முச்சக்கரவண்டி சாரதிகளிடம் மக்கள் விடுக்கும் வேண்டுகோள்!

ந்நிய செலாவணி பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம் கொடுத்திருக்கின்றது. இப்பொருளாதார நெருக்கடி சமூகத்தில் எல்லா மட்டத்தினர் மத்தியிலும் தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தீர்வும் நிவாரணமும் கோரி கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இப்பொருளாதார நெருக்கடி மக்களுக்கு சுமையாகவும் பாதிப்பாகவும் அமைவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைளும் வேலைத்திட்டங்களும் பரந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படவே செய்கின்றன. அவற்றில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை பாவனையாளர்களுக்குத் தொடராகப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களும் டீசல், பெற்றோல் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கான விலைக் குறைப்பும் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றின் பிரதிபலன்கள் பாவனையாளர்களைச் சென்றடைந்த வண்ணமுள்ளன.

என்றாலும் பெற்றோல் மற்றும் டீசலை அடிப்படையாகக் கொண்ட ஆட்டோ வண்டிகளின் சாரதிகளும் அவற்றின் உரிமையாளர்களும் தற்போதைய சூழலில் பிரதிபலன்களைப் பெற்றுக் கொள்கின்ற அதேநேரம், அவர்களது வாகனத்தை வாடகைக்கு அமர்த்துபவர்களுக்கு அவற்றின் நன்மைகளை வழங்குவதாக இல்லை. இது தொடர்பில் பரலவாகக் குற்றச்சாட்டுகளும் புகார்களும் தெரிவிக்கப்படுகின்றன. இப்புகார்களும் நியாயமானவையாகவே உள்ளன.

இப்பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெற்றோல், டீசலின் விலை அதிகரித்துள்ள போதிலும், அவை ஐநூறு ரூபாவுக்கும் குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால் இப்பொருளாதார நெருக்கடி ஆரம்பிக்க முன்னர் இருந்ததை விடவும் தற்போது விலை அதிகம் என்பது மறுப்பதற்கில்லை. என்றாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இவ்விலை அதிகரிப்பில் சில வாரங்களுக்கு விலை குறைப்பும் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் எரிபொருள் பற்றாக்குறையைப் பயன்படுத்திக் கொண்டுள்ள பெரும்பாலான ஆட்டோ வண்டிகள், முன்பு ரூபா 100.00 க்கும் ரூபா 150.00 க்கும் மேற்கொள்ளப்பட்ட பயணங்களுக்கு தற்போது ரூ. 500.00, ரூ. 600.00 என்றபடி அறவிடும் நிலைமை உருவாகியுள்ளது. இதற்கு டீசல், பெற்றோல் விலையேற்றம் காரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் ஒரு லீற்றர் பெற்றோல் மூலம் ஆட்டோ முச்சக்கர வண்டியொன்று 15 – 20 கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்கும். அது பெரும்பாலான முச்சக்கர வண்டிகளது சாரதிகளதும் உரிமையாளர்களதும கருத்தாகும்.

அப்படியிருக்கையில், இப்பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி முன்பு ரூபா 100.00, ரூபா 150.00 தூரத்திற்கு அறவிட்ட பயணக் கட்டணத்தை ரூபா 500, ரூபா 600 என்றபடி அதிகரித்திருப்பதன் ஊடாக ஒரு லீற்றர் பெற்றோலுக்கு செலவாகும் தொகை சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்குள் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. அதனால் எஞ்சிய பெற்றோல் மூலம் மேற்கொள்ளப்படும் பயணத் தூரத்திற்கு அறவிடப்படும் கட்டணம் கொள்ளை இலாபம் என்பது தெளிவாகிறது. அது நியாயமானதல்ல.

ஓட்டோ சாரதிகள், அவற்றின் உரிமையாளர்கள் போன்று அவற்றைப் பயணங்களுக்கு வாடகைக்கு அமர்த்திக் கொள்பவர்களும் இப்பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கின்றனர். அதனால் ஓட்டோ வண்டிகளின் சாரதிகளும் அவற்றின் உரிமையாளர்களும் பயணக் கட்டணங்களை தீர்மானிப்பதில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டிய தேவை பரவலாக உணரப்படுகின்றது. தவறும் பட்சத்தில் இவ்வண்டிகளைப் பயணங்களுக்கு வாடகைக்கு அமர்த்திக் கொள்வதில் இருந்து பாவனையாளர்கள் தூரமாகும் நிலைமையே ஏற்படும்.

தற்போது அவ்வாறான நிலமை உருவாகியுள்ளதாகப் பல ஓட்டோ சாரதிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலைமை ஓட்டோ சாரதிகளையும் அதன் உரிமையாளர்களையும் பொருளாதார ரீதியில் பாதிக்கவே செய்யும்.

அதேநேரம் ஓட்டோ முச்சக்கர வண்டிகளைப் பயணங்களுக்கு வாடகைக்கு அமர்த்துபவர்களிடம் தற்போதைய சூழலில் வகைதொகையின்றி அதிக கட்டணங்களை அறவிடுவதைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவையும் மேலெழுந்திருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தில் பயணங்களுக்கு இவ்வண்டிகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்பவர்களிடம் கட்டண அறிவீட்டுக்கென மீற்றர் முறைமை ஓட்டோ முச்சக்கர வண்டிகளுக்கு நடைமுறையில் இருக்கின்றது.

என்றாலும் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி கொள்ளும் பெரும்பாலான ஓட்டோ சாரதிகளும் உரிமையாளர்களும் அந்த மீற்றர்களைப் பயன்படுத்தாத நிலைமையும் காணப்படவே செய்கிறது. அதேநேரம் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் முச்சக்கர வண்டிகளுக்கு இம்மீற்றர் முறைமையை பரவலாக்கப்பட வேண்டிய தேவையும் காணப்படுகிறது. இவ்விடயங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளன.

ஆகவே முச்சக்கர வண்டிகளை பயண வாடகைக்கு அமர்த்துபவர்களிடம் கொள்ளை இலாபம் பெற்றுக் கொள்வதை தவிர்த்துக் கொள்வதில் அவற்றின் சாரதிகளும் உரிமையாளர்களும் கவனம் செலுத்த வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பும் இன்றைய அவசரத் தேவையும் ஆகும்.

தினகரன் ஆசிரியர் தலையங்கம்
2022.08.18

Tags: