ஜனவரி 5: உலக பறவைகள் தினம்!

ன்று, ஜனவரி 5 உலக முழுவதும் பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதர்களாலும், இயற்கை பேரழிவுகளாலும் அழிந்து வரும் பறவை இனங்களை பாதுகாக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஜனவரி 5 ஆம் தேதி உலக பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இயற்கை வளம், காடுகளை அழித்தல், இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் பறவையினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. பறவைகளை வீட்டில் கூண்டில் அடைத்து வளர்ப்பது இயற்கைக்கு மாறானது. மேலும், விளைநிலங்களில் அதிகளவு இரசாயனம் பயன்படுத்துவதால் 12 சதவிகித பறவைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன என பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பறவைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே பறவைகள் தினம் அனுசரிக்கப்படுவதின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிலையில், சமீபத்தில் பறவையினங்கள் எண்ணிக்கை குறித்து அமெரிக்கன் மியூசியம் ஆஃப்நேச்சுரல் ஹிஸ்டரி (American Museum of Natural History) விஞ்ஞானி ஜோயல்கிராகிராஃப்ட் (Joel L. Cracraft) என்பவர் ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வில், புதியதாக 18,000 பறவையினங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பு, 9,000 முதல் 10,000 வரை மட்டுமே பறவையினங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் நினைத்திருந்தார்கள்.

இந்தியாவில் 1330 அரிய பறவையினங்களும், தமிழகத்தில் 52 வகையான பறவையினங்களும் உள்ளன என திருநெல்வேலியில் நடைபெற்ற தேசிய பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு புறம் மனதுக்கு ஆறுதல் அளித்தாலும், மறுபுறம் பறவை காய்ச்சலால் இலட்சக் கணக்கான பறவைகள் அழிந்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனார்.

ஜப்பானில் வட ஹகாய்டோ பகுதியில் பரவிய பறவைக் காய்ச்சலால் 2,10,000 பறவைகளை அழிக்கப்பட்டன. அதற்கு முன் ஜப்பானில், நில்காட்டா நகரத்தில் 5,50,000 கோழிகளையும், தெற்கு ஹோக்கியோடாவில் 23,000 வாத்துகளையும் அழித்துள்ளனர்.இதுபோன்று, கடந்த நவம்பர் மாதம் நெதர்லாந்தில் பறவை காய்ச்சல் காரணமாக2 லட்சம் வாத்துகள் அழிக்கப்பட்டன.

இந்தியாவிலும் பறவை காய்ச்சல் அதிகளவில் பரவியுள்ளது.இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் H5 ஏவியன் வைரஸ் தாக்கி 9 பறவைகள் இறந்தன. பின்னர், தற்காலிகமாக டெல்லி பூங்கா மூடப்பட்டது. இந்நிலையில், மைசூர் உயிரியல் பூங்காவில் ஏவியன் (H5N8) வைரஸ் தாக்கப்பட்டு 2 பெல்லிகன்ஸ் மற்றும் 4 வாத்துகள் இறந்தன. இதையடுத்து, மைசூர் உயிரியல் பூங்கா நேற்று மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பூங்கா மூடப்படும் என உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், நமது நாட்டின் தேசிய பறவையான மயில் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதல், அவற்றை மருந்து வைத்து மக்கள் கொல்கின்றனர். கடந்த நவம்பர் மாதம் பழனி அருகே உள்ள வாகரை கிராமத்தில் 7 மயில்களும், 4 சேவல்களும் மர்மமான முறையில் இறந்தன. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், விளைநிலங்களை சேதப்படுத்துவதல், அவற்றிற்கு குருணை மருந்து வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.இது போன்று மயில்கள் கொல்லப்பட்டு வருவதால் தேசிய பறவையான மயில் அழிவின் விளிம்பில் உள்ளது.

Joel L. Cracraft

மேலும், கடந்த மாதம் (2017) ஏற்பட்ட வர்தா புயலால் கிண்டி மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா முற்றிலுமாக சேதமடைந்தது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த பூங்காக்களில் பல வகையான பறவையினங்கள் பாரமரிக்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலான பறவையினங்கள் மரத்தில் கூடுகட்டி வாழ்பவை,மரம் சேதமடைந்ததால், பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

காட்டில் தன்னிச்சையாக அலைந்து இறைத் தேடி உண்ணுகின்ற பறவைகளை, செல்ல பிராணியாக வீட்டில் வளர்க்கின்றோம் என்ற பெயரில் கூண்டியில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர்.

மேலும்,மறைமுகமாக மரங்களை வளர்க்கின்ற ஒரு உயிரினம்தான் பறவை. தன் உண்கின்ற பழத்தின் விதைகளை வேறு இடத்தில் எச்சமாக போடுகின்றன. இதனால், மரங்கள் வளர்வதற்கு பல்வேறு வகைகளில் பறவைகள் உதவியாக இருக்கின்றன.

எனவே, பறவைகளை பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். குறிப்பாக, இந்த வருடம் கோடைகாலத்தில் அதிக வறட்சியும் வெப்பமும் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதால், பறவைகளைக் காக்க வீடுகளின் முன்போ, மொட்டை மாடியிலோ பறவைகளுக்காக கொஞ்சம் நீர் வையுங்கள். ஒரு துளி நீர் கூட ஒரு பறவையின் உயிர் காக்கலாம்.

-2017.01.05

மேற்கு தொடர்ச்சி மலையில் வேகமாக அழிந்து வரும் அரிய வகை பறவைகள்

Hornbill

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்கு தொடர்ச்சி மலையானது இமயமலையைவிட பழமையானது. தழிழ்நாட்டில் கன்யாகுமரி மாவட்டத்தில் ஆரம்பித்து கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் வரை  சங்கிலித்தொடர் போல் 1600 கி.மீ. தொலைவு வரை பரவிக் கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் அரிய வகை பறவைகள் வேகமாக அழிந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் அதிகமான மரங்களை விதைத்தது பறவைகள் என்றால் அது மிகையாகாது. உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல், காலநிலை போன்றவை பாதுகாப்பதும் பறவைகள்தான்.

விளைநிலங்களில் உற்பத்தியாகும் பூச்சிகளை சாப்பிட்டு, விவசாயிகளின் பாதுகாவலனாக திகழும் பறவைகள் பொதுவாக நீர் நிலைகளை சார்ந்து வாழக்கூடியவை. காடுகளில் உள்ள மரங்களில் இருக்கும் பழங்களை சாப்பிட்டு, ஒரு வனப்பகுதியில் இருந்து நீண்ட தூரம் பயணித்து பிற வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்லும் பறவைகள் எச்சத்தில் இருந்து வெளியேறும் விதைகள் மூலம் அந்த பூமியில் விதைகள் விதைக்கப்பட்டு மரங்கள் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் விளைநிலங்களில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து அடித்து வருவதாலும் காலநிலை மாற்றம் காரணமாக பலவகையான பறவைகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவதை சுமார் 70 சதவீதம் குறைத்துக் கொண்ட நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் நூற்றுக்கணக்கான அரிய வகை பறவை இனங்கள் அழிவின் விழிம்பில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Plover

பொதுவாக பசுமை நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் Sternidae, sandpiper, falcon, shrike, tit, bank myna, hornbill, bank myna, heron, plover, kingfisher, cuckoos உட்பட 300-க்கும் மேற்பட்ட வகையான அரிய வகையில் , பல நூறு வண்ணங்களில் சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை பறவைகள் வாழ்ந்து வருகிறது.

நீலகிரியை பொருத்தவரை, சதுப்பு நில காடுகளில், நகர்ப்பகுதிகளில் வாழ்ந்து வந்த சில பறவை இனங்கள் காங்கிரட் கட்டிடங்களால் கூடுகள் கட்ட முடியாத நிலையிலும், சதுப்பு நிலங்களை அழித்ததால், சில வகையான பறவைகள் அழிந்துள்ளது.

ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தின் காலநிலையை அனுபவிக்க வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வெப்பம் மற்றும் குளிர் காலம் என இரு பருவங்களில் 40 வகையான பறவைகள் நீலகிரிக்கு வருவது வழக்கம்.

இவ்வாறு வரும் பறவைகள் நீலகிரியில் நிலவும் இதமான காலநிலையில் இனப்பெருக்கம் செய்து, கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து மீண்டும் தாய் நாட்டிற்கு செல்லும். அவ்வாறு ஆண்டுதோறும் கேத்தி பள்ளத்தாக்கிற்கு வரக்கூடிய செம்போத்தி என்று பறவையினம் வந்து செல்லும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீலகிரிக்கு வருவதில்லை என பறவை ஆராய்ச்சியாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Kingfisher

மேலும், நீலகிரியை தாயகமாகக் கொண்டு வாழும் Hornbill என அழைக்கப்படும் இருவாட்சி, கிங்ஃபிஷர் , myna, bull போன்ற நூற்றுக்கணக்கான பறவைகள் விளைநிலங்களில் அதிக அளவு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வெப்பம் அதிகரித்தல், வரலாறு காணாத மழை, காட்டுத்தீ, காங்கிரட் கட்டிடங்கள் போன்ற பல்வேறு இடையூறுகளால் அழிவின் விழிம்பில் சிக்கித் தவிப்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஒருநாடு வளமிக்க நாடாக இருக்க அந்த நாட்டின் வனப்பகுதி வளம் மிக்கதாக இருக்க வேண்டும் , அதற்கு பறவைகள் வளமுடன் வாழ வேண்டும். எனவே நீலகிரியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் வாழும் நூற்றுக்கணக்கான பறவை இனங்களைப் பாதுகாக்க மத்திய – மாநில அரசுகள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் சபையிடும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பறவை இனங்களை பாதுகாக்கவும் கூடுதலாக நிதி பெற்று வளமிக்க காடுகளையும் அதில் வாழும் பறவைகளையும் காத்திட அரசுகள் முன்வர வேண்டுமென்று பறவைகளைப் பாதுகாக்க அவசரம் அவசியம் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பறவை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Bull

-2022.01.05

Tags: