போதைப்பொருள் அரக்கனிலிருந்து எமது இளைய சமுதாயத்தை காப்பாற்றுவோம்!

எஸ். அஷ்ரப்கான்

போதைவஸ்து பாவனை இலங்கையில் அதிகரித்து வருகிறது. இது பாரிய சுகாதார மற்றும் அனைத்து சீர்கேடுகளையும் உருவாக்கி வருகிறது. ஐஸ் என்பது ஆய்வகங்களில் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு இரசாயனப் பொருளாகும்.

இது மனிதனின் மைய மூளை நரம்புத்தொகுதியைத் தூண்டி தற்காலிகமான ஒரு இன்பத்தை வழங்கும். இந்தப் போதைப் பொருள் மிகக்கொடியது. இதனை ஒரு தடவை நுகர்ந்தாலும் அதனுள் இருந்து மீள முடியாமல் போய் விடும்.

ஐஸ் பாவனை ஊடாக கொடிய விளைவுகள் ஏற்படுகின்றன. வயது வித்தியாசம் இன்றி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரை விட நேரிடும். வாழ்க்கை வெறுத்து, நிதானம் தவறிய நிலைக்கு தள்ளப்பட்டு சிறுபிள்ளை செய்யும் வேலை ஒன்றைக் கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படும். தொடர்ந்து பல நாட்கள் தூக்கம் இல்லாமல் சென்று, மீண்டும் தொடர்ந்து பல நாட்கள் தொடர்தூக்கத்தில் இருக்க நேரிடும். வழமையாக இருக்கும் உடல் எடை தீவிரமாகக் குறைந்து மோசமான உடல் தோற்றத்தை உருவாக்கும்.

பற்கள் அனைத்தும் கறை படிந்து, உருக்குலைந்து அருவருக்கத்தக்க தோற்றத்தை உருவாக்கும். இரத்தபந்த உறவுகளை கூட அடையாளம் தெரியாமல் சென்று ஆண், பெண் வேறுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் பார்க்காமல் நடந்துகொள்ளும் கொடூர மிருகங்கள் போல் நடவடிக்கைகள் மாற்றமடையும்.

இறுதியில் தன்னை தானே தாக்கிக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டு வாழ்க்கையை முடிக்க நேரிடும். பிள்ளைகள் இந்தப் பாவனைக்கு உள்ளாகி இருப்பார்களா எவ்வாறு அறிவதில் கவனம் செலுத்த வேண்டும்.

உடல் எடையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுதல், உடல் தோற்றங்களில் அக்கறை காட்டாத விதத்தில் நடந்து கொள்ளுதல், வழமைக்கு மாற்றமான செயல் நடத்தைகள், காரணம் இல்லாமல் சிரித்தல், காரணம் இல்லாமல் பேசுதல் போன்ற நடவடிக்கைகள், எக்காரணமும் இன்றி தீவிரமாக உடல் வியர்த்தல், கண்களை வேகமாக அசைத்தல் அல்லது கண்கள் அரைவாசி மூடியது போன்று சிவந்து காணப்படுதல், வழமைக்கு மாற்றமாக உணவுகளில் விருப்பமின்றி நடத்தல் போன்றன அறிகுறிகளாகும்.

ஆரம்பப் பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் உயர்தரங்கள் கற்கும் மாணவர்கள் வரை அனைவரும் விஷமிகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் என்று தெரியாமல் கூட பிள்ளைகளில் உடலுக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வீட்டு உணவுகளை மாத்திரம் பாடசாலைக்கு கொடுத்து அனுப்புதல் முக்கியம். பாடசாலை சிற்றுண்டிகளில் கூட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எவரும் எதையும் செய்யலாம் என்ற நிலைமை உருவாகி உள்ளது.இந்த விடயத்தில் வித்தியாசமான நடத்தைகளைக் கொண்ட பிள்ளைகளை அவதானித்து வழிப்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கட்டாய கடமையாகும்.

பகுதி நேர வகுப்புக்கள் அனைத்தையும் தீவிரமாக கண்காணிப்பு செய்தல் வேண்டும். வீட்டு, வகுப்பறை குப்பைத் தொட்டிகளை அடிக்கடி பரிசோதனை செய்தல், கண்ணாடி குழாய்கள், மூடி இல்லாத பேனா, எரித்த பத்திரிகை, மூடி இல்லாத லைட்டர் போன்றவைகள் தென்பட்டால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்துடன் பெற்றோர், பிள்ளைகளுடன் அதிக நெருக்கத்தை உருவாக்க வேண்டும்.

செல்போனின் செயற்பாடுகள் என்றும் கண்காணிப்பில் இருக்கக் கூடியதாக அமைத்து வைக்க வேண்டும். காரணம் இன்றி பிள்ளைகளுக்கு பணம் கொடுப்பதை முற்று முழுதாக தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். பெண்பிள்ளைகளும் இலக்கு வைக்கப்படுவதோடு பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

யாரையும் போதைப் பொருளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகித்தால் உடனடியாக உரிய தரப்பினருக்கு தகவல் வழங்குதல் வேண்டும். நிதானமாக சிந்தித்து செயல்படுவதன் ஊடாக போதை மாபியாக்களி டமிருந்து எமது பிள்ளைகளையும் மாணவர்களையும் பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

Tags: