ரஷ்யா- உக்ரைன் மோதல் : சில உண்மைகள்

-ரதீஷ் சி.நாயர்

தோ, யுத்தம் வருகிறது! உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கவுள்ளது. இது விளாதிமிர் புட்டின் தலைமையில் உள்ள ரஷ்யாவின் ஆணவமாகும்.”- இதுதான் இப்போது சர்வதேச செய்திகளில் நிறைகிறது. ரஷ்ய கூட்டமைப்பை ஒரு வில்லனாகச் சித்தரிப்பது நேட்டோ உறுப்பு நாடுகளில் செயல்படுகிற சர்வதேச செய்தி ஏஜென்ஸிகளை மட்டும் சார்ந்து செய்திகள் தயாரிப்பதன் நெறியற்ற செய லாக இருக்கும். ரஷ்யாவின் பழைய எதிரிகள் ஒன்றுசேர்ந்து உக்ரைனில் சில அரசியல் தலைமையை விலைக்கு வாங்கி தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் போது அதனால் நிகழும் எதிர்வினையே ரஷ்யாவின் தயார் நிலை.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தலைமையில் உள்ள சக்திகள் பனிப்போர் காலத்தில் பெற முடியாததை உக்ரைனை ஒரு கருவியாக்கி பெறுவதற்கு முயற்சிக்கும்போது அதைத் தடுக்காவிட்டால் எதிர்காலம் என்னவாகும் என்கிற கவலை ரஷ்யாவுக்கு உள்ளது. சோவியத் யூனியன் சிதைவு மூலம் இரு துருவ (சோசலிச முகாம், முதலாளித்துவ முகாம்) உலகம் முற்றுப் பெற்றது. 2000 ஆவது ஆண்டில் புட்டின் அதிகாரத்திற்கு வந்த பிறகு ரஷ்யா பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் மீண்டும் வலிமை பெற ஆரம்பித்தபோது ஒரு துருவ (ஏகாதிபத்திய) தலைவர்கள் மீண்டும் விழித்து விட்டார்கள். பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் அரசியல் தலைவர்களின் புகழ் சரிந்து வந்தபோது புட்டின் வலிமை மிக்க தலைவராக உயர்ந்தார். சோவியத் யூனியனைத் தகர்ப்பதற்கு அன்றைய சோவியத் குடியரசுகளில் இருந்த சில தலைவர்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்ட பிரிந்து போவதற்கான பிரதேசவாதம்  இப்போது ரஷ்யாவுக்கு எதிராக அதிக வலுவுடன் பயன்படுத்தப்படுகிறது. 

உடன்படிக்கையை மீறும் உக்ரேன்

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து போன மாநிலங்களுக்குப் பொதுவாகவும், ரஷ்யக் கூட்டமைப்புக்கு பிரத்யேகமாகவும் அச்சுறுத்தல் ஏற்படுத்தாமல் இருக்கவும், ஒரு நாட்டின் குடிமக்களாக இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அழித்துக் கொள்ளாமல் இருக்கவும் உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தது. இந்த நாடுகள் எதுவும் நேட்டோவில் உறுப்பினராகக் கூடாது. அதை மீறுவதென்ற உக்ரைனின் தீர்மானம்தான் தற்போதைய மோதலுக்கு முக்கியக் காரணம். பெரிஸ்த்ரோய்க்கா காலத்திலேயே உக்ரைனில் ல்வாவ் போன்ற பிரதேசங்களில் அரசுக்கும் ரஷ்ய மொழிக்கும் எதிராக பிரதேச வாதத்தை வளர்ப்பதற்கு மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்தன. உக்ரைனையே ரஷ்யாவுக்கு எதிராகத் திருப்பிவிடுவதற்கான முக்கியக் காரணம் கிரிமியா என்ற பிரதேசத்தின் இராணுவமும், அரசியலும் புவியியல்படி முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். சோவியத் யூனியனின் கருங்கடல் கப்பற்படையின் தலைமையகம் கிரிமியாவில் உள்ள ஸ்வஸ்தபோல் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மற்றொரு முக்கிய இராணுவ தளம் கிரிமியாவிலேயே ஃபியோ தோஸியாவில் உள்ளது. 1954 பிப்ரவரி 19 அன்று நிகிதா குருச்சேவ் தலைமையிலான சுப்ரீம் சோவியத், கிரிமியன் ஆப்லாஸ்த் என்ற மாநிலத்தை ரஷ்ய சோவியத் சோசலிஸ்ட் குடியரசிலிருந்து உக்ரைன் என்ற மற்றொரு குடியரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தது. பிறகு ரஷ்யன் ஃபெடரேஷன் சோவியத் யூனியனின் தொடர் வாரிசாக மாறியது. கிரிமியாவில் உள்ள ரஷ்ய கப்பற்படை தளத்தை  உக்ரைன் ரஷ்யாவுக்குக் குத்தகைக்கு விட்டு விட்டது. இதற்கிடையே ரஷ்யாவுடன் நட்புறவு கொள்ள விருப்பம் உள்ளவர்களும், ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறவர்களும் மாறிமாறி உக்ரைனில் ஜனாதிபதிகளாக வந்தார்கள். 

யானுகோவிச் கவிழ்ப்பில் மேலை நாடுகளின் கை

உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைபாடு எடுப்பவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது அந்நாட்டில் கலவரங்கள் அதிகரிக்கும். ரஷ்ய அரசின் நெருங்கிய கூட்டாளியாகிய விக்டர் யானுகோவிச் கீவில் அதிகாரத்திற்கு வந்தபோது அரசுக்கு எதிரான கலவரம் தீவிரமாகியது. 2017-இல் முடிவுக்கு வர வேண்டிய ரஷ்யாவுடனான கிரிமியாவின் குத்தகைக் காலஅளவு 25 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. 2042 வரைக்கான யானு கோவிச்சின் தீர்மானம் நேட்டோ உறுப்பு  நாடுகளுக்கும் அந்நாடுகளை ஆதரிக்கிற உக்ரைன் தலைவர்களுக்கும் விருப்பமானதல்ல. யானுகோவிச்சுக்கு எதிரான உள் நாட்டுப் போர் தீவிரமானது. 2014 பிப்ரவரியில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னால் மேற்கத்திய நாடுகளின் கை உள்ளது என்பதை பல நாடுகளது ராஜதந்திரப் பிரதிநிதிகளின், அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்கள் பின்னர் கசிந்தபோது உலகம் புரிந்து கொண்டது. ரஷ்யர்கள் அதிகம் வசிக்கிற பிரதேசங்களில் பாகுபாடு காட்டிய உக்ரைன் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமாகியது. உக்ரைன் ஆட்சியின் கீழ் இருந்தாலும் வெறும் 15 சதவீத உக்ரேனியர்கள் மட்டுமே கிரிமியாவில் வசிக்கிறார்கள். இதற்கிடையே கிரிமியா உக்ரைன் ஆட்சியிலிருந்து விடுபட்டு ரஷ்யாவின் பகுதியாக இணைவதற்கான மக்கள் கருத்தை அறிவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரஷ்யாவுடன் இணைப்பதற்கு 97 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் ரஷ்ய அரசின் தலைமையில் புதிய முதலீடுகளும் வளர்ச்சிப் பணிகளும் கிரிமியாவுக்கு வந்தன. ரஷ்யாவின் பகுதியாக ஆன ஸ்வஸ்தபோலில் ரஷ்ய கப்பற்படைத் தலைமையகம் தொடர்ந்தது. அமெரிக்காவுக்கும் நேட்டோவின் மற்ற நாடுகளுக்கும் பெருத்த பதிலடியாக இருந்தது கிரிமியா மக்களின் தீர்ப்பு. ரஷ்ய ஃபெடரேஷன் குத்தகைக்குப் பயன்படுத்தியதைக்கூட தடுப்பதற்கு முயன்றவர்கள் அந்தப் பிரதேசம் முழுவதும் ரஷ்யாவுக்குச் சொந்தமானது என்று பார்க்கிறார்கள். இது புட்டினின் செல்வாக்கை அதிகப்படுத்தியது.

மின்ஸ்க் உடன்படிக்கை மீறல்

கடந்த எட்டு ஆண்டுகளாக உக்ரைன் இராணுவம் சண்டையிடுவது சொந்த மக்களுடன்தான். அந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 1923 முறை சண்டை நிறுத்தத்தை மீறினர். அங்கு நிகழும் மனித உரிமை மீறலைக்  கண்டுகொள்ளாமல் இருக்கிற மேற்கத்திய  நாடுகளும், அமெரிக்காவும் அத்தகைய சம்பவங்களைக்கூட  ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்தவே முயற்சி செய்கின்றன. உக்ரைன் என்ற நாட்டின் மீதோ, அங்கு வசிக்கும் மக்கள் மீதோ அந்நாடுகளுக்கு அக்கறை இல்லை. அந்தப் பகுதியில் வலுவாக வளர்ந்து வருகிற ரஷ்யாவின் முக் கியத்துவத்தை இல்லாமற் செய்வது என்பதுதான் அந்நாடுகளின் அக்கறையெல் லாம். இதனிடையே உக்ரைன் உள்நாட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக வடிவம் கொடுத்த மின்ஸ்க் பேக்கேஜின் அடிப்படையில் விவாதத்தைத் தொடர்வதற்குக்கூட உக்ரைன் தயாராக இல்லை. மின்ஸ்க்பேக்கேஜ் என்பது உக்ரைன் ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுக ளின் உச்சி மாநாட்டில் தீர்மானிக்கப் பட்டதும், பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்ததுமாகும். உக்ரைன் உள்பட வடிவம் கொடுத்த மின்ஸ்க் பேக்கேஜின்படி நடவடிக்கையெடுக்க முன்வருவதற்கு மாறாக சொந்த மக்களுடனே மோதுகிறார்கள். அதுமட்டுமல்ல, மின்ஸ்க் உடன்படிக்கையின்படி ரஷ்யா ஒரு மத்தியஸ்தராகும்.

இதற்கிடையேதான் கிரிமியாவில் ரஷ்யக் கடல் எல்லைக்குள் 2021 ஜூனில் பிரிட்டிஷ் யுத்தக் கப்பலாகிய டிஃபன்டர் அத்துமீறிக் கடந்து சென்றது. அந்தக் கப்பலை ரஷ்யா துரத்தியது. தங்களின் யுத்தக் கப்பல் ரஷ்யக் கடல் எல்லைக்குள் கடந்து சென்றதை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நியாயப்படுத்தினார். கிரிமியா மீதான உரிமை இப்போதும் பிரிட்டனின் நட்பு நாடாகிய உக்ரைனுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவே யுத்தக் கப்பலை அனுப்பினோம் என்பதே பிரிட்டனின் வாதம். இது ரஷ்ய தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்பதில் சந்தேகமில்லை. மின்ஸ்க் பேக்கேஜ்படி பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதற்குப் பதிலாக உக்ரைனுக்கு ஆயுதங்களும் பொருளாதார உதவியும் வழங்குகிற அமெரிக்காவும் நேட்டோவில் அங்கம் வகிக்கிற மற்ற நாடுகளும் உண்மையில் உக்ரைனுக்கு உதவ வரவில்லை. மாறாக, ரஷ்யாவைச் சுற்றி முற்றுகையிட்டுத் தாக்குவதற்கான இராணுவத்தளம் அமைக்கவே வருகின்றன. நேட்டோ உறுப்பு நாடுகளும் உக்ரைனும் சேர்ந்து 2021-இல் மட்டும் ஏழு முறை இராணுவப் பயிற்சி நடத்தின. இதை எதிர்ப்பதற்காக ரஷ்யா பின்பற்றுகிற வழிமுறைகளை உக்ரைனைத் தாக்குவதற்கான தயாரிப்பாகச் சித்தரிக்கிறார்கள். சர்வதேச செய்தி ஏஜென்ஸிகள் ரஷ்யாவை எதிர்க்கும் நாடுகளின் கைப்பிடியில் உள்ளன.

மேற்கத்திய சக்திகளின் விளையாட்டுப் பொம்மை

ஆயிரக்கணக்கான ஆண்டுக் காலமாக ஒரே தேசத்து மக்களைப் போல வாழ்பவர்கள்தான் ரஷ்யன் – உக்ரைன் மக்கள். ஆரம்பத்தில் கிழக்கு ஸ்லாவிக் மாநிலமாகிய கிவியன் ரூஸிலுக்கு பெயர்பெற்றதுதான் இந்த உறவு. ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல் உக்ரைனில் சில அரசியல்வாதிகள் மேற்கத்திய சக்திகளின் விளையாட்டுப் பொம்மைகளாகி விட்டார்கள். இது இப்போது ஆரம்பித்ததல்ல. சோவியத் யூனியன் உருவாக்கப்பட்ட சமயத்திலும் – ஏன்,  இரண்டாவது உலக யுத்தக் காலத்திலும் கூட மேற்கத்திய சக்திகளின் கைப்பாவைகளாகவே இருந்தார்கள். முந்தைய சோவியத் குடியரசுகளில் ரஷ்யன் கலாச்சாரத்துடன் மிகவும் நெருக்கமாக இருப்பதும் உக்ரைன் மற்றும் பெலாரஸ் மக்கள்தான். அதனால்தான், உக்ரைன் ரஷ்யாவின் எதிரி யாக ஆகக்கூடாது என்றும், ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டியவர்கள் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறுகிறார். நேட்டோவின் இராணுவத் தளமாக உக்ரைன் மாறினால் அதனால் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அதைத் தடுக்க வேண்டியது ரஷ்யாவின் தேவையாகும்.

சொந்த மண்ணில் ரஷ்ய இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதுவும் சில ஆரம்ப உறுதிமொழி கிடைத்தால் ரஷ்ய இராணு வம் பின்வாங்கவும் தயாராக உள்ளது. ஆனால், அமெரிக்காவும் நேட்டோ கூட்டு நாடுகளும் ரஷ்யாவுக்கு அருகில் உக்ரைனை மையப்படுத்தி இராணுவத்தைத் திரட்டிக் குவிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குத் தீர்வு காணவே ரஷ்யா முயற்சி செய்கிறது. ரஷ்யன் கூட்டமைப்பின் பாதுகாப்பையும், நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையேயான பேச்சுவார்த்தையில்  உருவாகிவந்த நகல் ஒப்பந்தத்தை மேற்கத்திய நாடுகளுக்கு 2021 டிசம்பர் மாதமே ரஷ்யா அனுப்பியிருந்தது. அதன்படி, கிழக்குப் பகுதியில் உள்ள நேட்டோ படைகளை விரிவுபடுத்துவதையும், ரஷ்யாவின் எல்லைகளில் -– முக்கியமாக நேட்டோ படைகளைக் குவித்து வைப்பதையும் தடுக்க வேண்டும்.

யுத்தத்தை  விரும்பவில்லை எனினும்…

இரண்டாம் உலக யுத்தத்தில் ரஷ்யர்கள், உக்ரேனியர்கள் உள்பட போராடி மடிந்தவர்கள் இரண்டு கோடியே எழுபது லட்சம்  சோவியத் மக்களாவர். யுத்தத்தின் நாச நஷ்டங்களை மிக அதிகமாய் அறிந்தவர்களும், அதை உலகுக்கு நினைவூட்டுவதும் ரஷ்யாதான். அதனால்தான் ரஷ்யா ஒருபோதும் யுத்தத்தை விரும்புவது இல்லை. ஆனால், இந்த அணுகுமுறையை ஒரு முதலாகப் பயன்படுத்தி ரஷ்ய தேசத்தின் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படுகிற தீய சக்திகளுக்கு முன்னால் கண்ணை மூடிக்கொள்ளும் அரசு அல்ல ரஷ்யாவில் இருப்பது. நேட்டோவின் விருப்பத்திற்கு இணங்கி இன்று ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்படுகிற உக்ரைன் ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் நிகழ்ந்ததை மறக்கக் கூடாது. பல காரணங்களால் சொந்த நாட்டில் விமர்சனங்களை எதிர்கொள்கிற போரிஸ் ஜான்ஸனும் ஜோ பைடனும் சர்வதேசத்தின் கவனத்தைத் திசை திருப்பவும், ஐரோப்பாவுடனான இயற்கை எரிவாயு உடன்படிக்கை மூலம் ரஷ்யாவுக்கு இருக்கும் செல்வாக்கை இல்லாமல் செய்யவும், ரஷ்யாவின் தலைமையில் உருவாகிற பலதுருவ உலகைத் தடுக்கவும் மற்ற நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து திட்டமிட்டுக் கோபமூட்டாமல் இருந்தால் போதும்.

நன்றி: தேசாபிமானி (08.02.2022),
தமிழில்: தி.வரதராசன்

Tags: