நம்பிக்கைகளின் ஆதாரங்களில் ஒளி பாய்ச்சிய மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது

-ஜி.செல்வா

லகம் போற்றும் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது (1941 – 2022) அமெரிக்காவில் மார்ச் 10, 2022 காலை  காலமானார். தான் பிறந்த இந்திய நாட்டிலேயே நிரந்தரமாக வசிக்க விரும்பினாலும் குடியுரிமை, விசா அனுமதிகள் கிடைப்பதில் இருந்த பிரச்சனைகள் காரணமாக உடல்நிலை நலிவுற்ற நிலையில் அமெரிக்க நாட்டின் கலிஃபோர்னியாவில் இயற்கை எய்தியுள்ளார். விடுதலைக்கு முந்தைய ஒன்றுபட்ட இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் 1941 ஆம் ஆண்டு பிறந்தவர். குடும்பச் சூழலும், தந்தையின் சமூக அரசியல் தாக்கமும் பதின்பருவ வயதுக்கு முன்பா கவே இலக்கிய வாசிப்பையும் அரசியல் உரையாடலையும் அய்ஜாஸ் அகமதுக்கு கையளித்தது. நாட்டுப் பிரிவினையின் உச்சபட்ச அவலத்தை தனது குழந்தைப் பருவத்தில் எதிர்கொண்டவர் அய்ஜாஸ் அகமது. 10 வயதில்   அவரது குடும்பம் பாகிஸ்தானில் குடியேற வேண்டியநிலை உருவானது.

பாகிஸ்தான் மண்ணில் இடதுசாரியாக உருவெடுத்த அய்ஜாஸ், அங்கு அரசியல் ஜனநாயகவெளி வதைபட்டு ராணுவக் கட்டுப்பாட்டுக்கு மாறிய காலகட்டத்தில் அத்தகைய போக்குகளுக்கு எதிராக எழுத்து மற்றும் அரசியல் செயல்பாடுகளில் உத்வே கமாக பங்கேற்றுள்ளார். நீண்ட காலம் பாகிஸ்தானில் தங்கியிருக்க சூழல் அனுமதிக்கவில்லை.  1970-களில் அமெரிக்காவில் தங்க வேண்டிய நிலையில், தொடக்க நிலையில் தனது பொருளாதார தேவைக்காக மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டார். அவர் மொழிபெயர்த்த நூல்களில் அவர் மேற்கொண்ட உத்திகள் இன்று வரை முன்னுதாரணமான செயல்பாடாக அறிவுலகம் கருதுகிறது.

வியட்நாம் மீதான அமெரிக்க யுத்தத்திற்கு எதிராக அமெரிக்க மக்கள் நடத்திய இயக்கத்தால் ஈர்க்கப் பட்டார். காலனியாதிக்க விடுதலைப் போராட்டங்கள், தேசிய இயக்கங்களின் மகத்தான பங்களிப்புகள், இடது சாரி இயக்க மரபு போன்ற சிந்தனை மரபுகளின் தளத்தில் உருவானவர் அய்ஜாஸ். மார்க்சிய தத்துவத்தின் வழிநின்று உலக நிகழ்வு களை, உரிமைப் போராட்டங்களை, இடதுசாரி இயக் கங்களின் சாதக பாதக அம்சங்களை அலசுவதில் தன் காலத்தில் தன்னிகரற்ற சிந்தனையாளராக செயல் பட்டிருக்கிறார். ‌ கம்யூனிஸ்ட் அமைப்புகளின் செயல்பாடுகளை விமர்சிக்கும் அதேவேளையில் மார்க்சியத்தின் இயங்கியல் அடிப்படையில் செல்ல வேண்டிய பாதைகளுக்கு ஒளி பாய்ச்சுவதில் நிகரற்றவராக விளங்கினார்.

இந்திய நாட்டில் தங்கி செயலாற்ற, பாகிஸ்தான் குடியுரிமை சிக்கல் உருவாக்கியதால் அமெரிக்க குடியுரிமை பெற்று, இந்தியாவில் தங்குவதற்கான விசாவை பெற்றுள்ளார். 1980களில் தில்லி மாநகரத்தில் தங்கியிருந்த காலத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருந்தார். மேலும், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தோடு இணைக்கப்பட்டுள்ள சமகால வரலாற்று ஆய்வு மையத்தின் (Centre for Contemporary Studies) மதிப்புறு பேராசிரியர். கனடாவின் டொரொண்டோ- யார்க் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியர். ஃபிரண்ட் லைன், சோசியல் சைன்டிஸ்ட், ஆங்கில மார்க்சிஸ்ட் இதழ்களில் எழுத்துப் பணி, இடதுசாரி இயக்க நிகழ்வுகளில் பங்கேற்பு என பன்முகச் செயல்பாடுகளில் முன்னின்றார். குறிப்பாக  பல்கலைக் கழகங்களில், மாணவர் அமைப்பு மேடைகளில் பல தரப்பட்ட தலைப்புகளில் விரிவுரைகளை நிகழ்த்தியிருக்கிறார். செல்லும் இடங்களிலெல்லாம் அறிவார்ந்த மாணவர்களை உருவாக்கும் அட்சய பாத்திரமாக அய்ஜாஸ் அகமது திகழ்ந்திருக்கிறார்.

பாசிசப் போக்குகளை முன்னறிவித்தவர்

1980-கள் தொடங்கி, இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய ஒன்றியத்தில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்புகளின் பேராபத்தை கூர்மையாக எடுத்துரைக்க தொடங்கியிருந்தார். குறிப்பாக தாராளமய பொருளாதாரக் கொள்கையும், இந்துத்துவ அரசியலையும் எதிர் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை கருத்தியல் தளத்தில் மிக ஆழமாக எழுதினார். இத்தாலிய மார்க்சிய அறிஞர் அந்தோனியோ கிராம்சியின் சிந்தனை தளத்திலிருந்து இந்தியாவின் பாசிசப் போக்கினை எடுத்துரைத்தார். “இந்தியாவின் வரலாறு, சமூகம், மதம் மற்றும் அரசியல் நிலைகளை முதன்மையான விஷயங்களாக  பொருட்படுத்தவில்லை என்றால் நாஜிசத்தை பற்றிய ஆய்வுகள் எல்லாவற்றையும் படித்தாலும் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புரிந்து கொள்ள முடியாது. பிறநாடுகளில் பாசிசம் எப்படி இருக்கிறது என பொருத்திப் பார்ப்பதைக் காட்டிலும் அந்த நாட்டின் தனித்துவ வரலாறு மற்றும் அரசியல் ஆகியவற்றுக் கேற்ப, எத்தனை புதுமைகளை உட்கொண்டு பாசிசம் அங்கு நிறுவனமயப்பட்டது  என்பதை ஆராய வேண்டும்” என்கிறார் அய்ஜாஸ் அகமது. சாதியைப் புரிந்து கொள்ளாமல் இந்திய சமூகத்தை  புரிந்து கொள்ள முடியாது எனத் தெரிந்தவுடன், இந்தியாவைப் பற்றியும், மார்க்சிய எழுத்துகள் பற்றியும், கம்யூனிஸ்ட் கட்சி நூல்களையும் வாசிக்கிறார். இந்தியாவின் அன்றாட வாழ்க்கையை அதன் முழு வடிவத்துடனும் எல்லைகளுடனும் உள்வாங்குகிறார். அதற்குப் பிறகு இந்திய சமூகத்தைப் பற்றியும், இந்திய கலாச்சாரத்தைப் பற்றியுமான கோட்பாட்டை உருவாக்குகிறார். அதனடிப்படையில் சாதியம் குறித்து அவர் எழுதிய எழுத்துகள், மதிப்பீடுகள்,  முன்வைத்த விமர்சனங்கள் இன்றளவும் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளிலும், அறிவுலக தளத்திலும் ஒளி பாய்ச்சும் சிந்தனைகளாக விளங்குகின்றன.

சமரசமற்ற மார்க்சியப் பார்வை

சமகால ஏகாதிபத்திய சுரண்டலைக்  குறைத்து மதிப்பிட்டு நீர்த்துப் போகும் வகையில் சில இடதுசாரி  அறிவுஜீவிகள் எழுதிய எழுத்துகள் மற்றும் பேச்சுக்களுக்கு எதிராக மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து கிஞ்சித்தும் சமரசமின்றி கூர்மையாக விமர்சனங்களை முன்வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு நெருக்கமான தோழமையை மேற்கொண்டார்.  இந்தியாவில் பின் நவீனத்துவக்  கோட்பாடுகள் அறிமுகமான காலத்தில், மார்க்சிய சிந்தனையாளர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் எல்லாம் அவற்றை வியந்து விதந்தோத  தொடங்கியபோது, பின் நவீனத்துவக் கோட்பாடு உண்மையில் மார்க்சிய சிந்தனைக்கு முந்தைய சிந்தனைப் போக்கு (Post Modernism is Pre Marxism) என எடுத்துரைத்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களுக்கு பின்நவீனத்துவம் குறித்து அவர் எடுத்த பாடக்குறிப்பு இந்தியாவில் வேறு யாரையும் விட அந்தத் தளத்தில் ‘அடையாள அரசியல்’ குறித்து கருத்தாழமிக்க சிந்தனையை வெளிப்படுத்தியது. இந்தியாவில் தேர்தல் அரசியலில் கம்யூனிஸ்டுகள் வெற்றியடைய முடியாவிட்டாலும், கருத்தியல் தளத்தில், உழைக்கும் மக்களின் உணர்வுகளில் உயி ரோட்டமாக இருப்பதற்கான பின்னணியை, இந்திய விடுதலைப் போராட்ட மரபிலிருந்து சுட்டிக் காட்டுவார். இடதுசாரி இயக்கங்களின் பெருமைகளையும் தேவை யையும் வெளிப்படுத்தும் அதே வேளையில், அவர்கள் வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டிய நெடிய பயணத்திற்கு ஒளி பாய்ச்சுவதில் முன்னின்ற சிந்தனையாளர். முதலாளித்துவ சமூக அமைப்பு உருவான காலத்தில், அதன் வளர்ச்சிப் போக்குகளை மார்க்ஸ்,  வரலாற்றுப் பொருள்முதல்வாத இயங்கியல் சிந்தனை யில் ஆய்வு செய்து எழுதியது, முன்னேறிய இன்றைய முதலாளித்துவ சமூகத்திற்கு மிகவும் பொருத்தப்பாடு உடையது என்பதை சிக்கலில்லாத மொழியில் தொடர்ந்து பேசினார் அய்ஜாஸ்.

“நிகழ்வுகளின் தர்க்கத்தின் ஊடாக சிந்திப்பது தான் மார்க்சிய எழுத்தின் அடிப்படை. மார்க்சும், லெனி னும் எழுதிய ஒவ்வொரு எழுத்தின் காலத்துக்கும் மீண்டும் செல்வது ஓர் அற்புதமான அனுபவம்” எனக் குறிப்பிட்டிருந்த அய்ஜாஸ் அகமது, கொரோனா உலகடங்கு காலத்தில் இணைய வழியில் மார்க்சிய செவ்வியல் நூல்கள் குறித்து கருத்தாழமிக்க, கலாப்பூர்வமான உரையை தொடர்ந்து நிகழ்த்தினார். “மார்க்சியம் காலாவதியாகிவிட்டது” என்கிற கூச்சல்களுக்கு எதிராக அவர் முன்வைத்த வாதங்கள், பேசிய பேச்சுகள் மார்க்சியத் தத்துவத்தின் இன்றைய தேவையை பறைசாற்றின.  அய்ஜாஸ் அகமது எழுத்துக்கள் தமிழில் சவுத் விஷன் பதிப்பகம், பாரதி புத்தகாலயம், பொன்னு லகம் பதிப்பகம், தமிழ் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்துள்ளன.  அய்ஜாஸ் அகமது அவர்களை நேரில் சந்தித்து  உரையாடி, அவரது வாழ்க்கை பயணம் ஆளுமைத் திறன், செயல்பாடுகளை ‘மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல’ (Nothing Human is Alien to Me) எனும் மார்க்ஸின் பொன்மொழியைத் தலைப்பாகக் கொண்டு நூலாக்கம் செய்துள்ளார் பேராசிரியர் விஜய் பிரசாத். அதில் அவர் கீழ்க்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார்:

“அய்ஜாஸ் அகமதுவின் எழுத்துக்கள் ஓர் ஆசிரியர் ஒரு முறைமையை விளக்குவது போல் என்னிடம் பேசுகின்றன. இயக்கவியல் முறை என்றால் என்ன அல்லது எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவதாக இருக்கின்றன. மதவாதமோ, ஏகாதிபத்தியமோ  எடுத்துக் கொள்ளும் விஷயம் எதுவாக இருந்தாலும் உலகில் உள்ள அமைப்புகளை எப்படி பார்ப்பது என கற்றுக் கொடுப்பதாக இருக்கின்றன” என்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு அய்ஜாஸ் அகமது கொண்டிருந்த தோழமை, தனது அறிவுலகப் பாதையில் புதிய திறப்புகளை உருவாக்கும் வகையில் புதிய நூல்களை, சிந்தனைப் போக்குகளை பகிர்ந்த விசயங்களை நெகிழ்வோடு பதிவு செய்துள்ளார் பிரகாஷ் காரத். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அவரது பன்முக ஆளுமைகளைப் போற்றி அஞ்சலி குறிப்பை வெளியிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தோழர் அய்ஜாஸ் அகமது அவர்களை சென்னையில் ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் கல்லூரி விழாவில் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது.எனது சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கி நகைச்சுவை ததும்ப பேசினார். உழைக்கும் வர்க்கம் தனது விடியலுக்காக மேற் கொண்டுள்ள நீண்ட நெடிய போராட்டத்திற்கு தோழர் அய்ஜாஸ் அகமது சிந்தனைகளும் எழுத்துகளும் என்றென்றும் வழிகாட்டும்.

Tags: