யாழ். முதல்வர் மணிவண்ணன் கைது!

மிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு  மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர் பார்த்திபன் ஆகியோரை வாக்கு மூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் அழைத்திருந்தனர்.

இருவரிடமும் நீண்ட நேர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முதல்வரை இன்று (09.04.2021) அதிகாலை 2.15 மணியளவில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளுக்காக என யாழ்.மாநகர சபை முதல்வரை வவுனியாவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதேவேளை உறுப்பினர் வ.பார்த்திபனிடம் சுமார் 08 மணி நேர  விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலத்தினை பெற்ற பின்னர் விடுவித்துள்ளனர்.

யாழ். மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லையென மாநகர முதல்வர் சட்டதரணி வி. மணிவண்ணன் நேற்றையதினம் (08.04.2021) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இந்தப் புதிய முயற்சி கொழும்பு மாநகர சபையின் முன்னுதாரணமான செயற்பாட்டைப் பின்பற்றியே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

யாழ். மாநகர சபையால் மாநகரத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறைச் செயற்பாட்டுக்காக மாநகர காவல் படை நேற்றுமுன்தினம் (07.04.2021) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000 ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2000 ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக, மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்திருந்தார்

இந்நிலையில், அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள சீருடை விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பிரிவின் சீருடை வடிவம் என சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டிருநதது.

இச்சர்ச்சையைத் தொடர்ந்து யாழ். மாநகர சபையின் காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு அறிவுத்திய பொலிஸார், காவல் படையின் சீருடையை பெற்று அதனை கொழும்புக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த காவல் படையின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல் துறையின் சீருடைகளை ஒத்த சீருடை என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து , யாழ். மாநகர சபை ஆணையாளரை நேற்றுமுன்தினம் (07.04.2021) இரவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் நீண்ட விசாரணைகளை முன்னெடுத்து சுமார் 3 மணி நேரம் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

அதனை அடுத்து காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறும் , அவர்களின் சீருடைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் ஆணையாளருக்கு பணித்திருந்தனர்.

அதன் பிரகாரம் காவல் படையின் கடமைகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்களின் சீருடைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினகரன்
2021.04.09

Tags: