காஸா இனப்படுகொலை: நான்கு நாடுகளுக்கு எதிராக நிக்கராகுவா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத்தாக்குதல்

ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இடதுசாரிகளால் வழி நடத்தப்படும் நிக்கராகுவா வழக்குத் தொடரவுள்ளது.  

பலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்ய இஸ்ரேல் இராணுவத்திற்கு  ஆயுதங்கள், ஆயுதங்களுக்கான நிதி உட்பட பல உதவிகளை வழங்கி வருவதன் மூலம் ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, கனடா ஆகிய நாடுகள் இனப்படுகொலைக்கு உடந்தையாக உள்ளது என  சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற நிக்கராகுவா அரசு  நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளது. 

இதனை அந்நாடு அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இனப்படுகொலை குற்றத்தைத் தடுக்கும் மற்றும் தண்டனைக்கான மாநாட்டின் மனிதாபிமான சட்டங்களை காஸாவில் இந்நாடுகள்  அப்பட்டமான முறையில் கூட்டாக மீறியுள்ளன  என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளும்  இனப்படுகொலையில் ஈடுபடும்   தீவிரமான ஆபத்து இருப்பதை உணர்ந்த உடன் அதில் உள்ள தொடர்புகளை அந்நாடுகள் துண்டிக்கக்  கடமைப்பட்டுள்ளது என்றும், தற்போது காஸாவில்  இனப்படுகொலை   தடுப்பு ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது  என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஜனவரி 26 அன்று சர்வதேச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பு அமைந்துள்ளதையும்  அந்த அறிக்கையில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

மேலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கி வருவதை உடனடியாக நிறுத்துமாறும் இந்த நாடுகளை  நிக்கராகுவா வலியுறுத்தியுள்ளது.

இனப்படுகொலையில் இருந்து தற்காத்துக்கொள்ள பலஸ்தீனர்கள் மீதான உரிமையை சர்வதேச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. மேலும் பலஸ்தீனர்கள் இனப்படுகொலை தடுப்பு மாநாட்டின் கீழ் ஒரு பாதுகாக்கப்பட்ட குழுவாக உள்ளனர் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

உலக ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடுத்து குறிப்பிட்ட முன்னேற்றத்தையும் கண்டுள்ளது. அதனை தொடர்ந்து   மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவா இனப்படுகொலைக்கு உதவி செய்யும் ஏகாதிபத்திய நாடுகளை குற்றவாளிக்  கூண்டில் ஏற்ற எடுத்து வரும் செயல்பாடானது, உலக அரசியலில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வளர்ந்து வரும் நாடுகளின் வலுவான எதிர்வினையைக் காட்டுகிறது.

Tags: