வங்கத் தேர்தலில் புது இரத்தம் பாய்ச்சும் இடதுசாரி இளம் வேட்பாளர்கள்
-Shiv Sahay Singh
பிரீத்தா டா (Pritha Tah) வின் தந்தை பிரதீப் டா (Pradip Tah) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்ஸிஸ்ட்) எம்எல்ஏ-வாக இருந்தவர். அவர் 2012-ல் கொல்லப்பட்டபோது, பிரீத்தா டாவுக்கு வயது 19. பிரதீப் டா திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தற்போது 28 வயதில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவராக இருக்கும் பிரீத்தா டா, வர்தமான் தக்ஷிண் (Bardhaman Dakshin) தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
வர்தமான் தக்ஷிண் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கியிருக்கும், பிரதானமாக நகர்ப்புறப் பகுதிகளாக இருக்கும் 33 வட்டங்களில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார் பிரீத்தா. “அரசியல் வன்முறையின் காரணமாக நிகழ்ந்த என்னுடைய தந்தையின் மரணமும் பிறருடைய மரணமும் குற்றவாளிகளுக்கும் அரசியலர்களுக்கும் இடையிலான கூட்டின் விளைவாகும். மேற்கு வங்க வரலாற்றில் குற்றவாளிகள் இந்த அளவுக்குக் கொலைபுரிந்துவிட்டுத் தண்டனையிலிருந்து தப்பிய வேறொரு ஆட்சி இருந்ததில்லை” என்கிறார் பிரீத்தா.
புதிய அர்த்தம்
சிங்கூர் கொந்தளிப்பில் இருந்தபோது ஸ்ரீஜன் பட்டாச்சார்யாவுக்கு 13 வயது. தற்போது 27 வயதில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவராக இருக்கும் அவர் சிங்கூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அதன் மூலம் தொழில் துறைக்கும் விவசாயத்துக்கும் இடையிலான எதிர்வு குறித்த விவாதத்துக்குப் புதிய அர்த்தம் கொடுக்க முயல்கிறார். “சிங்கூரில் விவசாயமா, தொழில் துறையா என்ற பிரச்சினை ஒருபோதும் இருந்ததில்லை, இந்த விவாதமே விவசாயத்தின் வெற்றியைக் கொண்டு கட்டமைக்கப்படும் தொழில் துறையைப் பற்றியதுதான்” என்று தன் பிரச்சாரத்துக்கிடையே அடிக்கடி கூறுகிறார் ஸ்ரீஜன்.
நந்திகிராமில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவரான மீனாட்சி முகர்ஜீக்கு (33), நந்திகிராமில் வன்முறை வெடித்தபோது வயது 19. மம்தா பானர்ஜீ, சுவேந்து அதிகாரி ஆகிய இரண்டு ஜாம்பவான் அரசியலர்கள் மோதிக்கொண்டிருக்கும் தொகுதியில் வாழ்வாதாரம், வேலைகள் போன்ற பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதன் மூலம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை மீனாட்சி ஏற்படுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத் தேர்தல் களத்தில் தங்கள் 20-களிலும் 30-களிலும் இருக்கும் சிபிஐ(எம்) வேட்பாளர்கள் அரை டஜனுக்கும் மேல் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் தேர்தல் பிரச்சாரத்துக்குப் புத்துயிர் ஊட்டியிருக்கிறார்கள். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தற்போதைய தலைவரான ஆய்ஷே கோஷ் (26) பாஸ்சிம் வர்தமான் மாவட்டத்தின் ஜமூரியாவில் போட்டியிடுகிறார். “நான் பாஸ்சிம் வர்தமான் பகுதியின் மகள். என் தந்தை நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரிந்தார். நான் இங்கே இருந்து ஜமூரியா மக்களுக்காகப் பாடுபட விரும்புகிறேன், அதைத்தான் இங்கே உள்ள மக்களிடம் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் அவர். 2020 ஜனவரியில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த பிறகு பிரபலமான அவர் ‘கோல் இந்தியா’ நிறுவனத்தையும் ஏனைய பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிராகப் பேசிவருகிறார்.
மற்றுமொரு சிபிஐ(எம்) வேட்பாளரும் பாலி தொகுதியில் போட்டியிடுபவரும் ஜே.என்.யு. மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான தீப்சீதா தாரும் (27) சரியான குரலை எழுப்புகிறார். ‘‘இந்துக்களோ முஸ்லிம்களோ இருவருமே பசிபட்டினியோடுதான் இருக்கிறார்கள். சமூகங்களுக்கிடையே பசியானது வேறுபாடு பார்க்காது” என்கிறார் தீப்சீதா தார்.
மேலும் சில இளம் சிபிஐ(எம்) வேட்பாளர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வங்க மாநிலச் செயலாளரான சயான்தீப் மித்ரா, வடக்கு 24 பர்கனாஸின் கமர்ஹாட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பிரதிகூர் ரஹ்மான் டைமண்டு ஹார்பரில் போட்டியிருகிறார்; பிற இளம் தலைவர்களான சப்தரிஷி தேவ் (முன்னாள் அமைச்சர் கௌதம் தேவின் மகன்) ராஜர்ஹட் நியூடவுனிலும் ஷட்டருப் கோஷ் கொல்கத்தாவின் கஸ்பாவிலும் போட்டியிடுகின்றனர். இந்த இளம் தலைவர்களெல்லாம் தங்கள் பொறுப்பை நன்கு உணர்ந்திருந்தாலும் சிலர் தங்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்படும் வரை தாங்கள் போட்டியிடப் போவது தெரியாது என்று கூறுகிறார்கள்.
பிரக்ஞைபூர்வமான முடிவு
சிபிஐ(எம்) கட்சியை ‘முதியோர் இல்லம்’ என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்துவருவதால் இளம் வேட்பாளர்களை களத்தில் இறக்குவது என்பது பிரக்ஞைபூர்வமான முடிவு என்று சிபிஐ(எம்) தலைவரும் பொலிட் பீரோ உறுப்பினருமான மொஹம்மது சலீம் கூறினார். இளம் தலைமுறைத் தலைவர்கள் ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் சிபிஐ(எம்) கட்சிக்கு வருகிறார்கள் என்றும் சலீம் கூறினார்.
இளம் முகங்களோடு மூத்த தலைவர்களும் களத்தில் இருக்குமாறு வேட்பாளர்களை சிபிஐ(எம்) இறக்கியுள்ளது. காந்தி கங்குலி ராய்திகியிலும், அஷோக் பட்டாச்சார்யா சிலிகுரியிலும், சுஜன் சக்கரவர்த்தி ஜாதவ்பூரிலும், மொஹம்மது சலீம் சண்டிடாலா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது குறித்து திரிணமூல் காங்கிரஸும் பாஜகவும் ‘விளம்பரத்துக்காக மேற்கொள்ளும் நடவடிக்கை’ என்று விமர்சித்துள்ளன. இந்த வேட்பாளர்களால் எந்தத் தொகுதியிலும் வெல்ல முடியாது என்றும் கூறியுள்ளன.
எதிர்காலத் திட்டம்
20-களிலும் 30-களிலும் இருக்கும் இளம் வேட்பாளர்கள் பலரையும் களத்தில் இறக்குவதென்பது இடதுசாரிக் கட்சிகளின், குறிப்பாக, சிபிஐ(எம்) கட்சியின் எதிர்காலத் திட்டத்தின் ஒரு பகுதி என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். “மக்களிடம் இடதுசாரிகள், குறிப்பாக, சிபிஐ(எம்) பிரச்சாரம் செய்யும் போக்கில் இந்தப் புதிய வேட்பாளர்கள் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பழைய முகங்கள், மக்களுடன் தொடர்புகொள்வதில் பழைய பாணி என்று சென்றுகொண்டிருந்ததற்கெல்லாம் இந்த முன்னெடுப்பு முடிவுகட்டியிருக்கிறது; இதன் மூலம் புதிய வேட்பாளர்கள், மக்களைச் சென்றடைவதில் புதிய பாணிகள் போன்றவற்றுக்கு வழிவகை ஏற்பட்டிருக்கிறது. இது அந்தக் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்ல விளைவுகள் பலவற்றை ஏற்படுத்தும்” என்கிறார் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியர் விஸ்வநாத் சக்கரவர்த்தி.
மூலம்: In Bengal polls, CPI(M) bats for young candidates
தமிழில்: ஆசை