டொலரின் ஆதிக்கத்தை உடைக்குமா பிரிக்ஸ் மாநாடு?

தென்னாபிரிக்காவின் மிக பெரிய நகரமான ஜோகன்னஸ்பெர்க்கில் ஓகஸ்ட்   22 முதல் 24 வரை  தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஸா  தலைமையில் ‘பிரிக்ஸ்’ (BRICS) கூட்டமைப்பின்  மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக   சிரில் ரமபோஸா  ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா  கண்டங்களில் உள்ள வளர்ந்து வரும் 69 நாடுகளுக்கு  அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக  அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகளால் சுரண்டப்படும் வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இந்த  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோன்  பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்த போதிலும் அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. 

பிரிக்ஸ் வளர்ச்சி 

உலகளவில் பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரப்  பங்களிப்பு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படும்  ஜி 7  நாடுகளின் பங்களிப்பை விட உயர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு உலகப்  பொருளாதாரத்தில்  ஜி-7 நாடுகளின் பங்களிப்பு 30.39 சதவீம் மட்டுமே. பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் 31.59 சதவீத அளவிற்கு பங்கு வகித்துள்ளன. இது மிகப்பெரும் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. மேலும் இதனைத்  தொடர்ந்து உலகின் பல நாடுகள் தங்களது சர்வதேச வர்த்தகத்தில் டொலருக்கு மாற்றாக புதிய கரன்சியை எதிர்நோக்கியுள்ளன. பிரிக்ஸ்  கூட்டமைப்பின்  வளர்ச்சி அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை ஆட்டம் காணவைக்கும் அளவிற்கு  உருவாகி வருகிறது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து விடுபட பிரிக்ஸ் கூட்ட மைப்பில் இணைய விரும்புகின்றன.

இதுவரை அல்ஜீரியா, ஆர்ஜென்ரீனா, பங்களாதேஸ், பஹ்ரேன், பெலாரஸ், ​​பொலிவியா, கியூபா, எகிப்து, எத்தியோப்பியா, ஹோண்டுராஸ், இந்தோனேசியா, ஈரான், கஜகஸ்தான், குவைத், மொராக்கோ, நைஜீரியா, பாலஸ்தீனம், சவூதி அரேபியா, செனகல், தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசுவேலா மற்றும் வியட்நாம் ஆகிய 23 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில்  இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் வந்துள்ளது.

வளர்ச்சிக்கு உதவும் பிரிக்ஸ்

புர்கினா பாசோ, ஜிம்பாப்வே, மாலி, சோமாலியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் எரீத்ரியா  ஆகிய நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ரஷ்யா கடந்த வாரம் 50 ஆயிரம் தொன் தானியங்களை எந்த நிபந்தனைகளும் இன்றி இலவசமாக வழங்கியுள்ளது. இதேபோல ஏற்கனவே  17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கி இருந்த கடனை  தள்ளுபடி செய்துள்ளது சீனா. மேலும் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த பிரிக்ஸ் கூட்டமைப்பு நிதி உதவி வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறு கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் வளர்ச்சிக்கு எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் உதவி செய்வது  பிரிக்ஸ் கூட்டமைப்பில் பல நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்ததற்கு மற்றுமொரு காரணமாக  உள்ளது.

அமெரிக்காவின் பின்னடைவு 

இக்கூட்டமைப்பில்  ஐக்கிய அரபு இராச்சியம் இணையும் போது பிரிக்ஸ் கூட்டமைப்பின் பொருளாதார பலம் மேலும் வலுப்படும்; சர்வதேச சந்தையில் பெரும் பங்கை இக்கூட்டமைப்பு பிடிக்கும். குறிப்பாக  புதிய வளர்ச்சி  வங்கிக்கு (new development bank) சவூதி அரேபியாவின்  நிதி கைகொடுப்பதோடு எண்ணெய் வளம் கொழிக்கும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மேற்குலக நட்பு  நாடுகளுக்கு இடையே டொலருக்கு மாற்றாக உள்ளூர் கரன்சியை பயன்படுத்த துவங்கும் போது அமெரிக்காவின் டொலர் ஆதிக்கத்தின் வீழ்ச்சி  துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தான் ஓகஸ்ட் மாத இறுதியில் நடக்க இருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு  உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags: