தோழர் மைதிலி சிவராமன் கொரோனா தொற்றால் காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாதர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான மைதிலி சிவராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் இன்று (30/05/2021) காலமானார். அவருக்கு வயது 81.
1939ஆம் ஆண்டு பிறந்த மைதிலி, பள்ளிக் கல்வியை முடித்து மாநிலக் கல்லூரியில் அரசியல் விஞ்ஞான பட்டப்படிப்பை (பி.ஏ.ஹானர்ஸ்) தேர்ந்தெடுத்தார். முதல் வகுப்பில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் டெல்லியில் அமைந்த இந்தியன் ஸ்கூல் ஆப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுவனத்தில் மாஸ்டர்ஸ் டிப்ளமோ படித்தார். கல்வி உதவி பெற்று அமெரிக்காவில் உள்ள சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
படிப்பு முடித்த பிறகு நியூயார்க் மாநில அரசின் நிதித்துறையில் ஓராண்டு வேலை செய்தார். 1966ஆம் ஆண்டு ஐ.நா. மன்றத்தில் மூன்றாம் உலக நாடுகளைப் பற்றி இந்திய அரசுக்கு அறிக்கையளிக்கும் பணியில் சேர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோது கியூபா சென்று வந்தார். அவர் அமெரிக்காவில் இருந்தபோது வியட்நாம் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் பரவலாக எழுச்சி மிக்க இயக்கம் நடந்தது. இந்த இயக்கம் மைதிலியின் சிந்தனையில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது.
அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு உருவானது. வேலையைத் துறந்து 1968-ல் தமிழகம் திரும்பினார். அவர் 1968ஆம் ஆண்டு கீழவெண்மணியில் நடந்த 41 விவசாயக் கூலித்தொழிலாளர் படுகொலைகளைக் கண்டு நேரடியாக அங்கு சென்று விசாரணை நடத்தி ஆங்கிலத்தில் அதைப் புத்தகமாக வெளிக்கொண்டு வந்தார். அதன் மூலம் நிலப்பிரபுத்துவ சாதியப் படுகொலையின் கோரம் உலகுக்குத் தெரியவந்தது. விவாதப் பொருளாக மாறியது.
வி.பி.சிந்தனுடன் அவருக்கு ஏற்பட்ட சந்திப்பு மார்க்சிய இயக்கம் பக்கம் அவரைத் திருப்பியது. 1973ஆம் ஆண்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநில அளவில் உருவானது. கே.பி.ஜானகியம்மாள் தலைவராகவும், பாப்பா உமாநாத் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். மைதிலி துணைத் தலைவராகச் செயல்பட்டார். தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டபோது அதன் முதல் அமைப்பாளராகச் செயல்பட்டார்.
கட்சியின் சார்பாகவும், மாதர் சங்கத்தின் சார்பாகவும் மாநிலம் முழுவதும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவார். மைதிலி ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாகப் பேசுவார். அவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பல ஆண்டுகள் பணியாற்றியவர்.
1970களில் மாணவ அமைப்புகள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்த பெண் தலைவர்களில் ஒருவர் மைதிலி சிவராமன். 70களில் ப.சிதம்பரம், என்.ராம் உள்ளிட்டோருடன் சேர்ந்து ரேடிக்கல் ரெவ்யூ என்ற ஆங்கில இதழை நடத்தினார். தமிழகத்தில் 1970 முதல் 40 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிய இயக்கத்திலும், மாதர் சங்கத்திலும் தன்னை இணைத்துக் களம் கண்டவர்.
ஜானகியம்மாள், பாப்பா உமாநாத் போன்ற தலைவர்கள் வரிசையில் மாதர் சங்கத்தைக் கட்டியமைத்த பெருமை இவருக்கு உண்டு. அதன் அகில இந்திய நிர்வாகிகளில் ஒருவராக விளங்கினார். இளம் வயதில் ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வாளராகப் பணிபுரிந்து, அந்தப் பணியிலிருந்து விலகி, இயக்கத்தின் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டவர். மார்க்சிய அறிவு ஜீவியாக விளங்கினாலும் எளியோரிடம் பழகுவதில் இவரது எளிமையான நடத்தை சாதாரண மக்களிடமும் இவரைக் கொண்டு சேர்த்தது.
சிதம்பரம் பத்மினி பாலியல் வழக்கு, வாச்சாத்தி வழக்கு, சென்னை மீனவர் போராட்டம் போன்றவற்றில் இவரது பங்கு உண்டு. வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைக்க அதை ஆவணப்படுத்திய பெருமைமிக்கவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் முக்கிய தலைவர்கலில் ஒருவராக விளங்கினார்.
‘கஸ்தூர்பா: மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள்’ என்ற புத்தகமும், ‘ஒரு வாழ்க்கையின் துகள்கள் (Fragments Of Life)’ என்ற புத்தகமும் இவரது சிறப்பான படைப்புகளாகும்.
வயோதிபம் காரணமாக நேரடி அரசியலிலிருந்து விலகினார். சில ஆண்டுகளாக ‘அல்சைமர்’ என்ற தீவிர ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு அவரது கணவர் கருணாகரன், மகள் கல்பனா, மருமகன் பாலாஜி ஆகியோர் கவனிப்பில் தோழர் மைதிலி இருந்தார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனையடுத்து அவருக்கு நடத்திய பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மைதிலி சிவராமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மைதிலி சிவராமன்: வாளேந்திய தேவதை!
– த.நீதிராஜன்
ஐக்கிய நாடுகளின் சபையில் ஆய்வுப் பணி எனும் வானம் வரை 1960களில் பறந்தவர் மைதிலி. ஆனாலும் அவரது கவனம் எல்லாம் 1968இல் கீழவெண்மணியில் ஒரே குடிசைக்குள் வைத்து எரிக்கப்பட்ட 44 தலித் உயிர்களைப் பற்றிய பதைபதைப்பில் இருந்தது.
கீழவெண்மணிப் படுகொலைகளைப் பற்றியும் வாச்சாத்தி வன்கொடுமைகளைப் பற்றியும் உலகம் அறியச் செய்வதில் அவர் தனது தனித்துவமான திறன்களைப் பயன்படுத்தியவர்.
கீழவெண்மணி படுகொலைகளைப் பற்றிய உண்மைகளை ஆங்கிலத்தில் எழுதி உலகறியச் செய்த மைதிலி, அன்று தமிழக அரசு அறிவித்த கணபதியா பிள்ளை ஆணையத்திடம் விவசாயிகளின் பிரச்சனைகளை பதிவு செய்து தீர்வு காண்பதற்கு முயன்றவர்.
சுதந்திர இந்தியாவில் இன்றுவரை பல்வேறுவிதமான வன்கொடுமைகள் பழங்குடிகளுக்கும் பட்டியல் சாதியினருக்கும் எதிராக நடைபெற்றுள்ளன. அவற்றுக்கு எதிராக பலவகையான போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. ஆனால், அவற்றில், வாச்சாத்தி வன்கொடுமைகளுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பழங்குடி மக்கள் நடத்திய சட்டப்போராட்டம் மட்டுமே உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு தண்டனைகள் பெற்றுத் தந்தது.
சுமார் 20 ஆண்டுகள் நீடித்த இந்தப் போராட்டத்தில் மைதிலி சிவராமனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளது. இத்தகைய போராட்டங்களின்போது மைதிலிசிவராமன் என்னோடு உரையாடியிருக்கிறார் என்பார் அடித்தள மக்களுக்கான போராளியாக வாழ்ந்து மறைந்த பி.எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு).
பெண் உரிமைகள், தலித் – பழங்குடியினர் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் என அனைத்துவிதமான போராட்டங்களையும் முன்னெடுத்த முழுமையான தலைவர் அவர்.
1975களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்திலும் பல்லாவரம் மலையில் கல் உடைக்கும் தொழிலைச் செய்துவந்த தலித் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர். சங்கத்தின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக எங்களது குடிசைகளில் வந்து அவர் தங்கினார் என்று இன்றும் பேசுகிற முதிய பெண்கள் பல்லாவரத்தில் இருக்கிறார்கள்.
தினக்கூலிக்கு கல் உடைத்து வந்த அவர்களில் 500 பேருக்கு சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பணி கிடைப்பதில் முன்நின்றவர். பல்லாவரம் மலையடிவாரத்தில் இன்னமும் மைதிலி சிவராமன் பெயர் பொறித்த செங்கொடிக் கம்பம் உள்ளது.
சின்னச் சின்ன செயல்களின் வழியாக ஒரு பெரும் போராட்டத்தை உருவாக்கி வழிநடத்துகிற செயல்பாட்டாளராகவும், அதே நேரத்தில் இத்தகைய போராட்ட அனுபவங்களோடு உலகளாவிய தத்துவங்களை இணைக்கிற மேதமை கொண்ட எழுத்தாளர்களாகவும் தலைவர்கள் உருவாவது மிகவும் அரிது. அத்தகைய அரிதான தலைவர்களில் ஒருவர் மைதிலி.
மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்களிடையே நீடித்த ஆணாதிக்க உணர்வுகளை கேள்விக்குள்ளாக்கியவர் அவர். ஒரு கட்சி வகுப்பில் அவர் பெண் உரிமைகளை பாதுகாக்கும் கடமை பற்றி விளக்கியபோது, ஒரு தோழர் எழுந்து நான் என் சகோதரிகளை மாதர் சங்கத்தில் சேர்த்தவுடனே அவர்கள் எனது துணிகளைத் துவைக்க மாட்டேன் என்கிறார்களே என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஆனாலும் அவரது கருத்துகள் பெரும்பாலான ஆண் தோழர்களிடையே மாற்றங்களையே கொண்டுவந்தது.
பொதுவாகவே, மைதிலியின் உரைகள் ஆழமான தத்துவ முக்கியத்துவம் கொண்டவை. 2001இல் ஒரு மகளிர் தினத்தில் அவர் பேசும்போது, “ இந்துத்வாவின் மையம் பார்ப்பனியமே” என்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்வதில் திருப்புமுனையாக எனக்கு அந்த வரையறுப்பு இருந்தது. அரசியல் பொருளாதார சித்தாந்தங்களின் முக்கியத்துவத்தை அறிந்த தலைவராக மைதிலி இருந்தபோதும், இந்திய சமூகத்துக்கே உரிய சுரண்டல் கருத்துகளோடு வெளிப்படையாக மோதிய வீராங்கனையாகவும் இருந்தார்.
மைதிலியின் திறன்கள் மக்களுக்குப் பயன்படுவதற்குப் போதுமான அளவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்கிறார் அவரது சமகால செயல்பாட்டாளர் சவுத் விஷன் பாலாஜி.
மென்மையான குரலில் ஆழமாகவும் அழுத்தமாகவும் உறுதியாகவும் பேசுவார் மைதிலி. அதுவே அவரது ஆளுமையின் தனித்துவமான வெளிப்பாடு. இந்திய மரபின் சாந்தமும் அமைதியும் உலகு தழுவிய முறையில் அவர் சேகரித்த அறிவின் ஆழமும் அகலமும் அவற்றை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக பயன்படுத்துவதில் அவருக்கு இருந்த வைராக்கியமும் உறுதியும் ஒன்றுகலந்து அவரது ஆளுமை உருவாகியிருந்தது.
அவரது செயல்பாட்டின் தாக்கத்தோடு செயல்படுவோர் ஏராளம். நமது செயல்பாடுகள் வழியாகவும் மைதிலி இன்னமும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். இன்னும் நீண்டகாலத்துக்கு அவர் செயல்படவே செய்வார்.
செவ்வணக்கம் தோழர் மைதிலி!