சினேகலதா ரெட்டி: அதிகாரத்துக்கு அடிபணியாத துணிவு!

-ப்ரதிமா

னித குலத்தின் முதல் ஆதிக்கம், பெண் மீது ஆண் நிகழ்த்தியது தான் என்று வரலாறு விவரிக்கிறது. வர்க்கம், மதம், இனம் உள்ளிட்ட பிற ஆதிக்கமெல்லாம் அதற்குப் பிறகு உருவாக்கப்பட்டவை. இப்படி எல்லா வகையிலும் அடிமைப்படுத்தப்படும் பெண்கள்தாம், விடுதலைக்கான குரலாகவும் ஒலிக்கிறார்கள். அதிகாரத்தின் கொடுங்கரங்கள் எளியவர்களை நசுக்கும்போதெல்லாம், அதற்கு எதிராகப் பெண்கள் போராடத் தவறுவதில்லை. சில நேரம் பெண்களின் வழியாகச் செயல்படுத்தப்படும் அடக்குமுறைக்கு எதிராகவும் அவர்கள் போராட வேண்டியிருந்தது.

போராட்டத்தின் வடிவம் வெவ்வேறானதாக இருந்தாலும் அவர்கள் காலந்தோறும் நமக்கு நம்பிக்கையளித்தபடி இருக்கிறார்கள். இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் அரசியல் அடக்குமுறையை எதிர்த்த சினேகலதா ரெட்டி அப்படியான நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர்.

இளமையில் அரசியல்

ஆந்திர மாநிலத்தில் 1932-ல் சினேகலதா (Snehalatha Reddy:1932 – 20 January 1977) பிறந்தார். சிறு வயது முதலே பொது வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் இருந்தார். ஆங்கிலேயரின் கொடுங் கோலாட்சியை வெறுத்தார். கல்லூரி மாணவியான அவர், தன்னளவில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்திய உடைகளை அணிந்தும் நெற்றி யில் பெரிய திலகமிட்டுக்கொண்டும் கல்லூரிக்குச் சென்றார். ஓடியாடி விளையாடும் பருவத்தில் விடு தலைப் போராட்டங்களை விரும்பினார். நாடகத் துறையில் பேரார்வம் கொண்டிருந்த இவர், அதில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தினார். சென்னையில் ஆங்கில நாடகங்களை அரங்கேற்றி வரும் ‘மெட்ராஸ் பிளேயர்ஸ்’ குழுவைத் தொடங்கியவர்களில் சினேகாவும் ஒருவர். பெங்களூருவில் குடியேறிய பிறகு அங்கே, ‘அபிநயா’ நாடகக் குழுவை, சக நாடகக் கலைஞர் அசோக் மந்தண்ணாவுடன் இணைந்து தொடங்கினார்.

திரைத்துறையிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். பெயருக்கு நடிக்காமல் பெயர் சொல்லும் கதா பாத்திரங்களில் நடித்தார். வெளியானபோது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பிய ‘சம்ஸ்காரா’ கன்னடப் படம், சினேகலதாவை நாடறியச் செய்தது. சாதிய, சனாதன விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்கிய அந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்று ‘மெட்ராஸ் சென்சார் போர்டு’ அந்தப் படத்துக்குத் தடைவிதித்தது. தடையை நீக்குவதற்காக அந்தப் படத்தின் இயக்குநரும் தன் கணவருமான பட்டாபிராமுடன் இணைந்து போராடி வென்றார். 1970-ல் வெளியிடப்பட்டு, அந்த ஆண்டுக்கான தேசிய விருதையும் அந்தப் படம் வென்றது.

பாய்ந்தது ‘மிசா’

நடிகை, தயாரிப்பாளர், நாடக ஆசிரியர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்ட சினேகலதா, தன்னைப் போன்ற ஒருவரைத்தான் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தார். கவிஞர், கணிதவியலாளர், இயக்குநர் என முப்பெரும் அடையாளங்களைக் கொண்ட பட்டாபிராம ரெட்டியை மணந்தார். பொதுநலனில் அக்கறைகொண்ட இந்தத் தம்பதி, சுதந்திரப் போராட்ட வீரர் ராம்மனோகர் லோகியாவின் செயல்பாடுகளால் கவரப்பட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். லோகியாவின் சீடர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸும் ஒருவர் என்பதால் இந்தத் தம்பதிக்கு அவருடைய அறிமுகமும் கிடைத்தது. நெருக்கடி நிலைக்கு எதிரான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் செயல்பாடுகளில் இவர்கள் பங்கேற்றனர். ஆனால், தங்கள் எதிர்ப்பை அகிம்சை வழியில் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் ஸ்நேகலதா உறுதியுடன் இருந்தார்.

25 ஜூன் 1975-க்கும் 21 மார்ச் 1977-க்கும் இடைப்பட்ட நாட்கள் இந்திய வரலாற்றில் கொந்தளிப்பான கறுப்பு நாட்கள். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் வழிகாட்டுதலில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை, நாட்டின் அமைதியைக் குலைத்தது. அரசின் இந்த முடிவுக்கு எதிரான குரல்கள் அனைத்தும் நசுக்கப்பட்டன. நெருக்கடி நிலையின்போது தொடரப்பட்ட வழக்குகளில் முக்கியமானது ‘பரோடா டைனமைட் வழக்கு’. அரசாங்கக் கட்டிடங்களையும் தண்டவாளங்களையும் தகர்ப்பதற்காக டைனமைட் வெடிபொருளைப் பதுக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஜார்ஜ் ஃபெர்னாண்டஸும் அவருடைய நண்பர்கள் 24 பேரும் கைது செய்யப்பட்டனர். குற்றப்பத்திரிகையில் சினேகலதாவின் பெயர் இடம் பெற்றிருக்கவில்லை. இருந்தபோதும், அந்தக் குழுவினரின் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்பட்டு மிசா (Maintenance of Internal Security Act) சட்டத்தின்கீழ் ஸ்நேகலதா கைது செய்யப்பட்டார்.

சிறைச்சாலை டைரி

1976 மே 2 அன்று கைதுசெய்யப்பட்டு, எந்த விசாரணையும் இன்றி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். நாள்பட்ட ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை சிறையில் அனுபவித்த கொடுமைகளாலும் சிகிச்சை மறுக்கப்பட்டதாலும் மோசமடைந்தது. இரண்டு முறை ஆஸ்துமா தீவிரமடைந்து, சுயநினைவை இழந்தார். இவ்வளவு இன்னல்களுக்கு நடுவிலும் உள்ளொளியை அவர் இழக்கவில்லை. சிறையில் இருக்கிறவர்களின் உரிமைக்காகப் போராடினார். கைதிகள் கண்மூடித்தனமாகத் தாக்கப்படுவதைக் கண்டித்தும் சிறையில் வழங்கப்படும் உணவின் தரத்தை உயர்த்தவும் குரல்கொடுத்தார். சிறையில் தன்னுடன் இருந்தவர்களுக்குப் பாடல்களைக் கற்றுத்தந்தார். நடிக்கச் சொல்லித் தந்து, நாடகங்களை அரங்கேற்றினார்.

அநீதியை உறுதியுடனும் தீவிரமாகவும் எதிர்த்தார் ஸ்நேகலதா. படங்களில் நடித்துக்கொண்டு பணமும் புகழும் பெற்று சுகவாழ்க்கை வாழ்வதில் அவருக்கு விருப்பமில்லை. அதனால்தான், இளம் வயதில் சிறையில் வாடினார். நாடே பற்றி எரிகிறபோது நாம் காக்கும் கள்ள மௌனமும் வெளிப்படுத்தும் அலட்சியமும் கொடூரத்தின் உச்சம் என்பது ஸ்நேகாவின் நிலைப்பாடு.

சிறையில் இருந்தபோது அங்கே நடந்தவற்றைச் சிறு நாட்குறிப்பேட்டில் பதிவுசெய்தார் சினேகலதா. அவர் பதிவு செய்த அனுபவங்களை யார் படித்தாலும் உடைந்துபோகக்கூடும். சிறையில் மிகக் கொடூரமான நாட்கள் என்று ஐந்து நாட்களைக் குறிப்பிட்டிருக்கிறார் சினேகலதா. ‘சிறைக்குள் வருகிற பெண்ணை முதல் வேளையாகப் பலர் பார்க்க நிர்வாணப்படுத்துவார்கள். ஆணோ, பெண்ணோ ஒருவர் சிறைக்குள் வருவதே போதுமான தண்டனைதானே. அவர்களது உடலை இப்படி அவமானப்படுத்திச் சிறுமைப்படுத்த வேண்டுமா? இந்த வக்கிரத்துக்கு யார் பொறுப்பேற்பார்கள்? நாம் மனிதர்களாகப் பிறந்ததன் பொருள் என்ன? மனிதரின் நிலையை அடுத்த நிலைக்கு உயர்த்துவதாகத்தானே இருக்க முடியும்?’ என்று தன் டைரியில் எழுதியுள்ளார் சினேகலதா.

பிறர் நலன் கருதிய வாழ்க்கை

அவரது டைரிக் குறிப்புகளைத் தொகுத்து கர்நாடக மனித உரிமைகள் ஆணையம் 1977-ல் புத்தகமாக வெளியிட்டது. பெண்ணிய வரலாற்று ஆய்வாளரான உமா சக்ரவர்த்தி, சினேகலதாவின் அரசியல் செயல்பாடுகளையும் அவரது சிறை அனுபவங்களையும் மையமாக வைத்து, ‘Prison Diaries’ என்கிற ஆவணப்படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார். சினேகலதாவின் டைரிக் குறிப்புகளோடு அவருடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் பேட்டியும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

சினேகலதாவின் மகளும் செயற்பாட்டாளருமான நந்தனா ரெட்டி, “அந்தச் சிறையில் இருந்த ஒரே பெண் செயற்பாட்டாளர் என் அம்மா மட்டுமே. அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்” என்று அந்த ஆவணப்படத்தில் சொல்லியிருக்கிறார். மேலும், தன் அம்மாவின் நினைவு நாளையொட்டி அவர் எழுதிய நினைவுக் குறிப்பில், “சிறையில் இருந்தபோது என் அம்மா விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். எனக்கு போன் செய்து, ‘மீண்டும் இங்கே வந்திருக்கிறேன், வர முடியுமா?’ எனக் கேட்டர். நான் சென்றபோது தலைமை மருத்துவ அதிகாரியின் அறையில் அமர்ந்தபடி பொதுச் சுகாதாரம் குறித்தும் சிறையில் பெண் கைதிகளின் பராமரிப்பு குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தார்” என்று எழுதியிருக்கிறார். சிறையில் வாடியபோதும் பொது நலன் சார்ந்தே சினேகலதா இயங்கியிருக்கிறார்.

சினேகலதாவின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து எங்கே அவர் சிறையிலேயே இறந்துவிடுவாரோ என்று பயந்து 1977 ஜனவரி 15 அன்று பரோலில் வெளியே அனுப்பப்பட்டார். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உடலும் மனமும் பாதிக்கபட்டிருந்தவர், அடுத்த ஐந்தாம் நாள் மரணமடைந்தார். நெருக்கடி நிலையால் பழிவாங்கப்பட்ட தியாகிகளில் சினேகலதா முதன்மையானவர். உரிமைகள் மறுக்கப்படும்போதும் அநீதி தலைவிரித்தாடும்போதும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இவரைப் போன்றவர்கள் தங்கள் வாழ்வாலும் மறைவாலும் உணர்த்திவிட்டுச் செல்கின்றனர்.

மே 2, 2021: மிசா சட்டத்தின் கீழ் ஸ்நேகலதா கைது செய்யப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவு

Tags: