அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தால்.. மகிழ்ந்திருப்பார்….

Danish Siddiqui

விவசாயிகள் போராட்டத்தை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றதில் பெரிய பங்கு வகித்தவர் செய்தியாளர் டேனிஷ் சித்திக் (Danish Siddiqui). இன்று வேளாண் சட்ட திருத்தங்கள் மூன்றும் வாபஸ் பெறப்பட்ட நிலையில் டேனிஷ் சித்திக்கை செய்தியாளர்கள் பலரும் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பஞ்சாப்பில் சிறிய அளவில் வேளாண் சட்ட திருத்தங்களை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கின. பஞ்சாப் விவசாயிகள் மட்டும் தொடங்கிய இந்த போராட்டம் நாட்கள் செல்ல செல்ல 3 விவசாய சட்டங்களுக்கு எதிரான மாபெரும் தேசிய போராட்டமாக உருவெடுத்தது.

டெல்லியை சுற்றி ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகான்ட், பீகார், ராஜாஸ்தான் என்று பல்வேறு மாநிலங்களில் இந்த மாபெரும் விவசாய போராட்டம் பரவியது. சில நாட்கள் போராடுவார்கள் என்று பலரும் கருதிய நிலையில்.. மழை, வெயில், காற்று மாசு, கொரோனா, உச்ச நீதிமன்ற கண்டனம், போலீஸ் தாக்குதல், தேச துரோக பட்டம் என்று பல சர்ச்சைகளை முதுகில் தாங்கி ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டம் நீண்டது.

சுதந்திரம்

சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற மிகப்பெரிய அமைதி போராட்டமாகவும், வெற்றி போராட்டமாகவும் இந்த விவசாய போராட்டம் உருவெடுத்துள்ளது. அதிலும் 80 வயது, 90 வயது விவசாயிகள் போராட்ட களத்திலேயே தங்கி நினைத்ததை சாதித்து உள்ளனர். மிகப்பெரிய போராட்டத்திற்கு விவசாய சட்டங்களை வாபஸ் வாங்குவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். இந்த சட்டத்தின் நன்மைகளை விவசாயிகளிடம் கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் சட்டத்தை வாபஸ் வாங்குகிறோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகம்

அமைதியான போராட்டம் மூலம் ஒரு ஜனநாயக நாட்டில் மிக வலுவான பெரும்பான்மை கொண்ட ஒரு அரசையும் அசைத்து பார்க்க முடியும் என்று விவசாயிகள் நிரூபித்துள்ளனர். விவசாயிகளின் இந்த வெற்றி இந்திய ஜனநாயகத்தில் புதிய நம்பிக்கை ஒளியை பாய்ச்சி இருக்கிறது. இந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் எதிரொலித்த ஒரு போராட்டம் ஆகும். பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது கூட அங்கு இந்தியர்கள் பலர் விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகை ஏந்தி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

சர்வதேச அளவு

அதேபோல் சர்வதேச அளவில் பாடகி ரிஹானா, சுற்றுசூழல் போராளி கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸிசன் உறவினர் மீனா ஹாரிஸ் ஆகியோர் கூட விவசாய போராட்டத்திற்கு ஆதராக பேசி இருந்தனர். இந்த விவசாய போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற முக்கியமான காரணமாக இருந்தவர் டேனிஷ் சித்திக். ராய்டர்ஸ் நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளராக இருந்த டேனிஷ் சித்திக்தான் தனது புகைப்படங்கள் மூலம் இந்த போராட்டத்தை சர்வதேச மேடைகளுக்கு கொண்டு சென்றார்.

டேனிஷ் சித்திக்

விவசாயிகளின் போராட்டம், அங்கு இருக்கும் பெண்களின் கஷ்டங்கள், இன்னல்கள் என்று அனைத்தையும் டேனிஷ் சித்திக் புகைப்படங்கள்தான் கண் முன் நிறுத்தியது. முக்கியமாக டெல்லி எல்லையில் பல மாதங்களாக விவசாயிகள் தங்கி இருந்தது. அவர்களின் சோக முகம், அவர்களின் முற்றுகை போராட்டம், விவசாயிகளின் மாபெரும் கூட்டங்கள் என்று சர்வதேச ஊடகங்கள் முழுக்க டேனிஷ் சித்திக் எடுத்த புகைப்படங்கள்தான் இருந்தன.

புகைப்படம்

முக்கியமாக ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தினத்தின் போது விவசாயிகள் டெல்லிக்குள் புகுந்து பேரணி நடத்தியதையும், செங்கோட்டையில் விவசாயிகள் கொடி ஏற்றியதையும் புகைப்படம் எடுத்து வெளியே விட்டது டேனிஷ் சித்திக்தான். இதுதான் சர்வதேச அளவில் விவசாய போராட்டத்தை கொண்டு சென்று, மத்திய அரசுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்த அழுத்தமும் ஒருவகையில் சட்டத்தை வாபஸ் வாங்க காரணமாக மாறியுள்ளது. புலிட்சர் பரிசு வென்ற டேனிஷ் சித்திக் சில நாட்களுக்கு முன் ஆப்கானில் கொல்லப்பட்டார். தாலிபான்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் காயம் அடைந்த இவர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்தியாவை உலுக்கிய தேசிய அளவிலான பிரச்சனைகளை எடுத்துக்கொண்டால் அதில் அனைத்திலும் டேனிஷ் சித்திக்கின் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கும். கடந்த 5- 7 வருடங்களில் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், சமுதாய பிரச்சனைகள், அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் டேனிஷ் சித்திக் தனது புகைப்படங்கள் மூலம் உலகம் முழுக்க கொண்டு சென்றார்.

வைரல்

கொரோனா பரவலால் ஏற்பட்ட வடஇந்திய மரணங்களை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றது, வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா லாக்டவுன் சமயத்தில் நடந்தே சொந்த ஊருக்கு சென்றதை புகைப்படம் எடுத்தது, சிஏஏ போராட்டம், என்று டேனிஷ் சித்திக்கின் புகைப்படங்கள் இந்திய பிரச்சனைகளின் சர்வதேச அடையாளமாக திகழ்ந்தது. விவசாயிகளின் போராட்டத்தை நேரில் பதிவு செய்த டேனிஷ் சித்திக் இன்று ஒருவேளை இருந்திருந்தால் விவசாயிகளின் சந்தோஷத்தையும் புகைப்படமாக எடுத்து பதிவிட்டு இருப்பார்.. அவர்களின் சிரிப்பையும் உலக அளவிற்கு கொண்டு சென்று இருப்பார்.. ஏன் அவரும் கூட மகிழ்ந்திருப்பார்!

ஷியாம் சுந்தர்

Tags: