ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா – இறக்குமதியை அதிகரிக்கவும் முடிவு

ஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையையும் மீறி, அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அதிகரித்துள்ளன.

உக்ரைனின் இராணுமயமாக்கலை நிறுத்துவதாகவும் (demilitarisation), அந்நாடு நாஸிமயமாவதை தடுப்பதாகவம் (denazification) கூறி, ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மேலும், ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

அமெரிக்காவின் தடையால் ரஷ்யா சில பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதனை சரி செய்யும் விதமாக எண்ணெய் ஏற்றுமதியை அந்நாடு அதிகரித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் விற்க ரஷ்யா முன்வந்து. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

கச்சா எண்ணெய் (Crude oil) பரல் (Barrel) ஒன்றுக்கு 20 முதல் 25 அமெரிக்க டொலர் வரை தள்ளுபடி விலையில், 30 இலட்சம் பரல் கச்சா எண்ணெய்யை வாங்க கடந்த வாரம் இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளநிலையில், 20 இலட்சம் பரல் எண்ணெய் இறக்குமதி செய்ய ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு 1.2 கோடி பரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பரல் என்பது 42 கலன்களுக்கு அல்லது ஏறத்தாள 159 லீட்டருக்கு சமமானது.

இதற்கிடையில், அமெரிக்காவின் தடையை மீறி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், அது இந்தியாவை வரலாற்றின் தவறான பக்கத்தில் நிறுத்தும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Tags: