டெல்லி வன்முறையை தடுப்பதில் அலட்சியம்!

பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸார் மீது குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் திங்கட்கிழமை முதல் நடந்து வரும் போராட்டங்களின் போது 34 உயிரிழப்புகளும், ஏராளமான சேதங்களும் நடந்துள்ளன.

வட கிழக்கு டெல்லியில் பெரும்பாலான பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. நேற்றுமுன்தினம் பகலில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்துவரும் கஜூரி கச்சி பகுதியில் கண்ணீர்ப்புகை குண்டு வீசப்பட்டுள்ளது.

கோகுல்புரியில் டயர் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதால், அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

மீட் நகர் அருகில் 200க்கும் மேற்பட்டவர்கள் மூவர்ண கொடி ஏந்தியபடி வீதியில் ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘வந்தே மாதரம்’ முழக்கமிட்டு சென்றனர். இந்தக் கூட்டத்தில் சில காவி நிற கொடிகளையும் காண முடிந்தது.

பஜன்புராவை சேர்ந்த பாபர்பூர் பகுதியில் உள்ள ஒரு பழைய நினைவிடம் அடித்து நொருக்கப்பட்டு, அதனை தீ வைத்து கொளுத்தும் முயற்சியும் நடந்துள்ளது. இந்த நினைவிடத்துக்கு 10-15 மீற்ற்ர் அருகே ஒரு பொலிஸ் உதவி நிலையம் உள்ளது. வன்முறை சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான கஜூரி காஸ் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தது இந்த பொலிஸ் உதவி நிலையம். அதனால் பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் இந்த பொலிஸ் உதவி நிலையம் இருந்துள்ளது.

இந்த நினைவிடத்துக்கு வெளியே உள்ள பூக்கடையொன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. உடைந்த செங்கற்கள், தெருவெங்கும் சிதறிக் கிடைக்கும் கற்களுக்கு மத்தியில் முற்றிலும் வித்தியாசமான ஓர் அமைதியான சூழல் காணப்படுகிறது.

நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ”திங்கட்கிழமை பகலில் இந்த வன்முறை தொடங்கியது. பெட்ரோல் பம்ப்களுக்கு சிலர் தீ வைத்தனர். சிலர் இந்தப் பகுதியில் உள்ள கடைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர்” என்று விபரித்தார்.

இந்தப் பகுதியை சேர்ந்த சிலர், நடந்த வன்முறை சம்பவங்களை தூண்டி விட்டதற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் இருந்ததாக குற்றம்சாட்டினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை எந்த அடிப்படையில் வைக்கிறார்கள் என்று அவர்கள் விளக்கவில்லை.

முஸ்லிம்களை ெபாலிசார் கொன்றதாக வன்முறை சம்பவங்கள் நடந்த இடத்தை சேர்ந்த ஓர் இளைஞர் குற்றம்சாட்டினார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை சேர்ந்த ஒருவர், வன்முறை சம்பவங்களை திட்டமிட்டு நடத்தி, சேதங்களை ஏற்படுத்தியவர்கள் வெளிப்பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்றும், அவர்களுடன் இருந்த பொலிசார் இதனை தடுத்து நிறுத்தவில்லை என்றும் கூறினார்.

5-6 மணி நேரங்களுக்கு கல்வீச்சு நடந்ததாகவும், அதனை பொலிசார் தடுத்து நிறுத்தவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

ஆசாத் சிக்கன் என்ற கடையின் உரிமையாளரான புரே கான் கூறுகையில், கல்வீச்சு நடந்தபோது அதனை தடுக்க பொலிசார் முயற்சிக்கவில்லை. எங்களால் வெளியே ஓடவும் முடியவில்லை. எங்கள் கட்டடத்தின் கீழே உள்ள பகுதிக்கு தீ வைக்கப்பட்டதால் நாங்கள் உடனடியாக மேல்மாடிக்கு சென்றோம்” என்று கூறினார்.

இவரது வீட்டில் இருந்த ஒரு மூதாட்டி, ”எங்கள் வீட்டில் எதுவும் தற்போது இல்லை. எல்லாம் தீக்கிரையாகிவிட்டது” என்று அழுகுரலில் கூறினார்.

சந்த்பாக் பகுதியில் வசித்துவரும் ஜாஹிட் என்பவர் கூறுகையில், ”இந்த பகுதியால் இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லை. இந்த பகுதியில் பெட்ரோல் குண்டுகள் எறிந்தவர்கள் அனைவரும் வேறு பகுதியில் இருந்து இங்கு வரவழைக்கப்பட்டவர்கள். அவர்களால் தான் இந்த வன்முறைகள் அரங்கேறின” என்றார்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா ஆகியோரே இந்த வன்முறைகளுக்கு காரணம் என்று ஜாஹிட் குற்றம்சாட்டினார்.

2015 டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கபில் மிஸ்ரா, கட்சியுடனான மோதலால் 2019இல் பா.ஜகவில் இணைந்தார்.

இந்த பகுதியில் வாழ்ந்துவரும் சஞ்சய் தோமர் கூறுகையில், ”பல ஆண்டுகளாக சந்த்பாக் பகுதியில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். நேற்று போல எந்த ஒரு நாளும் மோசமாக இருந்ததில்லை. தற்போதைய நிலை மனதில் வலியை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.

-தினகரன்
2020.02.27

‘‘ராஜதர்மத்தை காப்பாற்றுங்கள்’’ – டெல்லி கலவரம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் மனு

congress-invokes-raj-dharma

டெல்லி கலவர விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஏற்கெனவே பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் இறந்தநிலையில் மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர்.

பின்னர் இதுகுறித்து மன்மோகன் சிங் கூறுகையில் ‘‘டெல்லியில் நடந்த கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் பெரிய அவமானம். அரசு நிர்வாகம் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கதக்கது. ராஜதர்மத்தை காப்பற்ற வேண்டும் என குடியரசு தலைவரிடம் வலியுறுத்தினோம்.’’ எனக் கூறினார்.

Tags: