மாவையின் கடிதத்தைக் கிழித்தெறிந்த சம்பந்தன்!

மிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, தாம்; அப்பதவியில் இருந்து விலகுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.

தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வமான தலைவராக மாவை சேனாதிராசா நியமிக்கப்பட்டிருந்தாலும் கட்சியின் தலைமைப் பேர்வழியாக சம்பந்தனையே எல்லோரும் கருதுகின்றனர். அதனால் மாவை இரண்டாம் கட்ட நபராகவே கணிக்கப்படுகிறார். சம்பந்தன் செயற்பட முடியாமல் போகும் ஒரு காலகட்டத்திலேயே மாவை தமிழரசுக் கட்சியினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தலைவராக வரக்கூடிய சூழல் நிலவி வந்தது.

இந்தச் சூழ்நிலையில் தமிரசுக் கட்சியின் இன்னொரு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அரசியலுக்கு வந்த நாள் முதல் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியைக் குறிவைத்து கட்சிக்குள்ளும் வெளியிலும் தீவிரமாகக் காய்களை நகர்த்தி வருகின்றார்.

சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணியாக இருப்பதும், சம்பந்தனைப் போன்று தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் பேசக்கூடிய ஆற்றல் இருப்பதும் அவருக்கு கட்சிக்குள்ளும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கை ஈட்டிக் கொடுத்துள்ளது. இந்தத் தகைமைகள் எதுவும் மாவைக்கு இல்லாதது அவரைப் பின்தள்ள ஏதுவாக அமைந்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் சுமந்திரனுக்கு நெருக்கம் உள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எந்த நேரத்திலும் சந்திக்கக்கூடிய ஆற்றல் சுமந்திரனுக்கு உண்டு. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நாட்டில் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரை விட சுமந்திரன் மிகப்பெரும் பங்கு வகித்ததை எல்லோரும் பார்த்தார்கள்.

தவிரவும், சர்வதேச அரங்கிலும், குறிப்பாக மேற்கத்தைய சக்திகளிடமும் சுமந்திரனுக்கு செல்வாக்கு உண்டு.

இத்தகைய சூழ்நிலைகளைப் பயன்படுத்தி கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்ற சுமந்திரன் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றார். இதன் வெளிப்பாடே அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் “தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் சுமந்திரனே” என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதற்குக் காரணம்.

சுமந்திரனின் இந்த நகர்வுகளால் மாவை சேனாதிராசா பெரும் மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளாகியுள்ளார். இதுபற்றி அவர் தனது நெருங்கிய சகாக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தான் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பலிருந்து விலகப் போவதாகவும், அதற்கான காரணங்கள் என்னவென்பதை விளக்கியும் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடிதத்தை வாசித்துப் பார்த்த சம்பந்தன், “இந்தாளுக்கென்ன விசரே” எனக் கூறிவிட்டு கடிதத்தைக் கிழித்தெறிந்ததாகத் தெரிய வருகிறது.

ஆனால் நிலைமை முற்றி ஒருநாள் மோதலாக வெடிக்கும் நிலையே நிலவுவதாக மாவைக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

Tags: