சிறார்களை வீட்டுவேலைக்கு அமர்த்தும் அவலம் இனிமேலாவது ஒழியட்டும்!

சி.அருள்நேசன்
கல்வியியல் பட்டதாரி

சிறுவர்கள் சமூகத்தின் செல்வங்களாவர். இன்றைய குழந்தைகள் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள். அவ்வாறான சிறார்களை அவதானமாகவும், அன்பாகவும் வளர்க்கும் பொறுப்பு வளர்ந்தோருக்கு இருக்கின்றது.

ஆனால் எமது சமூகம் இடம்பெறுகின்ற சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களை பார்க்கின்ற போது வேதனை வருகின்றது. டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிசாலனியின் மரணம் மற்றும் கல்கிசை பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டமையும் விற்பனை செய்யப்பட்டமையும் போன்ற சம்பவங்கள் கவலையே தருகின்றன.

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது என்பது மிகவும் பாரதூரமான குற்றமாகும். இதில் அவர்களின் கல்வி உரிமை மற்றும் சுதந்திரமாக வாழும் உரிமை பறிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்த முற்படும் பெற்றோர் மற்றும் தரகர்கள் இதன் பின்விளைவுகள் தொடர்பாக கூடுதலாக சிந்திக்க வேண்டும். அதேநேரம் வீட்டு வேலைக்கு ஆள் தேடும் தனவந்தர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து துளியும் சிந்திக்காத சில பெற்றோர் இவ்வாறான நாசகார செயல்களில் ஈடுபடுகின்றமை வேதனையான விடயமாகும். மாணவர்களின் குடும்ப வறுமை, பாடசாலை இடைவிலகல், கல்வியில் நாட்டமில்லாத தன்மை போன்றனவே இந்த அவலத்துக்கான காரணங்களாகும்.

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது குற்றமென்று எமது நாட்டில் மாத்திரமன்றி உலக நாடுகள் எங்கும் சட்டங்கள் உள்ளன. ஆனால் அக்குற்றம் இன்னமும் தொடர்கின்றதென்பதற்கு டயகம சிறுமியின் மரணம் ஒரு உதாரணமாகும். இச்சிறுமியின் மரணம் தொடர்பாக நீதி கோரி மலையத்தின் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது பாவச் செயல், சிறார்களை வேலைக்கு அனுப்பவது மொட்டிலே பூ கருகுவதற்கு சமம். உலகில் எல்லா நாடுகளிலும் சிறுவர் உழைப்பு தடை செய்யப்பட்டபோதிலும், பல இடங்களில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களின் கல்வி, தனித்திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்காமல் அவர்கள் வளர்ச்சியை உறிஞ்சும் நிலை தொடர்ந்து நடக்கிறது.

18 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்டாய இலவசக் கல்வி பெற வேண்டும் என்று சட்டம் கூறினாலும் சிறார்களை சாதாரண தொழில்கள் முதல் அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தும் அவலம் எங்கும் தொடர்கின்றது.

கல்வியறிவு பெற முடியாமல் வறுமையை விரட்ட எண்ணி சிறுவயதில் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் இவர்களால் சமுதாயத்தில் கடைசி வரை ஒரு நல்ல நிலைமையை அடைய முடிவதில்லை. அவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

சிறார்கள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.பாடசாலைகளில் மற்றும் கல்வி நிறுவனங்களில் சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.

‘குழந்தைகள் உங்களுக்கு வாரிசாக பிறந்தவர்கள்தான், ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல’ என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும்.

கல்வியானது எதிர்காலத்தில் சிறப்பான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படையான சாதனமாகும். அதன் அவசியத்தை அறியாத நிலையில் உள்ளவர்களாக பலர் காணப்படுகின்றார்கள். எதிர்காலத்தில் கல்வி அறிவு இன்மையால் எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை உணராத நிலையில் உள்ள பெற்றோர் பலர் உள்ளனர். சிறுவர்களை கற்றலில் ஈடுபடச் செய்யாமல் தமது சுய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களை வேலைக்கு அனுப்புகின்ற நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக மலையகத்தில் வறிய பெற்றோர் பலர் இவ்வாறு தமது சிறுவயது பிள்ளைகளை கொழும்பு போன்ற நகரப் பகுதிகளுக்கு வீட்டு வேலைக்காக அனுப்புகின்றனர். அவ்வீடுகளில் அச்சிறார்கள் எத்தனையோ இன்னல்களைத் தாங்கியபடி வேலை செய்கின்ற பரிதாபத்துக்கு இன்னுமே முடிவு வரவில்லை. மலையக சிறார்கள் பிறரது வீடுகளில் வேலை செய்வதற்கென்று பிறந்தவர்களல்ல என்பதை சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் வீட்டு எஜமானர்கள் மட்டுமன்றி அச்சிறார்களின் பெற்றோரும் குற்றவாளிகளாவர்.

தொழில் புரியும் சிறுவர்களுக்கோ அல்லது அவர்களின் குடும்பங்களுக்கோ சமூகத்தில் போதிய அந்தஸ்து இருப்பதில்லை. ஏனைய சமூக அங்கத்தவர்கள் இவர்களை ‘கூலித் தொழில் புரிபவர்கள்தானே’ என்ற அலட்சிய பாவனையில் அவர்களை ஒதுக்கி வைப்பதைக் காண முடிகிறது.

இலங்கையைப் பொறுத்தளவில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரச கட்டமைப்பில் பல்வேறு காப்பீடுகள் காணப்படுகின்ற அதேவேளை தேசிய சர்வதேச சிவில் அமைப்புக்களும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களாக கொலைச் சம்பவங்கள், கடத்தல்கள், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல், பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் போன்றவை அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக, இலங்கையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களுக்கு குடும்பங்களின் பொருளாதாரப் பின்னடைவும், வறுமையும் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றது. பெருந்தோட்டங்கள், கிராமங்களில் வாழும் பொருளாதார பின்னடைவுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி விட்டு செல்வந்த வீடுகளுக்கும், கடைகள், ஹோட்டல்கள், கராஜ்கள் போன்ற பல இடங்களில் வேலைக்கு அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே சிறுவர்களை எதிர்காலத்திற்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்கு குடும்பம், பாடசாலை மற்றும் சமூகம் சார்ந்தவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

Tags: