சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் காலமானார்

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான ஜியாங் ஸெமின் (Jiang Zemin) நவம்பர் 30 அன்று சீன நேரப்படி மதியம் 12.13 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மரணமடைந்த செய்தியை அறிவித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு, அவரது மறைவு ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்று கட்சிக்கும், இராணுவத்திற்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 96 வயதான  ஜியாங் ஸெமின், உடலின் பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடிதத்தில், சிறந்த மார்க்சிஸ்ட்டாகவும், சிறந்த தொழிலாளி வர்க்கப் புரட்சிக்காரராகவும், இராணுவ உத்திகளில் கைதேர்ந்தவராகவும், நல்ல தூதுவராகவும் இருந்த அவர், சீனத்தன்மையுடனான சோசலிசத்திற்கான போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றியவர் என்று குறிப்பிட்டுள்ளது. புரட்சிக்குப் பிறகான மூன்றாவது தலைமுறை தலைமைக்குப் பொறுப்பேற்றிருந்த இவர்,  சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக 1989 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையில் பணி புரிந்தார். சீனாவின் ஜனாதிபதியாக 1993 முதல் 2003 வரை பணியாற்றினார். 

மூன்றாவது தலைமுறை தலைமை

பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய  ஜியாங் ஸெமின், 1985 ஆம் ஆண்டில் ஷாங்காய் (Shanghai) நகர மேயராக இருந்தபோது செய்த பணிகள் அவரைப் பற்றி மக்கள் மத்தியில் பேச வைத்தன. 1987 ஆம் ஆண்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் இடம்பெற்றார்.  1989 ஆம் ஆண்டில் ஷாங்காய் நகரில் கடுமையான அரசியல் குழப்பம் உருவான போது கட்சியின் சரியான நிலைபாட்டை உறுதியாக நடைமுறைப்படுத்தினார். சோசலிச அரசின் அதிகாரத்தையும், மக்களின் அடிப்படை நலன்களையும் உறுதிப்படுத்துவதில் வெற்றி பெற்றார். இதில் கட்சி உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் வெகுசன மக்களின் உறுதியான ஆதரவோடு அவரால் இதைச் சாதிக்க முடிந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது தலைமுறை தலைமையின் அச்சாக ஜியாங் ஸெமின் இருந்ததாக, கட்சிக்கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 1980களின் நிறைவிலும், 1990களின் தொடக்க கட்டத்திலும் சர்வதேச அளவிலும், சீனாவிலும் பல கடுமையான அரசியல் குழப்பங்கள் உருவாகின. உலக சோசலிச முகாம்களில் பெரும் திருப்பங்களும், பின்னடைவுகளும் ஏற்பட்டன. சீன சோசலிசமும் வரலாறு  காணாத சிரமங்களுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளானது. இந்தக் கட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கூட்டுத்தலைமைக்கு ஜியாங் ஸெமின் வழிகாட்டினார். முற்றிலும் கட்சியைச் சார்ந்து செயல்பட்டார். 

சோசலிசத்தை நவீனப்படுத்துவதில் பேருதவி

சுதந்திரம், கௌவுரவம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய நான்கையும் உயர்த்திப் பிடிப்பதில் கட்சி, ராணுவம் மற்றும் மக்களை முழுமையாகச் சார்ந்து நின்று பயணித்தார். மையமான இலக்காக பொருளாதார மேம்பாட்டை நிர்ணயித்துக் கொண்டார். சீனத்தன்மையுடனான சோசலிசத்தின் அடிப்படையைக் கொண்டு சீர்திருத்தம் மற்றும் திறந்துவிடுதல் கொள்கையை முன்வைத்தார். சீனச் சீர்திருத்தங்களில் புதிய கதவுகளைத் திறப்பதில் முன்னின்று செயல்பட்டார். இது சோசலிசத்தை நவீனப்படுத்துவதில் பெரும் உதவி புரிந்தது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இராணுவத்தைப் பலப்படுத்தும் உத்திக்கு ஜியாங் ஸெமின் முக்கியத்துவம் அளித்தார். புதிய வரலாற்றுச் சூழல்கள் மற்றும் காலத்திற்கேற்ற உத்திகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு செயல்படும் இராணுவமாக மாற்ற அவர்  விரும்பினார். உள்நாட்டிலேயே புதுமையான ஆய்வுகளுக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அதற்கான அடிப்படைக் கட்டமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு அவர் தொடர்ந்து முயற்சி எடுத்தார்.

உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் சிக்கலான சூழல் நிலவியபோதெல்லாம், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கோட்பாடுகள், மாவோவின் சிந்தனை மற்றும் டெங்சியோ பிங்கின் கோட்பாடு மற்றும் கட்சியின் அடிப்படை நிலைபாடு ஆகியவற்றை முன்வைத்து அவற்றை விளக்கியதோடு, தீர்வுகளையும் ஜியாங் ஸெமின் முன்வைத்தார். மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை, சீனாவின் குறிப்பான நிலைமைகளோடும், பாரம்பரியமான சீனக் கலாச்சாரத்தோடும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்று ஜியாங் ஸெமின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

Tags: