நலிந்துபோயுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதா மூழ்கும் கப்பல்

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

கொழும்புத் துறைமுகத்திற்கு அப்பால் எரிந்துபோன கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு  இழுத்துச்செல்லும் நடவடிக்கை கப்பல் மூழ்குவதனால் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கப்பலை வெறும் 500 மீற்றர் மாத்திரமே இழுத்துச் செல்ல முடிந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வாரமே கப்பல் மூழ்கிவிடும் நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டாலும் அவ்வாறு நிகழவில்லை. ஆனால் தற்போது அதில் நீர் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும் கப்பல் அனர்த்தம் இலங்கைக்கு மிகப்பெரியளவில் குறுங்காலத்திலும் நீண்டகாலத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரிகிறது. கப்பலில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகளின் பட்டியல் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நோக்குமிடத்து அந்த அனர்த்தம் காரணமாக கண்ணுக்குத் தெரிந்த மற்றும் கண்ணுக்குத்தெரியாத நீடித்த பாதிப்புகள் ஏற்படுமெனக் கூறலாம். இவற்றை பொருளாதார ரீதியான பாதிப்புகள் எனவும் சுற்றாடல் சுகாதார மற்றும் சமூக கலாசார பாதிப்புகள் எனவும் வகைப்படுத்தலாம்.

இந்தக் கப்பல் இரண்டு துறைமுகங்களில் நங்கூரமிட மறுக்கப்பட்ட நிலையிலேயே இலங்கைக்கு வந்திருக்கிறது. அவ்வாறாயின் இலங்கைத் துறைமுகத்தில் அது ஏன் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அதனைக் கையாளும் வசதிகள் இலங்கைத் துறைமுகத்தில் இருந்தனவா போன்ற கேள்விகள் பிரதானமாக எல்லா மட்டங்களிலும் எழுகின்றன. இதுபற்றிய முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குறைந்த பட்சம் இன்னொரு தடவை இவ்வாறு நிகழாது இருப்பதை உரிய தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும்.

Map locating the area off Sri Lankan west coast where a burnt-out container ship started sinking on Wednesday. – AFP / AFP

அது மட்டுமன்றி கப்பல் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த வேளை அது தொடர்பில் பொறுப்புடைய தரப்பினர் கொடுத்த விளக்கங்கள் சிறுபிள்ளைத் தனமானவையாக இருந்தன. கப்பல் எரிந்தாலென்ன காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து இலங்கை பெருந்தொகைப் பணத்தை நட்டஈடாகப் பெற்றுக்கொள்ளமுடியும் என காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர். அப்பொறுப்பு வாய்ந்தவர்களின் பொது அறிவுப் புலமைபற்றி பலர் பொதுவெளியில் திட்டித்தீர்த்தனர்.

எவருடைய தவறோ இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு என்ன தீர்வு? இதனால் ஏற்படவுள்ள அனர்த்த இடர்களை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றி சிந்தித்துச் செயற்படுவதே மதிநுட்பம் வாய்ந்ததாக இப்போதைக்கு இருக்க முடியும்.

கப்பல் எரிய ஆரம்பித்து அதிலிருந்த பொருட்கள் கடலில் வீழ்ந்து கரையொதுங்க ஆரம்பித்ததும் மக்களை அவற்றைத் தொடவேண்டாம் என எச்சரித்தமை கரையொதுங்கும் கழிவுகளை முறையாக சேகரித்து களஞ்சியப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கரையோரப் பாதுகாப்பைப் பலப்படுத்தியமை என்பன பாராட்டப்பட வேண்டிவை. அத்துடன் நாரா போன்ற இதுபற்றிய தொழிற் சிறப்பு வாய்ந்த நிறுவனங்களின் உபகரணங்களையும் நிபுணர்களையும் சம்பவ இடத்திற்கு உடனே அனுப்பி அனர்த்த மதிப்பீடுகளை மேற்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இதுபோன்ற பிரச்சினைகளை கையாள்வதில் சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த நெதர்லாந்து நிறுவனமொன்றின் பங்களிப்பைப் பெற்று நிலைமையைக் கையாள முற்பட்டமையும் சரியான நடவடிக்கைகளாகும்.

குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. இரசாயனப் பொருட்கள் கடல்நீரில் கலந்துள்ளமையினால் கடலில் இறங்குவதோ கடல் நீரில் நனைவதோ சுகாதாரப் பிரச்சினைகளை உருவாக்கும். தற்போது நடைமுறையிலுள்ள பயணத்தடை காரணமாக மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளதால் பாதிப்புகள் குறைவாக இருந்த போதிலும் மிதந்துவரும் பொருட்களை சேகரித்துப் பணம் தேடும் நோக்கில் சில பிரகிருதிகள் கடலில் இறங்கிச் செயற்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகிறது.

கப்பலின் கழிவுகள் வடக்கே நீர்கொழும்பு வரையிலும் தெற்கே காலி வரையிலும் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே சிலநூறு கிலோ மீற்றர்கள் தூரமுள்ள கரையோரப் பிரதேசம் அனர்த்த வலயமாக மாறியுள்ளது. எரிந்த கப்பலிலிருந்த இரசாயனங்கள் வளிமண்டலத்தில் கலந்துள்ள நிலையில் தற்போது குறிப்பிட்ட பிரதேசங்களில் பெய்துவரும் மழை நீரில் அமிலங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளதால் அதில் நனைவது ஆபத்து விளைவிக்கலாம். வாகனங்கள் அதில் நனைவதால் அவற்றின் மேற்பரப்புப் பூச்சுக்கள் பாதிக்கப்படலாம். தாவரங்களிலும் இந்த இரசாயனங்கள் மழைநீர் மூலம் இறங்கலாம்.

ஏற்கெனவே கடல் நீரில் கலந்துள்ள இரசாயனங்களால் கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதைக் காணமுடிகிறது. இலங்கையின் கடல் பல்வகைத்தன்மையின் முக்கிய கூறாகிய பவளப்பாறைகள் சிதைந்து போகக்கூடும். இவை ஆண்டொன்றில் மூன்று சென்ரி மீற்றர் அளவிலேயே வளர்வதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் மேற்குக் கரையில் பல்வகைமைப்பட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன. இவை மிகப்பெரியளவில் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக ஆமைகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கப்பலிலிருந்து வெளியேறிய மிகப் பெரும் தொகையிலான பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மீன்களால் விழுங்கப்படுவதுடன் அவற்றின் சுவாசத் தொகுதியிலும் சிக்கிக் கொண்டு மரணத்தை ஏற்படுத்துகின்றன.

கப்பலிலுள்ள எண்ணெய் வெளியேறுமாக இருந்தால் மிகப்பெரிய ஒரு சூழலியல் அனர்த்தத்திற்கு நாடு முகம் கொடுக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரசாயனப்பொருள் கலப்பினால் கடல் நீர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டாலும் ஆரம்பத்தில் நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி கடல் நீரின் பீ எச் பெறுமானத்தில் மாறுதல்கள் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டமை சற்று ஆறுதல் தரும் செய்திதான். எனினும் தொடர்ச்சியாக கப்பற் கழிவுகள் நீரில் சேரும்போது இந்நிலைமை மாறலாம். குறிப்பாக கப்பலின் எண்னெய் கடல் நீரில் கலக்குமாயின் நிலைமை தலைகீழாக மாறக்கூடும்.

எனவே ஏதேனும் ஒரு வழியில் அது செலவுமிக்கதாயினும் கூட கடல்நீரில் எண்ணெய் கலப்பதை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். பொருளாதார ரீதியாகப் பார்க்குமிடத்து கப்பல் கவிழ்வு இலங்கைக்கு விழுந்த மற்றுமோர் மரண அடியாகும். மேற்குக் கரையோரங்களில் மீன்பிடித்தொழில் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. கடல் உணவுகள் மீதான மக்களின் கேள்வியானது அச்சம் காரணமாக மிகவும் குறைவடைந்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் பிடிக்கப்படும் மீன்களின் கேள்வியும் தளம்பலுக்குள்ளாகியுள்ளது. இதனால் கொரோனா காரணமாகவும் அடிக்கடி எதிர்நோக்கப்படும் பாதகமான வானிலை காரணமாகவும் ஏற்கெனவே நலிந்து போயுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மேலும் கேள்விக்குறியாகலாம்.

அத்துடன் மேற்படி அனர்த்தம் இலங்கையின் மீன்வளமிக்க ஒரு பிரதேசத்திலேயே இடம் பெற்றிருப்பதால் மீன்களின் இனப்பெருக்கச் சாத்தியம் அழிந்து எதிர்காலத்தில் மீன்வளப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம். இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு முதுகெலும்பாக விளங்கும் கடற்கரை ஹோட்டல்களில் பெரும்பாலானவை நீர்கொழும்பிலிருந்து காலி வரையிலான பிரதேசங்களிலேயே அமைந்துள்ளன. நாளையே கொரோனா அச்சம் நீங்கி சுற்றுலாத்துறை சூடுபிடிக்குமானால் கப்பலிலிருந்து வெளியேறிய இரசாயனங்களால் பாதிப்பிருக்கலாம் என்ற அச்சத்தினால் கடல் சார்ந்த சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகலாம். கப்பலில் இருந்த பொருள்களில் கதிர்வீச்சு மிக்க பொருள்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு இருந்திருப்பின் நெடுநாள் கடும்பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும். இலங்கையின் மேற்குக் கரையோரங்களில் தாக்கங்கள் கூடுதலாக இருந்தாலும் ஒரு சிறிய தீவு என்பதனால் கரையோரப்பகுதிகள் யாவும் பாதிப்புக்கு ஆளாகலாம்.

கப்பல் அனர்த்தம் பற்றி பொறுப்பு வாய்ந்தவர்கள் ஊடகங்களுக்கு கூறியது போல இலங்கைக்கு நட்டஈடாக வெளிநாட்டுப் பணத்தை ஈட்டித்தரலாம். ஆயினும் இவ்வனர்த்தத்தினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளை ஈடு செய்யுமளவுக்கு நிச்சயமாக அந்தத்தொகை போதியதாக இருக்காது. மறுபுறம் குறுகிய காலத்திலும் நீண்டகாலத்திலும் இலங்கையின் கடல்சார் உயிர் பல்வகைத்தன்மையிலும் சுற்றுச்சூழலிலும் ஏற்படுத்திய பாதிப்புகளை ஈடு செய்ய எவ்வகையிலும் போதியதன்று. உயிர்பல்வகைத்தன்மையும் சூழலியற் கட்டுமானங்களும் ஒரு புவியியற் பிரதேசத்தில் பல்லாயிரமாண்டு காலப்பகுதியில் கட்டியெழுப்பப் படுவனவாகும். அவற்றை குறுகிய காலத்தில் உருவாக்கவோ சீர்செய்யவோ முடியாது. ஆனால் அத்தகைய நெடுநாள் முதுசொத்தை ஒருசில மணித்தியால மனித நடத்தைகள் மூலம் சிதைத்துவிட முடியும். அவ்வாறு சிதைத்தவற்றை நட்டஈடு செய்து சமரசப்படுத்தி விடலாம் என்று சில முட்டாள் ஜந்துகள் கருதவும் கூடும். காடுகள் இல்லாத நாடுகளில் ஒட்சிசன் இல்லையா என்று கேட்டவர்களையும்் ஒட்சிசன் எதற்கு மக்களுக்கு காணிகள் இல்லாதபோது என்று கேட்கிறவர்களையும் இந்நாடு ஏற்கெனவே பார்த்திருக்கிறது. உலகின் பாலைவன நாடுகள் பலவும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தத்தமது நாடுகளில் காடுகளையும் பசுஞ்சோலைகளை உருவாக்க பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன.

துறைசார்ந்த சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த திறமையான அதிகாரிகளுக்கு பஞ்சமில்லாத இந்நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள இந்தக்கப்பல் அனர்த்தமும் இதே பாணியில் அணுகப்படவே அதிக வாய்ப்புண்டு.

-தினகரன்
2021.06.06

Tags: