மே 9 தாக்குதல்கள்: இதுவரை 883 பேர் கைது 364 பேருக்கு பிணை

மே 9ந் திகதி கொள்ளுப்பிட்டி ‘மைனா கோ கம’ மற்றும் காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக் களங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலகங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இச்சம்பவங்கள் தொடர்பில், மொரட்டுவை மேயர் சமன் லால் பெனாண்டோ, சீதாவகபுர பிரதேச சபைத் தலைவர் ஜயந்த ரோஹண, சீதாவக்க பிரதேச சபை உறுப்பினர் பந்துல ஜயமான்ன, களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன, கரந்தெனிய பிரதேச சபை உறுப்பினர் சமீர சத்துரங்க, டான் பிரியசாத் ஆகியோர் இன்று (18.05.2022) CID யினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் நேற்று நள்ளிரவு 12.30 மணி வரை சுமார் 8 1/2 மணிநேர வாக்குமூலத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிவு செய்திருந்தனர்.

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் CID யினால் கைது செய்யப்பட்ட SLPP எம்.பிக்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோருக்கு இன்றையதினம் (18.05.2022) நீதிமன்றத்தினால் மே 25 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களில் 805 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், நேற்றையதினம் (17.05.2022) 219 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் 68 பேருக்கு நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்களில் 57 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவங்கள்தொடரபில் இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 364 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைதான 412 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் இன்று (18) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகளை நாடு முழுவதும் பொலிசார் மற்றும் CID யினர் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரினால் பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கலவரங்கள், தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 475 புகைப்படங்கள் மற்றும் 70 இற்கும் அதிக வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Tags: