கண் மருத்துவ மாபியாக்களால் மருத்துவர் பிரியாந்தினிக்கு கொலை அச்சுறுத்தல்கள்

கிளிநொச்சியில் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் , 71 மாணவர்களைக் காப்பாற்றிய காரணத்தினாலேயே கண்டாவளை வைத்தியசாலை மருத்துவ அதிகாரியான மருத்துவர் பிரியாந்தினிக்கு (M.O.H Dr. Priyaanthini Kamalasingam) கொலை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.

கிளிநொச்சி – தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தமை தொடர்பில் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கிளிநொச்சி மருத்துவர் பிரியாந்தினி விவகாரம், தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு செயலாளர் சிங்கராஜா ஜீவாநந்தம் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மருத்துவரான, கண்டாவளை வைத்தியசாலை மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரியாந்தினிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனை மேற்கொண்ட தனியார்கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 1% மாணவர்களுக்கு கண்பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து , அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களது மருத்துவ நிலையத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய சுகாதார பிரிவினர் அம்மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கண்டாவளை மருத்துவ அதிகாரி பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இப்போது அங்கு மருத்துவ அதிகாரியாக பணிக்கு வந்துள்ள மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம். அவர் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களையும், ஒத்துழைப்பின்மையையும் பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.

ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, கண்ணில் குறைபாடு உள்ளது. அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என , ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்தவர்களை இனம்காட்டி, அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கத்துக்கு தொலைபேசியில் சிலர் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வைத்தியர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் மருத்துவரை தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேக நபரை விளக் கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் மருத்துவர் பிரியாந்தினி தனது முகநூலில் பதிவிட்ட கருத்து பல்லரையும் ஈர்த்துள்ளது. அவர் பதிவிட்ட பதிவில்,

‘நான் சுதந்திரத்தை மட்டுமே அடையாளமாகக் கொண்டவள். எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் அடங்கிப் போவதையோ யாரையும் அடக்கி ஆள்வதையோ, வாழ்வின் அவமானமாகக் கருதுகிறவள்.

அதிகார குரலுக்கோ, அடிதடிக்கோ, உணர்வுப் பூர்வமான அச்சுறுத்தலுக்கோ சற்றும் சுருங்கி விடாதபடி மிக மிக திடமான மூளையையும் உடலையும் செதுக்கி வைத்திருக்கிறேன். பெண் என்ற முறையில் என் உடல் குறித்தோ, அதன் உறுப்புகள் குறித்தோ எவ்வித பயமோ, எரிச்சலோ, வேதனையோ, தாழ்வு மனப்பான்மையோ எனக்கில்லை.

குறிப்பாக அகங்காரம், கோபம், பொறாமை, கூச்சம், நாணம் போன்றவற்றின் எச்சமாக என்னை ‘நான்’ சுமந்து திரிவதில்லை. சுமையில்லாத மனமும், உடலும் இருப்பதாலேயே என்னால் சிரிக்க முடிகிறது. மிக சத்தமாக, மிக மிக சத்தமாக….

எத்தகைய வளைவுக்குள்ளும் நெளிந்து வெளியேறவும், நீள்கோடுகளில் நீண்டு மீளவும் வட்டங்களுக்குள் வளைந்து சுற்றவும் நான் கற்றது பிரச்னைகள் நிறைந்த இவ்வுலகத்திடமிருந்து.

தன்னை சுதந்திரமாக வைத்துக் கொள்கிறவர்கள், பிறரின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பார்களானால், அங்கு சமத்துவம் இருக்கும் என்பது என் நம்பிக்கை… உடலளவில் தங்களை சுதந்திரப் படுத்திக் கொள்ளும் பலர், சிந்தனை அளவில் இன்னும் குறுகிய வட்டத்துக்குள் தான் இருக்கிறார்கள்’ என மருத்துவர் பிரியாந்தினி பதிவிட்டுள்ளார்.

பிரியாந்தினிக்கு எதிராக , புகார் செய்துள்ள யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார துறைக்கே இழுக்கை ஏற்படுத்தும் வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் கண்டாவளை வைத்திய அதிகாரி பிரியந்தினிக்கு எதிராக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அது தொடர்பில் தனக்கு அறியத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் சுகாதார துறை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

02.02.2022 திகதியிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினரால் எழுதப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கண்டாவளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் வைத்திய அதிகாரி தனது தனிப்பட்ட நலன்களையும், சுய விளம்பரப்படுத்தலையும் நோக்காகக் கொண்டு நான் அவருடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவினை ஊடகங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்தியுள்ளமை எனது சிறப்புரிமையை மீறுவதாகவும், தனிப்பட்ட நற்பெயருக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளது.

குறித்த வைத்தியரின் சகோதரனும் எனது நண்பருமான வைத்தியர் சயந்தகுமார் என்னுடன் தொலைபேசி மூலம் உரையாடி உளவியல் ரீதியாக தாக்கம் அடைந்துள்ள தனது சகோதரியோடு கலந்துரையாடுமாறு என்னை மிக வினயமாக கேட்டுக்கொண்டதற்காக 27.01.2022 திகதி மாலை அவருடன் தொடர்பு கொண்டு உரையாடி இருந்தேன்.

நல்லெண்ண நோக்கில் நான் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை எனது அனுமதி இன்றி பதிவு செய்து அன்றைய தினமே அதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்தி இருப்பது எனது கௌரவத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. எனவே மேற்படி தொலைபேசி உரையாடலை எனது அனுமதி இன்றி பதிவு செய்தமைக்கும், அதனை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தியமைக்கும் எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, முழுக்க முழுக்க தனது சுய விளம்பரபடுத்தலை மையமாகக்கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத் துறைக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அது தொடர்பில் எனக்கு அறியத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

பிரியாந்தினிக்கும் சிறிதரனுக்குமிடையே நடைபெற்ற உரையாடல்:

பிரியாந்தினியின் 04.04.2022 முகநூல் பதிவு:

Tags: