மகாராஷ்டிர மாநில விவசாயிகளின் நீண்ட பயணம் மாபெரும் வெற்றி!

காராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் நாசிக்கிலிருந்து (Nashik) மும்பை வரை மார்ச் 12 அன்று 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற நீண்ட பயணம் மகத்தான வெற்றி  பெற்றுள்ளது. கோரிக்கைகள் அனைத்தையும் ஆளும் சிவசேனை- பாஜக அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. போராடிய விவசாயிகளுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம்  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

வெங்காயம் உட்பட பருத்தி, சோயாபீன்ஸ், பச்சைப் பயறு, பால்  உட்பட விவசாயப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். நில உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். கடன் தள்ளுபடி செய்திட வேண்டும். மின்சாரம், பயிர்  இன்சூரன்ஸ், ஓய்வூதியத் தொகையை உயர்த்துதல், திட்டப் பணியாளர்களின் ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நீண்ட பயணம் நடைபெற்றது. இப்பேரணியில் பழங்குடியின விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.  

மார்ச் 16 அன்று விவசாயிகள் சங்க தலைவர்கள் டாக்டர் அசோக்  தாவ்லே, ஜே.பி.காவிட், டாக்டர் அஜித் நவாலே, வினோத் நிகோலே எம்எல்ஏ, டாக்டர் உதய் நர்கர்,  டாக்டர் டி.எல். கராத், உமேஷ் தேஷ்  முக் முதலானோர் அடங்கிய தூதுக்குழுவினர்,  மகாராஷ்டிரா முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் ஆறு அமைச்சர்களையும் உயர் அரசு அதிகாரிகளையும் மும்பை மாநில சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்தனர். விவசாயிகளின் 15 அம்சக் கோரிக்கைகள் அனைத்தையும் அநேகமாக மாநில அரசாங்கம்  ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக வெங்காயத்திற்கு குவிண்டால் (100 கிலோகிராம்) ஒன்றுக்கு 350 ரூபாய் மானியம் அளித்திட ஒப்புக் கொண்டிருக்கிறது. சென்ற முறை விவசாயிகள் கடன் தள்ளுபடியில் பயனடையாத 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, கடன் தள்ளுபடி செய்திடவும், அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது. பழங்குடியினரின் வன உரிமைகளை உத்தரவாதப்படுத்திட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஜே.பி.கேவிட் முன்னாள்  எம்எல்ஏ, வினோத் நிகோலே எம்எல்ஏ ஆகிய இரு பிரதிநிதிகளுடன் ஒரு  குழுவை அமைத்திட ஒப்புக் கொண்டிருக்கிறது.   ஓய்வூதியத் தொகை மற்றும் திட்டப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மதிப்பூதியத் தொகைகளைக் கணிசமாக உயர்த்திடவும் ஒப்புக் கொண்டிருக்கிறது.

நடைபெற்றுவரும் நீண்ட பயணத்தை விலக்கிக்கொள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கம் மறுத்திருந்தது. அரசுத்தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாக மாநில சட்டமன்றத்தில்  அறிவிக்கும் வரை நீண்ட பயணம் தொடரும் என்று விவசாயிகள் சங்கம்  கூறியிருந்தது. இவ்வாறு அகில இந்திய விவசாயிகள் சங்கம் தீர்மானகரமாகக் கூறியதன் பின்னணியில், முதலமைச்சர் சட்டமன்றத்தை மார்ச் 17  அன்று கூட்டி, அனைத்து முடிவுகளையும் அறிவித்திட நிர்ப்பந்திக்கப்பட்டார். பின்னர் அரசு தன்னுடைய முடிவுகளின் ஒரு நகலை அகில இந்திய  விவசாயிகள் சங்கத்திற்கு அளித்திருக்கிறது. இந்த முடிவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நடவடிக்கைக்காக அனுப்பி இருக்கிறது. இவ்வாறு நீண்டபயணம் மகத் தான முறையில் வெற்றி பெற்றதை  அடுத்து, சனிக்கிழமையன்று (மார்ச் 18) விவசாயிகளின் நீண்ட பயணம் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதேபோன்றே 2018இல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற நீண்ட  பயணமும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது. அனைத்து ஜனநாயகப் பிரிவினர் மத்தியிலும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருந்தது. அப்போது ஆட்சியிலிருந்த பா.ஜ.க  தலைமையிலான மாநில அரசாங்கமும் அநேகமாக அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டது. ஆயினும் பின்னர் அவை நிறை வேற்றப்படவில்லை. எனவே இப்போது  மீண்டும் அதே போன்றதொரு நீண்ட பயணத்தை விவசாயிகள் மேற்கொண்டார்கள். இது சிவசேனா- பா.ஜ.க அரசாங்கத்தை அடிபணிய வைத்திருக்கிறது. அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்க வைத்திருக்கிறது.

இந்த வெற்றி, மக்கள் விரோத பா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிராக, அதன் கோர்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்றுவரும் வீரஞ்செறிந்த போராட்டங்களுக்கு உத்வேகம் ஊட்டும். டெல்லியில் அடுத்து பதினைந்து நாட்களில் நடைபெறவுள்ள தொழிலாளி-விவசாயி மாபெரும் பேரணிக்கு முன்னர் நடைபெற்றுள்ள இந்த நீண்ட பயணத்தின் வெற்றி, நாடு முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும் வரவிருக்கும் காலங்களில் நடைபெறும் போராட்டங்களில் உற்சாகத்துடன் பங்கேற்க உத்வேகத்தை அளித்திடும்.   

Tags: