ந்து யாழ்மண்ணில் குசுளுளு போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சத்துணவுத் திட்டச் செயற்பாடுகள், பிரஜைகள், குழு போன்றவை ஊடாக சமூகப் பணியாற்றியிருக்கிறார்.
அதேபோல கலை இலக்கிய செயற்பாடுகளிலும் இயங்கியுள்ளமையைக் காணமுடிகிறது. இதனால சமூகப் பயன்பாடுடைய பல அறுவடைகளை அவரால் செய்ய முடிந்திருக்கிறது.
வங்காளத்தில் புரட்சிகர மாணவர் அமைப்பு மற்றும் இந்திய மக்கள் கலாசார மன்றம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், வசந்தம் சஞ்சிகை, மக்கள் பிரசுராலயச் செயற்பாடுகள், சீனச் செய்தி, இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம், விபவி, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் என பலவற்றின் ஊடாகவும் தொடர்ச்சியாக சமூக, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார். இறுதி மூச்சுவரை அவ்வாறே செயற்பட்டார்.
மாற்றுக் கலாசர மையத்தின் விபவி, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றச் செயற்பாடுகள் ஆகியவற்றில் அவ்வப்போது நானும் பங்கு பற்ற முடிந்திருக்கிறது. நான் மாத்திரமல்ல இராசையா மாஸ்டர் அவர்களும் பங்கு பற்றியுள்ளார். வேறு பலரும் அவ்வாறே பங்கு பற்றி வந்திருக்கிறார்கள். நீர்வையின் அரசியல் மற்றும் இலக்கியக் குழுக்களில் நாம் அங்கத்தவர்களாக இல்லாதபோதும் அவற்றின் பன்முகத்தன்மை மற்றும் சமூக அக்கறைச் செயற்பாடுகள் காரணமாக எங்களால் சுதந்திரமாக அவற்றில் பங்கு பற்ற முடிந்திருக்கிறது. இவை பற்றியும் நீர்வை தனது நினைவலைகள் நூலில் பதிந்திருக்கிறார்.
மண்ணின் மீது பற்றுக் கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. அதனால் தனது பிறப்பிடமான நீர்வேலியை தனது பெயரோடு நீர்வை என இணைத்து கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்கிறேன் என்பது தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பொன்னையா என்ற தனது பெயரையே பொன்னையன் என மாற்றிக் கொண்டார். இருந்தபோதும் நீர்வை பொன்னையனான அவர் நண்பர்கள் பலருக்கும் நீர்வை மட்டுமே.
நீர்வை எப்போதுமே தனது கொள்கையில் உறுதியானவர். யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுப்பது என்பது அவரது சரித்திரத்திலேயே கிடையாது. இதனைப் புரிந்து கொள்ளாத பலரும் அவரிலிருந்து எட்டி நிற்பார்கள் அல்லது அனுசரித்து போகாத மனிதன் என்று புறம் கூறுவார்கள். இது எதிரணியில் இருந்தவர்களுக்கு மட்டும் பொருந்தாது. கூட இருப்பவர்களுக்கும் கூடத்தான்.
ஒரு தடைவ, மார்க்ஸிஸ லெனினிஸ புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் சீனக் கலாசாரப் புரட்சி பற்றிய வகுப்பு நடந்தபோது மாஓ சேதுங்கின் மேற்கோள்களைப் படிக்கும்போது எல்லோரும் எழுந்து நிற்கும்படி வேண்டப்பட்டனர். நீர்வை மட்டும் எழுந்து நிற்கவில்லை. கூட்டம் முடிந்த பின்னர் காரணம் கேட்கப்பட்டது ‘நான் தோழர் மாஓ சேதுங்கை கடவுளாக்க விரும்பவில்லை’ என்பது பதிலாக இருந்தது. அடிப்படைப் கொள்கைகளில் விட்டுக்கொடுக்காத இவரது போக்கை இந்தச் சம்பவம் வெளிக்காட்டுகிறது.
சோவியத் யூனியனில் அச்சுக்கலை படிக்கக் கிடைத்த வாய்ப்பையும், பின்னால் பீக்கிங்கில் வானெலியில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பையும் நிராகரித்துள்ளார். காரணம் தன்னை விலைக்கு வாங்க முற்படுகிறார்கள் என்ற காரணத்தால்தான். எதிரணியுடன் மாத்திரமின்றி தான் சார்ந்த கட்சிக்குள் கூட சமரசங்களுக்கும் விட்டுக் கொடுப்புகளுகம் இசைந்து போகாதவராக இருந்ததை இது காட்டுகிறது.
அவரது வாழ்க்கை என்றும் எம்முடன் இருந்து வழிகாட்டுவதாகவே இருக்கிறது.