தலிபான்- ஆப்கன் மோதல்: புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்!
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்நாட்டின் ராணுவப் படைகளுக்குமான போரில் அமெரிக்கா தனது ராணுவ படைகளை அனுப்பி தலிபான் பயங்கரவாதிகளை அழிக்க ஆப்கன் படைகளுக்கு உதவியது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டு பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலம் முதலே தனது படைகளை அமெரிக்கா அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக திரும்பப் பெற்று வந்தது. அந்த வகையில் தற்போது தான் அமெரிக்கப் படைகள் 90 சதவீதம் அளவுக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பியிருக்கின்றன.
அமெரிக்கப் படைகள் முழு வீச்சில் வெளியேறி வருவதை தொடர்ந்து, இனி நாட்டை பாதுகாக்கும் முழு பொறுப்பும் ஆப்கன் படைகளிடம் தான் என்றாகி விட்ட நிலையில், ஆப்கானிஸ்தானில் சில ஆண்டுக் காலம் பதுங்கி இருந்த தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அதனால், தலிபான்களின் கை சமீபமாக அங்கு ஓங்கியிருக்கிறது. அதன் காரணமாக, கடந்த சில வாரங்களாக மீண்டும் தலிபான்களுக்கும் ஆப்கன் படைகளுக்கும் இடையே பயங்கர மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காந்தஹார் (Kandahar) நகரத்தில் வெள்ளிக்கிழமை (16/07/2021) இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல செய்தி புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடங்களில் செய்திகள் வெளியான வண்ணமாக இருந்து வருகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திக் தலிபான் – ஆப்கன் படைகளுக்கு இடையேயான மோதல்களைப் பதிவு செய்வதற்காக ஆப்கன் சிறப்புப் படையினருடன் தங்கியிருந்த போது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லியின் கொரோனா மரணங்கள், ஒட்சிசன் தட்டுப்பாடு என கொரோனா காலத்தில் ராய்ட்டர்ஸ் சார்பாகப் புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் எடுத்த புகைப்படங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியச் செய்தி புகைப்பட கலைஞரான டேனிஷ் 2018-ல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் சார்பில் ரோஹிங்கியா அகதிகளின் இன்னல்களை ஆவணப்படுத்தியதற்காக ஊடக உலகின் மிக உயரிய விருதான புலிட்சர் விருதினை வென்று இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்தார்.
புகைப்பட கலைஞர் டேனிஷ் உலகம் முழுவதும் கவனிக்கத்தக்க மக்கள் பிரச்னைகளை காலம், நேரம் பார்க்காமல் பயணித்து தன்னுடைய புகைப்படங்களால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, பிரச்னைகளுக்குத் தீர்வு காணுவதில் அதீத முனைப்பு காட்டக் கூடிய நபராவர். ஆப்கானிஸ்தான் போர், ஈராக் போர், ரோஹிங்கியா அகதிகள் இன்னல்கள், ஹாங் காங் போராட்டங்கள் மற்றும் நேபாள நிலநடுக்கங்கள் என உலக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அனைத்து பிரச்னைகளையும், நிகழ்வுகளையும் டேனிஷ் தன்னுடைய புகைப்படக் கருவிகளில் பதிவு செய்திருக்கிறார்.
டேனிஷ் கடந்த சில தினங்களாகவே ஆப்கன் சிறப்புப் படைகளுடன் இருந்து தலிபான் – ஆப்கன் மோதல்களைப் படம் பிடித்து வெளி உலகிற்கு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் மூலம் நிலவரத்தைத் தெரியப்படுத்தி வந்தார். இந்நிலையில், அவர் (வெள்ளிக்கிழமை) இருதரப்பினருக்கும் இடையேயான மோதலில் கொல்லப்பட்டதாக இன்று (16/07/2021) காலை முதலே செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனினும், ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்து இன்னும் டேனிஷ் மரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
அமெரிக்கப் படைகள் விலகிக் கொண்டதால் ஆப்கன் படைகளுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கும் இந்த இக்கட்டான சூழலில், ஏற்கனவே இருமுறை தான் தலிபான் தாக்குதலில் மயிரிழையில் உயிர் பிழைத்ததாக அண்மையில் டேனிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜுலை 13ந் திகதி பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அவரது மறைவு செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
-சே. பாலாஜி (விகடன்)