கன்னையா, மேவானியின் வருகை காங்கிரஸ் பண்பை மாற்றி அமைக்குமா?

-சமஸ்

ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்

ன்னுடைய கட்சிக்கு வெளியே செயலாற்றிவரும் இளம் தலைவர்களை உள்ளிழுக்க காங்கிரஸ் ஆரம்பத்திருக்கும் முயற்சி நல்லது. அதேசமயம், தெளிவான செயல்திட்டம் காங்கிரஸ் கையில் இருக்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

பஞ்சாபில் உள்கட்சி மோதலால் காங்கிரஸ் பெரும் அதிர்வுக்குள்ளான அதே நாளில், டெல்லியில் கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட இளம் செயல்பாட்டாளர்கள் காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நடந்ததானது, அந்தக் கட்சி இன்று எதிர்கொண்டுவரும் பிரச்சினையை வெளிப்படுத்தும் சரியான சமிக்ஞைபோலவே இருந்தது. கட்சிக்குள் நிலவும் ஆதாரமான பிரச்சினையைத் தீர்த்திடாமல், வெளியிலிருந்து வருபவர்களால் கட்சி பலம் பெற்றுவிட முடியாது.

அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியலில் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள வெவ்வேறு கட்சிகள், இயக்கங்களிலிருந்தும் செல்வாக்கான ஆளுமைகளை உள்ளே இழுப்பது இயல்பானது. காங்கிரஸ் இப்போது ஆரம்பித்திருக்கும் முயற்சியை அப்படிப் பார்க்க முடியாது. கட்சிக்குள் ஒரு பண்பு மாற்றத்தைக் கொண்டுவரும் ராகுல் காந்தியின் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 

புது டெல்லியில் சில மாதங்களுக்கு முன் ராகுல் காந்தி பேசியதை நாம் இங்கு நினைவுகூரலாம். “காங்கிரஸுக்கு அச்சமற்றவர்களே இன்றைய தேவை. இப்படி அச்சமற்ற பலர் இன்று கட்சிக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்கள் கட்சிக்குள் அழைத்துவரப்பட வேண்டும். காங்கிரஸுக்குள் இருந்தபடி பாஜகவை அச்சத்தோடு பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இங்கிருந்து வெளியேறி அங்கேயே போய் சேர்ந்துவிடட்டும்!”

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு இயக்கங்களிலும் செயலாற்றிவரும் கன்னையா குமார் போன்ற இளந்தலைவர்கள் காங்கிரஸுக்குள் விரைவில் வருவார்கள் என்ற பேச்சு அப்போதே உருவானது. டெல்லி ஜேஎன்யு (Jawaharlal Nehru University – JNU) பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக இருந்த கன்னையா குமார் (Kannaiya Kumar) பிற்பாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (CPI) செயல்பட்டுவந்தார். “காங்கிரஸ் பாதுகாக்கப்பட வேண்டும்; காங்கிரஸ் இல்லையென்றால் நாடு இல்லை” என்று காங்கிரஸில் இணைந்ததற்குக் காரணம் கூறியிருக்கிறார் கன்னையா குமார்.

அதே மேடையில் கன்னையா குமாருடன் அமர்ந்திருந்தவர்களில் முக்கியமானவர் ஜிக்னேஷ் மேவானி (Jignesh Mewani). ராஷ்டீரிய தலித் அதிகார் மஞ்ச் (Rashtriya Dalit Adhikar Munch) இயக்கத்தின் அமைப்பாளர். குஜராத் சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராகவும் இருக்கிறார். காங்கிரஸில் இணைந்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் வாய்ப்பு இருப்பதால் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, காங்கிரஸில் இணைய முன்வந்திருக்கிறார் மேவானி. பின்னர், ராகுலின் ஆலோசனையின்பேரில் ராஜிநாமா முடிவைக் கைவிட்டு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சியில் இணைந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். “நான் காங்கிரஸில் இப்போது இணையவில்லை; அதேசமயம், காங்கிரஸ் சிந்தனையின் ஒரு பகுதியாக இருப்பேன்” என்று பேசியிருக்கிறார் மேவானி. வரவிருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவிருப்பதை மேவானி உறுதி செய்திருக்கிறார்.

வளர்ந்துவரும் மார்க்ஸியர்களும், அம்பேத்கரியர்களும் காங்கிரஸைத் தனக்கு விரோதமான அமைப்பாகக் கருதாமல், அணுக்க அமைப்பாகப் பார்ப்பது இன்றைய சூழலில் ஓர் ஆரோக்கியமான போக்கு. கன்னையா குமாரோ, மேவானியோ இன்றைய பெரும் அரசியல் சூறாவளியில், சிதறிவிடாமல் அமைப்புப் பலத்துடன் பயணிக்க முடிவெடுத்திருப்பது அவர்களின் எதிர்காலத்தைத் தாண்டி நாட்டு நலனுக்கும் நல்லது. பிஹாரிலும் குஜராத்திலும் நிச்சயம் காங்கிரஸுக்கு இவர்கள் வலு சேர்ப்பார்கள். கேள்வி என்னவென்றால், காங்கிரஸ் ஏற்கெனவே உள்ள அமைப்பில் அவர்களுக்கு என்ன இடத்தை வைத்திருக்கிறது?

கட்சிக்குள் புதிய ரத்தம் புகுத்தப்பட வேண்டும்; இளைஞர்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பது ராகுல் கட்சிக்குள் நுழைந்த நாள் முதலாகப் பேசிவரும் விஷயம். முன்னதாக இப்படிப் பேசிக் கொண்டுவரப்பட்ட ஒரு படை இன்று என்னவானார்கள் என்ற கேள்வியை ராகுல் கேட்டுக்கொள்வதாகவே தெரியவில்லை.  சமீபத்தில்கூட அசாம் காங்கிரஸின் செல்வாக்கு மிக்க இளந்தலைவர்களில் ஒருவரும், ராகுல் அணியின் முக்கிய அங்கத்தினருமான சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கிறார். ஏன்?

காங்கிரஸுக்குள் நிலவும் பிரச்சினைகளிலேயே தலையாயது, மூத்த தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் இடையிலான மோதல் என்பது ராகுலின் தொடர் சிந்தனையாக இருக்கிறது. பிரதான பிரச்சினை அது இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; ராகுல் பல ஆண்டுகளாகக் குறிப்பிட்டுவரும் இந்தப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு காணப்போகிறார்? மூத்தவர்களும், இளைஞர்களும் ஒரு கட்சியில் எப்போதும் தொடர் அலையாக இருப்பார்கள். இரு தரப்பாரையும் அனுசரிப்பது வெற்றிகரமான தலைமையின் இயல்பில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.  

கன்னையா குமாரோ, மேவானியோ கட்சிக்குள் வரும்போது தலைமை மேலிருந்து அவர்களை அரவணைத்தால் மட்டும் போதாது; கீழே அவர்கள் ஒன்று கலக்க வேண்டும்; அவர்கள் செயலாற்றுவதற்கான இடம் இருக்க வேண்டும்; முக்கியமாக கட்சியில் ஏற்கெனவே உள்ள பண்பாடு புதிய போக்கு ஒன்றை முரண்படாமல் அனுமதிக்க வேண்டும்; இதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்; ஒரு கட்சியின் பண்பை வெளியிலிருந்து ஒரு நாளில் இறக்குமதி செய்திட முடியாது. 

கட்சியிலிருந்து ஒருவர் வெளியேறவோ, செயல்படாமல் முடங்கியிருக்கவோ அவருடைய அச்சம்தான் காரணம் என்று ராகுல் நம்புவது உண்மை என்றால், அந்த அச்சத்தின் தோற்றுவாயாக அவநம்பிக்கையே இருக்க முடியும். கட்சித் தலைமை மீதான நம்பகத்தன்மையை இழப்பதன் விளைவுதான் அந்த அவநம்பிக்கை என்பதை விளக்க வேண்டியது இல்லை. இதைச் சீரமைப்பது கன்னையா, மேவானியின் கைகளில் இல்லை!

Tags: