சட்டவிரோத பிரதமர்

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை எனும் கோட்பாடு, இந்தியாவின் முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையால் தொடர்ந்து, படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகிறது. மதச்சார்பின்மை என்ற ஒட்டுமொத்த கருத்தாக்கத்தையே அழித்துவிட அவர்கள் முயற்சித்து வருகிறார்கள். மதமும் அரசியலும் முற்றிலும் தனித்தனியே, பிரிந்தே இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, அரசு  மற்றும் அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்திலும், மத நம்பிக்கைகள் தலையிடலாம் என்ற கருத்தாக்கத்தை வளர்த்திட இந்தியாவின் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கம்  தீர்க்கமாக விரும்புகிறது. பாசிசத் தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவின் மதவெறி அரசியலின் எழுச்சியும் அது மத்தியில் அதிகாரத்தை கைப்பற்றியதும் நாட்டின் மதச்சார் பற்ற அடித்தளத்தை தகர்ப்பதற்கு பெரும் உதவியாக அமைந்தது. இதன் விளைவாக அரசு, ஆட்சி நிர்வாகம், கல்விக் கட்டமைப்பு, ஊடகம் உள்பட அனைத்தும் மதவெறி மயமாக்கப்பட்டுள்ளன. இதை மையமாகக் கொண்டு பெரும் முதலாளிகளின் சில பிரிவினர் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவுக்கு முழு ஆதரவு அளிப்பதும், அந்த முதலாளிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முழுமையாக துணை போவதும் என இருவரும் இணைந்து நடத்தி வரும் கூட்டுக்களவாணி முதலாளித்துவமானது, அனைத்து அம்சங்களிலும் இந்திய நாட்டின் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் தகர்த்து கடும் விளைவுகளை உருவாக்கி வருகின்றன”.  

– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது  கட்சித் திட்டத்தில், இந்திய நாட்டின் தற்போ தைய நிலைமை குறித்து விவரித்துள்ள இந்த அம்சம், இன்றைக்கு மிகவும் பொருத்தமான வார்த்தைகளாக அமைந்துள்ளன என்றால் மிகையல்ல. மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர், தானே ஒரு மதத்தின் தலைவராக மாறி நிற்பதை நாடு காண்கிறது. அவரே ராமர் கோவில் விழாவை துவக்கி வைக்கிறார்; அந்த விழாவுக்கு முன்னோட்டமாக நடக்கும் அனைத்து மத நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கிறார்; அந்த விழாவுக்காக 11 நாட்கள் விரதம் இருக்கிறார்; ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் என பயணம் மேற்கொண்டு ராமர் கோவில் விழாவுக்கான பூஜைகளை நடத்துகிறார்; இதன் உச்சக்கட்டமாக அவரே இன்றைய தினம் (ஜனவரி 22, 2024) ராமர் கோவிலில் சிலையை பிரதிஷ்டை செய்கிறார்.

இந்திய தேசத்தின் மதச்சார்பின்மை எனும்  மகத்தான கோட்பாட்டை, அதன் அடித்தளத்தில் நிற்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை அடித்து நொறுக்கியுள்ளார் பிரதமர் மோடி. மத உணர்வுகளை மையப்படுத்தி மக்களை மயக்கிவிடலாம் என அவரது கூட்டம் கருதுகிறது. ஆனால் வறுமையால், வேலையின்மையால் எரிந்து கொண்டிருக்கும் மக்களின் வயிறு, இவர்களின் எண்ணத்தை சாம்பலாக்கும்.

-தீக்கதிர்
2024.01.22

Tags: